டமாநிலத்தவர் தமிழகத்தில் அடிமட்டத் தொழிலாளர்களாக கொத் தடிமையாக பணியாற்றுகிறார் கள் என்கிற பிம்பம் கட்டமைக் கப்பட்டுள்ளது. ஆனால், உண் மை நிலை என்ன தெரியுமா? தமிழகத்தின் தொழில்துறையை தமிழர்களிடமிருந்து வட மாநிலத்தவர்கள் அபகரித்து வருகின்றனர் என்கிற எச்சரிக்கை மணியை அடிக்கின்றனர் தமிழக வியாபாரிகள்.

இந்துக் கடவுள்களை விமர்சித்து பேசியதால், "கோவை காரப்பன் சில்க்ஸ் கடையில் இந்துக்கள் யாரும் பொருட்கள் வாங்கக்கூடாது' என்றார் பா.ஜ.க. தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா. இதனால் சர்ச்சை எழுந்தது. "இந்துக்கள் இந்துக் கடையில் தான் பொருள் வாங்கவேண்டும், முஸ் லிம்கள் முஸ்லிம் கடையில்தான் பொருள் வாங்கவேண்டும், கிறிஸ் துவர்கள் கிறிஸ்துவ கடையில் இருந்துதான் பொருள் வாங்கவேண்டும் என்றால் என்னவாவது?' என கேள்வி எழுப்பினர் வியாபாரிகள் பலரும்.

nnஎச்.ராஜா சொன்னதுக்கு போட்டியாக தமிழகத்தில் தமிழர்கள் கடையில் மட்டுமே தமிழர்கள் பொருள் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள் வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என எச்சரிக்கிறார்கள் தமிழக வியாபாரிகள். ""நாங்கள் இப்படி எச்சரிக்கை விடுப்பதற்கு, வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணம்'' என்று சொல்கிறார்கள். அவர்கள் மேலும், ""திருவண்ணாமலை என்கிற சிறு நகரத்திலேயே நீங்கள் விசாரியுங்கள். அதன் விபரீதம் புரியும்'' எனச் சொல்கிறார்கள்.

திருவண்ணாமலை நகர வர்த்தக சங்கத்தில் உள்ள ஒருவரிடம் இதுபற்றி பேசியபோது, ‘’""ஆட்டோ மொபைல்ஸ், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் மார்க்கெட், டைல்ஸ் - மார்பிள், ஸ்டேஷனரி பொருட்கள், செல்போன் உதிரிப் பாகங்கள் விற்பனை, ஜவுளி என எல்லாவற்றிலும் வடஇந்தியர்களின் (ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம்) ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. திருவண்ணாமலையில் மட்டும் வடஇந்திய வியாபாரிகள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளார்கள். இவர்கள் சாதாரண சின்னச் சின்ன வியாபாரிகள் இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் மொத்த வியாபாரிகள். இவர்களிட மிருந்துதான் தமிழர்கள் வைத்துள்ள சின்னக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை சரக்கு வாங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மெயின் ரோடுகளில் கடைகளை வைப்பதில்லை. அதனால் இவர்களின் ஆதிக்கம் வெளியே தெரிவதில்லை. சின்னச் சின்ன தெருக்களில் தான் இவர்கள் கடை வைத்துள்ளார்கள், குடோன்களை நகருக்கு வெளியே வைத்துள்ளார்கள். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரேயுள்ள எல்.ஜி.ஜி.எஸ். நகரின் தெருக்களுக்குள் நுழைந்து பாருங்கள் எல்லாமே வடஇந்தியர்களின் கடைகள். வனத்துறை அலுவலகம் எதிரேயுள்ள தெருக்கள், மாந்தோப்பு பகுதி போன்றவை அவர்களின் குடியிருப்பு பகுதிகள். ஒருகாலத்தில் பெரிய கோபுரம் எதிரேயுள்ள அய்யங்குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் அய்யங்கார், அய்யர், சிவாச்சாரியர்கள் குடியிருந்தனர். அதனாலயே அது ஐய்யங்கார் தெரு என அழைக்கப்பட்டு வருகிறது. இப்போது பெயர் மாற்றி மார்வாடிகள் தெருவாக வைக்க வேண்டும் என்கிற அளவுக்கு அந்த வீடுகளை மார்வாடிகள் வாங்கி விட்டார்கள்''’என்றார்.

Advertisment

வடஇந்தியர்கள் ஆதிக்கம் பற்றி திருவண்ணாமலை சூர்யா டிஜிட்டல் உரிமையாளர் காதர்ஷாவிடம் பேசியபோது, ""நகரில் நம்ம ஆட்கள் ஒரு கடையை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அட்வான்ஸ் தந்து மாதம் 15 ஆயிரம் வரை வாடகை தந்து கடை வைத் திருந்தனர். இப்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கு 10 அடி கடைக்கே 10 லட்சம் அட்வான்ஸ், 30 ஆயிரம் வாடகை எனச்சொன்னதும் இடத்தின் உரிமையாளர்கள் நம்ம ஆட்களை காலி செய்யச்சொல்லி வடஇந்திய வியாபாரி களுக்கு இடங்களை தந்துவிடுகிறார்கள். பெரியார் சிலை எதிரேயுள்ள தெருவில் 1600 சதுர அடியுள்ள காலியிடத்தை பார்த்த ஒரு மார்வாடி, "30 லட்சம் அட்வான்ஸ் தருகிறேன். இந்த இடத்தின் கீழே நான் நீளமாக ஒரே கடையாக கட்டிக்கொள்கிறேன். மேலே உங்களுக்கு வீடு கட்டித் தருகிறேன், மாதம் 35 ஆயிரம் வாடகை தந்துவிடுகிறேன்' எனச்சொல்ல, அந்த இடத்தின் உரிமையாளர் மலைத்துப்போய் விட்டார். இப்படி ஒரு டீலிங் வந்தால் யார்தான் மயங்கமாட்டார்கள். இப்படி விலைகளை தாறுமாறாக ஏற்றி கடைகளை வைத்து, நம்மவர்கள் தொழில் செய்ய முடியாமல் நசுக்குகிறார்கள்'' என்றார் விரக்தியுடன்.

இந்தளவுக்கு இவர்கள் அட் வான்ஸ் தந்து, வாடகை தந்து தொழிலில் லாபம் சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்வியை ஒரு வியாபாரியிடம் முன்வைத்தபோது, ""அவுங்க விக்கறது பெரும்பாலும் டி அயிட்டம். (டி என்பது டூப்ளிகேட்). சைனா பொருட்களையும், மும்பையில் கம்பெனி பொருட்களை போல் உற்பத்தியாகும் டூப்ளிகேட் பொருட்களையும் கொண்டுவந்து இங்கு விற்கிறார்கள். நாங்கள் 220 ரூபாய்க்கு ஒரு கம்பெனி டியூப் லைட்டை விற்பனை செய்தால் அவர்கள் அதே கம்பெனி பெயரிலான டூப்ளிக்கேட் லைட்டை 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். தரம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கே மக்கள் செல் கிறார்கள். இப்படிப்பட்ட வியாபாரத்தால் நம்ம வியாபாரிகளால் அவர் களுடன் போட்டி போட முடியாமல் கடைகளை மூடிவிடும் நிலை இருக் கிறது''’என்கிறார் வேத னையுடன்.

""திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் ஒன்பது சாலையிலும் சில மார்வாடிகள் 40 ஏக்கர், 50 ஏக்கர்ன்னு வாங்கி வேலி போட்டு வைத்துள் ளார்கள். நம்மாளுங் களோட மறைமுக பார்ட்னர்களாக இருந்து கொண்டு அந்த இடங் களை பிளாட் போட்டு விற்பனை செய்கிறார்கள். ஒரு மார்வாடி தொழி லதிபர் இப்படி இடங்கள் வாங்கிப் போடுவதில் கில்லாடியா இருக்கிறார். அவர் தரப்பில் மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது''’என மலைப்பை கூட்டுகிறார் ஒரு ரியல் எஸ்டே அதிபர்.

Advertisment

அவர் மேலும், ""தமிழர்களின் தொழிலை ஆக்கிரமித்து, நிலத்தையும் வளைத்துப்போட்டு வருகிறார்கள்''’என்கிறார்.

நான்கு தலை முறைக்கு முன்பு திரு வண்ணாமலை வந்த மார்வாடிகள் குழு, இங்கு முதலில் தொடங்கியது நகை விற்பனை தொழில் தான். அதுபற்றி நகைக் கடை வைத்துள்ள ஒருவ ரிடம் கேட்டபோது, ""40 வருடங்களுக்கு முன்பு நம்ம ஆட்கள் ஒரு நகையை செய்து தருகிறார்கள் என்றால் அதன் தரம் 65 டச், 70 டச் தாண்டாது. நகை அடகு கடை வைத்த மார்வாடிகள் பின்னர் தங்க நகை வியாபாரத்தில் இறங்கியபோது, 85 டச் அளவுக்கு குறையாமல் தரமாக தரத்துவங்கினார்கள். இதனால் மக்கள் nnஅவர்களை நம்பினார்கள். கடந்த 40 வருடங்களில் திருவண்ணாமலை தங்கநகை மார்க்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிட்டார்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் இவர்களுக்கு 60 சொச்சம் நகைக்கடைகள் உள்ளன.

மார்வாடிகள் பில் போடாமல் தொகையில் குறைத்துக்கொடுப்பதுதான் இந்த வளர்ச்சிக்கு காரணம். அவர்களை பில் போட்டு கொடுக்கச் சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம்''…என்று வெடித்தார்.

திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் நீலமூர்த்தியிடம் இது குறித்து பேசியபோது, ""இங்கு தொழில் செய்யும் வடஇந்திய வியாபாரி களிடம் பில் போடும் பழக்கமே கிடையாது. நூறு ரூபாய் முதல் லட்சங்களில் வியாபாரம் செய்தாலும் பில் கிடையாது. அதே நேரத்தில் பொருள் ரிட்டன் கிடையாது. நகைக்கடைகளில் மட்டும் கேட்டால் பில் போடுகிறார்கள். மற்ற வியாபாரத்தில் உள்ள வடஇந்தியர்கள் பில் போடமாட்டார்கள், ஜி.எஸ்.டி. என்றால் இவர்கள் என்னவென நம்மிடம் திருப்பிக் கேட்பார்கள். அந்தளவுக்கு அதிகாரிகளை மாதாமாதம் தேடிச்சென்று கவனித்துவிட்டு வந்துவிடுவார்கள். தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற பான்மசாலா பொருட்களை திருவண்ணாமலையில் கொண்டு வந்தும், இங்கிருந்து சின்னச் சின்ன நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்கிறார்கள் சில வடஇந்திய வியாபாரிகள். அவர்கள் பொருட்களோடு சிக்கினாலும் வெளியேவரும் வழியை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள்''’என்கிறார்.

""கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளாட்சி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு பொருட்கள் சப்ளை செய்ததுபோல் போலி பில்களை தருவது, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான எலக்ட்ரிகல் -எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சப்ளை செய்கிறது திருவண்ணாமலையில் ஒரு பிரபல வடமாநிலத் தவரின் நிறுவனம். அதில் பாதிக்கும் மேற்பட்டவை டி அய்ட்டம் என்றாலும் அதிகாரிகளுக்கு சரியாக பங்கு போய்விடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு சின்ன கடையை தொடங்கிய அவர்களுக்கு இப்போது நகரத்தில் 3 இடங்களில் பெரிய பெரிய கடை. அதுவும் சொந்த கட்டிடத்தில். நகரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன''’என்கிறார் அரசியல் பிரமுகர் ஒருவர்.

மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக திருவண்ணாமலையை சேர்ந்த மூன்றெழுத்து இனிஷியல்கார ஜெயின் சமூக தொழிலதிபரை நியமித் துள்ளார் முதல்வர். வடமாநிலத்தவரின் செல்வாக்கு அரசியலிலும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

திருவண்ணாமலை தொகுதியில் 1967-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயராஜ் என்கிற ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக, நகரமன்ற தலைவராக இருந்துள்ளார். பின்பு அவரது மகன் அ.தி.மு.க.வை சேர்ந்த வி.பவன்குமார் நகரமன்ற தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். அதேபோல் நகராட்சி கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுனில்குமார் இருந்துள்ளார். இவர்கள் கட்சி செல்வாக்கில், கட்சி சின்னத்தில் கவுன்சிலராக, சேர்மனாக, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்கள். ஆனால், தற்போது யாரை வெற்றி பெற வைக்கலாம் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு நகரில் வலுவடைந்துள்ளார்கள்.

அ.தி.மு.க.-தி.மு.க. என மாநில கட்சிகளில் பதவிகளை வாங்கியிருந்தாலும், பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளார்கள். நகரின், கட்சியின், சங்கங்களின் முக்கிய நிர்வாகி கள் பணம் மற்றும் பிற உதவிகள் கேட்கும்போது, அதைச் செய்து தங்களது நட்பு வட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியலிலும் தங்களுக்கான பாதுகாப்பை உருவாக்கி வைத் துள்ளார்கள். அதுவே, தொழிலில் இவர்களை எதிர்ப்பவர் களை, நம்ம ஆட்களை கொண்டே பழிவாங்கி தொழிலை காலி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்''’என புலம்பினார் இவர்களால் பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவர்.

மாநிலம் தாண்டி வந்து பாதுகாப்பாக தொழில் தொடங்க வடஇந்தியர்களுக்கான நிதி எப்படி சுலபமாக கிடைக்குது? ’’அவர்களது ஊரில் மிகக்குறைந்த வட்டியில் ஊர் பொது நிதியில் இருந்து கடன் வாங்கிவந்து இங்கு தொழிலை தொடங்குகிறார்கள். மேல்சாதி, கீழ்சாதி என்கிற பேதம் அவர்களிடம் இருந்தாலும், தொழிலில் கொடுக்கல்-–வாங்கல் நன்றாக இருக்கிறது. இந்த ஒற்றுமையே அவர்களை வளரவைக்கிறது''’என்கிறார்கள் அவர்களுடன் நீண்ட வருடங்களாக பழகுபவர்கள்.

திருவண்ணாமலை போன்ற சிறு நகரத்திலேயே வடமாநிலத்தவர்கள் இந்தளவுக்கு வேர்விட்டு, தமிழர்களின் தொழில்களை கபளீகரம் செய்துள்ளார்கள் என்றால், தமிழகத்தின் பெருநகரங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுகிறது.

-து. ராஜா