"அரசியலில் நேரடியாக ஈடுபடும் அளவுக்கு எனது உடல்நிலை ஒத்துழைக்காததால் விலகுகிறேன். இதற்காக தமிழ் மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். அரசியலில் ஈடுபடாவிட்டாலும் மக்கள் பணி தொடரும்''’ என்ற அறிக்கை மூலம் உண்மையை நேர்மையாக ஒத்துக் கொண்டவர் ரஜினி என்று அவரை இத்தனை காலம் எதிர்த்தவர்களும் பாராட்டுகிறார்கள்.
மாற்றுக் கட்சிகளில் இணைய விரும்புகிறவர்கள் மன்றப் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டு இணையலாம் என்கிற அளவுக்கு ரூட்டும் சொல்லிவிட்டது ரஜினி தரப்பு. 2021 தீபாவளிக்கு "அண்ணாத்த' படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்புத் தரப்பு நினைப்பதால், மிக முக்கிய காட்சிகளை மட்டும் பாதுகாப் புடன் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி, ""என்னை உலகிற்கு அடையாளம் காட்டியவர் தலைவர் ரஜினி. அவர் அரசியலுக்கு வரமுடியாதது துரதிர்ஷ்ட வசமானது. ஆனாலும் அவர் நினைத்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய கட்சியைத் தொடங்குவேன். அதே நேரம் அவரின் படத்தையோ மன்றக் கொடியையையோ பயன்படுத்தமாட்டேன்'' என்றார்.
ஜன.29-ஆம் தேதி, தனது தந்தை பூரணநலம் பெற்று, மீண்டும் புத்துணர்ச்சியுடன் வரவேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அதிகாலை 5 மணிக்குச் சென்றார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. அதைக்கூட அரசியல் பரபரப்பாக்க சிலர் முயன்றனர்.
இந்நிலையில், பிப்.02-ஆம் தேதி, ர.ம.ம.வின் மேற்பார்வையாளராக இருந்த தமிழருவி மணியனிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அதில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் காந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். காலச் சூழல் ரஜினியின் அரசியல் கனவை நனவாக்க இடம்தராத நிலையில், இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறாரே தவிர, எப்போதும் அரசியலில் அடியெ டுத்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கவில்லை. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் இணைந்து பயணிக்கும்’ என்றெல்லாம் ரஜினியை உசுப்பேற்றிய தமிழருவி மணியனின் அறிக்கையின் ஒருபகுதியில், “ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சரண டைந்திருப்பது கண்டு மனம் வருந்துகிறேன்’’எனச் சொல்லி தி.மு.க.மீது இருக்கும் தீராத கடுப்பையும் காண்பித்திருக்கிறார் தமிழருவி மணியன்.
ரஜினி மன்ற நிர்வாகிகளும் உண்மையான ரசிகர்களும், ""தலைவரின் உடல் நிலைதான் எங்களுக்கு முக்கியம். இவரோட அரசியல் ஆசைக்கு தலைவர்தான் கிடைத்தாரா? சாகும் வரை அரசியல் பேசமாட்டேன்னு சொன்ன தமிழருவி மணியனுக்கு வாய் சுத்தம் வேணாமா?'' என்கிறார்கள் கொதிப்புடன்.