பிழைப்புக்காகக் கடல் கடந்து சென்றாலும், அங்கேயும் துயரம்தான் காத்திருக்கிறது'’-என்று கண் கலங்குகிறார்கள் பாதிக்கப்பட்ட தமிழர்கள். என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்பத்தின் நிலையை உயர்த்தவேண்டும் என்று, கடன்களை வாங்கிக்கொண்டும் ஏராளமான கனவுகளோடு மலேசியாவுக்குச் சென்றார். சென்ற இடத்தில்தான் தெரிந்தது, போலி ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு ஆபத்தான நெருக்கடியில் தான் சிக்கியிருப்பது. இவரது நிலையை அறிந்த நாம், மலேசியாவில் தவித்துவரும் வேலாயுதத்தை மீட்கவேண்டும் என்று நக்கீரன் சார்பில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை வைத்ததோடு, வேலாயுதத்தின் பரிதாப நிலை குறித்து, நக்கீரன் வீடியோப் பதிவையும் வெளியிட்டது.
இதையொட்டி உடனடியாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு விட்டதால், அதற்கு பதிலாக அவருக்குத் தற்காலிக பாஸ் போர்ட் ( வெள்ளை பாஸ்போர்ட் ) கிடைக்க உடனடி யாக நடவடிக்கை எடுத்தார். சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம் பரம் மூலமும் மத்திய அரசுக்கு அவரை மீட்க வேண்டும் என்று அழுத்தம் போனது. மேலும், மக்கள் பாதை அயலக உதவிக்குழு அமைப் பினரும், மலேசியாவில் உள்ள தன்னார்வலர் களும் நக்கீரன் வீடியோவைப் பார்த்து வேலாயுதத்தை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர்.
நக்கீரனுக்கு அவர்கள் உறுதியளித்தபடியே அயலக உதவிக் குழுவினர் வேலாயுதத்தை மீட்டு, 3 மாதங்கள் வரை அங்கே தங்க இடம் கொடுத்து உணவும் கொடுத்ததுடன், அவரைத் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்திய வம்சாவழித் தமிழரான ரவீந்திரன் அர்சுனன், அவருக்கான விமான டிக்கட் செலவுகளை ஏற்றுக்கொண்டார். மேலும் மலேசிய அரசுக்கு செலுத்த வேண்டிய அபராதத் தொகையைப் பலரும் இணைந்து செலுத்தி னார்கள். இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாக தற்போது, சொந்த ஊருக்குப் பத்திர மாகத் திரும்பி வந்திருக்கிறார் வேலாயுதம்.
இந்த நிலையில் நாம் வேலாயுதத்தை, அவரது வீட்டில் சந்தித்தோம். ""என்னை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்த நக்கீரனுக்கு கோடானு கோடி நன்றிகள்''’என்று நெகிழ்ந்தவர், தனது கதையையும் அங்குள்ள நிலையையும் விவரிக்கத் தொடங்கியவர்...
""2018 ஆம் ஆண்டு, மதுரை அமிரா டிராவல்ஸ் சம்சுதீனிடம் ரூ. 62,000 பணம் கட்டி, மலேசியாவுக்குப் போனேன். எனக்கு கார்பெண்டர் வேலை என்றும் மாதம் 1500 வெள்ளிகள் சம்பளமாகக் கிடைக்கும் என்றும் சொல்லி அவர் என்னை அங்கே அனுப்பி வைத்தார். மலேசியா சிலாங்கூரில் மசாலா வீல்ஸ் என்ற ஓட்டலில் எனக்கு வேலை. மாதம் 1200 வெள்ளி தான் சம்பளம் என்று அழைத்துச் சென்று, இரவு பகலாகப் பாத்திரம் கழுவச் சொன்னார்கள். பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண் டார்கள். சில மாதங்கள் சம்பளம் கிடைத்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சம் தான் கொடுத்தார்கள். என்னை அனுப்பிய முகவர் சம்சுதீனிடம் கேட்டால், "போகப் போகச் சரியாகும்' என்றார். ஆனால் என்னைப் பணம் வாங்கிக்கொண்டு அவர் தங்களிடம் விற்பனை செய்துவிட்டதாக ஓட்டல் உரிமையாளர் சொன்னார்.
2020 மார்ச் மாதம் என்னோடு வேலை பார்த்த நாகர்கோயிலைச் சேர்ந்த மைக்கேல் என்ற இளைஞருக்கு ஓரினச்சேர்க்கை மூலம் டார்ச்சர் கொடுத்ததோடு, சம்பளம் கேட்டதால் எங்கள் கண்முன்னே அவரை பெட்ரோல் ஊற்றி இடுப்புக்குக் கீழே எரித்துவிட்டார்கள். சிகிச் சைக்கும் கொண்டு போகவில்லை. இதை நான் தமிழ்நாட்டில் உள்ள என் நண்பர்களுக்கு சொல்லி மைக்கேலை மீட்க நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள் என்றேன். இதை அந்த ஓட்டல் நிர்வாகி ரவி கேட்டுவிட்டார். அதனால் என்னையும் எரிக்க ஒரு தனி அறையில் சிறை வைத்து பூட்டிவிட்டார்கள். என் பாஸ் போர்ட்டையும் தீ வைத்து எரித்தார்கள். பாதி எரிந்துவிட்டது. இதற்குமேல் இங்கே இருந்தால் நம்மையும் எரித்து கொன்றுவிடுவார்கள் என்று பாத்ரூம் போவதாகச் சொல்லி, அங்கிருந்து தப்பினேன்.
அந்த நகரில் இருந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கால்போன போக்கில் நடந்தேன் 350 கி.மீ நடந்து அடுத்த மாநிலத்திற்கு வந்துவிட்டேன். பசி தாங்க முடியவில்லை. ஊருக்கு தகவல் சொல்லக்கூட செல்போன் இல்லை. ஞாபகம் இருந்த எனது நண்பர் விஜயராஜ் எண்ணுக்கு ஓசி செல்போனில் தகவல் கொடுத்துவிட்டு, மறைந்து மறைந்து வாழ்ந்தேன். கிடைக்கும் வேலையை செய்வது சாப்பிடுவது என்று இருந்தேன். அந்த நேரத்தில் என்னைப் பற்றி நக்கீரன் வீடியோ வெளியிட்டதைப் பார்த்து, மலேசியாவில் பலரும் எனக்கு உதவிகள் செய்ய முன்வந்தாங்க. நக்கீரன் இல்லை என்றால் என் நிலையை நினைத் துக்கூட பார்க்க முடியவில்லை. பல இடையூறுகளைக் கடந்து 30-ந் தேதி ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்''’ என்றவர்... கொஞ்சம் நிதானித்துவிட்டு...
""என்னைப்போல, போலி முகவர்களை நம்பி மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப் பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறை களிலும், கொத்தடிமைகளாகவும், மனநிலை பாதிக்கப்பட்டு தெருக்களிலும் கிடக்கிறார்கள். பலர் இறந்தும் அவர்களை தூக்கி அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் கிடக்கிறார்கள். மலேசியா அழகான நாடு. சட்ட திட்டங்களும் நன்றாக உள்ளது. முறையான ஆவணங்களும், அனுமதி பெற்றுச் சென்றால் அவர்களை அந்த நாடு பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முகவர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து டூரிஸ்ட் விசா மூலம் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணம் வாங்கிக்கொண்டு விற்றுவிட்டு வந்து விடுகிறார்கள். போனவுடனேயே பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அங்கிருந்து வெளியே செல்லமுடியாது. சம்பளமும் கிடைப்பதில்லை. மலேசியா அரசாங்கத்திடமும் போகமுடியாது.
இப்படியே அல்லல்பட்டு அங்கிருந்து அடிபட்டு உடைபட்டு வெளியேறினால் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக மலேசிய போலீசார் கைது செய்து சங்கிலியால் கட்டி இழுத்துச்சென்று சிறையில் அடைத்து விடுவார்கள். ஊருக்குத் தெரிந்தால் குடும் பத்தில் உள்ளவர்கள் பதறுவார்களே என்று உள்ளுக்குள்ளேயே எல்லாவற்றை யும் புதைத்துக் கொண்டு 8, 9 மாதம் சிறைவாசம் முடியும்போது அபராதம் கட்டச் சொல்கிறார்கள். அதைக்கட்ட எங்கே போவது? இப்படியே ஆயி ரக்கணக்கான வர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றுகிறார்கள். இங்கே அவர்களின் உறவினர்கள் பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்க... அவர்களோ மனநிலை பாதித்தவர் களாகவோ, அல்லது பிணவறையில் சடலங்களாகவோ கிடக்கிற கொடுமைகளை என்னவென்று சொல்வது? இதற்கெல்லாம் உடனே தீர்வு காணவேண்டும். இதற்கு நம் பிரதமர் மோடி எங்கள் ஆட்களை பத்திரமாக அனுப்பி வையுங்கள் என்று, ஒரே ஒரு அறிவிப்பு வெளியிட்டால் போதும், அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் அதெல்லாம் நடக்குமா?'' என்கிறார் ஏக்கத்துடன்.
இதுகுறித்து மலேசியாவில் இருக்கும் உதவும் நெஞ்சங்களாகத் திகழும் சிலரிடம் விசாரித்த போது... ""இந்தியாவில் இருந்து மலேசியா புறப் படும்போதே ஆவணங்களை சரி பார்த்து இந்திய அரசு அனுப்பினால், இதுபோல நடக்க வாய்ப்பு இல்லை. மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டுகொள்ளவ தில்லை''’என்கிறார்கள் ஆதங்கமாய்.
வெளிநாட்டு வேலை என்ற பெயரில் இது போன்ற ’மோசடி விபத்தில்’ சிக்கி யிருக்கும் அப்பாவித் தமிழர்களை மீட்க, இங்குள்ள அரசுகள் முன்வருமா?
-இரா.பகத்சிங்
______________
குடிசைக்குப் பதில் வீடு!
வேலாயுதம் வெளிநாட்டில் இருந்த நிலையில் இங்கே இருந்த அவரது வீடு, கஜா புயலில் முழுதும் சேதமாகிவிட்டது. அதனால் அவர் குடும்பத்தினர் குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். அரசுத் திட்டத்தில் அவருக்கு வீடு வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் நாம் கோரிக்கை வைக்க... "விரைவில் அதற்கு ஏற்பாடு செய்வதாக' அவர் உறுதியளித்தார். அதேபோல் போலி முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் கோரிக்கை மனுகொடுத்திருக்கிறார் வேலாயுதம்.
-செம்பருத்தி