"அந்த சாருங்க தொடை யிலும், இடுப்பிலும் கைவைக்கி றாங்க... குடிச்சிட்டு வர்றாங்க.. அவங்க பார்வையே தப்பா தெரியுது. அந்த சாருங்க பேட் டச் பண்றாங்க'' என வீடியோ, ஆடியோ வெளியிட்டு கோவை மாவட்ட நிர்வாகத்தையே நிலை குலைய வைத்திருக்கின்றனர் பொள்ளாச்சி அருகேயுள்ள உயர்நிலைப்பள்ளி மாணவிகள்.

Advertisment

உடம்பெங்கும் துணிசுற்றி, முகத்தை மறைத்து அமர்ந்த நிலையில், பாலியல்ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட சீண்டல்கள் குறித்து மூன்று மாணவிகள் பேசிய வீடியோ ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெள்ளிக்கிழமையன்று காலையில் அனைவரது கைபேசிக்கும் சென்று வைரலாக கோவை மாவட்ட நிர்வாகம் அதிர்வலைக்குள் சிக்கியது. 

உடனடியாக, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் சரக டி.எஸ்.பி. சிவகுமார் ஆகியோர் தலைமையில், பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த நிலையில், இரு ஆசிரியைகள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் ஆஜராகினார். பள்ளி வாயில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் விசாரணையை துவக்கியிருக்கின்றனர். 

"என்னுடைய தங்கையும் அந்தப் பள்ளியில் படிப்பதால், அவளுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்'' எனத் துவங்கிய மாணவிகள், "நாங்கள் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றோம். ஏழாவது முதலே இந்தப் பள்ளியில்தான் படித்துவருகின்றோம். ப்ளீஸ். நடவடிக்கை எடுங்க.. எங்கள் பள்ளியில் மியூசிக் ஆசிரியராக இருக்கும் செல்வராஜ், தாவரவியல் ஆசிரியராக இருக்கும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் எங்களை பேட் டச் பண்றாங்க. டான்ஸ் கிளாஸின்போது எங்களது இடுப்பைப் பிடிப்பதும், கண்ட இடத்தில் தொடுவதுமாக இருப் பார். அதனையும் சகிச்சுக்கிட்டு நாங்க ஆடும்போது அவ ரோட பார்வை எங்க ---- மேல இருக்கும். அதுபோல் தாவரவியல் ஆசிரியர் பாலசுப்பிர மணியனும். பெண் குழந்தைகளான எங்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நடித்துக்கொண்டே முதுகில் தொடங்கி பின்புறம் தடவ ஆரம்பிப்பார். திடீரென தொடையிலும் கைவைப்பார். அவர்கள் செய்வது பேட் டச் என தெரியும். வீட்டில் சொன்னால் பள்ளிக்கு படிக்க அனுப்ப மாட்டார்கள். டீச்சரிடம் சொல்லமுடியாது. அந்த டீச்சர் தாவரவியல் சாரோட ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். யாரிடம் சொல்வது எனத் தெரியவில்லை. எங்களுக்கு படிப்பு முக்கியம். எங்களைக் காப்பாத்துங்க'' என அந்த மூன்று குழந்தைகள் வீடியோவில் பேசியிருக் கிறார்கள்.

Advertisment

pollachi1

1,300 மாணாக்கர்களைக் கொண்ட அந்தப் பள்ளியின் வாயில் கதவை மூடி வைத்துக் கொண்டு விசாரணையை துவக்கியது பள்ளிக் கல்வித்துறை மற்றும் காவல்துறை டீம். தனித்தனியாக பள்ளி மாணவிகளை அழைத்து "ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்.?  பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்களா?' என்று விசாரணையைத் துவங்கியவர்கள், குறிப்பாக அந்த இரண்டு ஆசிரியர்கள் குறித்து 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். அந்த டீம், வீடியோ வெளியிட்ட அந்த மாணவிகளைத் தேட, அவர்கள் மூவரும் அன்று பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்தனர். சுமார் 7 மணி நேரம் 250-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரின் தாயாரான புவனா நாச்சியார்... "அந்தப் பள்ளியில் வகுப்பறை நேரத்தின்போது சேலை வியாபாரம் நடந்துள்ளதாக வீடியோ வெளியானது. பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் விபச்சாரம் நடப்பதாக புகார், பெற்றோர்களை பள்ளி ஆசிரியர்கள் மதிப்பதில்லை என்கின்ற புகார், பள்ளியில் ஒருசில ஆசிரியர்கள் குடித்துவிட்டு வந்ததாக புகார் எனப் பல்வேறு புகார்கள் கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகம் தொடங்கி முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை கதவைத் தட்டியுள்ளது. இதில் "கலை' என்கின்ற ஆசிரியர் குடித்து வந்ததை உறுதிப்படுத்தி, அவரை வால்பாறைக்கு இடமாற்றம் செய்தது மாவட்ட கல்வித்துறை. இந்த நேரத்தில் அவர்களை உலுக்கும்விதமாக பாலியல் சீண்டல் புகார்'' என்றார்.

Advertisment

காவல்துறையின் உளவுப்பிரிவோ, "அந்தப் பள்ளியை பொறுத்தவரை ஆசிரிய, ஆசிரியைகள் இரண்டு டீமாக இருக்கின்றனர். இதில் ஆசிரியை ஒருவரும், தாவரவியல் ஆசிரியர் பால சுப்பிரமணியனும் பள்ளி வகுப்பறையிலேயே கதவைச் சாத்திக்கொண்டு நெருக்கமாக இருப்பதுண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர்களோடு மியூசிக் டீச்சர் செல்வராஜ் மற்றும் சில வாத்தியார்கள் ஒரு டீம். இன்னொன்று தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமையிலான டீம். பள்ளியில் தாங்கள்தான் பெரியவர் என்பதிலும், தாங்கள் செய்கின்ற தவறுகளை யாரும் கேட்கக்கூடாது என்ற திமிரிலும் ஒருவருக்கொருவர் பெட்டிஷன் போட்டுக் கொள்வதுண்டு. அந்த வகையில்தான் இந்த குழந்தைகளின் வீடியோ ஆடியோ வெளியாகியுள்ளது. தொடர் விசாரணையில் இருக்கின்றோம்'' என்றார் அவர்.

தயவுதாட்சண்யம் பாராது, கடுமையான, இறுக்கமான விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கையெடுத்தால் மட்டுமே இந்த பாலியல் சீண்டல் புகாருக்கு மட்டுமில்லாது, அனைத்து புகார்களுக்கும் விடை கிடைக்கும் என்பது மாணவிகளின் பெற்றோர் எண்ணம்.