தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் தொகுதியில் 800 பொறுப்பாளர்களை, நேரடி பார்வையில் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார். அ.தி.மு.க.வின் 10 அமைச்சர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய்க் கடைசியில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.
"செந்தில்பாலாஜி வருகையினால் தி.மு.க.வில் உள்ள முக்கிய சீனியர் தலைவர்கள் பலர் கட்சி வேலை செய்யவில்லை. செந்தில்பாலாஜியை தோற்கடிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள்' என்ற தகவல் பரவ... இது குறித்து செந்தில் பாலாஜி, சபரீசன் மூலம் ஸ்டாலின்வரை புகார் கொடுத்துவிட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் இன்னும் ஒருபடி மேலேபோய் தி.மு.க. பிரமுகர் ஒருவர் பேசுவது போன்றும், அவருக்குத் தெரியாமல் எடுத்தது போன்ற ஒரு வீடியோவும் பரபரப்பானது. அதே நேரத்தில் உடல்நிலை சரியில்லாத கே.சி.பி. முதல் சீனியர்கள் பலரும் பம்பரமாக வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதில் உச்சகட்டமாக கரூர் சின்னசாமி, "இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் ஸ்டாலின் முதல்வர் ஆவார், செந்தில்பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆவார்' எனப் பேசி அ.தி.மு.க.வினரையே வாயடைக்க வைத்தார்.
செந்தில்பாலாஜி தன்னுடைய பிரச்சாரத்தில் "இந்த தொகுதியில் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். அங்கு வீடுகள் அமையும் இடத்திற்குத் "தளபதி நகர்' என்று பெயர் வைக்கப்படும்' என்று அறிவித்தார். அ.தி.மு.க. தரப்பில், செந்தில்பாலாஜி மீது இருந்த பழைய பிரச்சினைகளை எல்லாம் தூசி தட்டி "என்னுடைய நிலத்தை அபகரித்தார், கொலை மிரட்டல் விடுத்தார்' என்று பரபரப்பு புகார்கள் கிளம்பின. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்தபோது, செந்தில்பாலாஜி சொன்ன "3 சென்ட் நிலம் திட்டம் வரவேற்க வேண்டியது. இது தேர்தல் முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்' என்று அறிவிப்புக் கொடுக்க தொகுதியில் இந்தப் பிரச்சாரம் இன்னும் பரபரப்பு அடைந்தது.
இந்த 3 சென்ட் நிலப் பிரச்சாரத்தை எப்படி முறியடிப்பது என்று யோசித்து "அம்மா நகர்' என்கிற பெயரில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் "கான்கிரீட் வீடு' என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான விண்ணப்பத்தை விறுவிறுப்பாக பூர்த்தி செய்கிறது அ.தி.மு.க.
அரவக்குறிச்சி தொகுதி மக்களிடம் தற்போது, "3 சென்ட் நிலமா, வீடா?' என்கிற பட்டிமன்றமும், தொகுதி அரசியல்வாதிகளிடம், "தளபதி நகரா? அம்மா நகரா?' என்கிற போட்டியும் நடந்துகொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு 4,000 கொடுக்கலாம் என்று முடிவு செய்தவர்கள் தற்போது 2,500 கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் எவ்வளவு கொடுக்கலாம் என்பது இன்னும் யோசனையிலே உள்ளது. அ.ம.மு.க. சார்பில் 1000 முதல் 1500 கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அனல் பறக்கிறது அரவக்குறிச்சி.
-ஜெ.டி.ஆர்.