"ஒரே மக… என் தங்கமா பிறந்தவங்கிறதனால அவளுக்கு தங்கப்பிரியானு பெயர் வைச்சேன். இப்படி குற்றுயிரும் குலையுயிருமா அடிச்சுப் போட்டிருக் கானே.…என் மக உயிர் பிழைக்குமா அய்யா...''’என மதுரை அரசு மருத்துவமனையில் தாயும், தகப்பனும் டாக்டரிடம் கதறியபடி கேட்கிறார்கள். “
"என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆனா குடும்பத்தோட தீக்குளிச்சு சாவோம்''’என்று தாய் கதற... தந்தை பரமசிவனோ, "நாம ஏண்டி சாகணும். அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்காம போகமாட்டேன். என் மகளைக் கழுத்திலேயே ஏறி மிதிச்சிருக்கான். நாங்க வந்து காப்பாத்தலைன்னா செத்தே போயிருக்கும்''’ என்கிறார்.
உணர்ச்சிவேகம் அடங்கி மருத்துவமனைக் குள்ளிருந்து வெளியேவந்த பரமசிவம், "தனது மனைவியை கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் தாக்கியதாக; தனது சகோதரியிடம் பூபாலன் செல்போனில் உற்சாகம்பொங்கத் தெரிவிக்கும் அதிர்ச்சி ஆடியோவை நம்மிடம் ஓடவிட்டுக் காட்டினார். அந்த ஆடியோவில், மனைவியை தொண்டை, காலில் பலமாக தாக்கி நெம்பிவிட்டேன். அவ நடக்கமுடியாம நொண்டுறாள். வாயைப் பிறாண்டிட்டேன். அவளது முகமே வீங்கிவிட்டது. வலியால் துடிக்கிறாள் என்கிறார் பூபாலன். அதைக் கேட்டு சகோதரி அனிதா சிரிக்கிறார்.
"என் மகள் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். என் மகளின் கணவர் பூபாலன். அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். அவரது தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார். மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா. திருமணமான அடுத்தநாளே என் மகள் தன் அம்மாவிடம், "அம்மா 60 பவுன் நகையும் சரியா இருக்கா என்று எடைபோட்டும் போலியா என்று உரசியும் பார்த்தாங்க'னு சொன்னா. இதைக் கேட்டவுடன் கொஞ்சம் பயமா இருந்தது. 60 பவுன் நகை போட்டு, சீரோட தடபுடலா கட்டிவைச்சேன். அவன் கேக்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். இருந்தும் மாமியார் நாத்தனார் கொடுமை. அடிக்கடி விரட்டி விடுவார்கள். அழுதுக்கிட்டே பிறந்த வீட்டுக்கு வருவா. நாங்க சமாதானப்படுத்தி அனுப்பி வைப்போம். இது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் என் மகன் வெற்றி வீடு வாங்கிக் குடிபோனான். அன்றிலிருந்து என் பெண்ணைக் கொடுமைப்படுத்துவது அதிகரிக்க ஆரம்பிச்சது. ‘"உங்க அப்பனை ஒழுங்கா என் பெயரில் வீடு வாங்கிக் கொடுக்கச் சொல்லு. இல்லைன்னா பூர்வீக இடத்தை வித்து 70 லட்சத்தை பணமா கொடுக்கச் சொல்லு. இல்லை, உன்னைக் கொன்னுட்டு வேறு கல்யாணம் பண்ணிக்குவேன்'’என்று பூபாலன் மிரட்டினான்.
இன்னைக்குக் காலைல என் மக வீட்டுக்கு அருகிலுள்ளவர்கள் போன் செய்து "சீக்கிரம் வாங்க, உங்கள் மகளை கொடூரமா அடிச்சுட்டாங்க'னு சொன்னாங்க. என் மகள் தங்கம் "அப்பா நான் செத்துருவேன். என்னால பேச முடியலை' என்று கதறியதைக் கேட்டு, துடிச்சுப்போய் அங்க போனப்ப... வீடே அலங்கோலமா கிடந்தது. என் மகளின் முகம் வீங்கி ரத்தக் காயத்தோட இருந்தது. என் மகளை அள்ளிப்போட்டு மருத்துவமனைக்கு வந்தோம். "போலீஸ் அடி பார்த்ததில்லையே... இப்ப பாருடி'ன்னு சொல்லிச் சொல்லி அடிச்சிருக்கான். "நான் போலீஸ் மட்டுமில்லை பொறுக்கி. இது டிரையல்தான். போலீஸ் லாடம் கட்டுவதைப் பாத்திருக்கியா… அது உனக்கு கட்டாயம் நடக்கும். என்று சொல்லி அடி அடின்னு அடிச்சிருக் கான்யா'…என கதறினார்.
"என் ஊரு பெரியகுளம். பேர்போன குடும்பம். என் மகள் படமும் வேண்டாம். என் படமும் வேண்டாம்''’என்றார் கோரிக்கையாக.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் அவரது மகளைப் பார்த்துவிட்டு. அவருக்கு ஆறு தல் சொல்லிவிட்டு வெளியே வந்த நாம், அப்பன் திருப்பதி காவல் நிலையத்தைத் தொடர்புகொண் டோம். அங்கி ருந்த காவலர், "ஆமா சார் பூபாலன் இங்குதான் காவலராகப் பணி புரிகிறார். வரதட்சணை சம்பந்தமா புகார் வந்திருக்கு. ஆய்வாளர் விசாரணை செய்வார்''’ என்று முடித்துக்கொண்டார்.
திருப்பூர் ரித்தன்யா தற்கொலை விவகாரத்தின் சூடு ஆறுவதற்குள், காவல்துறையில் பணியாற்றுவோரின் குடும்பத்திலிருந்தே வரதட்சணைக்காக மனைவியைக் கொடூரமாக சித்ரவதை செய்த செயல் வெளிப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியைக் கிளப்பி யிருக்கிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் பூபாலன், சாத்தூரில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிக்கியுள்ள காவலர் பூபாலனை மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். குற்ற வாளிகளான 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கல்வியில் முன்னணி மாநிலமென்றால் பெருமைப்படலாம். வரதட்சணைக் கொடுமையில் முன்னணி மாநிலம் என்றால் பெருமையாகவா இருக்கும்! வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக முதல்வர் சீரியஸான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.