இங்கே நீட் தேர்வு அச்சத்தால் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மருத் துவம் படிக்கச் சென்றார்கள். இப்போது கொரோனா அச்சத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், தங்களது தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படி தவிக்கும் மாணவர்களில் புதுக் கோட்டை மாவட் டம் பொன்னமரா வதியைச் சேர்ந்த மோனீஸ்வரனும் இருப்பதையறிந்து அவரைத் தொடர்பு கொண்டோம்.
""இந்த நாட்டில் கோவிட்—19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் நம்ம நாட்டிற்குப் போய்விடலாம் என முடிவு பண்ணி, இந்த மாதம் 17, 18, 19 தேதிகளில் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி, ஏர்போர்ட் போனால், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்கள் தரை இறங்க இந்திய ஏர்போர்ட்டுகளில் அனுமதி இல்லை என அந்த நாட்டு அரசு சொல்லிவிட்டது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதனால் வேறு வழியின்றி வாடகை வீடுகளிலும் விடுதிகளிலும் தங்கியுள்ளோம். விடுதிகளில் இருப்பவர்களுக்காவது ஓரளவு உணவு கிடைக்கிறது. ஆனால் வாடகை வீடுகளில் இருப்பவர்களின் நிலைமையோ பரிதாபம். ஒரே ஒரு நாள் மட்டும் விமானநிலையத்தில் எங்களுக்கு இந்திய தூதரகம் உணவு வழங்கியது.
அதேபோல் இங்கு மாஸ்க் தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளதால் போட்ட மாஸ்க்கையே துவைத்து வெயிலில் காயவைத்துப் போடும் நிலைமையில் இருக்கிறோம். மற்ற நாடுகளில் இருந்து இங்கே படிக்கவும் வேலைக்கு வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு தூதரகங்கள் தங்களது மக்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா, உணவு கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற் போல் உதவிகள் செய்கின்றன.
எங்களை பல கட்ட சோதனை செய்து இங்கிருந்து கிளம்ப இந்திய அரசு உதவ வேண்டும். அங்கே போன பின்னாலும் பல கட்ட சோதனை செய்யுங்கள், வைரஸ் இருந்தால் முகாமிற்கு அனுப்புங்கள். எப்படியாவது எங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்'' என்றார் கண்ணீர்க் கோரிக்கையுடன்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் சிக்கித் தவித்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மலேசியா தூதரக அதிகாரிகள் எடுத்த முயற்சியால் பலநாள் அவதிக்குப் பிறகு முதற்கட்டமாக 186 பேர் மலேசியாவுக்கு திருச்சியிலிருந்து விமானத்தில் பறந்தனர். மற்றவர்கள் தங்களின் வாய்ப்பை எதிர்பார்த்து வாடகை இடங்களில் தங்கிக்கொண்டு தினம் தினம் ஏர்போர்ட் வந்து விசாரித்தபடியிருக்கிறார்கள்.
-இரா.பகத்சிங், ஜெ.டி.ஆர்.