ப்ரல் 7, 2015-ல் செம்மரம் கடத்தியதாகக் கூறி தமிழர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது ஆந்திர சிறப்பு அதிரடிப்படை. அந்தக் காயமே இன்னமும் ஆறாமல் இருக்கையில், மீண்டும் ஒரு கொலை நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

kamaraj

"கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு சித்தூர்-கடப்பா மாவட்ட எல்லைகளை இணைக்கும் உப்புகொணா வனப்பகுதியில், கொல்லப்பள்ளி ரயில்வே கோடூர் வனச்சரகர் நயிம்அலி தலைமையில் ஐந்துபேர் ரோந்து சென்றனர். அங்கு செம்மரம் கடத்திய 15 பேரைப் பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்றவர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். அதனால், ஒரு ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒருவர் இறந்தார்; இன்னொருவர் காயத்துடன் சிக்கினார்'’என காளஹஸ்தி மண்டல வனத்துறை தகவல் வெளியிட்டது.

இறந்தவர் தமிழர் என்பதும், திருவண்ணாமலை ஜம்னாமாத்தூர் கானாமலையைச் சேர்ந்த காமராஜ் என்பதும் தெரியவந்தது. ""கூலி வேலைக்கு போவதாக சென்றவரை, செம்மரம் வெட்டியதாகக்கூறி கொன்றுவிட்டனர். காதுகேட்காத அவரைப் பிடித்து சித்ரவதை செய்துள்ளனர். போஸ்ட் மார்ட்டத்துக்கு முன் அவரது உடலைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மிரட்டிதான் கையெழுத்து வாங்கினர்''’என கதறியழுதார் காமராஜின் மனைவி காமாட்சி.

காட்டுக்குள் என்ன நடந்தது என்பதை அறிய, நீண்ட முயற்சிக்குப்பின் காட்டிலிருந்து தப்பி வந்தவர்களில் ஒருவரிடம் பேசியபோது, ""கானாமலை, குருவிமலை, எளந்தம்பட்டு கிராமங்களைச் சேர்ந்த 15 பேர் ஆகஸ்ட் 20-ம் தேதி காளஹஸ்திக்கு சென்றோம். காட்டுக்குள் மரம் வெட்டிவிட்டு, 30-ம் தேதி மதியம் சமைத்துக்கொண்டிருந்தோம். அப்போது வனத்துறை சுற்றி வளைப்பதை அறிந்து ‘"தப்பிச்சுப் போயிடுங்க'’ என கத்தியபடி ஓடத் தொடங்கினோம். 13 பேர் தப்பிவிட்டோம். கானாமலையைச் சேர்ந்த வெள்ளிமுத்துவின் நிலை தெரியவில்லை. காதுகேளாதவரான காமராஜ் சுதாரிப்பதற்குள் சிக்கிக்கொண்டதைப் பார்த்தேன். அவரைப் பிடித்து சித்ரவதை செய்ததோடு, அடித்தே கொன்றுவிட்டு என்கவுன்ட்டர் நாடகம் நடத்துகின்றனர். வெள்ளிமுத்துவைப் பற்றி மறைத்தே வருகின்றனர்''’’ என்றார் பயம் நீங்காமலே.

மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இதில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் நம்மிடம், “""ஆறு ஆண்டுகளில் 31 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது ஆந்திரா சிறப்பு அதிரடிப்படை. ஏற்கெனவே, 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதால், இம்முறை வனத்துறை மூலம் புகார் தந்துள்ளனர். ஆந்திர போலீஸுக்கு பதிலாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தால் மட்டுமே உண்மை விளங்கும்''’என்கிறார் அழுத்தமாக.

பதவியே கதியென்று கிடக்கும் முதல்வருக்கு இதைப் பற்றியெல்லாம் ஏது கவலை?

-து.ராஜா