இந்தியாவில் எந்த மாநிலத்தில் வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மதக்கலவரத்தை உருவாக்கினாலும் தமிழ்நாட்டில் பா.ஜக.வால் மதக்கலவரத்தை உருவாக்க முடியவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தில் கூட்டணிக் குழப்பத்தை உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் முடியவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத் தில் இந்தியைத் திணித்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வால் இந்தியைத் திணிக்க முடியவில்லை. அதனால் தமிழ்நாடு என்றாலே மோடி -அமித்ஷாவுக்கு மட்டு மில்லாமல் தமிழ்நாட்டு பா.ஜ.க. பிரமுகர்களுக்கும் கடுப்பாகிறது. தங்களுடைய எந்த பப்பும் வேகாத மாநிலமான தமிழ்நாடு, கல்வியிலும் மற்ற கட்ட மைப்புகளிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைவிட உயர்ந்து நிற்பதைக் கண்டு வயிறு எரிகிறது. அதனால், வன்மத்துடன் தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை, தமிழர்களின் எதிரியான மோடி அரசு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மோடி அரசில் கல்வி அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான் யாதவ் என்கிற ‘மகா அறிவாளி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என் றும், அரசியல் சட்டத்தை மீறி தமிழ்நாடு நடப்பதால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற் கும் வழங்கப்படும் நிதியை, சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு நடக்காத தமிழ்நாட் டிற்கு வழங்கவில்லை என்று திமிராகக் கூறியிருக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தில் மும்மொழிக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எந்தப் பிரிவு சொல்கிறது? சட்டத்தின் ஆட்சி என்பது இந்தியைத் திணிப்பதுதானா?
தமிழ் -ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கை யைக் கொண்ட தமிழ்நாடு பல துறைகளிலும் முன் னேறியிருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களும், நிதி ஆயோக் அமைப்பும் தெளிவாக சுட்டிக்காட்டுகின் றன. இந்தி பேசும் மாநிலங்கள் பலவும் இந்த வளர்ச்சியை அடையவில்லை. இந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில் இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் முறையாகக் கற்பிக்கப்படுவதுமில்லை. இந்தி பாடத்தி லேயே உத்தரபிரதேச மாணவர்கள் தோல்வியடையக் கூடிய நிலைதான் நீடிக்கிறது.
இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுக்குத் தரவேண் டிய 2500 கோடி ரூபாய் நிதியைத் தரமாட்டோம் என்று சொல்லி, ஆண்டுதோறும் வஞ்சிப்பது மோடி தலைமை யிலான பா.ஜ.க. அரசின் திமிர்த்தனத்தையே காட்டு கிறது. மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காத தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்கு வரி மட்டும் வேண்டுமாம், தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை மத்திய அரசு தராதாம். இன்னொரு மொழிப் போராட்டத்திற்குத் தூண்டுகிறது பா.ஜ.க. அரசு. தமிழ் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தமிழ்நாடு ஒடுக்கும்.
____________
உண்மை ரொம்பவே சுடுகிறது…!
கார்ட்டூனில் மோடியின் கைகளுக்கு விலங்கிட்டதற்கு, பதிலடியாக விகடன் இணைய தளத்தை முடக்கி பத்திரிகை சுதந்திரத்துக்கு விலங்கிட முயன்றிருக்கிறது பா.ஜ.க. அரசு.
ட்ரம்ப் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அங்கு குடியேறியவர்களை அப்புறப்படுத்த முயன்றுவருகிறது. அப்படி இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 104 பேர் அமிர்தசரஸில் கொண்டுவந்து இறக் கப்பட்டனர். அவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு... விமானத்தில் சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல் இந்தியா கொண்டுவந்து இறக்கப்பட்டி ருக்கின்றனர்.
இதேபோல, மற்ற நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் கைவிலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டபோது அந்நாட்டு அதிபர்கள், சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிர்வினை செய்ததுடன், மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம், "தென் அமெரிக்காவைச் சேர்ந்த 7 பில்லியன் பேர் அமெரிக்க உற்பத்திப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் உங்கள் பொருளாதாரம் சரிந்துவிடும்''’என நெத்தியடியாக எச்சரித்தார்.
பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த காவியுடை சந்நியாசினியான உமாபாரதிகூட, "முன் பும் செவ்விந்தியர்களிடமும் ஆப்பிரிக்க மக்களிடமும் இதுபோன்று அமெரிக்க நிர்வாகம் அத்துமீறியிருக்கிறது. இது மனித குலத்திற்கே களங்கம்''’என விமர் சித்திருக்கும் நிலையில், இந்திய பிரதம ரிடமிருந்து இதற்கெதிராக ஒரேயொரு வார்த்தைகூட விமர்சனம் கிளம்பவில்லை.
ஒரு கார்ட்டூன் விலங்கு, பா.ஜ.க. கட்சியினருக்கு இத்தனை வலியை ஏற் படுத்துகிறதென்றால், நிஜமாக விலங்கிடப் பட்டவர்களுக்கு எத்தனை வலித்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்தியா முழுவதும், அமெரிக்கப் பயணம் சென்றிருக்கும் மோடி இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் ஒரு வார்த்தைகூட இதுபற்றிப் பேச வில்லை. அதைவிட மோசம், ட்ரம்புடன் மோடி விருந்து சாப்பிட்டுக்கொண்டி ருக்கும் போதே, அதேபோல் இன்னும் 119 இந்தியர்கள் கை விலங்கிடப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டி ருக்கிறார்கள். இந்த நிலையில், அதை விமர் சிக்காமல் ஊடகங்கள் மௌனமாக வேடிக்கை பார்க்கவேண்டுமென எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
பத்திரிகை சுதந்திரத்தை முடக்கப்பார்ப்பது பா.ஜ.க. அரசுக்குப் புதிதல்ல. இந்தியாவி லேயே மோடி ஆட்சிக் காலத்தில் தான் மிக அதிகமுறை இணைய வசதி முடக்கப்பட்டிருக்கிறது. அதிலும் காஷ்மீரிலும், மணிப்பூரிலும் மாதக்கணக்கில் கூட இணைய வசதியை முடக்கியிருக்கிறார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின்போது, அதனை பத்திரிகை யாளர்கள் எழுதிவிடக்கூடாது என்பதற்காக எத்தனையோ பத்திரிகையாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
குஜராத் கலவரத்தைப் பற்றிய ஆவணப் படம் வெளி யிட்டதற்காக, வெளிநாட்டு ஊடக நிறுவனமான பி.பி.சி.யின் மீதே சோதனைகளை நடத்தி அச்சுறுத்தியது. ஆனால், உண்மையின் பக்கம் நிற்பதென முடிவு செய்தவர்களை எதுவும் அச்சுறுத்திவிட முடியாது. இது ஆங்கிலேயர் ஆண்ட காலனி ஆதிக்கம் முதலே நிலவிவரும் உண்மை.
ஒருவேளை அந்த கார்ட்டூனை பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால், அது தமிழ்நாட்டோடு முடிந்திருக் கும். ஆனால், தடை செய்யப்பட்டதனாலேயே பலராலும் பகிரப்பட்டு இந்திய அளவில் கோடிக்கணக்கானவர்கள் பார்ப்பதில் சென்று முடிந்திருக்கிறது.
தமிழக முதல்வர் முதல் பத்திரிகையாளர் இந்து ராம் வரை ஆனந்த விகடன் இணைய தள முடக்கத்தை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். "அந்த கார்ட்டூன் குறியீட்டு ரீதியான சித்தரிப்பு. அது முழுக்க சட்டபூர்வமான பத்திரிகைச் செயல்பாடு. அதற்கெதிராக அவர்கள் செய்திருப்பது சற்றும் சட்டபூர்வமற்ற செயல்' என ஹிந்து ராம் விமர்சித்துள்ளார்.
அச்சுறுத்துவதன் மூலம் பத்திரிகைகளின் வாயடைத்து விடலாம் என்று கனவு காணுவதை பா.ஜ.க. இத்துடனாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்!
நக்கீரன் கோபால்