தமிழாற்றுப்படை வரிசையில் இதுவரை 19 தமிழ்ச் சான்றோர்களைப் பற்றி கட்டுரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, கடந்த 22-ந் தேதி சங்கப் புலவர் கபிலரைப் பற்றிய கட்டுரையை அரங்கேற்றினார். அது இங்கே...
இயற்கையின் கவிஞன் என்று அறிவுலகம் கொண்டாடும் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் இங்கிலாந்தில் உலவித்திரிந்த ஏரி மாவட்டம் (Lake District) முழுவதும் ஓர் ஒற்றை மேகமாய் நான் அலைந்து திரிந்த ஒரு புலர் காலையில் அந்நிலப்பரப்பு இச்சைக்குரிய ஒரு பச்சைக்கோள் என்ற அழகியல் எழுச்சி மட்டுமே எனக்குள் மூண்டது. இது கவிஞர்களின் தொட்டில் என்றும் உதடு முணுமுணுத்துக்கொண்டது. ஆனால் தமிழ்நாட்டின் குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலர் பெருமான் உலவிய நிலவியல் எல்லைகளின் செறிவும் விரிவும், வாழ்வும் வனப்பும், இயற்கையும் இருப்பும், உவப்பும் உயிர்ப்பும் எண்ணிப் பார்த்தால் அந்நிலப்பரப்பு கவிஞர்களின் தொட்டிலன்று; கருப்பை என்றே கருதத் தோன்றுகிறது.
இயற்கையை இழுத்துவந்து வாழ்வோடு இணைத்த படைப்பாளர் பலர். ஆனால், வாழ்வென்ற அரும்பொருளை இயற்கை என்ற பெரும்பொருளோடு ஐக்கியப்படுத்திய ‘"அரும்பெருங்கவி'’என்றே குறிஞ்சிப் புலவர் கபிலரைக் கொண்டாடலாம்.
மனிதன் என்றவோர் உயிர்ப்பொருள் தோன்றும் வரைக்கும் இந்த பூமிக்குப் பெயரில்லை; பூமியில் தோன்றிய எதற்கும் சொல்லில்லை. கதிரும் நிலவும் விண்மீன்களும் பலகோடி ஆண்டுகள் கண்கள் இல்லாத வெளிகளில் காய்ந்து கழிந்தன. தாவர சங்கமங்களும் பல்லுயிர்ப் பெருக்கங்களும், அலைகடலும் மலைவெளியும், தீச்சுடரும், காற்றலையும் விண்வெளியும், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் மட்டுமே பொருளாய்க் கிடந்தன. அவ்வுயிர்களெல்லாம் இயற்கையை உண்டாடித் தீர்த்தனவேயன்றிக் கொண்டாடித் தீர்க்கவில்லை.
மனிதன் பிறந்த பிறகுதான் இந்த பூமி ஓர் உணவுச் சந்தை என்ற கருத்து நிலையிலிருந்து உணர்வுநிலைக்குத் தாவியது. கவிஞன் பிறந்த பிறகுதான் இந்த பூமியின் மீது ஒரு கலைநிழல் விழுந்தது. அவ்வண்ணம் இயற்கை சார்ந்த கலைக்கவிகள் வரிசையில் மொழி உலகங்கள் தத்தமக்கென்று ஒரு கவிஞனை முன்னிறுத்தும்போது, தமிழின் மொழிஉலகம் தங்கள் பங்காளன் என்று கபிலர் பெருமானைக் காட்டலாம்.
மனிதராகிய உயர்திணைக்கும், மனிதரல்லாத அஃறிணைகளுக்கும், இயற்கை இட்டுக்கொடுத்த உயிர் ஒப்பந்தத்தின் மூலப் படியை முற்றிலும் உணர்ந்துகொண்ட முதற்றமிழ்க்கவி இவரே என்று முன்மொழிவதில் எனக்கொரு தயக்கமில்லை.
கபிலரின் பாடுபொருளுக்கிடையே ஊடுபொருளாகப் பயின்று வரும் புலி -யானை -கரடி -ஆமான் -பன்றி -குதிரை -நாய் போன்ற விலங்கினங்களும், கடுவன் -மந்தி -முசுக்கலை -கருங்குரங்கு போன்ற குரங்கினங்களும், வருடை -மரைஆ -கடமா -முளவுமா போன்ற மானினங்களும், அன்றில், இருதலை -எருவை -கடற்காக்கை -கிளி -குருகு -கூகை -மயில் -வானம்பாடி போன்ற பறவையினங்களும், அசோகு, அவரை -இற்றி -உழிஞை -உன்னம் -எருக்கு -ஐவனம் -கோங்கு -சந்தனம் -சுரபுன்னை -சேம்பு -ஞாழல் -வெதிர் -வேங்கை போன்ற மர வகைகளும், தெறுழ் -தோன்றி -நறை -நெய்தல் -நொச்சி -பித்திகம் -மிளகு -முல்லை -வயலை போன்ற கொடி வகைகளும்,
""ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
உரிதுநா றவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்
எரிபுரை யெறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடசம்
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குருகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி
செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவம் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை
ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்
ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை
அடும்பு அமராத்தி நெடுங்கொடி அவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்து வாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி
நந்தி நறவம் நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
ஆரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும்''
ஆகிய பூவினங்களும் பாட்டுப் பொருளாய் பயின்று வந்து வாழ்வின் வழிபாட்டுப் பொருள்களாகின்றன.
செயற்கையில் கடவுளைக் கண்ட இனங்களுக்கிடையே இயற்கையில் கடவுளைக் கண்ட இனம் தமிழினம். இந்த அசையாத கொள்கையில் நிலைகொண்டுதான் பனை ஓலையில் எழுத்தாணியை அசைய விடுகிறார் கபிலர்.
""புலியோடு சண்டையிட்டு வென்று, மலைவெளியில் தூங்கும் யானை தன் கனவிலும் அக்காட்சி கண்டு வெகுண்டு கண்விழித்து, பூத்திருக்கும் வேங்கை மரத்தைப் புலியெனக் கருதி அதனொடு மோதிப் பின்னர் மெய்தெளிந்து நாணமுற்று நிற்கும் மலை நாடனே!''’’
-என்று விளித்து விரிகிறது ஒரு பாட்டு.
""கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை
நனவிற்றான் செய்தது மனத்த தாகலின்
கனவிற் கண்டு கதுமென வெரீஇப்
புதுவ தாக மலர்ந்த வேங்கையை
அதுவென வுணர்ந்ததன் அணிநல முருக்கிப்
பேண முன்பிற்றன் சினந்தணிந் தம்மரம்
காணும் பொழுதில் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட''’’
-என்பது குறிஞ்சிக்கலியின் ஐந்தாம் பாட்டு.
இயற்கை, விலங்கு, மனிதன், மனம் என்ற நான்கு தத்துவங்களுக்கிடையே ஊடுசரடாக ஓடுமொரு தொடர்புக் கண்ணியைக் கபிலரைப்போல் கண்டறிந்த கவி முன்னெவருமில்லை என்றே முன்மொழியலாம்.
கபிலர் என்ற பெயரும் பிறப்பும் குறித்துச் சற்றே சாற்றுவோம். கபிலம் எனில் செந்நிறம். கபிலர் என்ற சொல்லுக்குச் செந்நிறத்தார் என்று பொருள். இது சிவபெருமானுக்கு ஆகிவரும் பெயர் என்று அறியப்பெறுகிறது. கபிலர் பெயரில் கபிலருக்கு முன்னே விளங்கியோர் மூன்று கபிலர்கள். முனிவர் கபிலர், சாங்கிய நூலாசிரியர் கபிலர் -தொல் கபிலர் என்ற வரிசையில் சங்கப்புலவர் கபிலர் நான்காம் நிலையில் அறியப்பெறுகிறார். கபிலர் குறித்து வழங்கப்பெறும் கதைகளுக்கு ஆதாரமில்லை; அறிவின் எல்லைக்குள்ளும் அவை இல்லை. பகவன் என்ற அந்தணருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் ஏழு ஊர்களில் ஏழு பிள்ளைகள் பிறந்தன என்கிறார்கள். உறையூரில் அவ்வை, தொண்டை நாட்டில் உப்பை, கருவூரில் அதியமான், புகார் நகரில் உறுவை, திருவாரூரில் கபிலர், வேளின்மலையில் வள்ளி, மயிலாப்பூரில் திருவள்ளுவர் என்று உடன்பிறந்தவராகிய இந்த எழுவரும் பிறந்த உடனே செய்யுள் செப்பினர் என்று செப்பப்படுகிறது. கதைகலந்த இந்தச் செய்தி நம்பும்படி இல்லை. இது அறிவுலகத்தை ஒரு குடைக்கீழ் கொண்டுவரும் ஆசை பற்றி அறையலுற்றது எனலாம்.
ஆனால் கபிலர்பெருமான் மட்டும் அந்தணரே என்பதற்கு அகச்சான்றும் புறச்சான்றுகளும் காணக்கிடைக்கின்றன. ""புலனழுக்கற்ற அந்தணாளன்''’என்று 126-ஆம் புறப்பாட்டில் மாறோக்கத்து நப்பசலையார் பாடிய புறச்சான்றும், ‘"யானே பரிசிலன் மன்னும் அந்தணண்' (புறம்-200)’ என்றும் "அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே' (புறம்-201)’ என்றும் கபிலரே பாடியிருக்கும் அகச்சான்றுகளும் அவர் அந்தணரே என்று அறிவிக்கின்றன.
அறிஞர் உ.வே.சாமிநாத அய்யரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் தனித்தனியே கூட்டிச்சொன்ன கணக்கின்படி சங்க இலக்கியத்தில் கபிலர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 278. நற்றிணை 20, குறுந்தொகை 29, ஐங்குறுநூறு 100, பதிற்றுப்பத்து 10, கலித்தொகை 29, அகநானூறு 16, புறநானூறு 30, குறிஞ்சிப்பாட்டு 1, இன்னா நாற்பது 41, திருவள்ளுவ மாலை 1, நெட்டிலை என்னுஞ் செய்யுள் 1. இன்னா நாற்பதைக் கழித்து மாறுபட்ட எண்ணிக்கை சொல்வாரும் உளர். இவற்றுள் 261 அடிகளையும் 1440 சொற்களையும் கொண்ட குறிஞ்சிப்பாட்டுதான் பெரும்பாட்டு. பத்துப்பாட்டில் ஒன்றாகப் பங்குபெறும் குறிஞ்சிப்பாட்டு அகவலோசை கொண்டது. துள்ளல் -தூங்கல் -செப்பல் என்ற பிற பாவோசைகளோடு மாறுபட்டது அகவலோசை. "ஒருவன், தான் கருதிய பொருளை வரையாதுகூற இடையீடின்றித் தொடர்ச்சியாய் நிகழும் இயற்கை ஓசை'’என்பது அகவலோசை குறித்து யாப்பறி புலவர் மூப்புற மொழிந்தது. முதல் உரி கருவென முப்பொருள் பயின்று வருவது குறிஞ்சிப்பாட்டு. இது ஓர் அகத்திணை இலக்கியம். களவென்றும் கற்பென்றும் இருவகைப்பட்ட அகவொழுக்கத்தில் களவின்றிக் கற்பு நிகழாதாகையின் களவே சிறப்புடைத்தென்று கருதுவார் நூலோர்.
களவென்பது, உருவாலும் திருவாலும் ஒத்திருக்கும் தலைவனும் தலைவியும், கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே எதிர்ப்பட்டு இன்பம் துய்த்தலாகும். அவ்வின்பம் நான்கு வகைப்படும். ஒரு சோலையில் எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கை. அதே இடத்தில் மீண்டும் கூடுதல் இடந்தலைப்பாடு. ‘"பாங்கனாற் கூடின் பாங்கற் கூட்டம், பாங்கியால் கூடப்பெறின் பாங்கியற் கூட்டம்.' தொடர்ந்து பாங்கியற் கூட்டம் இடையீடுபட்டவிடத்து, தலைவி காதல்நோயால் கலுழ்ந்து, மேனி இளைத்து, இழைகள் நழுவி இன்னலுற, செவிலித்தாய் ஏதறியாது கவன்று குறிகேட்க, அவர்கள் தெய்வத்தான் ஆயிற்றென்று கூற, வழிபாடு செய்தும் நோய் நீங்காமை கண்டு வருந்தியுழல, "எம் களவு வாழ்க்கையைச் செவிலிக்கறிவி'’எனத் தலைவி உணர்த்த, செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்றலே குறிஞ்சிப்பாட்டு.
(அடுத்த இதழிலும் கபிலர் வருவார்)