பட்ஜெட் பெரிசு!

"லப்பர் பந்து'’ பட வெற்றியின் மூலம் தனது இமேஜ் மற்றும் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். இதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துப்போக நினைத்த அவர், அடுத்ததாக பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்கேற்றபடியே கதையையும் தேடி வந்தார். அந்த வகையில் கவினை வைத்து ‘"லிப்ட்'’ படத்தை இயக்கிய வினித் வரபிரசாத் சொன்ன கதை அவருக்கு பிடித்துவிட்டது. மேலும் படத்தின் பட்ஜெட் ரூ.20 கோடிக்கு மேல் என்பதால் உடனே க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இப்படம் ஹரிஷ் கல்யாண் நடித்ததில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. படப்பிடிப்பு டிசம்பரிலிருந்து தொடங்கப்படவுள்ளது. இப்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரைப் போலவே சீனியர் நடிகர்களைத் தேர்வு செய்வதில் படக்குழு முன்னுரிமை கொடுத்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ss

ஆக்ஷன் தூக்கல்!

இயக்குநர் நெல்சன் தற்போது "ஜெயிலர்' பட இரண்டாம் பாக ஸ்கிரிப்ட் பணியில் பிஸியாக வுள்ளார். ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி' படத்தில் நடித்து வருவதால் அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே தெலுங்கு முன்னணி ஹீரோவான அல்லுஅர்ஜூனை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கியிருந்தார் நெல்சன். இந்த புராஜெக்ட் "ஜெயிலர் 2'க்குப் பிறகு டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி, மற்றொரு தெலுங்கு ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆரிடம் கதை கூறி ஓகே வாங்கியுள்ளார் நெல்சன். இந்தப் படம்தான் ஜெயிலர்லி2க்குப் பிறகு டேக் ஆஃப் ஆகும் என தெலுங்கு வட்டாரங்கள் சொல்கின்றன. இந்தப் படம் நெல்சன் ஸ்டைலில் டார்க் காமெடி ஜானரில் உருவாகிறது. ஆனால் ஜூனியர் என்.டி.ஆர். தனது ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் சில ஆக்ஷன் சீன்களை சேர்க்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்றவாறு தனது கதையில் சில மாற்றங்கள் செய்து வருகிறார் நெல்சன். இந்தப் படத்திற்கு நெல்சனின் நண்பனும் ஜூனியர் என்.டி.ஆரின் "தேவரா'’பட இசையமைப்பாளருமான அனிருத்தான் இசையமைக்கவுள்ளார்.

நம்பிக்கை நாயகி!

சின்னத்திரை டூ பெரியதிரை என உருமாறிய தனது கரியரை வெற்றிகரமாக நடத்த முயற்சித்து வருகிறார் பிரியா பவானிசங்கர். சமீப காலமாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான "டிமான்டி காலனி 2' ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "பிளாக்.' இந்தப் படமும் "டிமான்டி காலனி 2' படம் போல அமானுஷ்யம், த்ரில்லர் போன்ற ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. அதனால் இந்தப் படமும் தனது ஆறுதல் வெற்றிக்குப் பிறகு பெரிய வெற்றியைத் தரும் என பிரியா பவானிசங்கர் நம்புகிறார்.

பாசிட்டிவ் ரிப்போர்ட்!

"ஒரு கல்லூரியின் கதை', "மாத்தி யோசி', "ஆனந்தம் விளையாடும் வீடு' உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி, தற்போது சமுத்திரக்கனியை வைத்து "திரு.மாணிக்கம்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா என பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வரும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

தைரிய மாளவிகா!

"தங்கலான்' படத்திற்குப் பிறகு கார்த்தியின் "சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்தப் படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என சொல்லப்படும் நிலையில், "தங்கலான்' படத்தைப் போலவே இந்தப் படத்திலும் அவருக்கு அதிக சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. அதற்காக அவர் தீவிர பயிற்சி எடுத்தும், உடலை வருத்தியும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் 100 அடி உயரத்திலிருந்து குதிப்பது போல் ஒரு சண்டைக் காட்சியில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்காக மாளவிகா மோகனனுக்கு பாதுகாப்பு கவசங்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டது. கடந்த ஜூலையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சி யாளர் ஏழுமலை என்பவர் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிதாசன் ஜெ.