ஊருக்குச் சோறிடும் உழவர்களின் வாழ்வில் மீண்டும் கொடூரமாக விளையாடி, அவர் களின் வயிற்றில் அடித்திருக்கிறது இயற்கை. அதனால் உழவர் திருநாளான இவ்வருட பொங்கல் திருநாள், அவர்களுக்கு கண்ணீர்ப் பொங்கலாக மாறிவிட்டது.
கடந்த ஜூன் 12- ந் தேதி பாசனத்திற்கு காவிரித் தண்ணர் திறக்கப் பட்ட போது, டெல்டா விவசாயிகள் மகிழ்ந்தனர். காலத்தோடு பயிர் செய்ய வேண்டும் என்று, வீட்டில் இருந்த நகை நட்டுகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் விவசாய வேலைகளைத் தொடங்கினர். விதை விட்டு, நடவு செய்து பயிர் தழைத்து வரும் அழகைக் கண்டு பரவசம் அடைந்தனர்.
அதன்பின், நாற்று மேலும் செழித்துத் தழைக்க, அதற்குத் தேவையான உரம் வேண்டுமென, மீண்டும் கடன் வாங்கினர். உரம் வாங்க கூட்டுறவு சங்கத்துக்கு அவர்கள் போன போது, அது, உரத் தட்டுப்பாடு என்று கை விரித்தது. அதனால், வெளியே அதிக விலை கொடுத்து உரம் வாங்கிப் போட்டனர். பச்சை பட்டாடை உடுத்தியிருந்த வயல்கள், பொன் வேய்ந்த நிலங்களாக மாறத் தொடங்கின.
அதைக்கண்டு மகிழ்ந்த விவசாயிகள், "அடடா, கதிர் நன்றாக வளர்ந்து வருகிறதே... மார்கழியில் அறுத்து, தை முதல்நாளில் புது நெல்லரிசியில் பொங்கல் வைக்கலாம்' என்று ஆவலோடு காத்திருந்தனர். அப்படி ஆவலோடு காத்திருந்த விவசாயிகளுக்கு, திடீர் மழை என்ற பெயரில் இயற்கை, மீண்டும் ஒரு பேரிடியை அவர்கள் தலையில் இறக்கி இருக்கிறது.
அறுவடைக்குத் தயாரான நிலையில், கடந்த ஒரு மாதமாக அடுத்தடுத்து பெய்த பருவம் தப்பிய தொடர்மழையால் அத்தனை பயிர்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதனால் அறுவடை செய்ய வேண்டிய நெல் முழுதும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. தன்வீட்டு சாப்பாட்டுக்குக் கூட ஒருபடி நெல் இல்லாத நிலையில் விவசாயிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் நாள்கணக்கில் மூழ்கிய நெற்பயிர்கள், தரையோடு தரையாகச் சாய்ந்து, அழுகி, துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. இதைப் பார்த்துப் பார்த்து தினம் தினம் கண்ணீர் வடித்து வருகிறார்கள் விவசாயிகள்.
எப்படியும் தண்ணீரை வடிய வைத்து விடலாம் என்று தினமும் வயலில் வாய்க்கால் அமைத்தும், நீர் வடிந்தபாடில்லை. இதனால் இந்த வருடம் உணவுக்கே தட்டுப்பாடு வரும் நிலையும், கால் நடைகள் தீவனத்துக் குப் பரிதவிக்கும் நிலையும், வந்து விடுமோ என்கிற பதைப்பு விவசாயம் சார்ந்த எல்லோரிடமும் இருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் தொடங்கி பல மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வரும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியனை நெடுவாசலில் சந்தித்து, இது குறித்து நாம் கேட்டபோது...
""தமிழ்நாட்டில், வானிலை மையம் கூட கணிக்க முடியாத அளவுக்குப் பருவம் தப்பிய நிலையில் கனமழை, தொடர் மழையாய் பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரையிலான டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள், மழைத் தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் நாசமாகி விட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித் திருக்கிறது. இதற்கான கணக்கெடுக்கும் பணிகளும் நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக அந்த நடை முறையை கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங் களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்கவேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடி யாக உயர்மட்டக் குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளை கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக டெல்டா பகுதிகளை அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந் தேதி அலுவலக முற்றுகை போராட்டங்களை நடத்த இருக்கிறோம்'' என்றார் கவலையாய்.
நெடுவாசல் விவசாயி இன்பசேகரனோ ""உழவு தொடங்கி உரம் வரை எல்லாமே கடன் வாங்கித்தான் செலவு செஞ்சோம். நடவுக்கும், களை பறிப்புக்கும் ஆள் கிடைக்காமல் வேறு கிராமங்களில் இருந்து வேன் வாடகை கொடுத்து அழைத்து வந்து கூடுதல் செலவு செய்தோம். உரம் கிடைக்காததால், அதையும் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து போட்டோம். எல்லாம் முடிந்து அறுவடைக்கு தயாரான போது, இப்படி ஒரு மழை பெய்து, அத்தனையும் நாச மாக்கிவிட்டது. மாடுகளுக்குக் கூட வைக்கோல் அறுக்க முடியாது நிலை உருவாகிவிட்டது. இப்பவே கடன் கொடுத்தவங்க எங்களை விரட்டுறாங்க. நாங்க எங்கிருந்து கடனை அடைக்க முடியும். இதற்கெல்லாம் தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் தந்தால்தான் தப்பிக்க முடியும் இல்லன்னா... என்னைப் போன்ற விவசாயிகள் தற்கொலை முடிவுக்குதான் போகணும்''’என்று அதிரவைத்தார்.
செரியலூரில் நாம் சந்தித்த விவசாயி பன்னீர்... ""5 ஏக்கர்ல கம்பு விதைச்சேன். கதிர் நல்லா வந்தது. அறுவடை செய்யலாம் என்ற போது மழை வந்துடுச்சு. கதிர்தான் சாயலையேன்னு பார்த்துக்கிட்டு இருந்தால் நிற்கிற கதிரிலயே அத்தனை கம்பும் முளைத்து பயிர் வந்துடுச்சு. இனி இதை அறுத்து என்ன செய்றது?''’என்றார் வேதனையோடு.
பரவாக்கோட்டை விவசாயி சீனிவாசன்... ""தைல மரக்காடுகள் இருந்தால் நிலத்தடி நீரையும் காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் உறிஞ்சுதுன்னு, எங்கள் தைல மரக்காட்டை எல்லாம் அழித்து, கடன் வாங்கி ஆழ்குழாய் கிணறு அமைத்து நெல் விவசாயம் செஞ்சோம். இப்ப அத்தனை கதிரும் தண்ணீரில் மூழ்கி முளைச்சு மறுபடியும் கடனாளி ஆக்கிடுச்சு''’என்று கரும்பு விவசாயமும் கசந்துபோனதைச் சொல்லிக் கலங்கினார்.
இப்படி அத்தனை மாவட்டத்திலும் பெய்த கனமழை ஒட்டுமொத்த விவசாயிகளையும் கண்ணீர்விட வைத்திருக்கிறது. விவசாயப் பயிர்களை மழை மூழ்கடித்ததால், அதை நம்பியிருந்த விவசாயக் குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றன. விதைத்ததெல்லாம் கண்ணீரை அறுவடை செய்யவைத்திருக்கிறது. உணவுப் பஞ்சைத்தை எதிர்நோக்கிக் கவலையோடும் பதட்டத்தோடும் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு உடனடியாக உதவிக்கரத்தை இந்த அரசு நீட்டவேண்டும். இல்லையேல் அவர்களைத் தற்கொலையில் தள்ளிய பாவத்தை இந்த அரசு சம்பாதிக்க நேரும்.
_____________
அரசு வீணடித்த நெல் மூட்டைகள்!
தொடர்மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ள நிலையில் நெல், கடலை, சோளம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், சில இடங்களில் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் கொள்முதல் நிலையங்களிலேயே அவை குவியல் குவியலாக மூடப்பட்டு அனைத்தும் பயிராக முளைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்து குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை, அவசர நிலை உணர்ந்தும் கொள்முதல் செய்யாததால், அவை முளை விட்டு,. அதிலிருந்து நாற்றுகள் தலை நீட்டுகின்றன. மேலும் மழையில் நனைந்து போனதால் அவை துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது.
நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித் துள்ளார். ஈரப்பதம் இருந்தாலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்த வாக்குறுதி காற்றில் பறக்கிறது.
-செம்பருத்தி