கடந்த 05-ஆம் தேதி இரவு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினியை போயஸ் கார்டன் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து வரவேற்றார், லதாரஜினி. சென்னை திரும்பிய மறுநாளே, ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை நியமித்தார் ரஜினி. கடலூர் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் இளவரசன், தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளர் என்.இராமதாஸ், கே.கே.துரைராஜ், என்.கோவிந்தராஜ், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, பரமேஸ்வர பகவான் ஆகிய ஆறு பேர் கொண்ட குழு, மாதம் ஒருமுறை கூடி, மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.
06-ஆம் தேதி காலை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் ரஜினியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். அன்றுதான் நீட் அராஜகத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் பலியானார். இன்னொரு மாணவியான சிவகங்கை சிங்கம்புணரி தேவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் மதுரையில் பலியானார்.
தமிழகத்தில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவிகள் கடுமையான சித்ரவதைக்கும் அவமானத்திற்கும் ஆளானார்கள். தலைவிரி கோலத்துடன் பரிட்சை எழுதிய அவலமும் அரங்கேறியது. நடந்த அக்கிரமங்களைக் கண்டித்து வாய்ஸ் எதுவும் கொடுக்கவில்லை ரஜினி.
மே.09-ஆம் தேதி "காலா'வின் ஆடியோ ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அழைப்பிதழ்களும் அனுப்பும் பணியும் தீவிரமானது. கிட்டத்தட்ட இந்த விழாவை ஒரு மினி மாநாடாக நடத்தும் பொருட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தை செலக்ட் பண்ணினார் ரஜினி. இதனையடுத்து அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பத்தாயிரம் பேருக்கும் மேல் அழைப்பிதழ் அனுப்பி, கட்டாயம் வரும்படி தலைமையிடமிருந்து தாக்கீதும் போனது.
மே.05-07 நக்கீரனின் இறுதிச்சுற்று பகுதியில் "காலா' ரஜினியின் ரூட்! என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில் "காலா' படத்தில் தன்னை ஒரு தலித் தலைவனாக அடையாளம் காட்டியிருப்பதையும், அதற்குத் தோதாக படத்தில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றிருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அதை இப்போது ஒத்துக் கொண்டனர் டைரக்டர் ரஞ்சித்தும் இசை அமைப்பாளர் சந்தோஷ்நாராயணனும். 09-ஆம் தேதி காலையிலேயே அனைத்துப் பாடல்கள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், டைரக்டர் பா.இரஞ்சித் ஆகியோர் பேசிய வீடியோ இணையதளங்களில் ரிலீசானது. அதில் பேசிய ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும் "காலா'வில் அரசியல் இருக்கு என ஒத்துக் கொண்டனர்.
"காலா'வில் அரசியல் இருக்கு என்றதும் தமிழக அரசியல் களத்தில் அனல் அடிக்க ஆரம்பித்தது. 09-ஆம் தேதி மதியம் கமலுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி மீடியாக்களிடம் வாய் திறந்தார். ""மத்தியில் மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்'' என பக்காவாக கனெக்ஷன் கொடுத்து பிட்டைப் போட்டார். ரஜினியும் இதைத் தான் எதிர்பார்த்திருந்தார்.
மாலை 3 மணியிலிருந்தே ஒய்.எம்.சி.ஏ. திடலில் குவிய ஆரம்பித்துவிட்டனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். பிரதான சாலைகளில் ஃப்ளக்ஸ் போர்டுகள் எதுவும் வைக்காமல், மைதானத்தின் உள்ளே பத்தடிக்கு ஒரு ஃப்ளக்ஸ் பேனர் வீதம் ஆடியோ ரிலீஸ் அரங்கம் வரை வைத்து அசத்தியிருந்தார்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள்.
சரியாக 6.30-க்கு விழா ஆரம்பமானது "காலா'’படத்தின் ஒருசில பாடல்களை இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழுவினருடன் பாடினார் சங்கர் மகாதேவன். அதன் பின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் தனுஷின் தோழி திவ்யதர்ஷினி. ஹீரோயின் ஈஸ்வரி ராவ்வில் ஆரம்பித்து, "காலா'வில் நடித்த நடிகர்கள், பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் ரஜினிக்கும் டைரக்டர் ரஞ்சித்துக்கும் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
தயாரிப்பாளரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் பேசும் போது, ‘""கஷ்டப்பட்டு உழைத்து பேர், புகழுடன் உச்சத்தில் இருப்பவர்கள் ஒருரகம். அந்த உச்சத்தில் இருப்பவர்களை அட்டாக் பண்ணி பேர் வாங்குபவர்கள் இன்னொரு ரகம்'' என ரஜினி எதிர்ப்பாளர்களை லைட்டாக அட்டாக் பண்ணினார்.
டைரக்டர் ரஞ்சித் பேசும் போது, ""இது மக்களுக்கான சினிமா. "காலா'வில் அரசியல் இருக்கு'' என்றார்.
கடைசியாக மைக் பிடித்த ரஜினி, ""சிவாஜி’ பட வெற்றி விழாவில் கலைஞர் தன்னை வாழ்த்திப் பேசியதையும் 75 ஆண்டுகளாக ஒலித்த கலைஞரின் காந்தக்குரல் மீண்டும் ஒலிக்க ஆண்டவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுவிட்டு, ரஞ்சித்தை வானளாவ புகழ்ந்தார். ""தென்னக நதிகளை இணைச்சுட்டா நான் கண்ணை மூடிருவேன்'' என செண்டிமெண்டாக பேசியவர், "காலா' அரசியல் படம் இல்லை, ஆனால் அரசியலும் பேசும் படம் என கமல் பாணியிலும் பேசினார். ""என்னடா இன்னும் மேட்டருக்கு வரலையேன்னு மீடியா நண்பர்கள் ஆர்வமா இருக்காங்க. அதற்கான நேரம் இன்னும் வரல. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு'' என்பதோடு ரஜினியின் பேச்சு இப்போதைக்கு முடிவு பெற்றுள்ளது.
ரஜினியின் ‘கால(ô)க் கணக்கிற்கு எப்போது நேரம் வரும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.
-ஈ.பா.பரமேஷ்வரன், அரவிந்த்