கீழடியில் கிடைத்த தொல்தமிழர் பெருமைகளைப் போல ஆதிச்சநல்லூரும் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது எனப் பெருமையோடு சொல்கிறார்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிக்கரையில் வெளிப்பார்வைக்கு வெறும் மண்மேடாகக் காட்சி தரும் ஆதிச்சநல்லூர், உள்ளுக்குள் வரலாற்றுக்கால பெரும் புதையலைக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் நியமனம் செய்யப்பட்ட தொல்லியல்துறை இயக்குநர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட சுமார் 40 பேர் அங்கே அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட வேண்டிய ஆய்வு, தற்போது அரை ஏக்கரில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனினும் அங்கேயே ஆயிரக்கணக்கன ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், மோதிரம், அகல்விளக்கு, புகைபிடிக்கும் குழாய், வளையல், உள்ளிட்ட ஆதாரப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 114 ஏக்கரிலும் அகழாய்வு நடத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியுள்ளார் தொல்லியில் ஆய்வாளரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராஜ்.
அவர் உள்ளிட்ட அகழாய்வுத்துறை சார்ந்தவர்களிடமும் நாம் பேசியபோது வெளிப்பட்ட நம் தொல்தமிழரின் வாழ்வின் முறைகள் வியக்கவைக்கின்றன. 144 வருடங்களுக்கு முன்பே இந்தப் பகுதிக்கு வந்த ஜெர்மன் நாட்டு தொல்லியல் ஆராய்ச்சி நிபுணரான ஜாகூர், அகழாய்வு செய்து சில பொருட்களை எடுத்துச் சென்று ஜெர்மனில் உள்ள உலக அருங்காட்சியத்தில் வைத்திருக்கிறார். பின்னர் அடுத்தடுத்து வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலரும் அங்கே ஆராய்ந்து, அது தமிழர்களின் சரித்திரப் பெருமை விளையும் பூமி என்று அறிவித்திருக் கிறார்கள்.
தாமிரபரணியாறு இருபத்து நான்காயிரம் ஆண்டு பழமையானது என்று சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் காமராஜ், இவரை போலவே, தொல்லியல் நிபுணரான தியாக சத்தியமூர்த்தி 2005-ல் 180-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்து அதன் ஆய்வறிக்கைகளை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்திருக்கிறார், அதை வெளிப்படுத்தக் கோரி 2010ல் உயர்நீதிமன்றம் சென்ற எழுத்தாளர் காமராஜின் முயற்சியால், மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சியாளர் சத்தியபாமாவால், பாதி அறிக்கை மட்டும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படிருக்கிறது. இதில் காட்டப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள், விழிகளை விரியவைக்கின்றன.
தாமிரபரணி படுகையிலிருக்கும் ஆதிச்சநல்லூர் தமிழர்கள், அந்த நீரைக் கொண்டு விவசாயச் செழிப்பை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளனர். அடுத்த கட்ட நகர்வாக இரும்பு மற்றும் செம்புகள் உருக்கப்பட்டுள்ளன. நெசவுத் தொழில் உள்ளிட்டவைகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதன்மூலம் பொருளா தாரம் முன்னேற்றம் பெற்றவர்கள் அருகிலுள்ள கொற்கைத் துறைமுகம் வழியாகக் கடல் வணிகத்தையும் நடத்தியிருக்கிறார்கள். தூர கிழக்கு நாடான மத்திய தரைக்கடல் பகுதியினருடன் வணிகத் தொடர்பு ஏற்பட்டு அந்த வணிகர்களும் ஆதிச்ச நல்லூர் வந்திருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள், குடிநீரைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தியதும் தெரியவந்திருக்கிறது. குடி தண்ணீர் கிணறுகளில் ஏதாவது ஒரு பொருள் விழுந்து விட்டால், மனிதர்களின் கைபடாதவாறு அதை எடுக்க நீண்ட இடுக்கி யைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை, பொது இடங்களில் அடக்கம் செய்யாமல் உடலைப் பாதுகாப்பாக தாழிகளில் அடைத்துப் புதைத்திருக்கிறார்கள்.
இப்படி 3500 வருடங்களுக்கு முன்பே தமிழன் சுற்றுப்புறச் சூழலைப் பேணியிருக்கிறான். இதன் மூலம் அங்கு வாழ்ந்தவர்களின் வயது சராசரியாக 100 வருடங்களையும் தாண்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. விவசாயத்தைப் பெருக்கி வளம் கண்ட நம் தமிழர்கள், பின் வெண்கலம், இரும்பு போன்றவைகளை உருக்கிப் பயன்பாட்டுப் பொருளாக மாற்றியுள்ளனர். உயர்ரகப் பட்டுத் துணியும், நெசவு மூலம் அவர்கள் தயார் செய்ததும் தெரியவந்திருக்கிறது. மண்பாண்டம், தங்கம் போன்ற வையும் அவர்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளன.
இதேபோல் இறந்துபோன அரசர்களின் உடல்களை நடுக்காட்டில் கொண்டுபோய் போட்டுவிட்டு, காட்டு மிருகங்கள் சதையைத் தின்று முடித்ததும் அவர்களின் எலும்புக் கூட்டை தாழியில் அடைத்து அதைப் பாதுகாப்பாகக் கற்குவியலால் மூடியிருக்கிறார்கள். அதுபோன்ற தாழியும் அங்கே கிடைத்திருக்கிறது. இப்படி அங்கே கிடைக்கும் வரலாற்றுப் பொருட்கள், அன்றைய தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகதையாய்ச் சொல்கின்றன.
’’தியாக சத்யமூர்த்தியின் முழு ஆராய்ச்சி அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்றும், அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும். அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மூன்று கோரிக்கைகளைத்தான் நான் நீதிமன்றத்தில் வைத்தேன். இதில் பின்வாங்கிய மத்திய அரசு, தற்போது அகழ்வாராய்ச்சி நடத்த முன் வந்திருக்கிறது. தமிழக அரசும் இதற்கு ஒரு கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆதிச்ச நல்லூரை முழுமையாக ஆராய்ந்தால் நம் தொல் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் இன்னும் முழுமையாய் வெளிப்பட்டு நம்மை நிமிரவைக்கும்''’என்கிறார் ஆய்வாளரான காமராசு.
இதற்கு மத்திய மாநில அரசுகள் மனம் திறந்து ஒத்துழைக்குமா?
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்