மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "பைசன்' திரைப்படம் கபடிப் போட்டியை மையப்படுத்தி வந்து, பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், கபடி உலகின் ஹீரோக்களாக இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் இரண்டு தங்கங்கள்!

Advertisment

பக்ரைன் நாட்டில், அக்டோபர் 22 முதல் 31 வரை நடைபெற்ற 3வது ஆசிய இளையோருக்கான விளையாட் டுப் போட்டிகளில், கபடி போட்டியில் ஆடவர் பிரிவில் 14 அணிகளும், மகளிர் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்று விளையாடினர். ஆடவர் கபடியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 35-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் நாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டி யில் 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றனர். இதில், பெண்கள் பிரிவில், அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சாதனையாகப் பதிவானது!

Advertisment

kabadi1

இந்திய பெண்கள் அணிக்கு சென்னை, கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக செயல்பட்டு விறுவிறுப்பான விளையாட்டின்மூலம் வெற்றியை பெற்றுத்தந்திருப்பது அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. அதேபோல், இந்திய ஆண்கள் அணியில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத் துள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த அபினேஷ், அதிரடியாக விளையாடி தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார். எவ்விதப் பின்புலமும் இல்லாத சூழலிலிருந்து இந்திய அணியில் இடம்பிடித்து சாதித்துள்ள கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் அவ ரவர் பகுதிகளில் மேளதாளம் முழங்க வரவேற்பளித்து மக்கள் கொண்டாடியுள்ளனர். அதோடு தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, அவர் களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்து, இருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்!

இதுகுறித்து முதல்வர், "கார்த்திகாவும், அபினேஷும் மேலும் சில உதவிகளை என்னிடம் கேட்டிருக்கிறார்கள், அவற்றை யும் நிறைவேற்றித் தருவதாகச் சொல்லி யிருக்கிறேன். மணத்தி கணேசன் தொடங்கி இன்று அபினேஷ், கார்த்திகா வரை, எளிய பின்புலத்திலிருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூக நீதி மண்ணாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது'' என்று கூறினார். 

Advertisment

கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி, அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியதோடு, உலக அளவில் கண்ணகி நகரை கொண்டுசெல்லவேண்டும் என்று கார்த்திகாவை பாராட்டினார். "கண்ணகி நகரில் கார்த்திகாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பேசும்போது, "கண்ணகி நகரில் சிந்தடிக் கிரவுண்ட் வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். ஒப்பந்ததாரர்களை அழைத்துப்பேசி, இன்னும் 20 நாட்களில் கேலரி, விளக்கு வசதிகளோடு அமைத்துத்தர வேண்டுமென்று சொல்லியிருக் கிறோம். மைதானத்துக்கான வேலை முடிந்ததும், தமிழ்நாட்டின் துணை முதல்வர் அந்த மைதா னத்தை திறந்துவைப்பார்''’என்று பாராட்டினார்.

kabadi2

சென்னை நகரின் பூர்வகுடி மக்கள் ஏழ்மை யின் காரணமாக குடிசைகளில் தங்கியிருக்கும் சூழலில், நகரினை அழகுபடுத்தும் நோக்கில், குடிசைவாசிகளை அப்புறப்படுத்தி சென்னை புறநகரில் கண்ணகி நகர் என்ற குடியிருப்புப் பகுதியை 2000ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இந்த கண்ணகி ந       கரில் மொத்தம் 23,704 குடும்பங்கள் வசிக்கின்றனர். கண்ணகி நகரில் ஏழ்மையான குடும்பத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்து, சமீப காலமாக ஆட்டோ ஓட்டிவரும் சரண்யாவிற்கும், சென்ட்ரிங் வேலை செய்துவரும் ரமேஷுக்கும் மகளாக பிறந்தவர்தான் கார்த்திகா. வறுமையின் பிடியில் பிறந்து வளர்ந்தாலும் சிறுவயது முதலே சாதிக்கவேண்டும் என்கிற வேட்கையோடு கபடி விளையாட்டை தீராக்காத லோடு விளையாடினார். தனது பத்து வயதிலேயே உள்ளூர் கபடிப் போட்டியில் களமிறங்கியவர், ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்து, தான் படிக்கும் கண்ணகி நகர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். தேசிய அளவிலான நஏஎஒ, கெலோ இந்தியா மற் றும் பெடரேஷன் நேஷனல்ஸ் உள்ளிட்ட போட்டி களில் 11 முறை தமிழ்நாட்டுக்காக விளையாடி, 8 பதக்கங்களை வென்றிருக்கிறார். அதேபோல், 5 முறை தமிழ்நாடு அணியின் அணித் தலைவராக பொறுப்பேற்று அணியை வழிநடத்தியிருக்கிறார். தற்போது இந்திய இளையோர் அணி தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்துள்ளார். 

தனது வெற்றி குறித்து கண்ணகி நகர் கார்த்திகா கூறுகையில், "கண்ணகி நகர் என்றாலே கிரைம் பகுதின்னு சொல்லி சென்னையில பேசுவாங்க. ஆனால் கண்ணகி நகர்ல நிறைய ஸ்போர்ட்ஸ் பிளேயர்கள் இருக்காங்க. சரியான கோச்சிங் இல்லாமலும், சரியான கிரவுண்ட் வசதிகள் இல்லாமலும் அவங்களால வெளியில் வர முடியல. ஆனால் இப்பொழுது எங்களுக்கு கிடைத்த கோச்சால நிறைய இளைஞர்கள் வந்துட்டாங்க. என் வெற்றிக்கு என்னைவிட எங்க கோச் தான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார். எங்க அணிக்கு கண்ணகி நகர் பெயரையே வச்சு துணிச்சலா ஆட வச்சாங்க எங்க கோச். கண்ணகி நகரை இன்று உலகறியச் செய்தது பெருமையா இருக்கு. இந்த அளவுக்கு வளர்ந்து வர முதல்வர், துணை முதல்வர் செய்த உதவிகளை மறக்கமுடி யாது. பார்க்லதான் கோச்சிங் பண்ணுறோம், எங்களுக்கு ஒரு பயிற்சிக்கான இடம் வேணும்னு கோரிக்கை வைத்திருக்கிறேன், செய்து தருவதாக சொல்லியிருக்காங்க. முதல்வர் கொடுத்த நிதி எங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வழிவகுக்கும்'' என்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா எக்ஸ்பிரஸ்.

kabadi3

கண்ணகி நகர் அணியை எட்டு ஆண்டு களாக பயிற்சியளித்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பவர் பயிற்சியாளர் ராஜி. கார்த்திகா கடந்த ஐந்தாண்டுகளாக இவரிடம் தான் பயிற்சிபெற்றுவருகிறார். கார்த்திகா குறித்து பயிற்சியாளர் ராஜி கூறுகையில், "கார்த்திகா, கபடியில் கடுமையாக உழைப்பவர். எப்பவுமே கவனச்சிதறல் இல்லாமல் கண்ணுங்கருத்துமாக கபடி விளையாடுவார். கார்த்திகா தற்போது இந்தியாவுக்காக தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

கார்த்திகாவின் அம்மா சரண்யா, அப்பா ரமேஷ் கூறுகையில், "எல்லாரும், பொம்பள புள்ளைய அரை டவுசர், சட்டையோட விளையாட விடுறீங்களேன்னு பேசுவாங்க. என் பொண்ணு மேல எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றுகூறி நம்பிக்கையோடு அனுப்பினோம். பத்தாவது பரீட்சையின்போது கூட மேட்சுக்கு போறேன்னு சொல்லும்போது பக்கத்துல உள்ளவங்க எல்லாம் திட்டுனாங்க. என் பிள் ளைக்கு எது சரின்னு படுதோ அதை செய்யட்டும், அவ சரியா செய்வான்னு நம்பிக்கையோடு விட்டுக்கொடுத்தோம். இன்று அவள் படிப்பிலும், விளையாட்டிலும் நம்பர் ஒன்னாக இருப்பதை தமிழ்நாடே கொண்டாடுவது எங்களுக்கு பெருமையா இருக்கு'' என்கிறார்கள்.

இதேபோல், விவ சாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராம மான வடுவூரில், கணவரை இழந்து தினக்கூலியாக வேலை பார்க்கும் ஏழ்மையான அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் அபினேஷ் மோகன்தாஸ். எங்கெல்லாம் கபடிப்போட்டி நடக்கிறதோ, யாரெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் தேடிச்சென்று கற்றுக்கொண்டு இந்திய அணிக்கு கவுரவம் சேர்த்துள் ளார் அபினேஷ். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள வடுவூர் மேல்பாதியில் பாழடைந்த ஒரு வாடகை ஓட்டு வீட்டில் வரிசையாகத் தொங்கும் பதக்கங்கள் அனைத்துமே கபடி வீரர் அபினேஷின் விளையாட்டுக்கு கிடைத்த அடையாளங்கள் என்று பெருமையாகக் காட்டி நம்மை வரவேற்றனர். 

kabadi4

அபினேஷின் அம்மா தனலட்சுமி கூறுகையில், "பெரிய வசதியெல்லாம் இல்ல. அபினேஷுக்கு நாலு வயது இருக்கும்போது அவனோட அப்பா இறந்துட்டார். தினசரி நான் கூலி வேலைக்கு போனாதான் அபினேஷுக்கும், அபினேஷ் கூடப்பிறந்த இரு தங்கைகளுக்கும் எனக்குமான சாப்பாடே. எங்க வாழ்க்கையில அனுபவிக்காத கஷ்டங்களே இல்ல.  பழைய ஓட்டு வீட்டில்தான் வாடகைக்கு இருக்கிறோம். அபினேஷ் சின்ன வயசுல இருந்தே கபடி மேட்ச் நடந்தா ஓடிடுவான். கபடின்னா அவனுக்கு சர்க்கரையா இனிக்கும். கபடி கபடின்னு ஓடுறானேன்னு திட்டுவேன். இப்பதான் அதோட பெருமை புரியுது. முதல்வர்ட்ட எங்களுக்கு குடியிருக்க ஒரு வீடும், ஒரு அரசாங்க வேலையும் கொடுங்கன்னு கேட்டிருக்கிறோம்'' என்கிறார் தனலட்சுமி.

அவரது தங்கை அபிநயா கூறுகையில், "அண்ணன் கபடி மேல ஆர்வமா இருப்பான். அம்மா அண்ணனை அப்படித் திட்டும், ஆனால் இன்று வெளியே போகும்போது எங்க அண்ணனைப் பார்த்து பெருமையாகப் பேசும்போது எங்களுக்கு பெருமையா இருக்கு. இனி எங்க கஷ்டம் தீர்ந்திடும்னு நம்புறோம்'' என்று கண்ணீர் வடிக்கிறார்.

அபினேஷ் கூறுகையில், "இந்திய அணிக்காக விளையாடுவது என்னுடைய கனவு. அது நிறைவேறி யிருக்கு. எங்க கிராமமே விளையாட்டுக்கு முக்கியத் துவம் கொடுக்குற கிராமம். அதனாலதான் விளை யாட்டு கிராமம்னு சொல்லுவாங்க. கபடி, வாலிபாலுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. எங்க ஊர் கொடுத்த ஊக்கமும், அம்மா -தங்கைகள், கோச் கொடுத்த ஆதரவும் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கு'' என்கிறார்.

எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, கபடி விளையாட்டின் மூலம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருக்கிறார்கள் தமிழ்நாட்டுத் தங்கங்கள்!