கடந்த 2024, அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வி.சாலை பகுதியில், நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு, பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்த மாநாடு நடத்துவதற்கு 21 நிபந்தனைகளின் அடிப்படை யில் காவல்துறை அனுமதியளித்தது. அப்போது மாநாட் டுப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும், காவல்துறை அனுமதி பெறவும், மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் சரியான தகவல் தொடர்பில் இருக்கவில்லையென்று அப்போதே அவர்மீது கட்சி நிர்வாகிகள் சலசலப்புடன் இருந்திருக்கிறார்கள்.
மாநாட்டில் ஏகப்பட்ட சொதப்பல்கள். காவல்துறையிடம் மாநாட்டுக்கு அனுமதி பெற்றபோது ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடு மிடத்தில் கழிவறை வசதி, உணவு, தண் ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய் யப்படவில்லை. 24 மணி நேரமும் பரபரப்பான போக்குவரத்து இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெற்றதால் அன்றைய தினம் இரவுவரை போக்குவரத்து ஸ்தம்பித் துப்போனது.
அப்போது நடந்த சொதப்பல்கள் குறித்து...
கோட்டகுப்பம் இஸ்மாயில்: "கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் நான்கு நாள், ஐந்து நாட்கள் கூட மாநாடு நடத்துவார் கள். தமிழகம் முழுவது மிருந்தும் மாநாட்டில் கலந்துகொள்ள வரு வார்கள். அப்போதுகூட இப்படிப்பட்ட நெரிசல் ஏற்பட்டதில்லை. மாநாட்டு மேடையில் விஜய் பேசி முடிப்பதற்குள் 90க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தார்கள். அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். மாநாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாட்டர் டேங்க் அடித்து நொறுக்கப்பட்டது. மாநாட்டுத் திடலில் போடப்பட் டிருந்த இருக்கைகள் நொறுக்கப்பட்டன. இத்தனைக்கும் பிறகாவது அடுத்தடுத்த கூட்டங்களில் சரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டுமல்லவா? அதை செய்யாததால் கரூரில் 41 உயிர்கள் பலியாகியுள்ளன'' என்றார்.
இளந்திரை தாமோதரன்: "விக்கிரவாண்டி மாநாட்டிற்கு திருவாரூர் மாவட்டம் கரையான் காடு பகுதியை சேர்ந்த டிவி மெக்கானிக் மேகநாதன், 33 நண்பர்களுடன் விக்கிரவாண்டி வந்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பிச் செல்லவில்லை. கூலித் தொழிலாளியான அவனது அப்பா புஷ்பநாதன், மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு, தன் மகனை கண்டுபிடித்துத் தரக்கோரி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு சென்றார். இன்றுவரை அவரது மகன் நிலை யாருக்கும் தெரியவில்லை.
விக்கிரவாண்டி குமார் என்பவரோ, "விஜய் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டுக்கு வரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சீனிவாசன், விஜய் கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். இது மிகப்பெரிய துயரச் செய்தி. இந்த தகவல்களை நடிகர் விஜய்க்கு கட்சி முக்கியஸ்தர்கள் கொண்டு போனார்களா என்று தெரிய வில்லை. சம்பவம் நடந்து 24 மணி நேரம் கடந்தும் கட்சித்தலைவர் விஜய், இறந்தவர்களுக்கு ஒரு அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து வேதனையடைந்த அவரது கட்சித்தொண்டர் ஒருவர், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். "கட்சி மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் இறந்து 24 மணி நேரம் ஆகியும் கட்சித்தலைமை இதுகுறித்து எந்த விதமான ஆறுதல் செய்தியையும் தெரிவிக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட கட்சிக் காரர்களுக்கு வரவில்லை. நாங்கள் இழப்பீடு கேட்கவில்லை. இறந்துபோன குடும்பங்களுக்கு ஆறுதலாக ஒருசில வார்த்தை களை கூறினாலே போதுமென்று தான் கேட்கிறோம்' என்று அவர் பேசியது வைரலாகவும், விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு, "தமிழக வெற்றிக் கழகத்தின முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த கழகத் தோழர்கள் வழக்கறிஞர் கில்லி சீனிவாசன், விஜய் கலை, வசந்தகுமார், உதயகுமார், ரியாஸ் மற்றும் சார்லஸ் ஆகிய அனைவரின் மறைவும் மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்கள் கழகத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்திருக்கும்' என்று பட்டும்படாமல் குறிப்பிட்டிருந்தார். ஆக, முதல் மாநாட்டிலேயே உயிர்ப்பலிகள் நடந்துள்ள நிலையில், அப்போதே அதுகுறித்து சிந்தித்து, கட்டுப்பாட்டோடு தனது பரப்புரையை நடத்தி யிருந்தால், கரூரில் பெரிய துயரத்தை தடுத்திருக்கலாம்'' என்றார்.
விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரையில் நடந்த த.வெ.க. இரண்டாவது மாநாட்டில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி கோத்தகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன், பேனர் மீது ஏறி மின்சாரம் தாக்கியதில் சென்னையை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். மதுரை மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளையும் விஜய்யின் பர்சனல் பி.ஏ.வான ஜகதீஷ் வசமே கொடுத்திருந்தனர். அதில், மேடைக்கான விளக்கு வசதிகள், தண்ணீர் வசதிகள், பேரிகார்டுகள், 1.50 லட்சம் சேர்கள், மாநாடு முழுவதுமுள்ள விரிப்புகள், விஜய் ரேம்ப் வாக் அமைப்பு உள் ளிட்ட அனைத்திற்கும் 25 கோடி பட் ஜெட்டாம். இவை அனைத்தையும் ஆதவ் அர்ஜூனாவின் ஈவண்ட் மேனேஜ் மெண்ட்டுக்கு கொடுக்கப்பட்டதாம். 1.50 லட்சம் சேர்களுக்கு முதல் மாநாட்டிற்கு ஆர்டர் தரப்பட்ட நிறுவனத்திடமே கேட்க, அங்கிருந்து 25 ஆயிரம் சேர்கள் மட்டுமே தரப்பட்டதாம். முதல் மாநாட் டிலேயே சேர்கள் நொறுக்கப்பட்ட அனுபவத்தால் மறுத்திருக்கிறார்கள். மற்ற நிறுவனங்களும் சேர்கள் தரமறுக்க, கடைசி நேரத்தில் கேரளாவிலிருந்து 1 லட் சம் சேர்கள் வரவழைக்கப்பட்டன. அப்படி அலைந்துதிரிந்து வாங்கப்பட்ட சேர்களில் 50 ஆயிரம் சேர்களை விஜய் ரசிகர்கள் உடைத்து நாசப்படுத்தியதை தொலைக் காட்சிகளே ஒளிபரப்பின. மதுரை மாநாட்டுக்கு சேர்கள் சப்ளை செய்த கம்பெனி ஊழியர் குமார் நம்மிடம், "சார், 25,000 சேர்களை நாங்கள் கொடுத்தோம். 10 ஆயிரத்திற்கு மேல் சேர்கள் உடைந்திருக்கின்றன. ஒரு சேர் 400 ரூபாய் என்று வைத்தால் 40 லட்சம் சேதாரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 10 சேர்களை அடுக்கடுக்காக வைத்து உயரமாக்கி, அதன்மேல் ஏறி நின்று ஆட்டம்போட்டு செட்டுசெட்டாக உடைத்திருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டிற்கும் லட்சக்கணக்கில் சேர்கள் போட்டிருக்கிறோம். இப்படி சேதாரம் ஆனதில்லை. மாநாட்டிற்கு வந்து கொண்டாடிவிட்டு செல்வது வேறு; சேர்களை உடைத்துவிட்டு செல்வது வேறு. இப்படியிருந்தால் விஜய்யால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடுதான்'' என்றார்.
மாநாட்டுக்கு மறுநாள் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் பி.ஏ. ஜகதீஷ் தங்கிருந்த தனியார் விடுதியில் நஷ்ட ஈடு கேட்டு, சேர்கள் போட்டவர்கள், மின் விளக்கு செட் போட்ட ஒப்பந்தக்காரர்களென, திண்டுக்கல், கோவை, கேரளாவை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் வரிசைகட்டி நிற்க, அனைவரையும் சென்னைக்கு வரச்சொல்லி இடத்தை காலிசெய்தவர்கள், அரைகுறையாக செட் டில்மென்ட் செய்ததாகக் கூறப்படுகிறது. மின்விளக்கு ஸ்டாண்ட், ஸ்பீக்கர் பாக்ஸ், 50-க்கும் மேற்பட்ட ஹாலோஜன் லைட்டுகள் உடைக்கப்பட்டதற்கு இன்னமும் நஷ்டஈடு கொடுக்கவில்லையாம். இரண்டாவது மாநாட்டு முதல்நாளில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்துவிழுந்து அபசகுனமாக தொடங்கிய மாநாட்டின் முடிவில், 9 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.
மாநாடுகளையடுத்து, சனிக்கிழமை பரப்புரையை தொடங்கிய விஜய், கரூர் பிரச்சாரத்திற்கு முன்பு சென்ற திருவாரூர், நாகை பிரச்சாரத்தில் நடந்த சேதாரங்கள், சிரமங்கள் குறித்து விசா ரித்தோம்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், முதல் பிரச்சாரத்தை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையருகில் பேசினார். அவருக்கு பிற் பகல் 11 மணி முதல் 12 மணி வரை அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ஆனால் விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தும், பிரச்சாரத்தை தொடங்கும் இடத்திற்கு மதியம் 2 மணிக் குத்தான் வந்துசேர்ந்தார். இதற்கிடையில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்ப லூர், அரியலூர் மாவட்டங் களை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள், பொதுமக்கள் எனப் பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் சுமார் 50 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே சமயம், அப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மரச்சாமான்கள் செய்யும், கடைகள், காய்கறிக் கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் இந்த கூட்டத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பல்லாயிரகணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து உடைத்து சேதப் படுத்தினர். இதுதொடர்பாக வியாபாரிகள் சார்பில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அன்னை சத்தியா நகர் பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன், "நான் பல ஆண்டுகளாக மரக்கடை நடத்துகிறேன். எம்.ஜி.ஆர். சிலையருகே மரச் சாமான்கள் தயாரிக்கும் தொழில் செய்துவரு கிறேன். இதற்குமுன் இப்படிபட்ட அராஜகம் எந்த கூட்டத்திலும் ஏற்பட்டதில்லை. எவ்வளவு பெரிய கூட்டம் வந்தாலும், நாங்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. இந்த முறைதான் எங்க ளுடைய வாழ்வாதாரம் பாதிக்குமளவு சேதத்தை சந்தித்துள்ளோம். எனவேதான் நாங்கள் த.வெ.க. மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம்.
அக்கட்சியைச் சேர்ந்த சில தொண்டர்கள், என்னுடைய கடையிலிருந்த மரச்சாமான்கள் மீது ஏறி நின்று சேதப்படுத்தினார்கள். மிகக்கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். எனவே தான் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கரிகாலன், வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்த ஆதித்திய சோழன், இமய தமிழழகன், விக்னேஷ்குமார் உள்ளிட்ட சிலர் மீது புகாரளித்தோம். இந்த சம்பவத்தில் என் கடைக்கு அருகில் அண்ணாமலை, கருப்பையா மற்றும் காஜாமொய்தீன் ஆகியோரின் கடைகளிலும் முறையே ரூ.50,000 மதிப்புள்ள மரச்சாமான்கள், வாழ்வாதாரமாக இருந்த தட்டுரிக்ஷா உடைக்கப்பட்டது'' என்றார்.
விஜய் பிரச்சாரம் செய்த நாகை புத்தூர் ரவுண்டானா பகுதியில் பெட்டிக் கடை வைத்தி ருக்கும் வைத்திய நாதசாமி, "இந்த பகுதியே குறுகலான பகுதி, இங்கு நடந்த பரப்புரையில், வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் சுவரும், அதன் அருகிலுள்ள கட்டடங்களின் முகப்பு செட்டுகளும் சேதமானது. அவற்றையெல்லாம் தாங்களே சரிசெய்து கொடுப்பதாக த.வெ.க.வினர் ஆலயத்தின் ஃபாதரிடம் பேசிமுடிச்சிட்டாங்க.. சேதத்தை தவிர்க்க நாங்கள் கடைகளை முன்கூட்டியே அடைச்சிட்டோம்'' என்கிறார்.
புத்தூர் ராணி கூறுகையில், "கொஞ்சநேரம் தான் கடைகள் திறந்திருந்தது. விஜய் வர்ற நேரம் சகட்டுமேனிக்கு மொட்டைமாடி, தகர சீட் போட்ட கூரைகள், உயரமான இடமா பார்த்து வெறியோட ஏறிட்டாங்க, எதுவுமே அவங்களிடம் சொல்லமுடியல, சொன்னாலும் கேட்குற நிலையில வந்த கூட்டம் இல்ல. விஜய் போகும்வரை எங்களுக்கு உசுரே இல்ல. உள்ளுக்குள்ள பூட்டிட்டு இருந்தோம்'' என்கிறார்.
டீக்கடை நடத்திவரும் அன்பழகன், "அரசியல் கட்சிகளின் கூட்டம்னா எங்களுக்கு வியாபாரம் அதிகமா நடக்கும். ஆனால் விஜய் பிரச்சாரத்தில் கடை திறக்கவே முடியல. காலையி லேயே கூட்டம் வரத் துவங்கிடுச்சி. நேரம் ஆகஆக கூட்டம் அதிகமாகிடுச்சி. காரைக்கால் பார்டர் பக்கத்திலேயே இருந்ததால் அங்க தான் வியா பாரம் நடந்துச்சி. கூட்டம் கட்டுப்பாடே இல் லாமல்போனதால் முன் கூட்டியே பூட்டிட்டு வேடிக் கைதான் பார்த்தோம். இல்லன்னா உள்ளே புகுந்து பெரிய சேதத்தை உண்டாக்கி யிருப்பாங்க. விஜய் காரைக்கால், நாகூர் வழியா வருவார்னு சொல்லிட்டு, திருச்சி வழியாக வந்தார். அவர் வந்ததும் பார்க்க முண்டி யடித்து அலை மோதியபோது தான் சிலர் மயக்க மடைஞ்சதும், சுவர் இடிஞ்சதும், தகரத்தில் ஏறி விசிலடித்ததும் நடந்தது. கமலஹாசன் பிரச்சாரத்திற்கு வந்த போது ஓப்பன் வாகனத்தில் வந்ததால வரும்வழியிலேயே மக்கள் பார்த்துவிட்டு அவரவர் வேலைகளைப் பார்த்தாங்க. ஆனால் விஜய் கூட்டத்தைக்காட்டி ஆளுங்கட்சியை மிரளவிட நினைக் கிறாரோ என்னவோ புரியல. தூரத்தி லிருக்கும் வீடுகளை ஆக்கிரமித்து டூவீலர்களை நாள்முழுக்க நிறுத்தி வைத்து கொடுமை செய்தாங்க. கரூர்ல கூடிய கூட்டத்தில் கால்வாசிகூட இங்க கூடாததால பெருத்த சேதமில்ல'' என்றார்.
திருவாரூர் தெற்கு வீதியில் கடை வைத்திருக்கும் அரவிந்த், "மதியம் இரண்டு மணிக்கு வருவதாக சொல்லி யிருந்ததால காலை பத்து மணியி லிருந்தே கூட்டம் கூட ஆரம்பிச்சிடுச்சி. மாலை ஆறுமணி வாக்கில் தெற்கு வீதிக்கு வந்த விஜய் வாகனத்துக்கு முன்னால் விஜய் பிரச்சார வாகனம் போல் ஒரு பஸ், ஆம்புலன்ஸ், கேமரா லைவ் எனச் சென்ற ஏழு வாகனமும் ஏற்கெனவே அறிவித்த கீழ வீதி வழியாக செல்ல, அங்கு கூட்டம் எதுவும் இல்லை யெனக்கூறி, தெற்கு வீதியில் திருப்பிவிட்டனர். அந்த கூட்டத்தில் விஜய்யின் வாகனம் சென்றபோது கூட்டம் இருபுறமும் பிதுங்கியதில் பலரும் மயக்கமடைந்தனர். விஜய்க்கு முன்னால் சென்ற ஒரு பொலீரோ வாகனம் சீஸாகி கருகல் வாடையோடு புகைமூட்டமாக நின்றுவிட்டது. நாங்கள்தான் போலீசாரோடு சேர்ந்து ஓரங் கட்டினோம். த.வெ.க.வினர் கண்டுகொள்ளவே யில்லை. இப்படியானவர்களா நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவார்கள்?'' என்கிறார்.
பிரச்சாரம் நடந்த பகுதியில் மெக்கானிக்காக இருக்கும் அருணோ, "தெற்கு வீதி பார்க்காத கூட்டமா? தேருக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துடுச்சி? தெற்கு வீதியில கூட்டம் நடந்தாலே பல கடைகளை மூடிடுவாங்க. தி.மு.க. அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள் கூட்டம் நடந்தா வியாபாரம் நடக்கும். ஆனால் விஜய்க்கு வந்த கூட்டம் டேஞ்சரான கூட்டம் என்பதை திருச்சி பிரச்சாரத்திலேயே பார்த்துவிட்டதால், முன்கூட்டியே பெரும்பாலான கடைகளை அடைச் சிட்டாங்க. தெற்கு வீதியில் பெரும்பகுதி கடைகள்தான். அதுவும் விஜய் நின்று பேசிய இடத்தில்தான் நெரிசலே. விஜய் பேசிய இடத்திற்கு அருகிலிருந்த மனுநீதி சோழன் சிலையை உடைத்துவிட்டனர். அதனை ஆட்டோக்காரர்கள் நிமிர்த்தி சாய்த்து வைத்துள்ளனர். இதுவரை நகராட்சி நிர்வாகமோ, த.வெ.க. நிர்வாகிகளோ அதை கண்டுக்கல. எத்தனையோ கூட்டங்களை பார்த்த தெற்கு வீதி, விஜய் மாதிரியான சுயநலவாதிகளின் கூட்டத்தையும் பார்த்துடுச்சி. அப்படி விஜய்யை பார்க்க வந்திருந்தவர்களை பத்திரமா வீட்டுக்கு போங்கன்னு கூட சொல்லத்தெரியாத ஒரு தலைவரையும் தெற்கு வீதி பார்த்துடுச்சி'' என்கிறார்.
ஆக, கரூர் சம்பவத்துக்கு முன்பே விஜய்யின் த.வெ.க. நடத்திய மாநாடுகள், பரப்புரைக்கூட்டங்களிலும் உயிர்ப்பலிகள், பெருத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் த.வெ.க. தரப்பு அதிலிருந்தெல்லாம் பாடம் கற்றுக்கொண்டு, தங்களை சரிப்படுத்திக்கொள்ளாததால் கரூரில் இவ்வளவு பெரிய உயிர்ப்பலிகள் நடந்திருப்பது தெரியவருகிறது. இத்தனைக்குப் பிறகும் தங்கள் மீது தவறே இல்லாததுபோல். உயிரிழந்தவர்களிடம் மன்னிப்புகூட கேட்காமல் அரசியல் செய்வது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.