கும்பகோணம் மகாமக குளத்தில் 80க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பலிகொடுத்த ஜெயலலிதா -சசிகலா வரிசையில், தன்னை வேடிக்கை பார்க்கவந்த 15 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 41 அப்பாவிகளை பலிகொடுத்து அதில் அரசியல் பயின்றிருக்கிறார் த.வெ.க.வின் தலைவரும், நடிகருமான விஜய். 

Advertisment

சட்டமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், தன்னுடைய கட்சி சார்பாக தானும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய். த.வெ.க.வின் ரோடு ஷோவில் கூட்டம் அ.தி.மு.க.வைவிட அதிகமாகக் கூடவேண்டும் என்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோடு ஷோ வைத்தது அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட த.வெ.க.வின் நால்வர் கூட்டணி. அதாவது, வீக் எண்டில் விஜய்யின் ரசிக சிகாமணிகள் விஜய்யைப் பார்ப்பதற்காகவே அதிகளவில் வருவார்கள். 

Advertisment

இதனையே காரணமாக வைத்து விஜய்க்கு ஐடியா கொடுத்துள்ளது அறிவாளிகளான அந்த நால்வர் கூட்டணி. இதனையே நடிகர் விஜய்யும் நம்பி களத்திலிறங்க, முந்தைய நாட்களில் த.வெ.க. ரோடு ஷோ களைகட்டியது. எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவில் கூட்டம் வந்தது. தன்னுடைய ரசிக சிகாமணிகள் என்பதனை மறந்து, தன்னுடய த.வெ.க.வுக்கு இவ்வளவு ஆதரவா..? என விஜய்க்கும் இருப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் தொடர்ச்சியாக கரூரிலும் ரோடு ஷோ நடத்த 40 அப்பாவிகள் படுகொலையாகி யிருக்கின்றனர்.

 "சனிக்கிழமையன்று கரூர் -ஈரோடு புறவழிச் சாலைக்கு மேற்கே 2 கி.மீ.லுள்ள வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க.வின் ரோடு ஷோ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாமக்கல் ரோடு ஷோவை முடித்துவிட்டு கரூருக்கு விஜய் வந்த நேரம் மாலை 5.40. மதியம் 12 மணியளவில் வேலுச்சாமிபுரத்தில் ரோடு ஷோ என்ற நிலையில் கரூரின் நுழைவுப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து வேலுச்சாமிபுரத்தை அடைந்தது இரவு 7.10 மணி. காலை 10 மணியிலிருந்தே நடிகர் விஜய்யை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு குழுமியிருக்க, வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரச்சார வாகனவேன் வந்து நின்ற பகுதியில் ஒரு பக்கம் சென்டர்மீடியன். இன்னொரு பக்கம் ப்ளக்ஸ் பேனர்கள் நிரம்பிய வரிசை. கட்டுக்கடங்காத கூட்டம். மரத்திலும், அங்குள்ள கட்டடங்களின் மாடியிலும் விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் ஏறிக்கொண்டு நடிகர் விஜய்க்கு ப்ளையிங் கிஸ்கொடுத்து மகிழ்ந்தனர். நடிகர் விஜய்க்கு உற்சாகம் பீறிட்ட நிலையில், "10 ரூ. பாலாஜி... 10 ரூ. பாலாஜி' என உள்ளூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து வசைபாட ஆரம்பித்தார். 

Advertisment

karur-tvk1

ரசிகர்களும் விஜய்யைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகத் துள்ளலில் குதிக்க, மீண்டும் அதே பாணியில் செந்தில்பாலாஜியை வறுத்தெடுத்தார். எதிர்பார்க்காத கொடூரம் அப்பொழுதுதான் ஆரம்பித்தது. ஒரு சிறுமியைக் காணவில்லை              என பேச்சினிடையே விஜய் குறிப்பிட்டார். 7            மணி நேரத்திற்கு அதிகமாக தண்ணீர், உணவு இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் வாடிவதங்கி, மயங்கி தன்னுடைய காலடியில் சிலர் விழுந்துகிடக்கின்றார்கள் என்கின்ற கொடூரத்தை யாரும் உணரவில்லை. 9 மணிக்குப் பின்னர்தான் தெரிந்தது, இத்தனை உயிர்கள் இங்கேயே விழுந்து கிடந்து பலியானது'' என்கின்றார் சம்பவத்தை விவரிக்கும் ராஜேஷ்.

நடிகர் விஜய்யின் ரோடு ஷோவின் குளறுபடி, தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல் ஆகியனவற்றால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என முதற்கட்ட தகவல் தெரிவித்த நிலையில், குறுகலான இடம் கொடுத்ததும், மின்சாரம் தடைபட்டதும், காவல்துறை சரியாக களப்பணி செய்யாததுமே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்றனர் சில சமூக வலைத்தள முந்திரிக்கொட்டைகள். "கரூர் பரப்புரைக்கு த.வெ.க.வினரின் கோரிக்கையை ஏற்றே அனுமதி கொடுக்கப்பட்டது. திருச்சி, நாகையில் அவர்கள் கூறியதைவிடவும் கூட்டம் அதிகமாக வந்ததை கருத்தில்கொண்டே, லைட்ஹவுஸ் மற்றும் உழவர்சந்தை மிகக்குறுகிய இடம் என்பதாலேயே மாற்றுஇடமாக அதைவிட பெரிய இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 

karur-tvk2

அந்த இடத்தில்தான் சில தினங்களுக்கு முன்பு, வேறொரு அரசியல் கட்சியின் கூட்டமும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் வருவர் எனச் சொல்லினர். ஆனால் வந்தது 27,000 பேர். மதியம் 3 மணியிலிருந்து, இரவு 10 மணிவரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கேட்டி ருந்தனர். தமிழக வெற்றிக் கழக "எக்ஸ்' பக்கத்தில் காலை 11 மணியிலிருந்து 12:45 மணிவரை பரப்புரை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். விஜய் தாமதமாக வந்ததால் கூட்டம் அதிகரித்தது. காலை 11 மணியிலிருந்து மக்கள் வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்றவை போதிய அளவு கிடைக்கவில்லை, பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதை குற்றம் சொல்வதற்காக நாங்கள் கூறவில்லை. விசாரணைக்குப் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவரும். விஜய் பிரச்சார பாதுகாப்புப் பணியில் 500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்'' என்றார் பொறுப்பு டி.ஜி.பி. வெங்ட்ராமன்.

செய்தியறிந்த அடுத்த சில நொடிகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காதவாறு ஒட்டுமொத்த மாவட்டத்தையே தன்னுடைய கண்ட்ரோலிற்குள் கொண்டுவந்தார் மத்திய மண்டல ஐ.ஜி.யான நிர்மல்குமார் ஜோஷி. அடுத்தகட்டமாக ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூருக்குப் புறப்பட்ட நிலையில், "கூட்டநெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் -மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறி வுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப் படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏ.டி.ஜி.பி.யிடமும் பேசி யிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும், காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார் முதலமைச்சர் முக.ஸ்டாலின். 

karur-tvk3

மருத்துவ சிகிச்சையை நெருக்கமாக இருந்து கண்காணித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்குப் போட்டியாக, உள்ளூரிலிருந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அங்கு ஆஜராகி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார்.

மரண ஓலமும், அலறலும் அரசு மருத்துவமனையில் நிரப்பியிருந்த வேளையில், மயக்க நிலையில் இருந்த குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார் ஒருவர். "விஜய்யை பார்க்கின்ற ஆர்வத்தில் கூட்டத்திற்குள் போய் குழந்தையை இந்த நிலைமைக்கு ஆக்கிட்டா என் பொண்டாட்டி. என்ன ஏதுன்னு பாருங்க சார்'' எனக் கத்திக் கூப்பாடு போட, அவரிடமிருந்து குழந்தையை வாங்கி மருத்துவ சிகிச்சைக்கு கொண்டுசென்றது மருத்துவ, செவிலியர் குழு. ஆனால் அதற்குள் அந்த குழந்தை உயிரிழந் திருந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பிரபாகரன், தன்னுடைய மனைவி பாத்திமா பானுவுடன் சேர்ந்து அதிகாலையிலேயே கரூர் சென்று விஜயைப் பார்க்க காத்திருந்தார். கூட்டநெரிசலில் பாத்திமா பானு உயிரிழக்க, மாமியார் வீட்டில் விடப்பட்டிருந்த குழந்தையுடன் விட்டத்தை வெறித்துப் பார்த்து காத்திருக்கின்றார் பிரபாகரன். குஜிலியம்பாறை சங்கர்கணேஷ் ஆர்வக்கோளாறில் விஜய்யைப் பார்க்கச்சென்ற நிலையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழக்க... கணவனுக்காகக் காத்திருக்கின்றார் மனைவி மல்லிகா. 

karur-tvk4

இது இப்படியென்றால் வளைகாப்பு முடித்து மனைவியை சேவைக்காரன்பட்டியில் விட்டுவிட்டு, விஜய்யை வேடிக்கை பார்க்கவந்த தாமரைக் கண்ணன் பலியான சோகம் திண்டுக்கல் மாவட்டத்தையே கலங்கடித்துள்ளது. அது போல்தான் ஏமூர்புதூர் சந்திராவின் கதையும்.  9-ஆம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகனுக்காக விஜய்யைப் பார்க்கச்சென்று பலியாகியுள்ளது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹேமலதா, சாய்லக்ஷனா, சாய் ஜீவா பலியானதும் கொடூரமே!

 விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் இன்னும் ஒரு மாதத்தில் திருமணமாக உள்ள நிச்சயம் முடிந்த ஜோடிகளான ஆகாஷ் -கோகுலஸ்ரீ ஆகியோர் பலியாகினர்.

"சனிக்கிழமை, சம்பள நாள் ஆகையால் ஒட்டுமொத்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளிகளும் வேலுச்சாமிபுரத்தைப் பயன்படுத்துவார்கள். ஆதலால் கூட்டத்தைக் காண்பிக்கலாம் என்று திட்டமிட்டதால் வேண்டுமென்றேதான் தாமத மாக வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜய் பேசும்போது மரம் விழுந்ததும், அதன் பின்னணியில் இருந்த மரண ஓலமும் விஜய்க்கு தெரியும். அதனால்தான் பதற்றத்துடன் அவர் பேசினார். அதுபோக அந்த பகுதியாக வந்த ஆம்புலன்ஸ் கூட த.வெ.க.விற்கு சொந்தமானது தான். கேட்டால் தண்ணீர் பாட்டில் கொடுக்க வந்தார்களாம். எங்களின் மரண ஓலத்தில் விஜய் அரசியல் செய்துவிட்டார்'' என்கின்றார் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி ஒருவர்.

12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார். 

karur-tvk5

பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரைப் பார்க்கக் காத்திருந்தவர் கள்,  கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்கமுடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர்

அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர்

கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை

காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்டநெரிசலில் சிக்கியுள்ளனர்

karur-tvk6

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில், நடந்த சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது, என ஆளுநரும், ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன்கல்யாணும் அறிக்கைவிட்ட நிலையில், பிரதமரும் இரங்கல் அறிக்கை வாசித் தார். இது இப்படி யிருக்க, களத்தில் பணியாற்றி மூச்சுத் திணறலால் தவித்த நபர்களின் சிகிச் சைக்காக அங்குமிங் கும் ஓடி பணியாற் றிய அமைச்சர் அன்பில் மகேஷ், படுகொலையான பள்ளிக்குழந்தை களைப் பார்த்ததும் அழுது அரற்றினார். 

இதேவேளை யில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், "சம்பவம் குறித்து ஆராய நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு அமைக்கப்படும்'' என்றார். இது இப்படியிருக்க, "ஆளை விட்டால் போதும்' என நடிகர் விஜய் சென்னைக்குப் பயணமானார். இந்தச் சூழலில் எதற்கெல் லாமோ சட்டென்று அறிக்கை விடும் த.வெ.க. விஜய், இத்தனை மணி நேரமாகியும் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தவர்கள் குறித்து வாய்திறக்காதது ஏனோ..? நாமக்கல்லிலிருந்து 4 மணி நேரமாக ஊர்ந்துவந்ததாகக் கூறும் விஜய், நாற்பது நிமிடத்தில் எப்படி ஏர்போர்ட் சென்றார்? என்ற கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் அடுக்கிவந்தனர்.

அன்றிரவே மருத்துவமனைக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தோர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, தொடர் சிகிச்சை எப்படி இருக்கும்? என்பதனையும் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, கூட்டநெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்திய நிலையில், அவர்களது நிலைகுறித்து அறிந்தவர், "பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர். 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துயரச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இனி நடக்கக்கூடாது. கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவிக்கிறேன். சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சம், வழங்க உத்தரவிட்டுள்ளேன். ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். கமிட்டியின் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

karur-tvk7

தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியோ, "இதற்கு முன் த.வெ.க. 4 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அங்கெல்லாம் நிறைய கூட்டம் வந்திருக்கிறது. அதேபோல் இங்கேயும் கூட்டம் வந்தது. அவற்றை எல்லாம் ஆய்வுசெய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கவேண்டும்.  கூட் டத்தின்போது பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தொலைக்காட்சியில் தெளிவாகத் தெரிந்தது. அ.தி.மு.க. சார்பில் நான் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுவருகிறேன். அதில்கூட காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. எந்த கட்சி என்று பார்க்காமல் அரசும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும்'' என இழவு வீட்டிலும் அரசியல் செய்தார் அவர்.  

இதற்கிடையே துபாய் சென்றிருந்த துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பி னார். ஞாயிற்றுக்கிழமை காலை கரூர் வந்துசேர்ந்ததும் நேராக மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந் தவர், "பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணைநிற்கும். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்கக்கூடாது. எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார். எவ்வளவு கூட்டம் வரும் என அனுமதி கேட்கப்பட்டது, எவ்வளவு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது, கூட்டங்கள் எவ்வளவு தாமதமாக நடந்தது என டி.ஜி.பி. தெளிவாக விளக்கியுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

கனிமொழியோ, "யாராக இருந்தாலும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு மட்டுமே அரசு கொடுக்கும். அதுபோல கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அந்தந்த கட்சிதான் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்தது நீங்காத வடுவாக உள்ளது. அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்கும்; கட்சி நிகழ்ச்சி என்று வரும்போது கட்சிதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அரசியல் செய்ய நினைத்திருந்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்கமாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கமாட்டார் கள்'' என்றார்.

karur-tvk8

இது இப்படியிருக்க, "கரூரில் நடந்த துயர சம்பவத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கவேண்டும். தேவைப்பட்டால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும். மேலும் அந்தப் பகுதிகளிலுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பாதுகாக்கவேண்டும். கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்கவேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தை த.வெ.க. அணுக முடிவு செய்ததாக தகவல் கசிந்தது. 

இதேவேளையில், "நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாது. இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்துதவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சைபெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையல்ல. இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்கவேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. இறைவன் அருளால், அனைத்திலிருந்தும் நாம் மீண்டுவர முயற்சிப்போம்' என நீண்ட மௌனத்திற்கு பிறகு அறிக்கையை வெளியிட்டது த.வெ.க. தரப்பு. ஆனால் முந்தைய நாள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோர்கள் கரூருக்கு வந்ததாகவும், அவர்களை வழிமறித்து காவல்துறை திருப்பியனுப்பியதாகவும் தகவல் உண்டு. 

"இது தற்குறிகளின் அரசியல், அதாவது புரிதலற்ற அரசியல். நடிகர் விஜய்யைப் பார்க்கவந்த கூட்டம் இது. அரசியல் கூட்டமல்ல. அரசியல் கூட்டமென்றால் அதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். இதற்குமுன்பு நான்கு இடங்களில் ரோடு ஷோவை நடத்தியிருக்கின்றார். ஆளையே மறைக்கும்வண்ணம் ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பார்கள். அதில் பேனர் வைத்திருப்பவன் பெயர் இருக்கும். பதவியிருக்காது. மற்றைய அரசியல் கட்சிகளில் அப்படி எதுவுமிருக்காது. கரூர் கூட்டத்திற்கு வந்தவன் ரசிகனே, விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்தவன். வாகனத்தில் வீலிங் செய்கின்றான். தொண்டன் இப்படி செய்வானா? அரசியல் கட்சியில் இந்த ஒன்றியம், இந்த பகுதி என்றிருக்கும். அடிப்படை கட்டமைப்பே இங்கு இல்லை. உதாரணத்திற்கு, ஒரு கூட்டம் என்றால் இந்த ஒன்றியத்து ஆட்களா இங்கு உட்கார்ந்துகொள்ளுங்கள், இந்தப் பகுதி ஆட்கள் என்றால் அங்கு உட்கார்ந்துகொள்ளுங்கள் என, தன் சார்பாக அழைத்து வந்தவர்களை தங்களுடைய கட்டுக்குள் வைத்திருப்பார்கள் உண்மையான கட்சிக்காரர்கள். ஆனால் த.வெ.க.வில் அப்படி எதுவும் கிடையாது.  நடிகர் விஜய்க்கு இந்த உண்மையைத் தெரியாமலேயே பார்த்துக்கொண்டு வருகின்றனர். உண்மை தெரிவதற்குள் 41 உயிர்கள் பலியானதுதான் மிச்சம். 41 உயிர்கள் படுகொலையில்தான் விஜய் அரசியல் பிரவேசமே செய்கின்றார்'' என்கின்றார் விவரமறிந்த அரசியல் விமர்சகர் ஒருவர்.

 இதேவேளையில், கூட்டநெரிசல் படுகொலை குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஆ1. மதியழகன் -கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், ஆ2. புஸ்ஸி ஆனந்த், ஆ3. நிர்மல்குமார் & மற்றவர்கள் ஆகியோர் மீது ன்/ள் 105, 110, 125(க்ஷ), 223 ழ்/ஜ் 3 ர்ச் பசடடஉக ஆஸ்ரீற் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூரில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், “"ரவுண்டானா, உழவர்சந்தை குறுகலான ஆபத்தான இடமென்பதால்தான் இப்போது பிரச்சாரம் நடந்த இடத்தைப் பரிந்துரைத்தோம். 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி, பெரம்பலூரில் வந்த காவலர்களைவிட இங்கு அதிகம். போலீஸ் சொன்ன இடத்தில் பிரச்சார வாகனத்தை நிறுத்த த.வெ.கவினர் மறுத்துள்ளார்கள். விஜய் பிரச்சாரத்துக்குத் திரள்பவர்களை அதிக ஆபத்துள்ள கூட்டமாகக் கருதியே பாதுகாப்பு வழங்கப்பட்டது''’என விளக்கமளித்துள்ளார்.

மாவட்ட உளவு அதிகாரி ஒருவரோ, "இந்த கோரப் படுகொலைகளுக்கான பொறுப்பு நடிகர் விஜய்யை மட்டுமே சாரும். கும்பகோணம் மகா மகத்தில் குளிப்பதற்காக 80க்கும் மேற்பட்டோரை  கொலைசெய்தார்களோ அதுபோல் தான் இதுவும். அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பணி. தனிப்பட்ட விஜய்க்காக 1000 போலீஸாரை அவர் பின்னால் அனுப்பமுடியுமா..? அவர் அருகிலுள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள். நிகழ்ச்சியின்போது மின்சார டிரான்ஸ்பர்மரில் ஆட்கள் ஏறினார்கள் என்பதாலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விஜய்க்கு தனக்கு முன்னால் கூட்டநெரிசலில் சிக்கித் திணறுகிறார்கள் என்பது தெரியும். தெரிந்தபின்பு அங்கிருந்து அவசரமாக நகர்கின்றார். அவர்கள் கொண்டுவந்த ஜென் ரேட்டரையும் அணைத்துவிட, வெளிச்சமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் ஏறி முண்டிச்சென்ற நிலையில் 41 நபர்கள் படுகொலையாகியுள்ளனர்'' என்றார் அவர். இது இப்படியிருக்க, "குறைபாடுகளைக் களையவேண்டும் அதற்குத்தான் ஆணையம். இந்த மாதிரி சம்பவம் இனி நடக்கக்கூடாது, அதற்கு என்ன நிவர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் பணி'' என்றார் தமிழக அரசின் உத்தரவின் பேரில் களத்திற்கு வந்த நீதியரசர் அருணா ஜெகதீசன்.

த.வெ.க. என்பது கட்சி என்றாலும், அதில் தொண்டர்கள் என்பது மருந்திற்கும் இல்லை. தன்னைத் தேடிவருபவர்கள் ரசிக சிகாமணிகளே என்பதனை விஜய் புரிந்துகொள்வாரா..?


______________
முதல்வர் ஸ்டாலின் ஆக்ஷன்

karur-box2

ரூர் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் துரிதமாகக் களத்தில் இறங்கினார் முதல்வர் ஸ்டாலின். அப்படி ஒரு வேகத்தை இதுவரை அவரிடம் கண்டதில்லை என்கிறார்கள் அதிகாரிகள். 

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சனிக்கிழமை இரவு 7:30-க்கு மணி அளவில் முதல்வரை தொடர்புகொண்ட உளவுத்துறை அதிகாரி, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலரும் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர் என்கிற தகவல் அவருக்கு கொடுக்கப்பட்டதும், அதிர்ச்சியடைகிறார் முதல்வர். 

உடனே மாஜி அமைச்சர் கரூர் செந்தில்பாலாஜி யை தொடர்புகொண்டு முதல்வர் பேச, "இங்கு நிலமை சீரியசாக இருக்கு தலைவரே... கிடைக்கிற தகவல்கள் ஜீரணிக்கக்கூடியதாக இல்லை' எனச் சொல்ல, "உடனே மருத்துவமனைக்குப் போங்க; உயிர்பலி நடக்ககூடாது; தேவையான நடவடிக்கைகளை எடுங்க' என உத்தரவிட்டதுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியரை தொடர்புகொண்டு "வேலுச்சாமிபுரத்துக்கு சென்று போர்க்கால நடவடிக்கைகளை எடுங்கள். சிகிச்சையில் எந்த காம்ப்ரமைஸும் இருக்கக்கூடாது' என உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவையடுத்து அமைச்சர்கள் விரைந்தனர். இந்த சூழலில், "4 பேர் இறந்துவிட்டனர்; பலி எண்ணிக்கை அதிகரிக்குமென கவலையாக இருக்கிறது' என செந்தில்பாலாஜியும் உளவுத்துறை யினரும் முதல்வருக்கு தகவல் கொடுக்க... மேலும் அதிர்ச்சியடைந்த அவர், "கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததனவா?' என்றெல்லாம் விசாரித்துவிட்டு, சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரை அழைத்துக் கொண்டு கோட்டைக்கு விரைந்தார். போகும்போதே, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பல உத்தரவுகளை பிறப்பித்தபடியிருந்தார் முதல்வர். 

கோட்டையில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரி களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், "என்னால் இங்கு இருக்க முடியவில்லை; உடனே கரூருக்கு கிளம்ப வேண்டும்' என சொல்லியிருக்கிறார். அவரை தேற்றுவதே துரைமுருகனுக்கும் வேலுவுக்கும் சிரமமாக இருந்துள்ளது. ஆலோசனையின் முடிவில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அறிவிக்கலாம்; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பதால், உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய போலீஸ் விசாரணை மட்டும் போதாது; விசாரணை கமிசன் அமைக்கலாம் என சொல்லப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பலியான வர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும்,  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனைக் கொண்டு விசாரணை கமிசன் அமைப் பது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இதனையடுத்து, சிறப்பு விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலமாக கரூர் சென்றார் முதல்வர்''’என்கிறார்கள். 

-இரா.இளையசெல்வன்

____________________________
"குழந்தைக்கு பால் கொடுக்கணும்!'' 

உயிரிழந்த குழந்தையால் கதறிய மாற்றுத்திறனாளி தாய்!

karur-box

நிகழ்ச்சி நடந்த வேலுச் சாமிபுரம் அருகிலுள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விமல் -மாதேஷ்வரி யின் ஒன்றரை வயது குழந்தை குரு விஷ்ணு. அக்குழந்தையின் அத்தை லல்லி, விஜய்யை பார்க்க கூட்டத் திற்கு செல்லும்போது குழந்தை யையும் தூக்கிச்சென்றுள்ளார். அவரோடு மேலும் இருவர் சென்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், கைக்குழந்தை குருவிஷ்ணு கைதவறி கீழே விழ... அக் குழந்தையை மேலே தூக்குவதற்குள் கூட்டத்தில் குழந்தை மிதிபடத் தொடங்கியது. குழந்தையின் கதறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. உடல் முழுவதும் மிதிபட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையை தூக்கிச்சென்ற அத்தையும், மற்ற இருவரும் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகிறார்கள். உயிரிழந்த குழந்தையின் அம்மா மாதேஷ்வரி, வாய் பேச முடியாத மாற்றுத்திற னாளி. குழந்தை உயிரிழந்த ஆற்றாமையால் அவர், "குழந்தைக்கு பால் கொடுக்கணும், கொண்டு வாங்க' என்று சைகை மூலம் சொல்லி கண்ணீர் வடித்ததைப் பார்க்க முடியவில்லை. அங்கிருந்த உறவினர் கள், "விஜய் பற்றி இந்த குழந்தைக்கு என்ன தெரியும்? குழந்தை கீழே விழுந்திருப்பதை பார்த்த யாராவது குழந்தையை தூக்கியிருந்தால் இப்படி உயிரிழந்திருக்குமா? யாருக்குமே மனது வரலையே'' என்று கதறித் துடித்தனர்.                         


 -இரா.பகத்சிங்

_______________________
இறுதிச் சுற்று!  

முதல்வர் வேண்டுகோள்!

"கரூர் துயர சம்பவத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் "அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும்' என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.   

-கீரன்  

_________________________________
விஜய்யை கைது செய்யவேண்டும்!

karur-box1


ஆந்திராவில் திரைப்படம் பார்க்கச் சென்ற ரசிகரில் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து போனார். அதை வழக்குப்பதிவு செய்து அந்தப் படத்தின் நடிகரை கைது செய்து சிறையிலடைத்தது அந்த அரசு. இதையே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, படுபாதகக் கொலைகளை நிகழ்த்தியுள்ள நடிகர் விஜய்யை  தமிழக அரசு கைது செய்ய வேண்டும். அவரது கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்'' எனக் குரலெழுப்பியுள்ளார் கொங்கு இளைஞர் பேரவை தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு     -ஜீவா