புலம்பெயர் தொழிலாளர்களை சம்பந்தப் பட்ட மாநிலங்களே தங்கள் சொந்தக் கைக்காசைப் போட்டு, அந்தந்த மாநிலங்களில் சேர்க்கவேண்டு மென மத்திய அரசு சொன்னாலும் சொன்னது... ரயில்களைப் புக்செய்து அவர்களை அனுப்பி வருகிறது தமிழக அரசு. ஆனால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு முனைப்பான நடவடிக்கை எடுக்கவில்லையென பல்வேறு ஆதங்கக் குரல்கள் நம் காதுகளை எட்டியுள்ளன.

கொரோனாவிடம் சீனா, இத்தாலி போன்ற நாடுகள் பட்டபாட்டைப் பார்த்த உலக நாடுகள், தங்கள் நாட்டை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவசர அவசரமாக ஊரடங்கை அறிவித்தன. இன்னும் சில நாடுகள் ஊரடங்கு அறிவிக்கா விட்டாலும் பிற நாடுகளிலிருந்து கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக விமான, கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

singapore

இதனால் பல்வேறு உலக நாடுகளில், சுற்றுலா சென்றிருந்தவர்கள் நகர வழியற்றுச் சிக்கிக்கொண்ட னர். கிட்டத்தட்ட இரண்டு கட்ட ஊரடங்குக்குப் பின் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் எனும் பெயரில் விமானங் களை இயக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.

Advertisment

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் சிங்கப்பூரில் சிக்கியிருந்த தமிழர்கள், நமக்கும் ஒரு விமானம் இயக்கப்படும் என நம்பிக்கையடைந்து அதற்கான வேலைகளில் மும்முரமாகினர் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக் கும் ஜெய்சங்கர், முன் சிங்கப்பூர் ஹைகமிஷனராக இருப்பதால் விஷயங்கள் எளிதாகவே கைகூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் ஒன்று பட்டியலிடப்பட்டது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ… அந்த விமான சேவை திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கப்பூரிலிருந்து டெல்லிக்கு 2, மும்பைக்கு 1, பெங்களூருக்கு ஒரு விமானங்கள் இயக்கப்பட்டு, அந்தந்த மாநில மக்களை மட்டும் ஏற்றிச்சென்றன. சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆக, அதிகமாகக் காணப்படும் தமிழர்களுக்கு ஏன் ஒரு விமானம் இயக்கப் படவில்லை என கேட்கவோ… மத்திய அரசிடம் பேசி உடனடியாக விமானம் இயக்கவோ தமிழகத்திலிருக்கும் அரசு மும்முரம் காட்டாதது ஏன் என சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வரக் காத்திருக்கும் தமிழர்கள் கொதிக்கின்றனர்.

ss

Advertisment

அதுமட்டுமின்றி, முந்தைய மாதங்களில் சிங்கப்பூர் சென்று கொரோனா தொற்று பிரச்சனையால் ஊர்திரும்ப முடியாத தமிழர்கள், பொது விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதும் ஊர் திரும்ப பதிவுசெய்ய தமிழ்நாடு பொதுத்துறையின்கீழ் இயங்கும் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், தன் இணைய தளமான NONRESIDENTAMIL.ORG/REGISTER-ல் ஒரு ஆன்லைன் பதிவுப் படிவத்தை வெளியிட்டது.

அந்தப் படிவத்தை நிரப்பமுயன்ற பலரும் அதில் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக புகார் செய்துள்ளனர். அவற்றை நம்மிடம் விவரித்தனர்,

படிவத்தில் விசா தொடர்பான தகவல் என்னும் ஒன்றாம் எண் கட்டத்தை க்ளிக் செய்ததும் வேலைக்கான விசா, சுற்றுலா விசா, மேற்படிப்புக் கான விசா, சார்பு விசா, வழியிடைப் பயணத்திற்கான விசா, இதர விசா எனும் ஆறு தேர்வுகள் காட்டும். இதில் சுற்றுலா சென்றவர், சுற்றுலா விசா என்பதைத் தேர்வுசெய்வார். ஒருவேளை அவர் சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தால், அவர் இந்த தளத்தில் பதிவுசெய்து இந்தியா திரும்புவதில் சிக்கல் நீடிக்கும்.

படிவத்தின் நான்காவது கேள்வி, தமிழ்நாடு திரும்புவதற்கான காரணம் என்றிருக்கிறது. இதை க்ளிக் செய்தால், ஏழு காரணங்கள் பாப் அப் மெனுவாக மேலெழுந்து வரும். அதில், வேலைக்கான ஒப்பந்தம் காலாவதி, வேலைக்கான விசா காலாவதி, வேலைக்கான விசா ரத்து, உடல் நலக் குறைவு, கர்ப்பிணி, படிப்பு நிறைவடைந்ததால் போன்ற காரணங்கள் காணப்படுகின்றன. இதில் சுற்றுலா விசா தொடர்பான காரணங்கள் ஏதுமில்லை.

மேலும் பணியின் நிமித்தமாக சிங்கப்பூர் சென்றவர்களில் யாருக்காவது இச்சமயத்தில் சொந்த ஊரில் உறவினர் மரணமடைந்திருந்தால், மேற்கண்ட ஏழு காரணங்களில் எதையும் குறிப்பிட முடியாது. இந்த படிவத்தை முழுமையாகப் பூர்த்திசெய்யாவிட்டால், அந்தப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது. அதாவது அவர் தமிழகம் திரும்பமுடியாது. இந்தக் குறைகளையும் அதற்கான திருத்தங்களையம் சுட்டிக்காட்டி தமிழக முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் செய்தோம்.

இதுவரை இதற்கு எந்தப் பதிலும் இல்லை. ஆணையர் அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னதற்கும், இப்போதைக்கு மாற்றங்கள் செய்ய வாய்ப்பில்லை என்று கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார் கள்’என வருத்தம்தோயப் பேசினர்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய ஹைகமிஷனர் அஷ்ரப், ""தமிழக அரசு நிலைப்பாடுதான் விமான சேவைக்குத் தடையாக இருக்கிறது''’என்கிறார். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மலையாளிகள் குறித்து தேசவாரியாக விவரங்கள் சேகரித்து, அவர்கள் கேரளம் திரும்ப பினராய்விஜயன் காட்டும் அக்கறை தமிழக முதல்வரிடம் இல்லையே என முணுமுணுக்கிறார்கள் சிங்கப்பூரில் சிக்கியிருக்கும் தமிழர்கள்.

ஆளும்கட்சி இவற்றில் கவனம் செலுத்தாத நிலையில், தமிழக எதிர்க்கட்சிகளாவது இவற்றில் கவனம்செலுத்தி சிங்கப்பூரில் சிக்கியிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப ஆவனசெய்ய முனைப்புக் காட்டுமா?

- சுப்பிரமணி