தர்மபுரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆசிரியர் அடித்ததால் மனஉளைச்ச லுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சிசெய்து, ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
தருமபுரி நகரப் பகுதியை ஒட்டியுள்ள பென்னாகரம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்றுவருகின்றனர். 30 ஆசிரியர்- ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மட்டும் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் டி பிரிவில் முப்பது மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக குணசேகரன் பணியாற்றிவருகிறார்.
இவர் கடந்த 18ஆம் தேதி வழக்கம்போல் பத்தாம் வகுப்பு "டி' பிரிவுக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவர் களிடத்தில் "அனைவரும் வகுப்பு தேர்விற்கு தயாராக உள்ளீர்களா?' என ஒவ்வொருவராக கேட்கும்பொழுது, அதே வகுப்பில் பயின்ற ஒரு மாணவி மட்டும் 17ஆம் தேதி விடுமுறை எடுத்திருந்ததால், ஆசிரியரிடம் எனக்கு இன்னும் ஒருநாள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குணசேகரன் அந்த மாணவியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, கையில் வைத்திருந்த தேர்வெழுதும் அட்டையால் மாறி, மாறித் தாக்கியுள்ளார்.
மறுநாள் 19ஆம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. அதேபோல் 20ஆம் தேதியும் பள்ளிக்குச் செல்லாததால், பெற்றோர் விசாரித்துள்ளனர். எதுவும் தெரிவிக்காத மாணவி வீட்டிற்குள் சென்று கதவைத் தாளிட்டு தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர் கதவை உடைத்து மாணவியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி ஜூன் 30ஆம் தேதி பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை முதல் காவல்துறை வரை தெரிந்தும், புகார்கள் சென்றும் கண்டும் காணாமல் மெத்தனப்போக்குடன் இருந்துள்ளனர். ஏற்கனவே பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டல் செய்து குணசேகரன் மக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கியவர்தான். இவர்குறித்து, 2025, ஜூன் 18-20 நக்கீரன் இதழில், "ஆசிரியரின் பாலியல் சீண்டல்! பாதுகாக்கும் அ.தி.மு.க. மாஜி!'’என கட்டுரை வெளியிட்டுள்ளோம். இதுபோன்ற சம்பவங்களில் இவரை அரசியல் பிரமுகர்கள் காப்பாற்றிவந்துள்ளனர். அதற்குப் பின்னரும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் ஆர்.டி.ஓ. விசாரணையும் தற்போது நடந்துவருகிறது.
இந்த சூழ்நிலையில், மாணவியைக் கண்டிக்க ஆபாச வார்த்தை பயன்படுத்தி, ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையிலும் அவர் மீது நடவடிக்கை இல்லாதது தவறான முன்னுதாரணமாகும். தவறான நடவடிக்கைகளுக்கு எந்த ஒழுங்கு நடவடிக்கை இல்லாததும் அரசியல் பின்புலமும்தான் மீண்டும் மீண்டும் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடக் காரணமாகிறது.
ஒரு குற்றம் நடந்துள்ளது என்றால் அதனை விசாரணை செய்யும் போலீசார் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், சரியாக விசாரணை செய்வதில்லை. அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களையே விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பது, அச்சுறுத்தல் செய்து, அவர்களை குற்றம் நடக்கவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி, விசாரணையை ஒன்றுமில் லாமல் ஆக்குவதே இவர்களின் பணியாக உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் என்றாலும் தர்மபுரியில் மட்டும் அ.தி.மு.க. மாஜி அமைச்சரின் ஆட்சிதான் என்கிற அளவுக்கு, அவர் சொன்னால் காவல்துறை முதல் கல்வி அதிகாரிகள்வரை மறு பேச்சில்லை. இந்த ஆண்டு மட்டும் 46 போக்சோ வழக்குகள். அதில் ஆறுபேர் ஆசிரியர்கள். தி.மு.க. அரசு தலையிட்டு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் விவகாரம் கைமீறிப்போன பின்பு வருத்தப்பட்டு பலனில்லை'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறையின், முதன்மைச் செயலாளர் சந்திரமோகனிடம் கேட்டபோது, “"விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன், விசாரணை முடிவில் நிச்சயமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை முழுமையாக தடுக்கும்விதமாக நடவடிக்கை மேற்கொள்வோம்''’என்றார் உறுதியாக.
-சே