திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகனுக்கு அடுத்தபடியாக அறநிலையத் துறைக்கு சொந்தமான தாடிக்கொம்பில் இருக்கும் சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.
"இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம், கடந்த ஜூன் 28ஆம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பெயரளவில்தான் நடை பெற்றுள்ளதே தவிர, ஒரு சமூகத்தைச் சேர்ந்த மில் தொழில் அதிபர் கள்தான் இக்கோவிலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்'' என்று குற்றம் சாட்டுகிறார் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் வினோத். அவர் மேலும் கூறுகையில், "கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள், வேலுச்சாமி, கந்தசாமி மற்றும் எஸ்.எஸ்.எம். குரூப் முன்னிலையில் நடைபெறுவதாக தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்வதோடு, இப்பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரின் பெயரையோ, அறநிலையத்துறை அதிகாரிகள் பெயரை யோ போடாமல், தங்கள் பெயரை மட்டும் போட்டுக்கொண்டு, அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளைப் புறக்கணிக் கும் அளவுக்கு, எஸ்.எஸ்.மில் உரிமையாளர் களின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது
இந்த சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தொடர்ந்து ஒரு சமூகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து கிறார்கள். அதேபோல், அவர்களுடைய நண்பர் முருகேசன் என்பவர், இது அவர் களுக்கு சொந்தமான கோயில் என்றும், மற்ற வர்களுக்கு சொந்தமில்லை என்றும், பொது மக்களை மிரட்டுவதாகவும் புகாரளிக்கிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சில மாதங்களுக்குமுன் இங்கு வந்தபோது, இதுகுறித்து புகாரளித்ததும், "அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கொடுக்க வேண்டும்' என்று அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார்'' என்றார் அவர். இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி தனியார் மில் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்க லைனில் பிடிக்க முடியவில்லை. அவர்களின் நெருங்கிய நண்பர் முருகேசனிடம் கேட்டபோது, "கோவில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு உதவி செய்திருக்கிறார்களே தவிர மற்றபடி அவர்கள் கட்டுப்பாட்டிலெல் லாம் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை அப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அதுபோல், கோவில் அவர்களுக்கு சொந்தமென்று நான் யாரிடமும் சொல்லவில்லை'' என்று கூறினார்.
மாவட்ட இந்து அறநிலையத் துறையின் மண்டல இணைஆணையர் பாரதியிடம் கேட்டபோது, "இது சம்பந்தமாக என்னிடமும் புகார்கள் வந்ததின் பேரில் அந்த தனியார் மில் உரிமையாளர்களை பலமுறை கூப்பிட்டு சத்தம் போட்டேன். ஆனால் கோவில் இ.ஓ. துணையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்... என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்றார். "இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.