"எங்களால இங்க இருக்க முடியல அய்யா. ஒவ்வொரு நாளும் மனவேதனையி லேயே இருக்கிறோம். வெளிய கூட விடமாட்டிக்கிறாங்க. போன் பேசுனதுக்காக எங்க அக்காவை செருப்பால அடிச்சு ரூம்ல பூட்டி வச்சுட்டங்கா அய்யா. இந்த ஊரு ரொம்ப மோசமான ஊரு. ஏதாவதுனா சாவடிச்சுடுவாங்களாம், பயமா இருக்கு. யாராச்சும் உதவி பண்ணுங்க... யாராச்சும் காப்பாத்துங்கய்யா...''’என்று ஒரு பெண், தன் அக்காவையும் தன்னையும் கொலை செய்யப் போகிறார்கள் என்று கதறியழும் காணொலி, சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவ... பலரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் நெஞ்சங்களின் உதவியோடு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ff

"தனக்கு நடந்த கொடுமை, இனி யாருக்கும் நடக்கக்கூடாது' என தனது அனுபவங்களை நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டார் வடிவுக்கரசி. “என் பேரு வடிவுக்கரசி. நான் திருவொற்றியூர் டோல்கேட் பகுதில இருக்கேன். நான், என் அக்கா வள்ளி, வேளாங்கண்ணி மூணுபேரும் குடும்ப வறுமை காரணமா பெஹ்ரின்ல வீட்டு வேலைக்குப் போனோம். அப்துல்லாஹ் ட்ராவல் ஏஜென்சியின் ஷேக்முகமது மூலமாத்தான் நாங்க போனோம். போறதுக்கு முன்னாடி, "மாசம் 30,000 ரூபாய் சம்பளம், இணையதள சேவை (WIFI) இலவசம், தரமான தங்கும் இடம், 8 மணி நேரம் மட்டும்தான் வேலை, வேலையில்லாத நேரங்களில் நீங்கள் வெளியில் செல்லலாம்' என்று கூறினார்கள். உள்ளூரில் வேலை செய்தால் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது என்று கடல்கடந்து செல்ல நாங்கள் முடிவெடுத் தோம்.

ஆனா அந்த ஏஜென்ட் ஷேக்முகமது சொன்னதும், அங்க நடத்தினதும் முற்றிலுமா வேறயா இருந்துச்சு. 16 மணி நேரம் வேலை வாங்குனாங்க. எங்க பாஸ்போர்ட், செல்போன் எல்லாத்தையும் பிடுங்கிட்டாங்க. தினமும் காலையில் ஒரு டீ, மதியம் வெறும் ரொட்டி. அதுவும் வந்தால்தான் வரும். இரவு மட்டும்தான் சாப்பாடு சாப்பிடு வோம். அதும் அந்த வீட்டு உரிமையாளர் சாப்பிட்டு வைச்ச மீதிதான் தருவாங்க. எங்களை அனுப்பிய ஏஜென்ட்கிட்ட, "எங்களால இங்க இருக்கமுடியல. எங்களை திரும்ப அனுப் பிடுங்க'னு கேட்டோம்.. ஆனா அப்துல்லாஹ் "இன்னும் ஒரு 3 மாசம் வேலை செய்ங்க' என்று கூறினார். நாங்களும் பல்லைக் கடித்துக்கொண்டு வேலை செய்தோம்''’என்று கூறி அழத்தொடங்கினார் .

வடிவுக்கரசியால் பேச முடியாததைக் கண்டு வள்ளி பேசத்தொடங்கினார். "நீங்க வாழும்போதே நரகத்தைப் பார்த்ததுண்டா. நாங்க பார்த்துட்டு வந்துருக்கோம். அந்த ஊருல யாருக்குமே மனசாட்சியே இல்ல. ஒருவேள சோறுகூட போடல சார். எங்க புள்ளைங்ககிட்ட கூட பேச முடியலை. ரொம்ப கீழ்த்தரமா நடத்தினாங்க. "நாங்க இனி வேலை செய்யமாட்டோம்' என்று வீட்டு உரிமையாளர் கிட்ட சொன்னா, "உங்கள அந்த ஏஜென்ட் 2 லட்சத்துக்கு வித்துட்டாரு. 2 லட்சம் குடுத்தா நீங்க போகலாம்'னு சைகையில் சொன்னார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம்.

ff

Advertisment

என்னை அடிச்சு ரூமில் போட்டதும், என் தங்கச்சி வடிவுக்கரசி பயந்து செல் போன்ல வீடியோ பேசி அனுப்பியிருக்கா. அந்த வீடியோ சென்னைல இருக்க சமூகஆர்வலர் கன்யா பாபு பார்வைக்குப் போச்சு. உடனே அவுங்க பெஹ்ரின்ல இருக்குற "அன்னை தமிழ் மன்ற'த்தின் நிர்வாகி செந்தில் மூலம் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார். காவல் நிலையத்தில்கூட எங்களை கேவலமாத்தான் நடத்தினாங்க. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. ஆண்டவன் புண்ணியத் தில இப்போ நாங்க எங்க வீட்டுக்கு வந்திட்டோம். எங்களுக்கு உதவிபண்ணுன எல்லா உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி''’என்று கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலரும், எய்ம்ஸ் இணை இயக்குனருமான கன்யா பாபுவிடம் கேட்டோம். "நான் வடிவுக்கரசியின் காணொலியைப் பார்த்தேன்.

அதே நேரத்தில் வடிவுக்கரசியின் குடும்பத்தினர் துணை ஆணையர் அலுவகத்தில் புகார் கொடுத்தார்கள். துணை ஆணையர் உதவியோடு இங்கிருக்கும் அந்த ஏஜென்சி நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்தோம். பிறகு பெஹ்ரின் நாட்டிலிருக்கும் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தோம் பலதரப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் இவர்களை சொந்த நாட்டிற்கு மீட்டுவந்தோம்..

போலியான ஏஜென்சிகள் படிப்பறிவு இல்லாத, சாதாரண ஏழை எளிய மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இவர்களை பல நாடுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். பல நாடுகள் வழியாக பயணம் செய்துதான் இவர்கள் குறிப்பிட்ட அந்த நாட்டிற்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் அரசாங்கப் பதிவேட்டில் இவர்கள் பற்றிய தகவல்கள் கிடைப்பதில்லை. இவர்களை மீட்பது பெரிய சிக்கலாக இருக்கிறது''’என்றார் வருத்தமாக.

பல போராட்டங்களுக்குப் பிறகு வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி நாடு திரும்பிவிட்டார்கள். இன்னும் பல நாடுகளில் போலி முகவர்களை நம்பி வேலைக்குச் சென்ற அப்பாவித் தொழிலாளர்கள் பலர், பல லட்சத்திற்கு விற்கப்படுவது, பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.