தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மக்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார் தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொறி வைக்கப்பட்டனர். தற்போது அவர்களிடம் சிக்கியிருக்கிறார் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வையின் மாஜி அமைச்சர் தங்கமணி.
இவருக்கு எதிராக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லாம்மாள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய் திருக்கிறார். அவரது தலைமையிலான டீம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தங்கமணியின் பனையூர் பங்களாவில் தொடங்கி, சென்னையில் 14, நாமக்கல் 33, சேலம் 4, ஈரோடு 8, கோவை, கரூர் தலா 2, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர் தலா 1 பெங்களூர், கர்நாடக சித்தூர் என மொத்தம் 69 இடங்களில் ஒரே நேரத்தில் தங்களின் வேட்டையை நடத்தியிருக்கிறது.
தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன், மகள் லதாஸ்ரீ, மருமகன் தினேஷ், தங்கமணியின் சம்பந்தி, தங்கமணியின் இரண்டு சகோதரிகள், தங்கமணிக்கு நெருக்கமான தொழில் பார்ட்னர்கள், காண்ட்ராக்ட் நிறுவனங்கள் பங்களாக்களில் சோதனை நடத்தி பல சொத்துக்களின் ஆவணங்கள், 2 கோடியே 38 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத 2 கோடியே 16 லட்சம் ரூபாய், 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, பல வங்கிகளின் லாக்கர் சாவிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் ஃபோன்கள் என கைப்பற்றியிருக்கிறார்கள். அமைச்சராக இருந்த காலத்தில் தங்கமணியின் ஊழல்களுக்கு காரணமான பல முக்கிய டாகுமெண்டுகளும் இந்த ரெய்டில் சிக்கியிருக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,’"தங்கமணி 2006-2011-ல் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2011 முதல் தற்போது வரை குமார பாளையம் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 2011 காலக்கட்டத்தில் வருவாய்த்துறை, தொழில்துறை அமைச்சராகவும் பிறகு போக்கு வரத்து துறை அமைச்சராகவும் (கூடுதல் பொறுப்பு) இருந்தார். 2016-2021 வரை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தார். இவர் அமைச்சராக பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு 1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 17 ரூபாயாக இருந்தது. அவரது அமைச்சர் பதவி முடிந்த பிறகு 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து, 318-ஆக அதிகரித்திருக்கிறது.
இவைகளில் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் சட்டப்பூர்வமாக சம்பாதித்த தொகை 5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ஆக இருக்கிறது. இதை கழித்து விட்டு அவர்களது செலவுகள் மற்றும் சேமிப்புகளை வைத்து கணக்கிடும்போது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே, 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார்கள். இவைகளுக்கான ஆதாரப்பூர்வமான டாகுமெண்டுகள் எங்களுக்கு கிடைத்த நிலையில், அதனை வைத்து அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.
முருகன் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தியதால் கிடைத்த வருமானம் என கணக்கில் காட்டுகிறார்கள். ஆனால், இந்த நிறுவனம் எந்த தொழிலையும் செய்யவில்லை; வருமானமும் வரவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்த ஊழல் பணத்தை சட்டபூர்வமான வருமானம் எனக் காட்டவே அந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். தங்கமணிக்கு எதிரான புகார்களை நாங்கள் விசாரித்தபோது, தனது மனைவி சாந்தியின் பெயரில் கிரிப்டோ கரன்சியிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார் தங்கமணி. இந்த தகவல்தான் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது''‘என்று சுட்டிக்காட்டினார்கள்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கமணியின் குடும்பம் மிகச் சாதாரணமானதுதான். ஜவுளிக் கடையும், சாயப் பட்டறையும்தான் அவருக்கான தொழில். அரசியல் செல்வாக்கும் அமைச்சர் பதவியும் முன்னாள் முதல்வருடனான நெருக்கமும் அவரை மல்ட்டி மில்லியனராக்கியுள்ளது. கட்சியில் வலிமைமிக்க நபராக வளர்ந்தார். தற்போது அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகவும், வழிகாட்டும் குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார் தங்கமணி.
அமைச்சராக இருந்த காலத்தில் மகன் தரணி யும், மருமகன் தினேஷும் வைத்ததுதான் சட்டம்! அதிலும் தினேஷின் அனுகூலம் இல்லாமல் எந்த ஒரு கோப்பும் மூவ் ஆகாது. மேண்ட்ரோ நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குந ராக இருக்கிறார் தினேஷ். இது தவிர, மெட்ராஸ் ரோட் லைன்ஸ், ஸ்மார்ட் ட்ரேட் லிங்க்ஸ், ஸ்மார்ட் டெக்னாலாஜி, ஸ்ரீ ப்ளை அண்ட் வேனீர்ஸ், ஜெயஸ்ரீ செராமிக்ஸ், ஏ.ஜி.எஸ். ட்ரான்ஸ் மூவர், ஸ்ரீ ப்ளைவுட்ஸ் அண்ட் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் ஆகிய கம்பெனிகளின் பார்ட்னராக இருக்கிறார்.
தனது தந்தை சிவசுப்பிரமணியனை உரிமையாளராக நியமித்து எம்.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் 100-க்கும் அதிகமான லாரிகளை இயக்கி வருகிறார் தினேஷ். தனது மனைவி லதாஸ்ரீயை உரிமையாளராக வைத்து பள்ளிப்பாளையத்தில் ஜெயஸ்ரீ ப்ளைவுட்ஸ் நிறுவனத்தையும் நடத்துகிறார். மேலும், இந்தோனேசியாவில் 1500 கோடி மதிப்பிலான 2 நிலக்கரி சுரங்கங்களையும் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் வருடத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் தங்கமணிக்கு வந்துகொண்டிருக்கிறது.
அமைச்சராக தங்கமணி இருந்தபோது திரட்டப்பட்ட ஊழல் பணம் முழுவதும் தினேஷ் மூலமாக கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், இந்தோ னேசியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் மட்டும் சுமார் 25,000 கோடி இருக்கும். நியூஸ் ஜெ சேனலில் தங்கமணியின் முதலீடு இருக்கிறது. அங்கு ரெய்டு நடத்தப்படாததன் மர்மம் புரியவில்லை‘’ என்கிறார்கள் தங்கமணியை மிக நெருக்கமாக கண்காணிக்கும் ஊழல்களுக்கு எதிரான சமூகநல அமைப்பினர்.
தமிழக மின்சாரத்துறையில் தங்கமணியின் பணிக்காலத்தை விசாரித்த போது, "அப்பாயின்ட் மெண்டுகள், ட்ரான்ஸ்ஃபர்கள், புரமோஷன்கள் விசயத்தில் பெரும்பாலும் அவர் தலையிடமாட் டார். இவைகளில் லஞ்சம் வாங்க கெடுபிடி காட்டினால் அவரது பெயர் அம்பலமாகிவிடும். அதனாலேயே அதில் தலையிடாமல் அதிகாரிகளி டம் ஒப்படைத்து விடுவார். இந்த விசயங்களில் இவரது பெயர் கெட்டுப்போகவில்லை. ஆனால், நிலக்கரி இறக்குமதி, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், காற்றாலை மின்சாரம் கொள்முதல், மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க அனுமதி உள்ளிட்டவைகளில் அடித்த கொள்ளைகள் அதிகம்.
தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தில் மட்டுமே ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் தங்கமணிக்கு கிடைத்தது. ஆக, எந்த கெடுபிடியும் இல்லாமலேயே எங்கள் துறையிலிருந்து மட்டுமே மிக இயல்பாக வருசத்துக்கு 1000 கோடி ரூபாய் கமிஷனாகவே தங்கமணிக்கு கிடைத்தது. இது தவிர துறையில் நடந்த நிலக்கரி ஊழல்கள் தனி'' என்று விவரிக்கின்றனர்.
அதேபோல, டாஸ்மாக் நிறுவன வட்டாரங் களில் விசாரித்தபோது,’"டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 5 மதுபான உற்பத்தியாளர் களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான லிக்கர்ஸ் மற்றும் பீர் உள்ளிட்ட சரக்குகளை (மதுபானம்) கொள்முதல் செய்கிறது. இந்த கொள்முதல் விவகாரங்களில் மதுபான உரிமையாளர்களிடமிருந்து மட்டுமே மாதம் சுமார் 250 கோடி ரூபாய் தங்கமணிக்கு கமிஷனாகவே போய்க்கொண்டிருந்தது. ரெய்டுகளை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, டாஸ்மாக்கிற்கு சரக்குகளை சப்ளை செய்யும் மது உற்பத்தி நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தியிருந்தால் தங்கமணிக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருக்கும்''’என்கிறார்கள்.
தங்கமணிக்கு எதிராக கிரிப்டோ கரன்சி விவகாரத்தை தனது எஃப்.ஐ.ஆரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கும் நிலையில், அதுகுறித்து விசாரித்தபோது, "கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் மணி. ரூபாய் மாதிரியோ, தங்கம் மாதிரியோ இருக்காது. இண்டர்நெட் மூலம் இயங்கும் டிஜிட்டல் கரன்சி, பிளாக் செயின் டெக்னாலஜி மூலமாக இன்டர்நெட் வர்த்தகங் களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கரன்சிக்கென இந்தியா உள்பட உலகம் முழுவதும் நிறைய ஏஜென்சிகள் இருக்கின்றன. பிட்காயின், யூனோ காயின், லைட் காயின், டெதர், போல்கடாட், எதிரீயம் என சுமார் 3000-த்திற்கும் அதிகமான வகைகளில் கிரிப்டோ கரன்சி நடமாடுகிறது. இந்த கரன்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்கிற குரல்கள் அதிகரித்ததாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவினாலும் அந்த கரன்சியை பயன்படுத்து வதற்கான ஒழுங்குமுறைகளை இந்திய ஒன்றிய அரசு ஆராய்ந்து வருகிறது.
லீகலாகவும் இல்லீகலாகவும் கிரிப்டோ கரன்சி உலக பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு பிட்காயினின் விலை இன்றைய இந்திய ரூபாயில் 37 லட்சம். இதில் முதலீடு செய்து வருவாயை பெருக்க முடியும். ஆனால், இது ஒரு பங்கு வர்த்தகம் மாதிரிதான். ஏற்ற இறக்கம் இருக்கும். கிரிப்டோ கரன்சியில் ஒருவர் லீகலாக முதலீடு செய்தால் அவரது அக்கவுண்டை கண்டுபிடித்து விட முடியும். இல்லீகலாக முதலீடு செய்தால் எந்த ஹேக்கராலும் கண்டுபிடிக்க முடியாது. தங்கமணிக்கு எதிரான புகார்களை விசாரிக்கத் துவங்கியபோது, அவரது மனைவி சாந்தியின் பெயரில் மருமகன் தினேஷ்குமார், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாகவும், 425 பிட்காயின்களை அவர்கள் வைத்திருப்பதாகவும் தகவலறிந்து கிறுகிறுத்துப் போனோம்.
லீகலாகவா, இல்லீகலாகவா எந்த வகையில் முதலீடு செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங் களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கிரிப்டோ உலகில் நுழைந்த முதல் மாஜி தங்கமணிதான். இதற்கான ஆதாரம் கிடைக்கும்போது மேலும் சில பூதாகரங்கள் வெடிக்கும்'' என்கிறார்கள் லஞ்சஒழிப்புத் துறையினர்.
அமைச்சர் பதவியை பயன்படுத்தி வாரிச் சுருட்டிய தங்கமணி, தனது குடும்பத்தினர் அத்த னை பேரின் பெயரிலும் சொத்துக்களை குவித்திருக் கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் அவை தொடர்பான ஆவணங்கள் அகப்பட்டிருப்பதால், குடும்பத்தினருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஜிக் களுக்கு எதிராக சேகரித்துள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரம்காட்டி வருகிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்
________________________
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த வால்ராச பாளையத்திலிருந்து குடும்ப வறுமை காரணமாக தறி ஓட்டிப் பிழைக்க பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்திற்கு வந்தவர்தான் தங்கமணியின் அப்பா பெருமாள் கவுண்டர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த பகுதி நிர்வாகியாக இருந்தார். ஆகவேதான் தனது மகனுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கே. தங்கமணி நினைவாக பெயர் வைத்தார்.
தங்கமணி தொடக்கத்தில் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார் அ.தி.மு.க.வில் இணைந்த தங்கமணி 1991-ல் அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதியின் நண்பர் சிவசுப்ரமணியன் தயவில் அரசியலை துவக்கினார். பின்னர் பள்ளி பாளையம் ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர் அடுத்து ஒரே வருடத்தில் ஒன்றியச் செயலாளர் என வளர்ந்து, 2001 பள்ளிப்பாளையம் ஒன்றிய சேர்மனானார்.
2006 வாக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பொன் னையன் மீது பல மைனஸ்கள் விழ, சமயம் பார்த்து சசிகலா குடும்பத் தொடர்பில் சீட் வாங்கி திருச்செங்கோடு தொகுதியில் தி.மு.க. வேட் பாளர் காந்திச்செல்வனை எதிர்த்து போட்டியிட்டு வெறும் 116 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். அ.தி.மு.க. அரசியலில் செல்வகணபதியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்கமணி அசுர வளர்ச்சியை அடைகிறார். முன்னாள் முதல்வர் ஜெ. மறைந்த பிறகு எடப்பாடி பன்னீர் கூட்டணியில் அசைக்க முடியாத சக்தியானார். வளர்ச்சியைப் போலவே ஊழல் குற்றச்சாட்டுகளும் வானுயர வளர்ந்தது.
இந்த நிலையில் தான் 15-12-2021 காலை 6;30 மணிக்கு பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 14 இடங்களில் ஷட்டர் லாக் அடித்தனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். மொத்தம் 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ரெய்டு அடிக்க, முப்பது ஆண்டுகளாக காலையில் எழுந்து பால் ஊற்றச் செல்லும் பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி ரெய்டின் போது ரிலாக்ஸாக வீட்டில் தான் இருந்துள்ளார். இவர் மட்டுமல்ல லிஸ்டில் உள்ள 14 பேருமே வீட்டில்தான் இருந்துள்ளனர்.
ஆலாம்பாளையத்தில் உள்ள மாஜி தங்கமணி வீடு, புதுப்பாளையத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினரும் தங்கமணியின் மைத்துனருமான செந்தில், ஆலாம் பாளையம் சேகர், முனியப்பா நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் டி.கே.எஸ். மற்றும் பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, பி.கே.பி.என். மில் அலுவலகம், லக்கி மில் ராஜமாணிக்கம் பங்களா, மருமகன் தினேஷ் பங்களா, சம்பந்தி சிவாவின் ரைஸ் மில், பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தங்கமணி கட்சி அலுவலகம், ஆண்டிக்காட்டில் உள்ள தங்கமணியின் அக்கா நாகரத்தினத்தின் பங்களா, காவேரி புதுமாரியம்மன் கோவில் அருகே உள்ள மைத்துனர் கோபுவின் வீடு என பட்டியல் நீண்டது பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சொல்லி வைத்தாற்போல எவருமே இதில் மிஸ் ஆகவில்லை. பக்காவாக எல்லோரும் வீட்டில்தான் இருந்துள்ளனர்.
தங்கமணியின் சம்பந்தி சிவாவின் ரைஸ்மில்லில் இருந்து ஆவணங்கள் பல கைப்பற்றப்படவே, அதை சரிபார்க்க தாசில்தார் தமிழரசி, மற்றும் ஆர்.ஐ.கார்த்திகா உடன் வி.ஏ.ஓ.க்கள் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
ரெய்டு தகவல் அறியப்பட்டதால் உள்ளூர் ர.ர.க்கள் பலர் குவியத் தொடங்க பாதுகாப்புக்கு நின்ற துப்பாக்கி ஏந்திய காவலர்களைக் கண்டதும் ர.ர.க்கள் சற்று அடக்கி வாசித்தனர். வந்தவர்களுக்கு வழக்கம்போலவே டீ, டிபன் கூல் டிரிங்க்ஸ் என பரிமாற... உற்சாக பானமும் ஓரங்கட்டி அளிக்கப்பட்டது.
அதே போல, பரமத்திவேலூரை அடுத்த நன்செய் இடையாற்றில் உள்ள மாஜி தங்க மணியின் விசுவாசியான மணல் மாஃபியா பொன்னர் சங்கர் வீடுகளிலும், ப.வேலூர் நகரசெயலாளர் பொன்னிவேலு வீட்டிலும், வெங்கரையை சேர்ந்த மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
ஆனால் இதில் வேடிக்கை சாதாரண சைக்கிள் கடை வைத்திருந்தவர், மணல் மாஃபியாவாகி இன்று பல கோடிகளுக்கு அதிபதி என அசுர வளர்ச்சியில் உள்ளார். அவருடைய முக்கியமான குடோன் மற்றும் பெட்ரோல் பங்குகளில் முழுமையாக சோதனை செய்யாமல் வீட்டில் ஆய்வு செய்துள்ளதை உள்ளூர்வாசிகளே கமெண்ட் அடிக்கின்றனர்.
மறைந்த அரசு வழக்கறிஞர் சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மறைந்த பாதரை கந்தசாமி இவர்கள் இருவருமே மாஜிக்கு தீவிர விசுவாசிகள். புதுப்பாளையம் முன்னாள் தலைவர் சுந்தரம், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரியின் வலது கரமும் எம்.ஜி.ஆர். மன்றத்தில் உள்ள வாரி கலர்ஸ் சிவக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், பள்ளிப்பாளையம் துணை செயலாளர் ஜெய் கணேஷ், இடம் வாங்கி விற்பது உள்ளிட்டவற்றை கவனித்த முன்னாள் சாயப்பட்டறை சங்க தலைவர் பி.எஸ்.கே. கந்தசாமி, டிரான்ஸ்போட், ஃபைனான்ஸ், ரியல் எஸ்டேட்டை கவனித்து வந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி குடும்பம், பாப்பம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஜெயவேல், களியனூர் அக்ரஹாரம் முன்னாள் ஊராட்சிமன்ற மாதேஸ்வரன், பட்லூர் மணி, பரமத்தியைச் சேர்ந்த எம்.எஸ்.வீரப்பன், பாண்டமங்களம் பெருமாள், பர்னிச்சர் முருகவேல் உள்ளிட்ட பலர் எப்படி மிஸ் ஆனார்கள் என கட்சியினரே உதட்டைப் பிதுக்குகின்றனர்.
தங்கமணி வீட்டில் ரெய்டு வரப்போகிறது என்ற தகவல் தி.மு.க. சைடிலிருந்து ஏற்கனவே தங்கமணிக்கு சென்றுவிட்டதாகவும் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
-ஜீவாதங்கவேல்