சிகலா தமிழக அரசியலில் மிகப்பெரிய நபராக அறியப்பட்டவர். ஜெயலலிதாவின் கால்களில் விழுந்தவர்களை விட சசிகலாவின் கால்களில் விழுந்தவர்கள்தான் அதிகம். சசி நடந்து வரும்போது தூரத்தில் அவர் பார்வையில் படும்படி கீழே விழுந்து வணங்காத அமைச்சர்களே இல்லை. சசிகலாவின் காலில் விழுந்ததினால்தான் எடப்பாடி முதலமைச்சர் ஆனார்.

Advertisment

சசிகலாவின் காலைப் பிடிக்க எடப்பாடி தவழ்ந்துபோன நிகழ்வு இன்றும் வரலாறு. ஆனால் அந்த சசிகலாவை சந்திக்க எடப்பாடி மறுத்துவிட்டார்... இது இன்றைய நிலவரம்.

Advertisment

சசிகலா, எடப்பாடியை தனது வழிக்குக் கொண்டுவர அவரது மகன் மிதுனை கையி லெடுத்து விளையாடிப் பார்த்தார். எடப்பாடியை தோற்கடிக்க அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார். எடப்பாடிக்கு நெருக்க மான தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட் டையன் என அனைவரையும் ரகசியமாக சந்தித்தார். அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டு பா.ஜ.க. துணைத்தலைவர் வீட்டில் அ.....மலையை சந்தித்தார்.

இப்படி அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவே இல்லை. இப்பொழுது என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றால் சசி கலாவுக்கு 2 சட்ட மன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும். ஒன்று பள்ளிப்பட்டு, அது நரசிம்மனுக்கு. இன்னொன்று முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கு. இவர்கள் இருவரும் சசிகலா ஆதரவாளர்கள். ஆனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எடப்பாடி முடிவு செய்திருக்கிறார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

Advertisment

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சசிகலா வரும்பொழுது, அவரை பூந்தமல்லியில் வரவேற்க 15 அமைச்சர்கள் தயாராக நிற்கிறார்கள் என செய்தி வெளியானது. செய்தியை பரப்பியவர் டி.டி.வி.தினகரன். பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா, இளவரசி வீட்டில் தங்கியிருந்து விருந்தினர்களை சந்தித்துவந்தார். யார் சசிகலாவை சந்திக்கிறார்கள் என பெரிய விவாதம் எழுந்தது. அ.தி.மு.க.வை எடப்பாடியிடம் இருந்து கைப்பற்றப்போகிறார் என சொல்லப்பட்டது. அவர் அ.தி.மு.க.வில் விரைவில் இணைக்கப்படுவார் என ஜோசியம் சொல்லப்பட்டது. சசிகலாவின் சொத்துக்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு ஒன்றிய அரசால் கைப் பற்றப்பட்டது.

சசிகலாவின் போயஸ் கார்டன் நிலமும் கைப்பற்றப்பட்ட சொத்துக் களில் ஒன்றானது. அது வரை பா.ஜ.க. எதிர்ப்பாள ராக இருந்த சசிகலா இந்த சம்பவத்திற்கு பிறகு பா.ஜ.க ஆதரவாளராக மாறிவிட்டார். பா.ஜ.க.வுடன் சமரசமாகப் பேசி பா.ஜ.க. மூலமாக அவர் அ.தி.மு.க.வில் நுழைந்து அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் எனச் சொல்லப்பட்டது.

இதற்கிடையே டி.டி.வி.தினகரன், சசிகலாவிடம் பல்லாயிரம் கோடி ஏமாற்றிவிட்டார். ஒரு சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இரண்டிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தினகரனுக்கு கொடுக்கப்பட்டது. அவற்றை தினகரன் ஏமாற்றிவிட்டார். சசிகலா, தினகரனுக்கு கொடுத்த அன்றைய மதிப்பில் 1500 கோடி ரூபாய் தொகை, இன்றைய மதிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள லண்டன் ஓட்டல் சொத்து உள்பட பல சொத்துக்களை தினகரன் சசிகலாவுக்கு திருப்பித்தர மறுத்துவிட்டார். அந்த லண்டன் ஓட்டல் தொடர்பாக அப்போதைய நரசிம்மராவ் அரசு, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை கையிலெடுத்த மோடி அரசு, அத்துடன் இரட்டை இலை பெற சுகேஷ்சந்திரசேகர் என்கிற புரோக்கருக்கு தினகரன் கொடுத்த லஞ்சப் பணம் தொடர்பான வழக்கையும் சேர்த்து தினகரனையும் பா.ஜ.க. வசம் கொண்டுவந்தது. அந்த வேலையை செய்து முடித்தவர் அ..மலை. 

இப்படி சசிகலாவும் தினகரனும் பா.ஜ.க.வின் தலையாட்டிப் பொம்மைகளாகினர். அந்த நேரத்தில் எடப்பாடி பா.ஜ.க.வின் எதிரியானார். சசிகலாவையும் ஓ.பி.எஸ்.ஸையும் அ.தி.மு.க.விற்குள் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. டி.டி.வி.யும், ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடிக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து போட்டியிட்டு  18 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.

மறுபடியும் எடப்பாடியும் பா.ஜ.க.வும் ஒன்றுசேர்ந்தனர். இம்முறை செங்கோட்டையனை வைத்து பிரச்சினை செய்தார் சசிகலா. செங்கோட்டையன் பிரச்சினையை ஊதித் தள்ளிவிட்டார் எடப்பாடி. கடைசியாக தங்கமணி, வேலுமணி மூலம் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என கடும் முயற்சி எடுக்கப்பட்டது. அமித்ஷா வரை நீண்ட இந்த பஞ்சாயத்தில் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அரசியலுக்கு வரக்கூடாது என அமித்ஷா நேரடியாக சசிகலாவிடம் அறிவித்துவிட்டார். கடைசியாக எடப்பாடி, சசிகலாவுக்கு இரண்டு தொகுதிகள் தருகிறேன் என ஒப்புக்கொண்டார்.

"இரண்டு தொகுதி போதாது, நான் நினைத்தால் 50 தொகுதிகளில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பேன்' என சசிகலா கொக்கரித்தார். "முடிந்ததைச் செய்யுங்கள்' என எடப்பாடி அதற்குப் பதிலளித்தார். "ஒரேநாளில் கூட அரசியல் என்பது மாறிவிடும். நான் அ.தி.மு.க.வில் இணைந்துவிடுவேன்' என சசிகலா இப்போது தனியே புலம்பிக்கொண்டிருக்கிறார்.

ஆகமொத்தம்... சசிகலாவுக்கு அல்வா தந்துள்ளது பா.ஜ.க!