நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிற தேரூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்புதூரில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வசித்துவரு கின்றன. இவர்கள் இங்கு 100 ஆண்டுகளுக்கு முன் முத்தாரம்மன் கோவில் ஒன்றைக் கட்டி வணங்கி வரும் நிலையில்... குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை, "அந்த ஊரும் கோவிலும் எங்களுக்குச் சொந்தம்' எனக் கூறி அந்த மக்களை அப்புறப்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சங்கரன்புதூர் ஊர்த்தலைவர் பழனிவேல் கூறும்போது, "சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த எங்களுடைய தாத்தா, பாட்டனார்கள் இந்தப் பகுதியில் விவ சாய வேலைக்காக குடும்பத்தினருடன் வந்தனர். அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலை செய்துவந்த எங்க முன்னோர்களுக்கு குடியிருப்பு கட்டிக்கொள்வதற்காக 30 ஏக்கர் நிலத்தை திருவிதாங்கூர் மன்னர் கொடுத்தார்.

nn

இதில் 15 ஏக்கரில் வீடுகளைக் கட்டினார்கள். 10 ஏக்கரை நெல் விவசாயத்துக்காகப் பயன்படுத்தி னார்கள். 5 ஏக்கரை காலி நிலமாகப் போட்டனர். இதெல்லாம் சங்கரன் புதூர் ஊர் வகையினர், நூறாண்டுக்கு முன்பே பதிவு செய்திருக் கிறார்கள். சிறிய கோவிலாக இருந்ததை நாங்கதான் பெரிய கோவிலாகக் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடத்துவதுடன் தினமும் இரண்டுவேளை பூஜைகளை நடத்திவருகிறோம்.

மேலும் தேரூர் ஊராட்சிக்கு வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி அவரவர் பெயரில் தான் கட்டிவருகிறோம். கரண்ட் பில்கூட அந்தந்த வீட்டு குடும்பத் தலைவர் பெயரில்தான் இருக்கிறது. காலி இடமாகக் கிடந்த அந்த இடத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும்விதமாக கலைஞர் ஆட்சியில் இரண்டரை ஏக்கரில் நூற்பாலை கட்டித்தந்தார். அந்த இடத்தை அப்போது இருந்த ஊர்த்தலை வர், கவர்னர் பெயருக்கு எழுதிக் கொடுத்தார்.

Advertisment

இதேபோல் தி.மு.க. எம்.பி.யாக இருந்த ஹெலன் டேவிட்சன் நீர்த்தேக்க தொட்டி கட்டித் தந்தார். காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடம் கட்டித்தந்தார். ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆக இருக்கும்போது கலையரங்கம் கட்டித்தந் தார். 1960-ல் மந்திரியாக இருந்த லூர் தம்மாள் சைமன் நூலகம் கட்டித்தந்தார். கிராம சாலைகள் திட்டத்தில் ஊர் முழு வதும் தார்ச்சாலைகள் போடப்பட் டுள்ளன. இதற்காக அந்த இடத்தையெல்லாம் ஊர்த்தலைவர்தான் கவர்னர் பெயருக்கு எழுதிக் கொடுத்தார். இதற்கு எந்த அற நிலையத்துறை அனுமதியும் வாங்கலை. இடங்கள் ஊர் பெயரில் பதிவாகியிருப்பதால், எந்த அதிகாரிகளும் இடையூறு செய்யவும் இல்லை. அரசுத் திட்டங்களைத் தடுக்கவும் இல்லை.

nn

இந்த நிலையில்தான் 2022-ல் திடீரென்று இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் அதிகாரிகள் ஊருக்கு வந்து, "இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. ஒரு மாதத்துக்குள் வீடுகளைக் காலிசெய்து வெளியேறணும்' என்றனர். அதன்பிறகு 2023-ல் சர்வே செய் றோம்னு சொல்லி ஊரை அளக்கும்போது, நாங்க எதிர்ப்புக் காட்டியதால் திரும்பிப் போனார்கள். இந்த இடம் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்றும், சட்டப் பிரிவு 78-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் ஒட்டிட்டுப் போனாங்க.

Advertisment

இந்த நிலையில்தான், வழக்கம்போல் கோவில் திருவிழா நடத்துவதற்காக நோட்டீஸ் அடித்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந் தோம். திருவிழா நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸை வெச்சு எங்களை மிரட்டி திரு விழாவை நிறுத்தினாங்க. கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடத்தாமல் கோவில் நடை பூட்டியே கிடக்கிறது. இதற்கிடையில் 2-9-2023 அன்று ஊருக்குச் சொந்தமான விவசாய நிலம், கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவித்து, அறநிலையத் துறையினர் நோட்டீஸ் ஒட்டினார்கள். ஆனால் அந்த ஏலத்தில் ஒருவர்கூட கலந்துகொள்ள வில்லை.

இதனால் மீண்டும் 29-12-2023 அன்று வெளியிலிருந்து நபர்களை கொண்டுவந்து ஏலம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்த்தோம். உடனே சுசீந்திரம் போலீஸை வச்சு எங்க அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தாங்க. சங்கரன்புதூர் ஊருக்குச் சொந்தமான இடம் கோவில் என்று எங்களிடம் எல்லாம் ஆதாரங்களும் இருக்கு. ஆனால் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்று கூறும் அவர்கள், அதற்கான ஆதாரத்தை எங்களிடம் காட்டாமல் எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

அந்த ஊரை சேர்ந்த காயத்ரி கூறும் போது, "கடந்த வாரம் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து, "வீட்டைக் காலி செய்து விட்டு வேறெங்காவது போயிடுங்க. இல்லை யென்றால் இருக்கிற வீட்டுக்கு மாதம் வாடகை தரவேண்டும்' என்றனர். "நாங்க உழைச்சி கஷ் டப்பட்டு கட்டுன வீட்டுல வசிக்கிறதுக்கு அறநிலையத்துறைக்கு வாடகை கொடுக்கனு மாம். இது எந்தவிதத்துல நியாயம்? அதுபோல் புதுசா வீடு கட்ட ஊராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுக் கிறாங்க. அதையும் மீறி கட்டுன வீட்டுக்கு கரம் போட நம்பர் தரமாட் டேங்குறாங்க. மின்சாரமும் தரமாட் டேங்குறாங்க. எது தந்தாலும் அற நிலையத்துறை பெயரில்தான் தரு வோம்னு சொல்லுறாங்க. அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆதாரம் இல் லாத பேச்சை கேட்டு மற்ற அதி காரிகளும் எங்களை கஷ்டப்படுத்து றாங்க. அப்பா பெயரில் இருக்கிற வீட்டை மகன்கள் பெயரில் மாற்ற அதி காரிகள் மறுப்பதோடு அறநிலையத் துறை பெயரில்தான் மாற்றமுடியும் என்கிறார்கள். ஊராட்சியிலிருந்து தந்த குடிநீர் இணைப்பையும் துண்டிக்கப் போகிறார்களாம். எங்க முன்னோர்கள் வாழ்ந்த எங்களுக்குச் சொந்தமான இந்த மண்ணில் நாங்களும் எங்க பிள்ளைகளும் வாழமுடியாதா?'' என்றார் ஆவேசத்துடன்.

கோவில் பூஜாரி அய்யப்பனோ, “"ஊரில் எதாவது மரணம் நடந்தால் மட்டும்தான் கோவில் நடை ஒருநாள் அடைக்கப்படுமே தவிர, மற்றபடி கோவில் கட்டியதிலிருந்து நடை அடைத்தது இல்லை. இப்பம் மூணு வருஷமாட்டு எந்த ஒரு பூஜையும் இல்லாம கோவில் நடையை அடைக்க வச்சிட்டாங்க அறநிலையதுறையினர். சாமி குத்தமாயிடுமோனு எல்லாரும் பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்க அப்பன் காலத்திலே கட்டிய இந்த கோவிலை திடீர்னு வந்து அறநிலைய துறை கோவில்னு சொல்லி எங்களை இங்கிருந்து துரத்த பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்''’என்றார்.

விவசாயி ராமச்சந்திரன் கூறும்போது, "மன்னர் காலத்தில் தரப்பட்ட எங்களுக்கான நிலத்தில் இப்போ தும் 10 ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறோம். ஆண்டு தோறும் விவசாய நிலத்தை ஊர் தலைவர் முன்னிலையில் கோவிலில் வச்சி ஏலம் விடுவோம். அந்த ஏலத்தில் வருகிற பணத்தை வச்சி கோவில் பூஜைக்கும் பூஜாரிக்கு சம்ப ளம். கரண்ட் பில், பராமரிப்பு செலவுக்கு பயன்டுத்து வோம். அதில் ஒரு பைசாகூட சொந்த செலவுக்கோ, ஊர்ச் செலவுக்கோ எடுக்கமாட்டோம். அப்படியிருக்கை யில் கோவிலில் பூஜை நடக்கலை, கோவிலுக்கு செலவு செய்ய வருமானம் இல்லை, அதனால கோவிலை நாங்க எடுத்து நடத்தப்போறோம்னு அறநிலையத்துறை எங்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது''’என்றார்.

nn

இதுசம்பந்தமாக நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கத்திடம் கேட்டபோது, “"அறநிலையத்துறை முடிவுசெய்து அந்த ஊரையோ, கோவிலையோ கைப்பற்றப் போகலை. சங்கரன்புதூர் ஊர் முப்பிடாதி அம்மன் -முத்தாரம்மன் கோவில் வகை என்று பதிவு செய்யபட்டிருக்கும் நிலை யில், அந்த கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை யும் இடத்தையும் அந்த ஊர்க்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் என்று ஆலய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சங்கர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படிதான் அறநிலையத்துறை அங்கு சென்று ஆய்வு செய்தோம். கோவில் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டி ருக்கும் நிலையில், அதில் எந்த வருமானத்தையும் காட்டவில்லை. கோவிலுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதுபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை களை மேற்கொண்டபோது சட்டம் -ஒழுங்கு பிரச் சினை ஏற்படக்கூடிய சூழல் உருவானது. எனவேதான் கலெக்டரிடம் பேசி அவர் தலைமையில் முடிவெடுக்க நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம். அது ஒருசில நாட்களில் நடக்கும். மன்னர் கொடுத்த சொத்துக்கான செம்புப் பட்டயம், ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் அந்த மக்கள், அதை எந்த இடத்திலும் காட்டவில்லை'' என்றார்.

தலைமுறை, தலைமுறையாய் வசித்துவரும் மக்களை அப்புறப்படுத்தாமல் மனிதநேயத்தோடு அணுகுமா அறநிலையத்துறை?