கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த சினிமா உலகம் மாஸ்டரால் மூச்சுவிடத் தொடங்கி கர்ணனால் கண் திறந்து பார்த்தது. அதற்குள் வந்துவிட்டது கொரோனா இரண்டாம் அலை. மீண்டும், "ஐம்பது சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற கட்டுப் பாட்டை விதித்துள்ளது அரசு. அதைத்தொடர்ந்து இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என மீண்டும் சோதனைகளுக்கு ஆளாகியுள்ளது தமிழ்த் திரைப்பட உலகம். தொடர்ச்சியாகப் படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடு வருமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் தொழிலாளர்கள். "எம்.ஜி.ஆர். மகன்', "தலைவி', "டாக்டர்' உள்ளிட்ட பல படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. ""சினிமான்னா கோடி, கோடியா சம்பளம் வாங்குற ஹீரோக்களும் டைரக்டர்களும் மட்டுமில்ல. அதை நம்பி எங்களை மாதிரி ஆயிரக்கணக்கான டெய்லி பேட்டா வாங்குற தொழிலாளிகளும் இருக் கிறோம். ஒரு லாக்டவுனையே எங்களால தாங்கமுடியல. திரும்ப வந்தா வாழவே முடியாது'' என்று புலம்பு கின்றனர் தொழிலாளர்கள்.
இனி எனக்கு யார் துணை?
நடிகர் விவேக்கின் மறைவு ரசிகர்கள், திரைத் துறையினர் என அனைத்துத் தரப்பையும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியது. அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்துக்குப் பேரிடியாக அமைந் தது. இவை அனைத்தையும் தாண்டி ஒருவரது கண்ணீர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது விவேக்கின் நண்பராக, நிழலாக வலம்வந்த "செல்' முருகனின் கண்ணீர். விவேக்கின் தகனம் நடந்த மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தனியே நின்று அழுதுகொண்டிருந்த "செல்' முருகனின் சோகம் பார்த்தவர்களை கலங்கவைத்தது. விவேக் நடித்த பல படங்களில் அவருடன் நடித்து வந்த செல் முருகன், விவேக்கின் நெருங்கிய நண்பர் ஆவார். விவேக்கின் மேனேஜராகவும் இவர் இருந்துவந்தார். விவேக்கை அறிந்தவர்கள் அனைவரும் முருகனை அறிவார்கள். அப்படி இருந்த முருகன், விவேக்கின் திடீர் மறைவால் செய்வதறியாது நின்றார். "இந்த முருகனை விட்டுவிட்டு அந்த கடவுள் முருகனிடம் சென்றுவிட்டாய். இனி எனக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?' என்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவைப் படித்தவர்கள் என்ன ஆறுதல் சொல்வது என்றறியாமல் நிற்கின்றனர்.
அழகு நிலையத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி!
சில பல விளம்பரங்களில் முன்பே நடித்திருந்தாலும் "பிக்பாஸ்' நிகழ்ச்சியால் ரைசானது ரைசாவின் மார்க்கெட். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த "ப்யார் பிரேமா காதல்' படம் வெற்றி பெற, சினிமாவில் பெரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் ரைசா. அந்த நம்பிக்கையை சோதித்தது பாலாவின் "வர்மா'. ஆனாலும் அடுத்தடுத்து படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வந்த ரைசாவுக்கு, மீண்டும் ஒரு சோதனை. முக அழகை பராமரிக்கும் சாதாரண சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற அவரின் முகம் வீக்கமடைந்து அழகை இழந்திருக்கிறது. "சாதாரண பராமரிப்பு ஃபேஷியலுக்காகச் சென்ற தன்னை, சிறப்புச் சிகிச்சை செய்யக் கட்டாயப்படுத்தி தனது முகத்தை இப்படி ஆக்கியது டாக்டர் பைரவி செந்தில்தான்' என்று குற்றம்சாட்டியுள்ளார் ரைசா. டாக்டரோ, "அவரே இதற்குமுன் இந்த சிகிச்சை செய்திருக்கிறார். இந்த முறையும் விருப்பத்துடன்தான் செய்தார். இப்போது இந்தப் பிரச்சினையை வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறார்' என்று பதில் குற்றம்சாட்டியிருக்கிறார். யார் சொல்வது உண்மையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது ரைசாவின் முகமும் ரசிகர்களின் மனதும்தான்.
-வீபீகே