கேரளாவில் உள்ள செங்கல் சூளைக்கு தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஊரடங்கினால் குழந்தைகளோடு உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதும், எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்ப உதவுங்கள் என கண்ணீரோடு கதறும் வீடியோ வைரலாகி பலரையும் கலங்க செய்துள்ளது. அவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் முயற்சியில் களம் இறங்கினோம்.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து செங்கல் சூளை வேலைக்கு கூலி தொழிலாளர்கள் ஏஜெண்டுகள் மூலம் அழைத்து சென்று விடப்படுவது வழக்கமாக இருக்கிறது. செங்கல் அறுக்கும் தொழிலாளர்களை அழைத்துச்சென்று விடும் ஏஜெண்டுகள் தாங்கள் வாங்கிய பணத்தையும் தொழிலாளிகளின் தலையில் கட்டிவிடுவதால் கடன்மேல் கடன் சேர்ந்து கடனை அடைக்க முடியாமல் கொத்தடிமைகளாக வருடக்கணக்கில் வேலை பார்க்கும் அவலமான சூழலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த நான்காம் தேதி காலை கேரள மாநிலம் பாலக்காடு ஆலப்புழா, கிழக்காஞ்சேரி, பகுதியில் இருந்து ஒரு வீடியோ ஒன்று சீர்காழி அருகே உள்ள எடமணல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த வீடியோவில் பேசும் நபர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்டோம். அதன் பிறகு அந்த வீடியோவை சீர்காழி எம்.எல்.ஏ பாரதிக்கும், நாகை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிவைத்தோம்.
அந்த வீடியோவில் உள்ள அனைவரும் மாற்று உடைகூட இல்லாத நிலைமையில் கை கூப்பி வணங்கியபடி, ""இங்கு ஆறு மாதத்திற்கு முன்பு கல் அறுக்கும் வேலைக்கு வந்தோம். கொரோனாவால் இரண்டு மாதங்களாக வேலை இல்லை. உணவுக் கும் வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறோம். காட்டுப்பகுதியில் இருப்பதால் எந்த உதவியும் எங்களுக்கு கிடைப்பதுமில்லை. செங்கல் அறுப்பதற்கு அழைத்து வந்துவிட்ட ஏஜென்டு களை தொடர்பு கொண்டு உதவி கேட்டால், அவர் கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. அதேபோல், செங்கல் உரிமையாளரும் எங்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இதைவிடவும் கொடுமையாக, கடனை அடைத்துவிட்டுதான் இங்கிருந்து நீங்க போகமுடியும் என்கிறார்.
ஏற்கனவே நாங்க வாங்கிய கடன், எங்களை இங்கு கொண்டுவந்து விட்ட ஏஜெண்டுகள் வாங்கிய கடனை அடைக்கவே கொத்தடிமைகளாக இருந்து மாடாக உழைக்கிறோம். இப்போது வேலையும் இல்லாமல் தினம் தினம் செத்து மடியிறோம். இந்த வீடியோவை பார்க்கும் யாராவது எங்க ஊர் எம்.எல்.ஏ விற்கும், கலெக்டருக்கும் தகவல் கொடுத்து எப்படியாவது நாங்க ஊருக்கு வர ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கெஞ்சி, கதறுகின்றனர்.
கேரளாவில் சிக்கித்தவிக்கும் செங்கல் சூளை தொழிலாளர்களான எடமணல் பகுதியை சேர்ந்த எழிலரசியிடமும், குமார் என்வரிடமும் நாம் ஆறுதல் கூறி விசாரித்தபோது, ""தமிழகத்தில் பருவமழை காலத்தில் இந்தப் பகுதிக்கு நாங்கள் தொடர்ந்து கல் அறுக்கும் வேலைக்கு வருவது வழக்கம். எடமணல், வானகிரி, மேலையூர், திருவெண்காடு, பெருந்தோட்டம், மங்கை மடம், திருவாலி, வருஷபத்து, திருநகரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த முப்பது குடும்பங்களைச் சேர்ந்த அறுபது பேர் இங்கு சிக்கி தவிக்கிறோம். கொரோ னாவால் இரண்டு மாதமாகவே வேலை இல்லாமல் போனதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவிட்டோம். எங்களுக்கு உதவ இங்க யாருமே முன்வரல. பசியாலேயே பாதி உசுறு போயிடும் போலிருக்கு'' என்றார்கள் வேதனையுடன்.
இது குறித்து சீர்காழி எம்.எல்.ஏ பாரதியிடம் நாம் பேசியபோது, ""முதற்கட்டமாக அவர்கள் யார், யார் என விசாரித்து அவர்களது குடும்பங் களுக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளேன். அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசியிருக்கிறேன். அவர்களை விரைவில் மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரும் முயற்சி செய்துவரு கிறேன். உங்களிடம் இருந்து எனது கவனத்திற்கு வந்த அடுத்த நொடியில் இருந்து மீட்கும் வேலையை துவங்கிவிட்டேன்'' என்றார் ஆர்வமாக.
இதற்கு இடையில் கேரளாவில் இருந்து நமக்கு கிடைத்த வீடியோவை, ஆட்சியாளர்களுக்கு அனுப்பியதோடு சமூக ஆர்வலர்கள் வாட்ஸ் அப் குழுக்களிலும் நாம் பதிவேற்றம் செய்திருந்தோம். அந்த வகையில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாதிரியாரும், சமூக ஆர்வலருமான வெற்றிச்செல்வி சித்தார்த்தன், கேரளாவில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கொடுத்திருப்பதோடு மீட்கும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ‘கடற்கரை ஓரம் உள்ள இந்தப்பகுதி ஒருகாலத்தில் முப்போகம் விளைந்த பகுதிதான். தற்போது சூழலியலால் சாகுபடி இல்லாமல் இருக்கிறது. ஆகவே, இப்பகுதி மக்கள் பிழைப்பு தேடி வேறு மாநிலங்களுக்கு போகிறார்கள். அப்படி போகும் மக்கள், கொத்தடிமைகளாகவும் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படி சிக்கித்தவிக்கும் போதெல் லாம் எங்களைப்போன்றோர் மீட்டு வருகின்றார் கள். தற்போது, கொரோனா கொடுமையிலும் சிக்கியுள்ளோரை மாவட்ட ஆட்சியர், சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி உள்ளிட்டவர்களின் உதவியோடு எங்களது தொண்டு நிறுவனத்தின் மூலம் மீட்டுவரும் முயற்சியில் இருந்துவருகிறோம்'' என்கிறார் நம்பிக்கையுடன்.
மாவட்ட ஆட்சியர் கருண்நாய ரோ, ""கேரளாவில் உள்ள அதிகாரி களிடம் பேசியுள்ளேன். அவர்களை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வந்துவிடுவோம்,"" என்கிறார் உறுதி யுடன்.
-க.செல்வகுமார்