ஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழகம்வந்து, பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கூடுதலாக ஆடிட்டர் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார். இவருக்கு திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அடுத்துள்ள குலசேகரநல்லூர், வேட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் சுமார் 25 ஏக்கர் நிலம் உண்டு. அதில் வனத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு மானிய திட்டங்களின் உதவிகளோடு தேக்கு மரங்களை நடவுசெய்து வளர்த்துவந்தார்.

a

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளுடன்கூடிய பாலப் பணிகள் துவங்கப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது. தடுப்பணைக்காக நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளைப் போலவே ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கும் பெரும்பாலான நிலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நிலங்களுக்கான பட்டா சிட்டா விவகாரத்தில் முரண்பாடுகள் இருப்பதாக பொதுப்பணித் துறைக்கும் ரவிச்சந்திரனுக்கும் வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் நீர்வளத்துறையினர் கைப்பற்றிய நிலத்திலிருந்த கோடிக்கணக்கான மதிப்புடைய தேக்கு மரங்களை அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக வெட்டி, அருகிலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் பதுக்கியுள்ளனர். இதையறிந்த நீர்வளத்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்து பதுக்கிவைத்திருந்த தேக்கு மரங்களைக் கைப்பற்றி கும்பகோணம் சப்கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து ஒப்ப டைத்துள்ளனர். தேக்குமரம் வெட்டிக் கடத்தியதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் வருவாய்த் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த சூழலில் அரியலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்தவரும் தற்போது தர்மபுரி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து கடந்த 3-ஆம் தேதி தர்மபுரி அருகேயுள்ள தொப்பூர் சுங்கச்சாவடி பகுதிக்கு நெப்போலியனை வரவழைத்து, ஆடிட்டர் ரவிச்சந்திரன் மூலம் 5 லட்சம் கொடுக்கவைத்து கையும்களவுமாகப் பிடித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டபின்னர் கும்பகோணம் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத் துள்ளனர்.

இந்தநிலையில் அரசாங்கத்தால் கைப் பற்றப்பட்ட நிலத்திலிருக்கும் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மரம் இருந்ததும், சம்பவம் நடந்ததும் தஞ்சை மாவட்டத்தில். ஆனால் மாவட்டத்திற்கே தொடர்பில்லாமல் தருமபுரியி லுள்ள ஆய்வாளரிடம் ஒரு கோடி கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?, அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரணையில் இறங்கினோம்.

ssவருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட் டோம், "முப்பது வருடத்துக்கு முன்னாடியே கொள்ளிடப் படுகையில் நிலங்களை, அடிமாட்டு விலைக்கு வாங்கி தேக்கு மரம் வளர்ப்பு திட்டத்தில் எல்லா இடத்துலயும் தேக்கு போட்டிருந்தார். அவர் வாங்கிய இடங்கள் போக பக்கத்தில் அனுபவத்திலிருந்த நிலங்களையும் வளைத்துப்போட்டு தேக்கு போட்டிருந்தார். ஆரம்பத்தில் தனக்கு பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் மன்னார்குடி சசிகலாவிற்கு சொந்தமான நிலம் என அவரது பெயரைப் பயன்படுத்தி யாரையும் நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டார். தடுப்பணை கட்ட இடமெடுக்கும்போது பல கோடி நஷ்டஈடு வாங்கிட்டார், சில ஏக்கர் நிலங்கள் புறம் போக்காகவும், யார் பெயரில் இருக்கிறது என தெரியாமலும், கோயில் இடங்களும் இருந்ததால அதற்கான பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் பெட் டேம் கட்டப்போகும் திட்டம் தெரிந்து முன்னாடியே தேக்கு மரங்களை வெட்டி விற்றுவிட்டார், ஆனாலும் ஆசைதீராமல் அதிக நஷ்ட ஈடு வாங்க, அவசர அவசரமாக தன் நிலத்தில் தென்னங்கன்றுகளை நட்டு எண்ணிக்கையை கூட்டிக்காட்டி பிரச்சனை செய்துவருகிறார்.

Advertisment

இது ஒருபுறமிருக்க, நஷ்டஈடு வாங்கிய இடத்துல இருந்த பெரும் பெரும் தேக்குகளை வெட்டித் திருடியிருக்கிறார். அந்தப் பகுதி, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியென்ப தால் வெளியில் தெரியல. 30 மரங்களை ஒரே நாளில் வெட்டியபோதுதான் தகவல்தெரிந்து பிடித்து புகார் கொடுத்தோம். இந்த வழக்கிலிருந்து தப்பிக்க அவரிடம் காவல் வேலைபார்த்த அப்பாவி ஒருவர்தான் மரங்களைத் திருடிவிட்டார் என போலீசை சரிக்கட்டி, பிரச்சனையை திசைமாற்றிட்டாங்க'' என்கிறார்கள்.

கொள்ளிடம் தட்சணாமூர்த்தி, "கொள்ளிடம் கரையோரம் நிறைய பேருக்கு பட்டா நிலம் இருக்கு. எல்லோரும் சிறு விவசாயிகள்தான். பூச்செடி, பருத்தி பயிர் செய்து பிழைப்பு நடத்துறோம். குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள படுகையில் அதிக நிலம் ஆடிட்டர்கிட்டதான் இருக்கு. எல்லா இடத்துலயும் தேக்கு போட்டிருந்தார்... அந்த நிலத்தை அரசு அணை கட்ட பணம் கொடுத்து வாங்கிருச்சுன்னு சொல்றாங்க. ஆனாலும் பணஆசை யாரை விட்டுச்சு. அரசாங்க பணத்தையும் வாங்கிட்டு, அதுல இருந்த தேக்கு மரங்களையும் அப்பப்ப வெட்டி யாருக்கும் தெரியாம எடுத்துப் போனாரு'' என்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் கூறுகையில், "ஆடிட்டர் ராஜேந்திரன் எதையுமே பக்காவா பிளான் பண்ணி ஆதாயம் தேடுவதில் கில்லாடி. இவர்மீது ஏற்கனவே வேறொரு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை இருந்தது, ஒருவர் இறப்பின் மூலம் தப்பித்தார். அது பழைய கதை.

ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கு கொள்ளிடம் படுகையில் 25 ஏக்கர் நிலமிருக்கிறது. அதில் 10 ஏக்கர் நிலத்தோடு தேக்கு மரங்களை தென்காசியை பூர்வீகமாகக் கொண்டு கரூர், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில்செய்யும் தொழிலதி பர்களிடம் விற்றுவிட்டார். அந்த பரிவர்த்தனை யிலும் பல்வேறு பிரச்சனைகள் இன்றும் நடந்துவருகிறது. மீதமுள்ள 15 ஏக்கரில் 10 ஏக்கர் பட்டா நிலத்திலிருந்த தேக்குமரங்களை கரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் விற்றுவிட்டார். மீதமுள்ள ஐந்து ஏக்கர் வகைப்பாட்டில் இல்லாத நிலமாக இருப்பதால் அதை அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. 10 ஏக்கரிலிருந்த தேக்கு மரத்தை வெட்டி கரூர், ஓசூர், பெங்களூர் என விற்று வந்தபோதுதான் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கும், ரவிச்சந்திரனுக் கும் பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் பழக்கம் நெப்போலியன் கன்னியா குமரி ஆய்வாளராக வந்தபிறகும் தொடர்ந்தது. இதற்கிடையில் கொள்ளிடம் ஆற்றுக்கு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள்மூலம் முன்கூட்டியே தெரிந்துகொண்ட ரவிச்சந்திரன்... வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு லாபமடைய முயற்சித்தார். அரசு விதிப்படி ஒரு ஏக்கரில் 70 தென்னைமரங்கள்தான் கணக்கு, ஆனால் ஆயிரம் தென்னங்கன்று வீதம் பத்து ஏக்கரில் பத்தாயிரம் மரம் நட்டு நஷ்டஈடு கேட்டார். தென்னங்கன்றுகள் சமீபத்தில்தான் போடப்பட்டிருக்கிறது என்கிற அரசு அதிகாரிகளின் அறிக்கையிலும் பணத்தைக் கொடுத்து கைவரிசைகாட்டி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உரிய நிவாரணம் வழங்க உத்தரவு வந்தது. அந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலிருந்து மேல்முறையீடு போகாமலிருப்பதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியரை சரிக்கட்ட திட்டம் போட்டார். அந்த சமயத்தில் ரவிச்சந்திரனின் சமுதாய கோயில் ஒன்றை கன்னியாகுமரியில் கட்டுவதில் ஆர்.டி.ஓ. வரை பிரச்சனை ஏற்பட, அந்த விவகாரத்திலும் பழைய நண்பரான இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளார். அந்த சமயத்தில் நிலம் ஆர்ஜிதம்செய்த விவகாரத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்யாமலிருக்க ஏதாவது பேசி முடிக்க முடியுமா என கேட்டிருக் கிறார் ரவிச்சந்திரன். அதுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எனக்கு ரிலேட்டிவ் என்றும், தி.மு.க. அமைச்சர், எம்.பி.க்கள் எல்லா ருமே நமக்கு எதுவானாலும் செய்வாங்க எனக்கூறி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி மூன்று கட்டமாகக் கொடுத்திருக்கிறார். அந்த பிரச்சனை ஒருபுறமிருக்க, மூன்று மாதங்களுக்கு முன்பு தேக்கு மரம் வெட்டியதாக வழக்காகியிருக்கு. அதிலிருந்து காப்பாத்தணும்னா மீண்டும் ஒரு கோடி வேண்டும் எனக்கேட்டு அதில்தான் மாட்டியிருக்கிறார் நெப்போலி யன். 10 ஏக்கர் நிலத்திலுள்ள மரங்களை பல கோடிக்கு வெட்டிட்டார். அரசு விதிப்படி ஒரு ஏக்கர்ல எழுபது மரங்கள் தான் கணக்கு. ஆனால், ஒரு ஏக்க ருக்கு ஆயிரம் தென்னம்பிள் ளைகளை புதைத்திருக்கிறார்.

10 ஏக்கரில் தற்போதுள்ள நிலவரப்படி 10 கோடி ரூபாய் கிடைக்கும் எனத் திட்டமிட்டு, அதற்காக செலவு செய்தார். அதற்காகவே தர்மபுரியிலிருந்த நெப்போலியனைச் சந்தித்து பணம் கொடுத்திருக்கிறார். விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரை செல்லவில்லை என்றதும் பிரச்சனையை திசைமாற்றி ஆடிட்டர் ரவிச் சந்திரன் தப்பிக்கமுயல்கிறார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியர் உறுதியாக இருக்கிறார்'' என்கிறார்கள்.

ஆடிட்டர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம், "இந்த விவகாரத்தை விசாரிக்க நீங்க யாரு, எல்லாம் போலீஸ் பாத்துப்பாங்க, பிரச்சனை போய்ட்டு இருக்கிறதால டிபார்ட்மெண்ட்ல வாய் திறக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க, கரூர்க்காரங் களுக்கும் எனக்கும் இன்னும் பிரச்சனை இருக்கு''’எனத் துண்டித்தார்.