ஐந்து நாள் சோதனையை நடத்தி முடித்திருக்கிறது வருமானவரித்துறை. சோதனைகளுக்கு உள்ளான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர் செய்யாதுரையின் நிறுவனங்களுக்கு சீல் வைத்திருப்பதுடன் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்யும் முயற்சியிலிருக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். இந்த நிலையில், பினாமிகள் சட்டத்தில் எடப்பாடியை நெருக்கும் வலையை வீச டெல்லி திட்டமிட்டிருப்பதாக கிடைத்திருக்கும் தகவல் அவரை அச்சப்பட வைத்துள்ளது. தனக்கெதிராகப் பின்னப்படும் வலையை அறுத்தெறியும் முயற்சியை ரகசியமாக துவக்கிவிட்டார் எடப்பாடி என்கிறார்கள்.
உறவுகளுக்கு எடப்பாடி கட்டளை!
""மேட்டூர் அணையிலிருந்து கடந்த 19-ந்தேதி தண்ணீரை திறந்துவிட்ட முதல்வர் எடப்பாடி, அன்றைய தினம் இரவு தனது சொந்த ஊரான எடப்பாடியிலுள்ள வீட்டில் தங்கினார். சென்னையிலிருந்து கிளம்புவதற்கு முன்பே, எடப்பாடியிலுள்ள வீட்டுக்கு குறிப்பிட்ட நாளில் வருமாறு முக்கிய உறவினர்கள் சிலருக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவர்களிடம் விடிய விடிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. ""அன்றைய தினம் எடப்பாடியை சந்தித்தவர்கள், ஒரு வகையில் உறவினர்கள்; மற்றொரு வகையில் அவரது பினாமிகள். மொத்தம் 15 பேர் வந்திருந்தார்கள். அந்த ஆலோசனை முழுவதும் வருமானவரி சோதனை மற்றும் பா.ஜ.க.வின் துரோகம் குறித்தே விவாதிக்கப்பட்டது. 15 பேரிடமும் ஒருவித நடுக்கம் இருந்தது. அவர்களிடம் பேசிய எடப்பாடி, "அ.தி.மு.க.வை மீண்டும் உடைக்கும் வேலையில் டெல்லி இறங்கியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் என்னை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள். அந்தசமயத்தில், பொருளாதார ரீதியாக நாம் வலிமையாக இருக்கக்கூடாதுங்கிறதும் அவர்களுடைய திட்டம். அதற்காகத்தான் இந்த ரெய்டு நெருக்கடி. செய்யாதுரையை அடுத்து உங்களுக்கும் குறி வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும். அதனால், உங்களிடமுள்ள என் தொடர்பான ஆவணங்களை நம்பிக்கையான இடத்தில் மறைத்து வையுங்கள். இனி, என் தொடர்பான ஆவணங்கள், பணம் எதுவும் உங்களிடம் இருக்கக்கூடாது என அறிவுறுத்தினார். பாதுகாப்பான இடத்துக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதை அவர்கள் தெளிவுபடுத்தியதில் ஓரளவு எடப்பாடிக்கு நிம்மதி'' என்று விவரித்தன அ.தி.மு.க. பெருந்தலைகள்.
""பினாமிகள்தான்'' -ஒப்புவித்த நாகராஜன்!
எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை, அவரது மகன் நாகராஜன் மற்றும் நிறுவனத்தோடு தொடர்புடையவர்களிடம் மீண்டும் விசாரிக்க சம்மன் அனுப்பவிருக்கிறது வருமானவரித்துறை. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் ரூபாய் 180 கோடி, 109 கிலோ தங்கம், பல கோடிக்கான சொத்து ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 5 நாள் நடந்த சோதனைகளில் 3,500 கோடிக்கான சொத்து ஆவணங்கள் மற்றும் முதலீடுகள், 847 கோடி ரொக்கம், 362 கிலோ தங்கம் ஆகியவை சிக்கியிருக்கிறது. இவற்றை வெளிப்படையாக வருமானவரித்துறை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், கைப்பற்றியிருக்கும் மிரள வைக்கும் ஆதாரங்களை செய்யாதுரையிடமும் அவரது மகன் நாகராஜனிடமும் காட்டிய அதிகாரிகள், "நாங்கள் கைப்பற்றியிருக்கும் அனைத்தும் உங்களுடையது மட்டுமே இல்லைங்கிறது எங்களுக்குத் தெரியும். அதனால், இதெல்லாம் யாருடைய பணம்? யாருடைய சொத்துக்கள்?' என கேட்க... ‘"எல்லாம் எங்களுடையதுதான்' என கூலாக பதில் சொல்லியிருக்கின்றனர் செய்யாதுரையும் நாகராஜனும்.
தொடர்ந்து அதேமாதிரியே சொன்னதால், எரிச்சலடைந்த அதிகாரிகள், தேர்ட் டிகிரி ட்ரீட்மெண்ட்டில் நாகராஜனை விசாரித்துள்ளனர். அதனையடுத்து, டெண்டர் ஒதுக்கப்படும் விவகாரம், காண்ட்ராக்ட்டில் எடப்பாடி தரப்புக்கான 20 சதவீத கமிசன், அதிகாரிகளுக்கான 10 சதவீத கமிசன், தங்களுக்கான லாபமாக 20 சதவீத கமிசன் என அனைத்து வில்லங்கத்தையும் ஒப்பித்த நாகராஜன், ""சி.எம். தரப்புக்கான 20 சதவீதமும் எங்களிடமே இருக்க வேண்டும்கிறதுதான் உடன்பாடு. ஒவ்வொரு காண்ட்ராக்ட்டிலும் சி.எம். தரப்பில் பங்குத்தொகை பகிரப்பட்டு அதன் புள்ளிவிவரங்களை மட்டும் அனுப்பி வைத்துவிடுவோம். மற்றபடி அவர் தரப்புக்கான தொகை எங்களிடமே இருக்கும். தொகை அதிகரிக்கும் நிலையில், சொத்துக்கள் வாங்கவும், சில தொழில்களில் முதலீடு செய்யவும் உத்தரவு வரும். அதன்படி செய்வோம். அந்த வகையில், நாங்கள் அவருடைய பினாமிகள்தான்'' என கக்கியிருக்கிறார்.
எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!
ஜெயலலிதா ஆட்சியிலும்(2011-16), அவரது மறைவுக்குப் பிறகும் நெடுஞ்சாலைத்துறை எடப்பாடியின் வசமே இருந்து வருகிறது. இத்துறையின் டெண்டர் விவகாரங்கள் முழுவதையும் புலனாய்வு செய்து பல தகவல்களை சேகரித்துள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள். இது குறித்து விசாரித்தபோது, ""ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி டெண்டர் விடப்பட்டு பல காண்ட்ராக்டர்களுக்கு சாலைப் பணிகள் பிரித்துத்தரப்பட்டு வந்த நிலையில், இத்துறைக்கு எடப்பாடி அமைச்சரானதும் அந்த நடைமுறையை அழித்து, அனைத்து வேலைகளையும் ஒரே பேக்கேஜில் இணைத்து ஒரே ஒரு காண்ட்ராக்டருக்கு கொடுக்கும் முறையைப் புகுத்தினார். அப்படி சிங்கிள் காண்ட்ராக்டராக தென்மாவட்டத்தில் எடப்பாடியால் உருவாக்கப்பட்டவர்தான் செய்யாதுரை.
பெரிய முதலீடுகளையும் தொழில்நுட்பங்களையும் ஈர்க்கவே பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட பெரிய நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டுவரும் திட்டங்களை எடுக்க முடிவதில்லை. காரணம், அதற்கான தகுதி இல்லை என்பதுதான். மாநில அளவிலும் இவர்கள் தகுதி இல்லாதவர்கள்தான். நெடுஞ்சாலைத்துறையில், என்ன வேலை என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக, யார் காண்ட்ராக்டர் என்பதை முடிவுசெய்வர். அவர்களுக்கேற்ப திட்டப்பணிகளுக்கான மதிப்பீடுகள் உருவாக்கப்படுவது எடப்பாடி கண்டுபிடித்த புது வழி. அதன்படி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதன் லாபம் பங்கு பிரிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளது வருமானவரித்துறை'' என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
சிக்கும் உயரதிகாரிகள்!
""ஆன்லைன் டெண்டர்கள் மூலம்தான் ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன' என்கிறார் எடப்பாடி. ஆனால், ஆன்லைன் மூலம் டெண்டர் விண்ணப்பம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஆன்லைனிலேயே டெண்டர் போடுவதற்கான இ-டெண்டர் முறையை எடப்பாடி அமல்படுத்தவில்லை. நேரில் டெண்டர் போடும் முறையையே பின்பற்றி வருகிறார்கள். இந்த முறையில், கண்காணிப்பு பொறியாளர்களே (சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர்ஸ்) காண்ட்ராக்டர்களை தேர்வு செய்வதால் முதல்வர் எடப்பாடி சொல்கிற காண்ட்ராக்டர்களுக்கே பணிகளை ஒதுக்கிவிடுவர். ஒவ்வொரு வேலைக்கும் இரண்டு டெண்டர்களை மட்டுமே அனுமதிப்பர். முதல் டெண்டர் விண்ணப்பத்தில் திட்ட மதிப்பில், 0.01 சதவீதம் குறைவாக செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனம் விலைப்புள்ளியை கோட் செய்யும். மற்றொரு டெண்டரில் எஸ்.பி.கே.யின் டம்மி நிறுவனம் 0.01 சதவீதம் அதிகமாக கோட் செய்யும். இறுதியில் எல்-1 என்கிற முறையில் செய்யாதுரைக்கே வேலைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அந்த வகையில், நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் என சென்னை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் -பராமரிப்பு) சாந்தி, சென்னை சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் (கட்டுமானம் -பராமரிப்பு) டி.இளங்கோ, மதுரை சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் சந்திரசேகர், திருப்பூர் சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் முருகேசன், திருச்சி சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் பழனி, நெல்லை சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் பூவானந்தம், சேலம் சூப்பிரண்ட்டெண்ட் இன்ஜினியர் கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளது வருமானவரித்துறை'' என்கின்றனர் உளவுத்துறையினர்.
பராமரிப்புப் பணியில் பகல் கொள்ளை!
தமிழகம் முழுவதுமுள்ள 41 நெடுஞ்சாலைக் கோட்டங்களில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர் கோட்டங்களில் ’ செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த ஒப்பந்தங்களின்படி, கோட்டத்திலுள்ள சாலைகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு 500 கோடி என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய் ரிலீஸ் செய்யப்பட வேண்டும். ஆனால், முதலாண்டிலேயே 400 கோடியை ரிலீஸ் செய்துவிடுவர். காரணம், திட்ட மதிப்பில் துறையின் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் 30 சதவீத கமிசனை முன்கூட்டியே காண்ட்ராக்டர் கொடுத்துவிடுவதால், அதனை ஈடுகட்டுவதற்காகத்தான். அந்த வகையில், 5 ஆண்டுகள் பராமரிப்பு என்பது பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். உதாரணமாக, விருதுநகர் கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 612 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலாண்டிலேயே மொத்த மதிப்பில் 45 சதவீத தொகையை (276 கோடி) ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இப்படி பல விவகாரங்களைத் தோண்டி எடுத்துள்ளனர் வருமானவரித்துறையினர்.
எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்களும் உறவினர்களும் அவரது பினாமிகள்தான் என்பதைக் கண்டறிந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள், அது குறித்து முதல்கட்ட ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கிருந்து வரும் சிக்னலைப் பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
-இரா.இளையசெல்வன்