தமிழக அரசின் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது மதுரையிலுள்ள வேளாண் கல்லூரி. இதன் டீனாக இருப்பவர் வி.கே. பால்பாண்டி. இவரது டீன் பதவி காலம் இந்தாண்டு இறுதியில் முடிகிறது. இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் டீன் பால்பாண்டி யின் மனைவியின் அதிகாரம் அதிகமாக இருப்பதாக அலறுகிறார்கள் கல்லூரியின் ஊழியர்கள். கோட்டைக்கும் புகார்கள் பறந்துள்ளன.
இது குறித்து நாம் விசாரித்தபோது,”கல்லூரி நிர்வாகத்தில் டீன் பால்பாண்டி நேர்மையாக இருக்கிறார். அதேசமயம், அவரது மனைவிதான் ஆக்டிவ் டீன் மாதிரி நடந்து கொள்கிறார். நிர்வாக ரீதியிலான அனைத்து விசயங்களிலும் அவரது தலையீடுகள் அதிகரித்துள்ளது. இதற்கு கல்லூரி பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களை ஒருமையில் பேசுவதுடன், "என் கணவருக்கு பணி நீட்டிப்பு அல்லது பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் பதவி கிடைக்கப்போகிறது. உங்களையெல்லாம் ஒரு கை பார்க்கிறேன்' என கோபம் காட்டுகிறார் டீனின் மனைவி.
ஓய்வுபெற்ற தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வி.கே.சுப்புராஜும், வி.கே.ஜெயக்கொடியும் டீன் பால்பாண்டியனின் சகோதரர்கள். இவர்களுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் நல்ல நட்பு இருப்பதால்தான் இவரின் அதிகாரம் தூள் பறக்கிறது‘’என்று புகார் வாசிக்கின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் மூலம் துணைவேந்தர் பதவியை பால்பாண்டிக்கு வாங்கித்தர அவரது சகோதரர்கள் முயற்சித்து வருவதாகவும், அவர்களின் குடும்பத்துக்கும் தமிழக ராஜ்பவனுக் கும் நெருக்கமான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மூலம் இதற்கான காய்கள் நகர்த்தப்படுவதாகவும் வேளாண் கல்லூரி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் நாம் விசாரித்தபோது, ‘’வேளாண் கல்லூரியின் வளர்ச்சிக்காக நிறையவே உழைத்திருக்கிறார் டீன் பால்பாண்டி. அவரது நிர்வாகத்தில்தான் பல நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறது பேராசிரியர்கள் தரப்பு.
இதுகுறித்து நாம் பால்பாண்டியிடம் பேசியபோது,”"கல்லூரி நிர்வாகத்தில் என் மனைவி எந்த வகையிலும் தலையிட்டது கிடையாது. என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அவர்கள் சொல்வதில் உண்மை துளியும் இல்லை. மேலும், துணைவேந்தர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கப் போவதே இல்லை. இது உறுதியான முடிவு'' என்கிறார் அழுத்தமாக.
இது ஒருபுறமிருக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குடும்பத்தில் சொத்துக்கள் தொடர்பான சில விவகாரங்கள் நடந்துவருவதால் அதுகுறித்து ஜெயக்கொடியின் மூத்த சகோதரர் நடராஜ், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பி யிருக்கிறார். இதுகுறித்து விசாரிக்கப் படலாம் என்பதால் வெளிநாடுக்குச் சென்றுவிட்டார் ஜெயக்கொடி என்றும் ஒரு தகவல் ரெக்கை கட்டிப் பறக்கிறது.