உயிர் நீத்த உடன்பிறப்புகள்!
தி.மு.க. தலைவர் கலைஞர் உயிர்பிரிந்த செய்தி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அந்தத் துக்கம் தாளாமல் ஆகஸ்ட் 9 வரை 34 பேர் அதிர்ச்சி மரணமும், 3 பேர் தற்கொலையும் செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள பிச்சத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கோயில்பிள்ளை, கலைஞரின் மீதான பற்றுதலால் தனது மகனுக்கு "கருணாநிதி' என பெயர்சூட்டியவர். பெட்டிக்கடை நடத்தி வயிற்றைக் கழுவிவந்த இவர், டீக்கடையில் உள்ள டி.வி.யில் கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்து சரிந்தவரின் உயிர் அங்கேயே பிரிந்திருக்கிறது.
கான்சாபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். நெல்லை வீ.கே.புதூரைச் சேர்ந்த 80 வயது பிச்சையா, தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர். 1977-ல் கட்சி வேலையில் இரண்டு விரல்களை இழந்தபோது, நேரில் விசாரித்த கலைஞர் ஐந்நூறு ரூபாய் நிதி தந்து உதவியிருக்கிறார். தான் நேசித்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நலிவடைந்தவர், வருந்தியே காலமானார். உ.பி.க்களின் அதிர்ச்சி மரணம் தொடர்கிறது.
- பரமசிவன்
தங்கள் வீட்டு துக்கமாக அனுசரித்த உ.பி.க்கள்!
கலைஞரின் மறைவு கட்சித்தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிலட்டூர் கிராமத்தில், தி.மு.க.வினரால் பந்தலமைக்கப்பட்டு, டி.வி. வைத்து இறுதி நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. பந்தலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக வந்தவர்கள், சட்டையைக் கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி, கைகளை நீட்டி நின்ற கிராமத்தினர் கைகளைத் தழுவிச்சென்று துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சூழ மாலையில் நடந்த இறுதி ஊர்வலத்தை அடுத்து, கலைஞரின் படம் அண்ணா சிலையருகில் அடக்கம் செய்யப்பட்டது. “""இன்னும் சில நாட்களில் இங்கு அண்ணாவின் தம்பிக்கு சிலைவைப்போம்'' என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு உடன்பிறப்பு, “""எங்கள் குடும்பத்தில் நடந்த துக்க நிகழ்வாகவே கலைஞரின் மறைவை எண்ணுகிறோம். அதனால்தான், கிராம முறைப்படி அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். வந்தவர்களும் அதில் உரிமையோடு கலந்துகொண்டனர்'' என்றார்.
- இரா.பகத்சிங்
கலைஞர் சிலை அகற்றம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தி.மு.க. பிரதிநிதியான இவர், ஐந்தடி உயரமுள்ள மார்பளவு கலைஞர் சிலையை கொடிமரத்துக்காக வைக்கப்பட்ட பீடத்தின்மீது 8-ஆம் தேதி காலையே வைத்துள்ளார். கலைஞர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் வைக்கப்பட்ட முதல் சிலை என்பதால் பலரும் கிருஷ்ணமூர்த்தியை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர். இதையறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என நெருக்கடி தர, சிலையை அங்கிருந்து எடுத்துவிட்டதோடு, தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ""2010-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது, கலைஞரைப்போல சிலைசெய்து கோயில் கட்டும் பணியைச் செய்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி. இதை விரும்பாத கலைஞர், அதிகாரிகளை அனுப்பி அதை இடித்துத் தள்ளினார். அந்த சிலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில்தான் இருந்தது. அதைத்தான் உடனே பெயிண்ட் அடித்து வைத்துவிட்டார்'' என்கின்றனர்.
- து.ராஜா
முட்டை, பேனா ஏலத்தில் தேர்தல் நிதி!
கலைஞரின் மறைவுக்குப் பிறகு ஆங்காங்கே அவரது படத்தை வைத்து மலர்தூவி பலரும் மரியாதை செலுத்தினர். அந்தவகையில், திண்டுக்கல் பேருந்துநிலையத்திற்கு அருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் பொன்.கருப்புசாமி கலைஞர் படத்துடன், கலைஞர் தலைமையில் நடந்த தனது திருமணப் படத்தையும் வைத்திருந்தார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ""கலைஞர் மீதான நம்பிக்கைதான் ஏழாவது படிக்கும்போதே தி.மு.க.வில் சேரவைத்தது. 1966-ல் பொதுக்கூட்டத்தில் தேர்தல் நிதியாக நூறு ரூபாய் பேசியிருந்தோம். ஆனால், தலைவர் ரூ.150 வேண்டுமென்றார். போதுமான தொகை கையிலில்லை என்பதையறிந்த அவர், முட்டையும், பேனாவும் வாங்கிவரச் சொன்னார். "தன் கையிலுள்ள இந்தப் பேனா ஏலத்திற்கு' என்றதும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்கள்.
அதேபோல், கோழியிலிருந்து முட்டை, முட்டையிலிருந்து கோழி என நக்கலடித்தபடி ஏலம்விட, அந்த முட்டை ஐந்நூறு ரூபாய்க்கு போனது. இப்படி அவர் தொட்டுத்தந்த பொருளை வாங்க நடந்த போட்டியில் தேர்தல் நிதியாக ரூ.1,600 கிடைத்தது. தேர்தல் நிதி வசூலிப்பதிலும் அவர் கெட்டிக்காரர்தான். 1977-ல் எனக்குத் திருமண ஏற்பாடு நடந்தபோது, உறவினர்களைக் கூட்டிக்கொண்டு சென்னை சென்றேன். கோபாலபுரம் வரச்சொன்ன தலைவர், அங்குவைத்தே எனக்கும், என் மனைவி ரத்தினம்மாளுக்கும் திருமணம் செய்துவைத்த நிகழ்வு மறக்கமுடியாதது. எங்களுக்கெல்லாம் அவர்தான் வழிகாட்டி. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி வருத்தமளித்தாலும், நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்; நிலைத்திருப்பார் என்ற ஆறுதல் ஒன்றே போதும்''’ என்றார் உருக்கமாக.
- சக்தி