"ஆசிரியர் தாமோதரன் போக்சோ சட்டத்தில் கைதான விவகாரத்தில் வெளிவராத உண்மைகள் நிறைய இருக் கின்றன''’என்று வேதனைப் பட்டார், ஆசிரியர் ஒருவர்.
"ஆசிரியர் தாமோதரன் யார்? என்ன நடந்தது?'
சாத்தூர் தாலுகா -புதுச் சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த தாமோதரன், மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, போக்சோ மற்றும் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார்.
"ஆசிரியர் தாமோதரன் அப்படிப்பட்டவரல்ல.. சாதி அடிப்படையில் அவரைப் பலிகடா ஆக்கிவிட்டனர்''’என ஒரு தரப்பு கூற... "சிறந்த முறையில் கற்றுத் தரும் எங்களது ஆசிரி யரை திட்டமிட்டு இழிவுபடுத்தி விட்டார்களே?''’என மாணவர்கள் தரப்பிலும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட, "ஆசிரியரை விடுதலை செய்து மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்தவேண்டும்' என எழுத்து மூலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தாமோதரன் நல்ல ஆசிரியரென்றும், அப்படி கிடையாது என்றும், இருவேறு கருத்துகள் உள்ள நிலையில்... அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று விசாரித்தோம்.
18 வருடங்களாக ஒரே பள்ளியில், அதாவது புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து, எந்தவொரு புகாருக்கும் ஆளாகாதவர் தாமோதரன். அந்த அரசுப் பள்ளியில், மாணவர்களின் குறைகளைத் தெரிவிப்பதற்கு ‘மனசுப் பெட்டி’ வைக்கப் பட்டுள்ளது. அதில் தாமோதரன் குறித்து ஒரு புகாரும் வந்ததில்லை. அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் திடீரென்று ஒருநாள், தாமோதரன் ‘சரியில்லாதவர்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பள்ளியில் கூடிவிட்டனர். கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். மாணவிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், சில விஷயங்கள் தெரியவந்துள்ளன.
மாணவர்களிடம் பேசும்போது ஆசிரியர் தாமோதரன் சில வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். எப்படி தெரியுமா? ஒரே நேரத்தில் ஒன்றாக மாணவிகள் கழிப் பறைக்குச் சென்றபோது ‘கமெண்ட்’ அடித்துள்ளார். வகுப்பறைக்குச் செல்லாமல் மாணவிகள் கூடிநின்று பேச, ‘கிளாஸுக்கு போங்க..’ என்று அவர்களைக் கலைத்துவிட்டபோது, ஒரு மாணவியின் காலை தவறுதலாக மிதித்திருக்கிறார். தலைவலி என்று ஒரு மாணவி சொன்னபோது, கையில் நாடி பிடித்துப் பார்த்திருக்கிறார். கோபத்தில் இருந்த ஒரு மாணவியைச் சாந்தப்படுத்துவதற்காக கை கொடுத்துள்ளார். கணக்குப் பாடம் எடுத்தபோது, கணவன்-மனைவியை உதாரணம் காட்டியிருக் கிறார்.
வகுப்பு நடத்தியபோது, மாணவி ஒருவரை "வாடி' என "டி'’போட்டு பேசியிருக்கிறார். அவரிடம் 8-வது வகுப்பு மாணவிகள் சிலர், "பத்தாவது படிக்கிற அக்காக்கள் சிலர் லவ் பண்ணுறாங்க...'’என்று கூற, விசாரணையில் இறங்கி "நீ லவ் பண்ணுறியா?, "நீ லவ் பண்ணுறியா?'’என ஒவ்வொரு மாணவியிடமும் கேட்டிருக்கிறார். குற்றாலம் சென்ற மாணவி ஒருவர், அங்கே எடுத்த போட்டோவை, படிப்புக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டு விட, அவரிடம் தாமோதரன், "இப்படி பண்ண லாமா? இது தவறில்லையா? உன்னுடன் ஒரு பையன் இருக்கிற மாதிரி பண்ணி, இந்த போட்டோவை நானே வைரலாக்கி விடுவேன்''’என்று எச்சரித்திருக்கிறார்.
நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர், "இந்தப் பிரச்சனையை சாதி ரீதியிலான அரசியலாக்கிட்டாங்க. தாமோதரன் மீது புகார் கொடுக்கிறதுக்கு சில மாணவிகள் தூண்டி விடப்பட்டாங்க. மாணவிகள் குறித்த புகார்னாலே அரசுத்துறைகள் நடுங்குது. பரபரப்பான அந்தச் சூழ்நிலைல அசம்பாவிதம் எதுவும் நடந்துறக்கூடாதுன்னு, அவசரகதில ஆசிரியர் தாமோதரனைக் கைதுபண்ணி ஜெயில்ல அடைச்சிட்டாங்க''’என்றார்.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியைத் தொடர்புகொண் டோம்.
"அந்த மாணவிகளோட பெற்றோர்ட்ட இருந்து, ஆசிரியர் தாமோதரன் மீதான குற்றச்சாட்டை எஸ்.சி., எஸ்.டி., போக்ஸோ சட்டத்துல கொண்டுவரணும்னு கம்ப்ளைன்ட் லெட்டர் வந்துச்சு. அதப் படிச்சதும் என்னோட பார்வை, இந்த ரெண்டு விஷயத்துல ஆசிரியர் தாமோதரன் இருக்காரான்னு இருந்துச்சு. சாதிப் பாகுபாடு காட்டி ஆசிரியர் எதுவும் பண்ணலன்னு அத்தனை மாணவர்களும் சொல்றாங்க. போக்சோன்னு வரும்போது, அந்த மாணவிகளை இன்னும் தனியா விசாரிக்கல. ஆசிரியர் என்ற நிலைல, ஒரு ஆசிரியர் இப்படித்தான் பேசணும்னு நாங்க எதிர்பார்ப்போம். அந்த நிலைல இருந்து கொஞ்சம் மாறுபட்டு சில உதாரணங்கள் சொல்லிருக்காரு. சில விஷயங்கள நெகடிவா பதிவு பண்ணிருக்காரு. சரியா சொல்லணும்னா, ஆசிரியர் மாண்பை மீறிருக்காரு. மாணவிகள் புகாராகச் சொன்ன ஆசிரியர் தாமோதரனின் செயல்பாடு எல்லாமே, எல்லார் முன்னாலயும் நடந்திருக்கு. மாணவர்களின் தவறை ஆசிரியர் சுட்டிக்காட்டிய முறை இங்கே தவறாயிருச்சு. காவல்துறை விசாரணை, நீதிமன்ற விசாரணை எல்லாம் இருக்கு. இந்த விவகாரம், அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரும்''’என்றார்.
துறை ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய ஆசிரியர் தாமோதரனின் செயல், மிகைப் படுத்தப்பட்ட புகாராகி, கைது நடவடிக்கை வரை கொண்டு போய்விட்டது.