முதல்வர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜாவை நீக்கியிருப்பது அ.தி.மு.க.வில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது.

ops-rajaதம்பி என்றும் பாராமல் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த ஓ.பி.எஸ். மீது ர.ர.க்களிடம் மதிப்பு கூடியிருந்தாலும், இதன் பின்னணிகளை விசாரித்தபோது, "பதவிகள் படுத்தும்பாடுதான் ஓ.ராஜாவை அ.தி.மு.க.விலிருந்து நீக்க வைத்திருக்கிறது' என்கிறார்கள் கட்சியின் பெருந்தலைகள்.

தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது சென்னையிலுள்ள ஆவின் நிறுவனம். இதன் சேர்மனாக தற்போது இருப்பவர் மில்லர். விரைவில் இப்பதவிக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இப்பதவிக்குப் போட்டியிட வேண்டுமாயின் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் சேர்மனாக இருக்க வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களைச் சேர்த்து ஒரு ஒன்றியம் என 17 ஒன்றியங்களை உருவாக்கியிருக்கிறது ஆவின் நிறுவனம்.

சேர்மனை ஒன்றியத்துக்குட்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். 17 ஒன்றியங்களின் சேர்மன்களில் ஒருவர்தான் தமிழக ஆவின் நிறுவனத்தின் சேர்மனாக வர முடியும். இந்த பதவியை குறி வைத்து ஓ.ராஜா களமிறங்கியதுதான் தற்போதைய பரபரப்புகளுக்கு அடிப்படை!

Advertisment

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""மதுரை மற்றும் தேனி ஆகிய இரு மாவட்டங்களை இணைத்து மதுரை மாவட்ட ஆவின் இயங்குகிறது. இங்கு மொத்தம் 17 இயக்குநர்கள் இருக்கின்றனர். இதன் ஒரு இயக்குநரான ஓ.ராஜா, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். மீதமுள்ள 16 இயக்குநர்களில் 9 பேரின் ஆதரவு இருந்தால் ராஜா ஜெயித்துவிட முடியும். 16 பேரில் 5 இயக்குநர்கள் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள். ஆனால், போட்டியின்றி ஜெயிக்க வேண்டும் என திட்டமிட்ட ராஜா, தினகரன் ஆதரவு இயக்குநர்கள் 5 பேரை தவிர மற்ற 11 பேரையும் தன்னை ஆதரிக்க வைக்க வளைத்திருந்தார். இதற்காக சில கோடிகள், குற்றாலத்தில் குளியல் என 11 பேருக்காக செலவிட்டார் ராஜா.

அதேசமயம், தினகரன் ஆதரவு இயக்குநர்கள் பிரச்சனை செய்யக்கூடாது என யோசித்து பத்து நாட்களுக்கு முன்பு தினகரனை சந்தித்து ஆதரவு கேட்டார் ராஜா. தினகரனும் சில கணக்குகளை கூட்டிக்கழித்துப் பார்த்து, ஆதரவு அளிப்பதாகச் சொன்னதுடன் சம்பந்தப்பட்ட இயக்குநர்களையும் ராஜாவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். தினகரன் சொல்லிட்டார் என்பதற்காக ராஜா அமைதியாக இல்லை. சம்பந்தப்பட்ட அந்த 5 பேரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. இதனையடுத்து, ஒரு சிண்டிகேட் உருவானது. அதனடிப்படையில் தலைவர் பதவிக்கு ராஜாவும், துணைத்தலைவர் பதவிக்கு தங்கராஜனும் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டு களமிறங்கினர். எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இவர்கள் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னை ஆவின் நிறுவனத்தின் தலைவர் பதவியை குறி வைத்து இயங்கத் துவங்கியிருக்கிறார் ராஜா'' என்று விவரிக்கின்றனர்.

மதுரை ஆவினின் சேர்மனாக ராஜா அறிவிக்கப்பட்ட சம்பவம் அ.தி.மு.க.வில் பரபரப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கிய நிலையில்தான் கட்சியிலிருந்து அதிரடியாக அவரை நீக்கினர் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும்!

Advertisment

ttv-eps

நீக்கத்தின் பின்னணி குறித்து விசாரித்தபோது, ""பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் போடி பகுதியில் ராஜாவும், பெரியகுளம் பகுதியில் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான செல்லமுத்தும் இயக்குநர்களாக ஜெயித்திருந்தனர். செல்லமுத்துவை எதிர்த்து போட்டியிட்ட தினகரன் ஆதரவாளரான அமாவாசை 2 ஓட்டில் தோற்றுப்போனார். தேர்தலில் ஊழல் நடந்திருப்பதாக அமாவாசை கோர்ட்டுக்குப் போக அதனையும் சரிசெய்தார் ராஜா. இந்த நிலையில், மதுரை ஆவின் சேர்மன் பதவிக்கு தனது ஆதரவாளர் செல்லமுத்துவை களமிறக்க முடிவு செய்திருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், ராஜாவோ, தனது அண்ணனிடம் (ஓ.பி.எஸ்.), "நான் போட்டியிடவிருக்கிறேன். செல்லமுத்துவை நிறுத்தக்கூடாது. அவரது ஆதரவை எனக்கு நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டும்' என மல்லுக்கட்டினார். இதனால் இருவருக்கும் மோதல் வெடித்தாலும், கடைசியில் ஒப்புக்கொண்டார் ஓ.பி.எஸ். இந்தச் சூழலில், சேர்மன் தேர்தலில் ரகசியமாக நடந்துவரும் முறைகேடுகளை மதுரை ஆவினிலுள்ள ஒரு அதிகாரி, முதல்வர் எடப்பாடியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனை விசாரிக்குமாறு தனது தனிச்செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரனை கேட்டுக்கொண்டார் எடப்பாடி. விசாரணையில் பல தகவல்களை கொட்டியிருக்கிறார் அந்த அதிகாரி.

இவை அனைத்தும் எடப்பாடியின் கவனத்துக்கு சென்ற நிலையில், "உங்க தம்பி செய்வது நியாயமா?' என ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.ஸால் எதுவும் பேசமுடியவில்லை. உடனே ராஜாவை தொடர்புகொண்டு, "சேர்மன் பதவிக்கு போட்டியிடக் கூடாது. விலகி நில்' என ஓ.பி.எஸ். எச்சரித்தபோது, "உங்கள் பிள்ளைகள் மட்டும் சம்பாதிக்கலாம். நான் சம்பாதிக்கக்கூடாதா? என்னை ஜெயிக்க வையுங்கள் என உங்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லையே. பிறகெதற்கு என்னை தடுக்கிறீர்கள்?' எனச்சொல்லி தொடர்பை துண்டித்துக்கொண்டார் ராஜா. இதனை எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். விவரித்தபோதும் எடப்பாடி சமாதானமாகவில்லை. எடப்பாடி சமாதானமாகாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, தர்மபுரி மற்றும் திருச்சி ஆவின் சேர்மனாக இருக்கும் தனது ஆதரவாளர்களில் ஒருவரை ஆவின் நிறுவனத்தின் தலைவராக கொண்டுவர எடப்பாடி திட்டமிட்டிருப்பதுதான்.

இந்தச் சூழலில்தான், தேர்தலில் வெற்றி பெற்றார் ராஜா. இந்த தகவல், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்தது. இருவரும் எடப்பாடியை தொடர்புகொண்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதில் அதிகம் கோபம் காட்டியது ராஜேந்திரபாலாஜிதான்.

ஒரு கட்டத்தில், தினகரனின் ஆதரவோடு ஜெயித்துள்ளார் ராஜா. இதற்காக தினகரனை சந்தித்தும் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில், "சென்னையிலுள்ள ஆவின் நிறுவனத்தின் தலைவராக வருவதுதான் என் லட்சியம். மதுரை ஆவின் சேர்மனாகிவிட்டால் நிச்சயம் நிறுவனத்தின் தலைவராகவும் வந்துவிடுவேன். அந்த பதவிக்கு நான் வந்துவிட்டால் உங்கள் எண்ணம்போல் செயல்படுவேன்' எனச் சொல்லி ஆதரவு கேட்டிருக்கிறார் ராஜா. தினகரனும் ஆதரித்து ஜெயிக்க வைத்திருக்கிறார். "தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என உத்தரவு போடுகிறீர்கள். ஆனா, ஓ.பி.எஸ்.ஸின் தம்பியே தினகரனோடு நட்பில் இருப்பதை எப்படி ஏற்க முடியும்? கட்சியை விட்டு அவரை நீக்குங்கள். இல்லையெனில் அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்' என எடப்பாடியிடம் கடும் கோபம் காட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி.

அதேபோல, ஜெயித்ததற்காக ராஜாவை சந்தித்து வாழ்த்துச்சொன்ன அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜாவின் வெற்றியை எடப்பாடி ரசிக்கவில்லை என தெரிந்து அவரும் ராஜாவுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அமைச்சர்களிடமிருந்து இப்படி எதிர்ப்புகள் வர வேண்டும் என விரும்பிய எடப்பாடி, உடனே ஓ.பி.எஸ்.ஸிடம் மீண்டும் ஆலோசித்தார். "தேர்தலில் நடந்த opsதில்லுமுல்லுகளுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. தினகரனின் ஆதரவையும் வாங்கியிருக்கிறார். அமைச்சர்கள் பலரும் எதிர்க்கின்றனர். அதனால், கட்சியிலிருந்து ராஜாவை நீக்குவதுதான் சரியாக இருக்கும்' என எடப்பாடி சொல்ல, "தேர்தலில் தில்லுமுல்லுன்னா தேர்தலை ரத்து செய்வோம். மாறாக கட்சியிலிருந்து நீக்கணுமா' என ஓ.பி.எஸ். பரிந்து பேச, அதற்கு ஒப்புக்கொள்ளாத எடப்பாடி, ராஜாவை நீக்க ஓ.பி.எஸ்.ஸை சம்மதிக்க வைத்தார். ராஜாவின் நீக்கம் மற்றவர்களைவிட ராஜேந்திரபாலாஜியை குஷிப்படுத்தியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

மதுரை ஆவின் பதவி தனக்கு கிடைக்காததால் அதிருப்தியடைந்திருக்கும் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான செல்லமுத்து, ""எனக்குத்தான் சேர்மன் பதவி என சொல்லியிருந்தார் ஓ.பி.எஸ். ஆனா, தம்பிக்கு வாங்கிக் கொடுத்துட்டார். இப்படி தனது குடும்பத்துக்காகத்தான் பதவிகளை வாரிக் கொடுக்கிறார். கட்சியில் தொடர்ந்து இருக்கவே வருத்தமாக இருக்கிறது. பேசாமல் தி.மு.க.வுக்குப் போயிடலாம்னுகூட தோணுது'' என அமைச்சர்கள் உதயகுமாரிடமும் செல்லூர் ராஜுவிடமும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

""கல்லுப்பட்டி பூசாரி நாகமுத்து கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கோர்ட்டுக்கு அலைந்துகொண்டிருக்கும் ஓ.ராஜா மீது, மணல் கொள்ளை குறித்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் தங்கத்தமிழ்ச்செல்வன் புகார் கொடுக்க, அதன் மீது நடவடிக்கை எடுத்து ராஜாவின் ஆதரவாளர்களை ஒடுக்கினார் கலெக்டர். அப்போதே, தனக்கு ஓ.பி.எஸ். உதவவில்லை என கோபத்தில் இருந்த ராஜா, தற்போது ஆவின் சேர்மன் பதவியிலும் உதவாத நிலையில் கட்சியை விட்டும் நீக்கப்பட்டிருப்பதால் ஓ.பி.எஸ். மீது காட்டமாக இருக்கிறாராம். அதனால், அண்ணனுக்கு எதிராக மிகப்பெரிய கோஷ்டியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் ராஜா'' என்கின்றனர் தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர்.

-இரா.இளையசெல்வன், சக்தி

படங்கள்: ஸ்டாலின்