சம்பவம்-1
திருச்சி கீழகல்கண்டார் ஏரியாவில் அரசுப்பள்ளியில் ஏழாம்வகுப்பு படிக்கும் மாணவன் ஏதோ முன் ஜென்ம பகைபோல் பெற்ற தந்தையை நடுத்தெருவிலேயே குடத்தால் அடித்து விரட்டியிருக்கிறான். தந்தையும் அலறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் தடுத்தும் அவன் கேட்கவில்லை. பித்துப்பிடித்தவன்போல் திமிறிக்கொண்டு கொலைவெறியோடு துரத்தியிருக்கிறான். அதற்குப்பிறகுதான், அவன் இப்படி ஓடிவந்ததற்கான காரணம் தெரியவந்தது.
சம்பவம்-2
பொன்மலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மாலை நேர ரவுண்ட்ஸ் போனபோது… ஆர்மர்கேட் பகுதியில் ஒன்றாக உட்கார்ந்திருந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் போலீஸ் ஜீப்பை பார்த்ததும் மிரண்டுபோய் பார்க்கிறார்கள். "என்னடா… ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போகாம இங்க என்னடா பண்ணிக்கிட்டிருக்கீங்க?' என்று அதட்டியபோது ஒருமாதிரி சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க...… ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டுபோய் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்தார்கள் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காக்கிகள்.
சம்பவம்-3
கிராப்பட்டியில் பத்தாம்வகுப்பு மாணவன் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பியதும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொள்கிறான். இரவு உணவுக்கு பெற்றோர் அழைத்தால் வராமல் அப்படியே படுத்துக்கிடக்கிறான். உடம்புசரியில்லை போல என்று நினைத்துக்கொண்டு பெற்றோர் பாசத்தோடு எழுப்ப அம்மாவின் கழுத்தை நெரிக்காத குறையாய் விரட்டிவிட்டு ஆக்ரோஷமாய் அவன் கத்தியது வீட்டையே அதிரவைத்தது.
சம்பவம்-4
மேலகண்டார் கோட்டையில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த ஈகோ பிரச்சனையை தீர்த்துவைக்க முயன்ற ஜாகித் உசேன் என்பவரை அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள் ஐந்து மாணவர்கள். காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோதுதான், பின்னணியில் அப்படியொரு காரணம் இருப்பது தெரியவந்தது. ஆம்!… ஒட்டுமொத்த சம்பவங்களுக்கும் காரணமே குறைந்தவிலையில் கிடைக்கும் கஞ்சாதான்.
அதுவும், சமீபத்தில் பாலக்கரை போலீஸ் லிமிட்டில் காஜாப்பேட்டையில் தொடர்ச்சியாக கொளஞ்சி என்ற பெண்ணின் மகள் மலர்க்கொடி என்பவர் குடும்பத்தோடு கஞ்சா விற்றுவருகிறார். காவல்துறைக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு அனுமதித்திருக்கிறார்கள். இதைக்கண்டித்து, "மக்கள் அதிகாரம்'’அமைப்பின் தலைமையில் அப்பகுதிமக்கள் கஞ்சா விற்பனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு போலீஸில் புகாரும் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் புகாரின்பேரில் கஞ்சா விற்கும் மலர்க்கொடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், மலர்க்கொடியை மானபங்கப்படுத்தியதாக பொய்ப்புகார் தயாரித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதே போலீஸும் போதை விற்பனை கும்பலும் பொய்வழக்கு போட்டு மிரட்டிக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள்.
இதைவிடக் கொடுமை, முசிறியில் இருக்கும்போது பள்ளியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டிக்கொடுத்தார் என்பதற்காகவே பெண் போலீஸ் மகன் மீது திட்டமிட்டு கஞ்சா வழக்கைப்போட்டு உள்ளே தள்ளினார் டி.எஸ்.பி. ஒருவர். அதோடில்லாமல், பாண்டிச்சேரியிலிருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்வதாக சமீபத்தில் மீண்டும் இன்னொரு வழக்கு போடப்பட்டிருக்கிறது. புகார் கொடுத்தவரே திருச்சி மாநகருக்கு மொத்தமாக போதைப்பொருள் சப்ளை செய்யும் ஏஜெண்ட் என்பது தெரியவருகிறது.
சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்திரியன் தெரு சந்திப்பில் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பதை போக்குவரத்து போலீஸிடம் தகவல் தெரிவித்த முகமது சுல்தானை போதை கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் சி.சி.டி.வி. ஆதாரத்துடன் வெளியானது. திருச்சி, சென்னை மட்டுமல்ல… தமிழகம் முழுக்க கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
சென்னை திருவான்மியூர் பேருந்துநிலையம் அருகிலுள்ள பிரபல தனியார் பள்ளியின் மாணவர்கள் மூலமே கஞ்சா விற்கிறார்கள் என்று நக்கீரன் மூலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. புருஷோத்தமனிடம் தகவல் கொடுத்தோம். அவரும், அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், விற்ற மாணவன் போலீஸின் மகன் என்பதால் விசாரித்து எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டார் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி. பள்ளி மாணவன் என்பதால் எச்சரித்து விட்டுவிட்டார். ஆனால், அவனுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த "லட்டு புரோ'’ என்கிறவனைக்கூட கைது செய்யவில்லை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி. அப்படியென்றால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பெரும்பாலும் தங்களுக்கு சாதகமாக இல்லாதவர்களை மட்டுமே அதிரடியாக கைது செய்து கணக்கு காண்பிக்கிறார்கள்.
இதையெல்லாம் உண்மையாக்குவதுபோல சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் விழிப்புணர்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய அவர், ‘""இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் எதுவும் தெரியாமல் காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் என்று முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களே கலந்துகொள்ளவில்லை'' என்று கடிந்துகொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இத்தகவல், மாவட்ட ஆட்சியர் சிவராசுவுக்கு செல்ல உடனே கூட்டத்திற்கு வந்துவிட்டார். தொடர்ந்து பேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், ""திருச்சியில்தான் அதிக பள்ளிக் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களால் சீரழிகிறார்கள் என்றும் இதனால், மாணவிகள் பாலியல் ரீதியான பாதிப்புக்குள்ளாவது அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்றும் டெல்லியிலுள்ள குழந்தைகள் ஆணையத்துக்கு புகார்கள் குவிகின்றன. அதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இங்கு வந்திருக்கிறேன்''’என்று சொல்ல... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதிர்ந்துபோனது.
மேலும், ""பள்ளியில் மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு ஆளாகியிருந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அந்த மாணவனும், அவனால், மற்ற மாணவர்களும் போதைக்கு ஆளாகாமல் பாதுகாக்கவேண்டும்'' என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். திருச்சியில் போதை மாத்திரைகள் விற்கும் பீமநகர் காஜா, காட்டூர் ராஜு, அரியமங்கலம் சூர்யா உள்ளிட்டவர்களால்தான் போதைப்பொருட்கள் விற்பனை கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உளவுப்பிரிவு, தனிப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு என பல்வேறு துறை போலீஸார் ஒரே இடத்தில் இருந்தும் இச்சீர்கேடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து, திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் அமல்ராஜிடம் நாம் பேசியபோது, “""நாங்கள் வாரந்தோறும் சிறப்பு டீம் அமைத்து எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தற்போது நிறைய போதை விற்பனையாளர்களை கைதுசெய்து வழக்கு பதிந்திருக்கிறோம். நாங்கள் தற்போதுகூட எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால்தான் கஞ்சா விற்பனை விவகாரம் வெளியில்வர ஆரம்பித்திருக்கிறது. எங்களுக்கு யார் தகவல் கொடுத்தாலும் அதிரடி நடவடிக்கை எடுப்போம்'' என்றார். எனினும், இதற்குமுன் இருந்த பல கமிஷனர்கள் தங்களது செல்போன் எண்களையே பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்து "புகார் கொடுக்கலாம்' என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், அதுபோல் திருச்சி காவல்துறையிடம் புகார்கள், தகவல்கள் சொல்ல எந்த தொலைபேசி எண்ணும் கொடுக்கப்படவில்லை. கமிஷனர் அப்படியொரு புதிய எண்ணை அறிவித்தால் எங்கெல்லாம் போதைப்பொருள் விற்பனையாகிறது என்கிற தகவல் காவல்துறைக்கு கிடைக்கும்.
-ஜெ.டி.ஆர்.
____________________
ஒருமுறை சிக்கினாலே... -டாக்டர் நப்பின்னை
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? போதை அடிமையிலிருந்து விலகுவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பிரபல உளவியல் வல்லுநர் டாக்டர் நப்பின்னையிடம் நாம் கேட்டபோது, ""நமது ஒட்டுமொத்த உடம்புக்கும் தலைமைச் செயலகமான மூளையை கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருளும் பாதிக்கிறது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு விட்டுவிடுகிறேன் என்றால் அது முடியாது. "திரும்பத் திரும்ப’இன்னும் வேணும்... இன்னும் வேணும்'’என்ற நிலைக்கு கொண்டுசென்றுவிடும். இதனால், போதைப்பொருட்களால் உண்டாகும் மனச்சிதைவு நோய் (Substance induced phycosis)தாக்குகிறது. இதன்மூலம், தனக்கு எதிரே யாரோ சதித்திட்டம் தீட்டுவதுபோன்ற எண்ணம் அடிக்கடி தூங்கவிடாமல் செய்யும். சமுதாயத்தோடு ஒட்டாமல் அர்த்தமற்ற பதற்றநிலை உருவாகும்.
மனநல மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் தன்னிலை மறந்து வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வன்முறையிலும் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் போதைப் பழக்கத்தை கைவிட்டால் கை, கால் நடுங்க... சம்பந்தமில்லாமல் உளறுவது உள்ளிட்ட பின்விளைவுகள் ஏற்படும். அதனால், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் போதைப் பழக்கத்தை திடீரென்று நிறுத்தக்கூடாது'' என்று எச்சரிக்கிறவர், “""அரசின் போதை மறுவாழ்வு மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மனநல மருத்துவர், மனநல வல்லுநர் கொண்ட மறுவாழ்வு மையம் உருவாக்கப்பட வேண்டும்'' என்கிறார் கோரிக்கையாக.
-மனோசௌந்தர்