மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய மூன்றடுக்கு அதிகார முறையைக் கொண்ட இந்திய அரசியலமைப்பில், அடித்தட்டு மக்களின் அரசியல் நிர்வாக பங்களிப்பிற்கு நல்லதொரு அடித்தளமாக இருக்கின்றன, உள்ளாட்சி அமைப்புகள்.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் வாயிலாக, எஸ்.சி.-எஸ்.டி., பி.சி. மக்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தாழ்த்தப்பட்டோருக்கான (ரிசர்வ்) விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் குழு தலைவராக இருக்கிறார், சுமதி ராஜசேகர். இவருடைய கணவர் ராஜசேகர், விருதுநகர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராவார். அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர், சுமதியுடன் தொடர்ந்து மோதல் போக்கினைக் கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது சுமதி ராஜசேகர், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசுவை சந்தித்து, தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.
25 வார்டுகளைக் கொண்ட விருதுநகர் ஊராட்சியில், தன் மனைவி சுமதியை தலைவராக்கிவிட வேண்டுமென்ற திட்டத்தோடு, தன்னுடைய பட்டாசு ஆலைகளில் ஒன்றை விற்றுவிட்டு, 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் தொகையோடு களமிறங்கினார் அ.தி.மு.க. ஒ.செ. ராஜசேகர். மனைவி சுமதி நீங்கலாக, 24 அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் தந்தார். அப்போது, 14 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றிபெற்ற நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமதியைத் தேர்வு செய்வதற்காக, ஓட்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பெற்றுக் கொண்டனர். ஆனாலும், 2020 செப்டம்பரில் இருந்து, அ.தி.மு.க. சேர்மன் சுமதிக்கு குடைச்சல் கொடுக்கும் விதத்தில், தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் புறக்கணித்து வந்ததால், 5 கூட்டங்கள் வரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ‘சேர்மன் நாற்காலியில் ஒரு எஸ்.சி. பெண் உட்கார்ந்திருக்கும்போது, கவுன்சில் கூட்டத்துக்கு நாம் போவது சரியாக இருக்காது..’ என்று அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரே பேசி, தன்பக்கம் சிலரை இழுத்ததெல்லாம் நடந்திருக்கிறது. கவுன்சிலர் ஒதுக்கீட்டில் எதிர்பார்த்த யூனியன் ஒப்பந்த வேலை எதுவும் நடக்காததால், 12 பெர்சன்ட் கிடைக்க வில்லை என்ற ஆதங்கமே, அ.தி.மு.க. கவுன்சிலர்களின் புறக்கணிப்புக்கு பிரதான காரணமாக பேசப்படுகிறது.
விருதுநகர் யூனியன் சேர்மன் சுமதி ராஜசேகர் காட்டிய வழியில், 15-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மாலா சரவணனும், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ஆர். மற்றும் விருதுநகர் தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந் துள்ளார். 12-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முருகேசன் இறந்ததைத் தொடர்ந்து, அந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், அ.தி.மு.க. ஒ.செ. ராஜசேகரிடம் பேசினோம். "பணம் செலவழிச்சது ஒரு விஷயம் இல்ல. மரியாதை இல்லாம போச்சு. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க. யூனியன் சேர்மனுக்கு எதிரா கச்சை கட்டி நிற்பது தெரிஞ்சும், அ.தி.மு.க. தலைமையோ, மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜியோ பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சரிபண்ணல. அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரா இருக்கிற தர்மலிங்கத்தை மாற்றணும்; இல்லைன்னா வைஸ்சேர்மனா இருக்கிற அவரோட மனைவி முத்துலட்சுமியை மாற்றணும்னு ஆரம்பத்துல இருந்தே பிரச்சனை பண்ணுனாரு கவுன்சிலர் செந்நெல்குடி மாரியப்பன். எம்.எல்.ஏ. எலக்ஷன் நடந்தப்ப, வைஸ்சேர்மன் (முத்துலட்சுமி) தர்மலிங்கம், கவுன்சிலர் செந்நெல்குடி மாரியப்பன்கிட்ட, தேர்தல் செலவுக்கான பணத்தை மொத்தமா கொடுத்ததும், மாமன்-மச்சான்னு சேர்ந்துக்கிட்டாங்க. சேர்மன் எதிர்ப்பு அரசியல்ல கூடுதல் தீவிரம் காட்டினாங்க. கவுன்சிலர்களுக்கு வேலை கொடுக்கல. அதனாலதான் புறக்கணிக்கிறோம்னு ஓபனாவே சொன்னாரு மாரியப்பன். எத்தனை காலத்துக்கு இவங்களோடு போராடுறது? அதான்... தி.மு.க.வுல சேர்ந்துட்டோம்''’என்று விளக்கம் அளித்தார்.
விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் செந்நெல்குடி மாரியப்பன் நம்மிடம், "முன்னால அ.தி.மு.க. நல்லாத்தான் இருந்துச்சு. இப்ப பணம் கொடுத்தால்தான் பொறுப்பு கிடைக்கும்னு ஆயிருச்சு. இடையில வந்த ராஜசேகர் இடையிலயே தி.மு.க.வுக்கு போயிட்டாரு. நிதி இருக்கும்போது, எதுக்கு வெறும் கூட்டம் நடத்தணும்னு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தோம். சாதி ரீதியா சேர்மன் சுமதிய எந்த கவுன்சிலரும் தப்பா பேசல. மூளிப்பட்டியில் தனிநபர் (கே.டி.ராஜேந்திரபாலாஜி) குலதெய்வக் கோயில் இருக்கிற இடத்துல சமுதாயக்கூடம் கட்டினதுக்கு, யூனியன் பண்ட்ல இருந்து ரூ.20 லட்சம் கொடுத்தது சரியில்லன்னு எதிர்த்தோம். கட்டாத பாத்ரூமுக்கு ரூ.10 லட்சம் செலவழிச்சதா கணக்கு எழுதிருக்காங்க'' என்று முறைகேடுகளைப் பட்டிய லிட்டபோது, ‘"உங்களைப் போன்ற அதிமுக கவுன் சிலர்களுக்கு பல லட்சங்களை வாரியிறைத்திருக்கிறாரே ராஜசேகர்?''’ என்று நாம் இடைமறிக்க, "ஆமா.. ஒரு பெரிய பொறுப்புக்கு வரணும்னு நினைக்கிறவங்க செல வழிச்சுத்தானே ஆகணும்''’என்று அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் என்ற முறையில், தான் பணம் வாங்கியதையும் நியாயப்படுத்தினார்.
ஆற்றவேண்டிய பணிகளை அறவே மறந்துவிட்டு, பெர்சன்டேஜுக்காக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதும், கோடிகளில் ‘முதலீடு’செய்துவிட்டு, தலைவர் பதவியில் உட்கார்ந்துகொண்டு ‘வியாபாரம்’ நடத்துவதும், உள்ளாட்சி நிர்வாகத்தின் உன்னத நோக்கத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது.