ளிச்சேர்க்கை முடிந்து உதிர்ந்துபோன இலையை மரம் நினைவு கூர்வதில்லை. இறந்த பறவை எதற்கும் காட்டுக்குள் இரங்கல் தீர்மானம் ஏதுமில்லை. யானையோ புலியோ சிங்கமோ இறந்தாலும் ஆண்டு நினைவுகள் அனுசரிக்கப்படுவதில்லை. மனிதன் மட்டும்தான் இறந்த பிறகும் நினைக்கப்படுகிறான். அதிலும் எல்லா மனிதர்களும் எல்லாக் காலங்களிலும் நினைக்கப்படுவதில்லை. ஈமத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே பல மனிதர்கள் உலர்ந்துபோகிறார்கள். சில மனிதர்கள் மரித்தநாளில் மட்டும்தான் நினைக்கப்படுகிறார்கள்; நிகழ்கால நிம்மதிக்காகவே மரித்த சில மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள். எவனொருவனின் வாழ்வும் வாக்கும், செயலும் பொருளும் மனிதக்கூட்டத்தின் தற்காலத் தருணத்திற்கும் தேவைப்படு கின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனிதன் நினைக்கப்படுகிறான். கல்லறை யில் அவன் உயிரோடிருக்கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார்; இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.

b

பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்துகொள்வது?

அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?

Advertisment

வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?

உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக்கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து, அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக் காட்டி, சுயமரியாதை ஆடை சூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?

400 கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4 கோடி மக்களின் மொழியில் பேசி, பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?

Advertisment

எழுத்து -சொல் -பொருள் -யாப்பு -அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?

192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் -மதம் -சாதி -விதி -மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழியாகிய அறிவாளி என்பதா?

இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை. பெரியார் எனில் “பிராமண எதிர்ப்பு’’ மற்றும் “கடவுள் மறுப்பு’’ என்று கருதுகிறவர்கள் அவரைக் கண்ணை மூடிக் கண்டவர்கள் என்றே கருதவேண்டியிருக்கிறது. யானை அசைவம் என்று அதன் தோற்றம்கண்டு முடிவு கட்டுகிறவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. மனித நேசம்தான் பெரியாரின் இலக்கு; பகுத்தறிவு தான் அவர் பாதை; சுயமரியாதைதான் வாகனம்; சமத்துவம்தான் அவர் சக்கரத்தின் அச்சு.

5-1-1953 அன்று பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதியை எழுத்து மாறாமல் பதிவு செய்கிறேன்:

""பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகமும் நானும் சொல்லுவதெல்லாம் விரும்புவதெல்லாம் நாங்களும் கொஞ்சம்- வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மை யோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்''

பெரியாரின் இந்த வாக்குமூலத்தில் ‘நாங்களும் கொஞ்சம்’ என்ற சொல்லாட்சி வலிமிக்கது; வாஞ்சை மிக்கது மற்றும் அவரது மனித நேசத்துக்கு மாறாத சாட்சி சொல்வது.

ஒரு மனிதன் கைநீட்டிப் பேசுகிறான்; ஒரு மனிதன் கைகட்டிப் பேசுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் “பிராமணன்; இன்னொருவன் “சூத்திரன்.

மாடத்தில் ஒருவனுக்குக் காலுக்கும் தலையணை. மண்குடிசையில் ஒருவனுக்குக் கையே தலையணை. உற்றுப்பார்த்தால் ஒருவன் செல்வந் தன்; இன்னொருவன் வறியவன்.

p

ஒருவன் அழுக்குப்படாமல் பொருளீட்டு கிறான்; இன்னொருவன் புழுதியிலும் சகதியிலும் பொருள் தேடுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் கற்றவன்; இன்னொருவன் கல்லாதவன். ஓர் உடல் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறது. இன்னோர் உடல் கட்டுண்டு கிடக்கிறது. உற்றுப்பார்த்தால் ஓர் உடல் ஆண்; இன்னோர் உடல் பெண்.

பிராமணன்-சூத்திரன், ஏழை-பணக்காரன், கற்றவன்-கல்லாதவன், ஆண்-பெண்’’ ஆகிய பேதங் களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற் றத்திற்கும் தடையாயின், இவற்றைக் கட்டமைத்த -கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப் பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர்தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால் தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த ஒரு சமூகத் துறவிதான் பெரியார்.

இந்துமதம் -கடவுள் என்ற இரண்டையும் தாண்டி ஒருவர் சிந்திப்பது அரிது; மற்றும் பெரிதினும் பெரிது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், கருத்துக்களுக்கான சகல சர்வாதிகாரமும், பதவி களை எதிர்பாராத பற்றறுப்பும், எதையும் எதிர் கொள்ளும் iஇதய சுத்தியும், பிரபஞ்சத்தைப் பிழிந்து பருகிய பேரறிவும், கருகிக்கிடக்கும் மனிதக்கூட்டத் தின்மீது கண்ணீர் சொரியும் கருணையும் கூடிப் பெற்ற ஒருவருக்கே அந்த வலிமை என்பது வரப்பெறும்.

இந்துமதம் அவருக்கென்ன எதிரியா? கடவுளென்ன வைரியா? எவன் இந்த மண்ணுக் குரியவனோ, எவன் உழைக்கும் வெளியில் கதிர் வெப்பம் தாங்கிக் கறுத்துக் கிடக்கிறவனோ, எவன் உற்பத்தியில் நேரடியாய் உதிரம் கொட்டுகிறவனோ அவன் “"சூத்திரன்'’ என்றும் "தாசிமகன்'’என்றும் "அடிமை'’என்றும் இழிவு செய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். கடவுளோ, மதமோ அந்த இழிவை நியாயப்படுத்தும் கேடயமாக்கப்படும் போது அந்தக் கேடயங்களையே நொறுக்க முற்பட்டார்.

மனிதக் கூட்டத்தை விஞ்ஞானம் பிரிப்பதற்கும் மதம் பிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. விஞ் ஞானம் திராவிட இனம், ஆரிய இனம், மங்கோலிய இனம், காக்கேசிய இனம் என்று கபால அடிப்படை யில் மனிதர்களை நான்காகப் பிரிக்கிறது. ஆனால் மதமோ பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று கடவுள் அடிப்படையில் நான்காகப் பிரிக் கிறது. இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களை, மண்ணுரிமை பறிக்கப்பட்டவர்களை, கல்வி மறுக்கப் பட்டவர்களை, தூரத்தில் நிறுத்தித் தனக்குத் தொண்டுசெய்ய வைத்துக்கொண்டது வருணப் பிரிவு. தீண்டாமை -ஜாதி என்ற இரண்டும் அந்த வசதியைத் தக்கவைத்துக் கொள்ளும் பக்கபலமாக்கப் பட்டன. பெண்கள் -சூத்திரர்கள் இந்த இருவரையும் ஒரே பட்டியலில் ஒதுக்கியதும் ஒடுக்கியதும்தான் மனுதர்மம் செய்த மகத்தான தவறு.

ஜபம் -தபசு -தீர்த்த யாத்திரை -சந்நியாசம் -கடவுள் தோத்திரம் -ஆராதனை இவைகளைப் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்று தர்மம் தடுத்தது.

ஜப ஸ்தப தீர்த்த யாத்திர

பிரவர்ஜ்ஜய மந்த்ர சாதனம்

தேவாராதனம் சகசய் வஸ்திரீ

சூத்திர பததானிஷள் -என்பது தர்ம சாஸ்திரம்.

ஒரு சூத்திரன் கொலை செய்தால் அவன் தலை வெட்டப்பட வேண் டும். ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் tதலைமுடியை வெட்டினால் மட்டும் போதும். இது வெறும் தர்மமாக அல்ல சட்டமாகவும் இருந்தது என்பதுதான் இன வரலாற்றில் மன்னிக்க முடியாத மனிதப் பிழை.

மனுதர்மம் முன்மொழிந்ததைத்தான் இலக்கியங்களும் வழிமொழிந்தன. சீல குணங்கள் அற்றவனாயினும் பிராமணனை வணங்கு. ஞானமுற்றவனாயினும் சூத்திரனை வணங்காதே என்ற பொருளில்-

பூஜிய விப்ர சீலகுண ஹூனா

சூத்ர நகுணகன் ஞானபிர வீனா’’

-என்று எழுதிப் போகிறது துளசிதாச ராமாயணம்.

இந்த இழிசட்டம்தான் ஒரு சூத்திரனின் பிறப்பு -வளர்ப்பு -இருப்பு -கல்வி -தொழில் -திருமணம் -கலாசாரம் -உணவு -உடை -வழி பாடு -வாழ்வு -இறப்பு -சுடுகாடு என்று எல்லா நிலைகளிலும் அவனை இழிவிலே வாழவைத்து அவமானத்தில் புதைக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாய்த் திணிக்கப்பட்ட இந்த இழிவு வேந்தர்களின் காலம் கடந்து வெள்ளைக்காரன் காலம்வரை ஓர் இனத்தைப் பன்றிகளின் தொழுவில் படுக்கவைத்தது.

1915இல் கல்வித்துறையின் அரசுப் பணி யிடங்கள் 518. அவற்றுள் பிராமண அலுவலர்கள் 399 பேர், கிறித்துவர் ஆங்கிலோ இந்தியர்கள் 73 பேர், முகமதியர் 28 பேர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் ஆதிதிராவிடர் உட்பட வெறும் 18 பேர் என்றொரு புள்ளிவிவரம் சொல்லிப் போகிறது. 84 விழுக்காட்டு மக்களுக்கு வெறும் 18 இடங்கள், 3 விழுக்காட்டு மக்களுக்கு 399 இடங்கள்.

இந்த ஓரவஞ்சனை ஒரு நாளில் நிகழ்ந்ததன்று.

*

ரு தலைவன் புரிந்துகொள்ளப்படுவதில் இருக்கிறது ஒரு சமூகத்தின் உயரம். ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்ற பெரியாரின் பெருங்கூற்று தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டி ருக்கிறது.

p

தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர் பெரியார். ஆனால் தமிழ்மீது பூட்டப்பட்ட கடவுள் தன்மையைக் கழற்றி எறிந்தவரும் அவரே. ""எனக்குத் தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. மிகப் பழைய பாஷை -சிவ பெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்திய ரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மை யும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன்''’என்பது பெரியாரின் தர்க்க வாக்கு மூலம்.

ஒரு மொழியின் தொன்மை மட்டுமே அதன் சிறப்பன்று. நிகழ்காலத்தின் உலக நீரோட்டத்தில் தன்னைப் பேசும் மக்களை நீந்த வைக்கிறதா என்பதே அதன் உயிர்ப்பு. விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து சென்றுகொண்டிருக்க, தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டிவைத்துக்கொண்ட பெருங் கோபத்தை அந்த ஞானக்கிழவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துருப்பிடித்த கருத்துக் களையே துடைத்து வைத்துக்கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகி விட்டது என்று மொழிக்கு முற்றுப்புள்ளி வைப்பதா தமிழ்? தமிழில் இரண்டு சொற்கள் முட்டிக்கொண்டால் திருநீறு கொட்டியது ஒருகாலம். ஒரு வாக்கியத்தை நுகர்ந்து பார்த்தால் துளசி வாசமடித்தது ஒருகாலம். மேற்குலகம் வானத்தில் விண்மீன்களையும் கோள்களையும் தேடிப் பயணிக்கும் அதே கால அலைவரிசையில் வானத்தில் கடவுள்களையும், தேவர்களையும் தமிழ் தேடிக்கொண்டிருந்தால் தமிழன் எப்படிப் பிரபஞ்சக் குடியாக உயரமுடியும் என்று பெரியார் பெருங்கவலையுற்றிருக்கலாம். பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது -இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரம்தான் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று கதறவைத்தது பெரியாரை.

""தமிழ் படித்த புலவர்கள் வித்வான்கள் பெரிதும், நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால் அவர் களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்ட தோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர் களாகவே இருக்க வேண் டியவர்கள் ஆகிவிட்டார் கள். தமிழ் மொழி மூவா யிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற் பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க்கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கியக் காரண மாகச் சொல்லுகிறேன்''’’ என்பது பெரியார் கூற்று.

எழுத்து -சொல் -கருத்து -அறிவு -பயன்பாடு -படைப்பிலக்கியம் போன்றவைகளைக் காலந் தோறும் புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டு மிராண்டிமொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே, தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாதே என்ற பெருங் கவலைதான் பெரியாரை அப்படிப் பேச வைத்தது.

உலையில் இட்டுக் காய்ச்சிக் கொல்லன் ஓங்கி அடிப்பது இரும்பின் மீதுகொண்ட கோபத்தால் அன்று, அது ஆயுதமாகவேண்டும் என்ற ஆசையினால். தமிழ் ஆயுதமாக வேண்டும் என்ற ஆசை இருந்தது பெரியாருக்கு.

மொழி என்பது உலகப் போட்டிப் போராட் டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்’என்ற பெரியார் தமிழ் எழுத்தைச் சீர்மை செய்தார். உலக மொழிகளின் எழுத்துக்கள் இரண்டு வகையில் அமைந்தவை. ஒன்று சித்திர வடிவம்; இன் னொன்று ஒலி வடிவம். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலிவடிவங்களோடு வழங்கிவந்தது தமிழ். எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி கற்பதற்குக் கடினமாகிறது; புழங்குதன்மை யில் விரைவு குறைகிறது; அறிவியற் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகின்றது. சுமைகள் குறைந்த பயணம் எளிமையாய் இருப்பது போல எழுத்துக் கள் குறைந்த மொழி பறவைப் பாய்ச்சலில் பயணமாகிறது. தமிழின் 247 ஒலி வடிவங் களை 131 ஆக குறைத்த பெரியார் குடியரசு -பகுத் தறிவு -விடுதலை -உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்கு விட்டு வழக் கத்தை மாற்றினார். புலவனோ, புரோகிதனோ, அரசனோ, அரசோ, பண்டிதக் கூட் டமோ, மடமோ, பல்கலைக் கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்து முடித்தார் பள்ளிக் கூடம் தாண்டாத ஒரு பாமர மேதை. இந்த 131 ஒலிவடிவங் களும் 100 ஆகக் குறைந்து 31 ஆக முடிகிறபோதுதான் தமிழ் உலகப் பாய்ச்சல் கொள்ளும் என்பது என் எண்ணம்.

*

v

ந்தித் திணிப்பைப் பண்டிதர் கூட்டம் எதிர்த்த தற்கும், பெரியார் எதிர்த்ததற் கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. தமிழின் தனித் தன்மை கெடும் என்றும், வடமொழியினின்றே தமிழ் வந்ததென்றாகிவிடும் என்றும், தங்கள் பிழைப்புக்கே பெரிய தோர் ஊறு நேர்ந்துவிடும் என்றும், பண்டிதக் கூட்டம் இந்தியை எதிர்த்தது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆபத்து வந்துவிடும் என்று விஞ்ஞானப் பார்வையோடு எதிர்த்தவர் பெரியார் ஒருவரே.

ஒரு தமிழ் மகன் திருமணம் செய்ய வேண்டு மானால் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்பான். ஆனால் ஆரியக் கருத்தில் பேசும்போது ‘கல்யாணம், விவாகம், கன்னிகாதானம்’என்கிறான். வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. வாழ்க்கைத்துணை என்பதில் சம உரிமையும், கன்னிகாதானம் என்பதில் அடிமைத்தன்மையும் புகுத்தப்பட்டுவிடுகிறது. இம்மாதிரியே ஆரியக் கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்குத் தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது’என்று கண்டறிந்து சொன்னவர் பெரியார்.

வாழ்க்கைத்துணை என்பதில் பெண் உயிராகிறாள்; ‘கன்னிகாதானம்’ என்பதில் பெண் பொருளாகிறாள்.

*

லைத்துறையின் மீது பெரிதும் காதலுறாத பெரியார் தமிழிசையின் மீது மட்டும் தனிப்பார்வை செலுத்தினார். காரணம் கல்லா மக்களின் கல்வி காதுவழி புகுகிறது என்பதுதான். தெலுங்கில் இருப்பதால் தெலுங்குக் கீர்த்தனை, வடமொழியில் இருப்பதால் வடமொழிப்பாட்டு என்பதுபோல், தமிழில் இருந்தாலே அது தமிழிசை என்பதைப் பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை. ‘"தமிழிசை இயக்கம்'’தோன்றியவுடன் மயக்கம் தீர்ந்துவிடும் என்று இறுமாந்திருந்த பெரியாருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பாட்டு தமிழாகிவிட்டது; ஆனால் உள்ளடக்கம் ‘பழைய பஞ்சாங்கமாகவே’ இருந்தது.

v

கண்ணன் சேலை திருடிய சிருங்காரங்களும், கந்தபுராணத்தில் களிறுதரு புணர்ச்சியும், சிவன் ஆடிய திருவிளையாடல்களும் பாற்கடலில் பரந்தாமன் பள்ளியெழுச்சிகளும் தமிழிசைக்குள் புகுந்து சம்மணங்காலிட்டு அமர்ந்துகொண்டன. பெரியார் அதிர்ச்சிக்குள்ளானார். தமிழில் பாடுவது மட்டுமா தமிழிசை? தமிழின் அறிவை பண்பாட்டை விரிவு செய்வதல்லவோ தமிழிசை! இதே உள்ளடக்கம் வேறு மொழியில் இருந்தபோது விளைவேதுமில்லை. அதுவே தமிழில் பாடப்படும்போது பல்லவி பல்வலி தருகிறதே, சரணம் மரணம் தருகிறதே என்று பெரியார் கலங்கியிருக்கக்கூடும். கதை ஒன்று சொல்லித் தன் கலக்கத்தை விளக்கினார் :

பல்விளக்கச் சோம்பேறித்தனப்பட்ட மருமகனைப் பார்த்து ஒரு மாமியார், பல்விளக்கும் படி மருமகனுக்குச் சொல்ல வெட்கப்பட்டு, கரும்பு சாப்பிட்டால் பல் வெள்ளையாகும் எனக்கருதி, மறைமுகமாய், மாப்பிள்ளை! இந்த ஊர்க் கரும்பு நல்ல ருசியாக இருக்கும். ஒரு துட்டுக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லிக் காசு கொடுத்தாள். மாப்பிள்ளை அதை வாங்கிக் கொண்டுபோய் எள்ளுப் பிண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பல்லை இன்னும் கேவலமாக்கிக் கொண்டு கரும் எண்ணெய்ப் பசையுடன் வந்தால் மாமியாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அது போலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சி இந்நாட்டில் நடந்து வருகிறது என்று கருதவேண்டியிருக்கிறது. மூன்றே வாக்கியங்களில் சொல்லப்பட்ட உணர்ச்சியும் உண்மையும் நகைச்சுவையும் பயன்பாடும் மிக்க சிறுகதையிது. பெரியார் ஒரு புனைவியல் மேதை!

*

தொலைநோக்குச் சிந்தனை என்பது ஒரு விஞ்ஞானியின் குணம். ஒரு தலைவனுக்கும் அது வாய்த்திருந்தால் அது அச்சமூகம் செய்த பேறு. பெரியாருக்கு அது வாய்த்திருந்தது. விஞ்ஞான விமோசனத்தால் மக்களின் பிறப்பு விகிதம் குறையும். சாவும்கூடக் குறைந்துபோகும். தனிநபர் சொத்துரிமை ஒழிந்து போவதால் பிள்ளைபெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை அதற்கு சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்துபோகும். கல்யாணம் என்பதே ஒழிந்துபோகும் என்பதனால் விதவை என்ற ஒரு ஜாதி இல்லாமல் போகும். குழந்தை பிறப்பதற்கு ஆண்-பெண் சேர்க்கை அவசியமில்லை. தரைவழிப் போக்குவரத்து குறைந்து தனிமனிதர்கள் வானத்தில் பறக்கத் தொடங்குவார்கள் என்ற பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகளையெல் லாம் ஒரு அறிவியல் அனுமானம் என்று கருத லாம். ஆனால் மகாத்மா காந்தி கொல்லப்படுவார் என்ற செய்தியை அவரிடமே சொல்லிப்போன தொலைநோக்குதான் இன்னும் இந்த நாட்டின் நூற்றாண்டு ஆச்சரியமாய் உறைந்து கிடக்கிறது. 1927-இல் பெங்களூரில் உத்தமர் காந்தியடிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் நேர்ந்த உரையாடலை இப்போது இங்கே பதிவு செய்கிறேன் :

பெரியார் : இந்துமதம் இருப்பதால் ‘பிராமணன்’ இருக்கிறான். நானும் தாங்களும் ‘சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.

v

காந்தியார் : அப்படி அல்ல. நான் இப்போது சொல்வதை பிராமணர்கள் கேட்க வில்லையா? இந்தச் சமயத்திலே நாம் எல்லோரும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்துமதத்தின் பேராலேயே நீக்கிவிடலாமல்லவா?

பெரியார் : தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந் தாலும் கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதைப் போல், இன்று தாங்கள் செய்வதை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.

காந்தியார் : இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார் : நான் சொல்லுகிறேன்; தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களா லேயே நிரந்தரமாக ஒன்றும் செய்து விட முடியாது. தங்கள் கருத்து அவர் களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமா கிறது என்று கண்டால் அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

1927இல் சொன்னது; 1948இல் நடந்தேறிவிட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு பலித்தே போயின பெரியார் காந்தியிடம் சொன்ன கவலைச் சொற்கள். வருத்தம்தான். ஆனால், பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி.

*

ந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர் பெரியார். முட்டாள்களின், வஞ்சகர்களின், கோழைகளின் கேள்விகளையும் அவர் இயல்பாக எதிர்கொண்டிருக்கிறார். அவரை வெல்ல முடியாத கூட்டத்திலிருந்து வெறுப்பின் bஉச்சத்தில் அவர்மீது ஒரு கேள்வி வீசப்பட்டது. “நீ யாருக்குப் பிறந்தவன்?’’ இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் மண்புழுகூடப் படமெடுக்கும். கரப்பான் பூச்சியும் மீசை முறுக்கும். ஆனால் அணுவள வும் அதிரவில்லை பெரியார். “நான் யாருக்குப் பிறந்தவன் என்பது பற்றிக் கவலையில்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தவன் என்று என்னாலும் சொல்ல முடியாது. தம்பி நீ யாருக்குப் பிறந்தாய் என்று உன்னாலும் சொல்ல முடியாது. அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும் அயோக்கியனுக்கும்தான் தேவை. யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை’.

ஞானமும் மானமும் உள்ளவன்தான் இந்த இழிந்த கேள்விக்கு இப்படி உயர்ந்த விடைசொல்ல முடியும். பெரியார் விடைசொல்லாத கேள்விகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் பெரியார் விட்டுச்சென்ற பல கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை. இந்த இருட்டுப் பிடித்த சமூகத்தைப் பார்த்துப் பெரியார் கேட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளில் சில கேள்வி களை மட்டும் பதிவுசெய்கிறேன்.

சிறுவயதில் குழந்தைகள் சாமிவைத்து விளையாடு வார்கள். கல்லடுக்கி, குச்சிபரப்பி, அதன்மேல் துணி இலை காகிதத்தால் கூரைசெய்து கோயிலாக்கி, பொம்மைகளைச் சாமிகளாக்கித் தகரங்களை வாத்தியங்களாக்கி விளையாடுவார்கள். 7, 8 வயதுவரை பெற்றோர்கள் ரசிப்பார்கள். 13 வயதில் ஆணும் பெண்ணும் அதே விளையாட்டைத் தொடர்ந்தால், ‘"அடே குட்டிச்சுவரே! அரைக் கழுதை வயதாகி இன்னமும் சாமிவைத்து விளையாட வெட்கமில்லையா'’ என்று கடுத்த முகத்தோடு கேட்பார்கள். வயதான பிறகும் சாமி விளையாட்டு விளை யாடும் பெற்றோர்களைப் பார்த்து அதே குழந்தைகள் திருப்பிக் கேட்டால் என்ன சொல்வோம்?’’

ஒரு பறவை இறப்பதற்கு முன்னிட்ட முட்டையாய் இந்தக் கேள்வி அனாதையாய் நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பது பற்றிய சமூக அரசியலை முன்வைத்துப் பெரியார் தொடுத்த வினா முக்கியமானது. பெரியார் கேட்கிறார்:

மாடு தின்பதும் மது அருந்துவதும் நீங்கள் பறையர்களாக இருப்பதற்குக் காரணமென்று சொல்வது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக்கொண்டும் இருப்பவர்கள்தான் இன்று உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தவிரவும் நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சார்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போலச் சரியானபடி சம்பாதிக்கவும் தாராள மாகச் சாப்பிடவும் தெருவில் நடக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக்கூடியதான மாட்டுமாமிசத்தைப் புசிக்க வேண்டிய தாயிற்று. கோழியும் மீனும் பன்றியும் எச்சி லையும் பூச்சி புழுக்களையும் அழுக்குகளை யும் மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க -புல்லும் பருத்திக்கொட்டையும் தவிடும் பிண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்?’’

உணவு குறித்த இந்தக் கேள்வி இன்னும் பசியோடு அலைந்துகொண்டேயிருக்கிறது விடையென்ற இரையின்றி.

*

பொதுவெளியில் தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு தலைவன் தன் தனிப்பட்ட இழப்புகளை எப்படி எதிர்கொள் கிறான் என்பதிலிருக்கிறது அவனது சமூகத் தொண்டின் மெய்த் தன்மை. தன் முதல் துணைவி நாகம்மையார் 1933இல் மறைந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை ஓர் உலக இலக்கியம் என்றே என் னைக் கருதச் சொல்கிறது. உலகத்தின் எந்தக் கல் லறைக் கவிதைக்கும் அது குறைந்ததில்லை. சொல்லப் போனால் துணைவியின் மரணத்தை இப்படிப் பொருள் கொண்டவர் எவருமில்லை. துணைவியா ரின் மரணத்தைக் கொண்டாடி இப்படி எழுதுகிறார் பெரியார்:

""நாகம்மாளை நான்தான் வாழ்க் கைத் துணைவியாகக் கொண்டிருந் தேனே அல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந் தேனோ என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. பெண்கள் சுதந்திர விசய மாகவும் பெண்கள் பெருமை விசய மாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒருபங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற் றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்க வில்லையே! நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருதவேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன். நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச் சாரிகள்போல சஞ்சாரத்திலேயே சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்கவேண்டும் என்று கருதி இருந்ததுண்டு. அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல்போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மை தருவதாகுக.''

உலகத்திலேயே இறப்பைக் “கொண்டாடிய’’ இரங்கல் செய்தி இதுவாகத்தான் இருக்க முடியும்.

*

சூரியன் வந்து வந்து போகும் இந்த வானத்தின் கீழே பெரியார் பேசாத பொருளில்லை. கடவுள் -மதம் -சாதி - ஆண் -பெண் p-கல்வி -காதல் -இலக்கியம் -கலை -அறிவியல் -அறவியல் -அரசியல் -உலகியல் -உளவியல் -இறந்தகாலம் -நிகழ்காலம் -எதிர்காலம் -ஜனனம் -மரணம் என்று அவர் தொடாத துறையில்லை. ஆனால் ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொன்னதில்லை. அவர் மொழியில் அலங்காரம் இல்லை; ஆடம்பரம் இல்லை. சத்தியம் சவுக்காரம் போட்டுக் குளிக்கவேண்டியதில்லை. மனித குலத்தின் சமத்துவத்துக்காகப் பேராசைப் பட்ட துறவி அவர். திராவிடர்களின் மேன்மைக் காகத் துன்பத்தை இழுத்துத் தோளில் போட்டுக் கொண்டவர். அடக்குமுறைக்கும் சிறைவாசத்துக் கும் இழிவுக்கும் ஏளனத்துக்கும் அடிக்கடி ஆளானவர். இவரைப்போல் இப்படி ஒரு தலைவர் இந்தியப் பரப்பில் முன்னுமில்லை; பின்னுமில்லை.

94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்த பெருவாழ்வில் எண்ணாயிரத்து இருநூறு நாட்களைச் சுற்றுப்பயணத்திற்கே செலவிட்டவர். எட்டு லட்சத்து இருபதாயிரம் மைல்கள் சுற்றுப் பயணம் செய்தவர். அதாவது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு சுற்றி வந்தவர். இருபத்தோராயிரத்து நானூறு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றியவர். அவரது அத்தனை சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு செய்து ஓடவிட்டால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.

தமிழர்களின் மனித அதிசயம் பெரியார். காற்றைப்போல் தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப் படுகிறவர்.

90 வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்த தமிழ்ப்புலத்தின் பேரறிஞர் ஒருவர் தன் மரணத்தின் முன்நிமிடத்தில் இப்படிச் சொல்லிப் போனார்: “இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலைபெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்; இன்னொருவர் பெரியார்.