தமிழக அமைச்சர்களிலேயே அதிக ஊடக வெளிச்சம்படும் ஜெயக்குமாரின் இருண்ட பக்கங்கள் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது என்கிறார்கள் அவரது தொகுதியைச் சேர்ந்த சொந்தக் கட்சிக்காரர்களே.
ஜெயக்குமாருக்கு பினாமி போல நெருக்கமாக இருப்பவர், ஜோசப் ஜெகன். அமைச்சரின் தொகுதியான ராயபுரத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமான காசிமேட்டில் ஜெகன் வைத்ததுதான் சட்டம். ஆறு மாதத்தில் பிடிக்கக்கூடிய மீன்களை மூன்று மாதத்தில் பிடித்துவிடக்கூடிய அளவுக்கான வேகம் பொருந்திய சீன இன்ஜின்களை ஜெகன் முதலில் தனது படகுகளில் பொருத்தினார். திண்டாடிப்போன மீனவர்கள், ஜெகன் தனது படகுகளில் பொருத்தியிருக்கக் கூடிய சீன என்ஜின்களுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தினார்கள். அதனை ஜெகன் முறியடித்தார். இன்று சீன என்ஜின்கள் பொருத்தப்படாத படகுகளே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவுக்கு போராட்டங்களை மழுங்கடித்தார். ஜெகன் வைத்ததே தமிழ்நாடு முழுவதும் மீன்பிடித் தொழிலின் சட்டம் என சூழல் மாறிவிட்டது.
ஜெகனைப் போல பலரை தமிழகம் முழுவதும் உருவாக்கி தமிழ்நாட்டில் உள்ள கடல் வளம் அனைத்தையும் மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். 1991 முதல் அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் மீன்வளத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சபாநாயகர் என செல்வாக்கான பதவிகளை வகிக்கும் ஜெயக்குமார், சம்பாதித்த சொத்துக்கள் பல கோடி பெறும் என்கிறார்கள் காசிமேடு மீன் வியாபாரிகள். ஜெயக்குமாரை ஆந்திரா பகுதி வரை கொண்டு சென்றிருக்கிறார் ஜெகன் என்றனர். நாம் நேரில் பயணித்தோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியைத் தாண்டியவுடன் ஆந்திர மாநிலம் வந்துவிடும். ஆந்திரா, பழவேற்காடு, கா

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியைத் தாண்டியவுடன் ஆந்திர மாநிலம் வந்துவிடும். ஆந்திரா, பழவேற்காடு, காசிமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் மீன்பிடித்தல்களை ஏற்றுமதி செய்வதற்கு saint paul and peter seafood export என்கிற நிறுவனத்தை தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் அக்கா மலை, தங்கச்சி மலை என்கிற இரு குன்றுகளுக்கு அருகே உள்ள மஞ்சாங்காரணை என்கிற ஊரில் உள்ள தொழிற் பேட்டையில் நடத்தி வருகிறார் ஜோசப் ஜெகன். வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களை கவர்வதற்காக கிறிஸ்தவ புனிதர்களின் பெயரால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் இந்த தொழிற்சாலைதான் ஜெயக்குமாரின் செல்வாக்கோடும் பங்களிப்போடும் அமைந்த முதல் தொழிற்சாலை. இந்த தொழிற்சாலை மதிப்பு மட்டும் 100 கோடியை தாண்டும் என்கிறார்கள் ஜெயக்குமாரை தனிப்பட்ட முறையில் தெரிந்த மீனவர்கள்.
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கும் தொழிற்பேட்டையில் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பிரம்மாண்ட தொழிற்சாலைக்கு நாம் நேரில் விசிட் செய்தபோது, மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்தது. அந்த சமயத்திலேயே இருபது கண்டெய்னர் லாரிகளில் அதிக குளிரூட்டப்பட்டதூனா மற்றும் இறால் வகைகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன.
""இதுமட்டுமல்ல. அமர் பிரகாஷ் என்கிற கட்டிட நிறுவனத்தில் ஜெயக்குமார் பெரும் முதலீடு செய்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் சென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அமர் பிரகாஷ் நிறுவனம், ஒரு சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட சமயத்தில், அதற்கான பஞ்சாயத்தை கச்சிதமாக முடித்தவர் அப்போது சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த ஜெயக்குமார். சசிகலா ஆதரவில் சென்னை யில் பல கட்டுமானங்களை அமர் பிரகாஷ் பில்டர் மூலம் செய்து வந்தார். சசிகலா, ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களைக் கூட வளைத்து அடுக்குமாடி குடியிருப்பு களாக அமர் பிரகாஷ் பில்டர்கள் மூலம் மாற்றினார்கள். சசிகலா ஆட்களை வைத்து எங்களை ஜெயக்குமார் மிரட்டினார். அவர்தான் இப்போது சசிகலா விடு தலையாகி வந்தால் அ.தி.மு.கவில் சேர்க்க மாட்டோம்'' என்கிறார் என்றும் சென்னை அ.தி.மு.க. வினர் சொல்கிறார்கள்.
ஒரு பக்கம் ஜெகன், இன்னொரு பக்கம் அமர் பிரகாஷ் என விரிந்த ஜெயக்குமா ரின் சாம்ராஜ் ஜியத்தின் பார்வையில் தமிழக ஆந்திர எல்லைப்புரத்தில் வேகமாக வளர்ந்த சர்வதேச தொழில் நகரமான ஸ்ரீ சிட்டி பட்டது. மின்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் அங்கு ஒரு தொழிற்சாலையை முதலில் தொடங்கினார். வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ சிட்டியையும் அதிகமான பக்தர்களை கவரும் கல்கி சாமியாரின் பளிங்கு கோயிலுக்கும் வரக்கூடியவர்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் இல்லை என்பதால் ஸ்ரீசிட்டி பகுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜெயக்குமார் மற்றும் சென்னையின் பிரபல ஹோட்டல் நிறுவனம் ஆகியோர் இணைந்து கட்டத் துவங்கினார்கள்.
ஸ்ரீ சிட்டி அமைந்துள்ள பகுதி தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதற்கு பக்கத்தில் இருக்கும் தடா என்கிற பழைய நகரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளிப்போனால் பொலிங்கலாபேட் (Bolingalapet) என்கிற கிராமத்தில் உள்ள ஸ்மார்ட் சிட்டி எனப்படும் உயர்தர ஹோட்டலுக்கு எதிரே ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்ட ஆரம்பித்தார்கள்.
இந்தப் பகுதியில் ஹோட்டல் கட்டப் படும் இடம் ஒரு கிராமத்து சாலை வழியே கல்கி சாமியார் கட்டியுள்ள பளிங்கு கோயிலுடன் இணைகிறது. நீச்சல்குளம், விசாலமான அறைகள் என மூன்று மாடிகளுடன் கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டும், வரவேற்பு வளைவுகள், கார்கள் ஏறிச் செல்லும் ராம்ப் வசதி, முன் பக்கம் மற்றும் பின்பக்கம் விசாலமான பார்க்கிங் ஏரியாக்கள், கான்ஃப்ரன்ஸ் ஹால், கல்யாண மண்டபம் ஆகியவற்றுடனும் சகல வசதிகள் கொண்டதாக பத்து ஏக்கர் பரப்பளவில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை மேற்கெள்ளும் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சீனிவாசன் என்பவர் இந்த ஹோட்டலில் ஜெயக்குமாருக்கும் பங்கு இருக்கிறது என ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டிடத்தில் வாட்ச் மேனாக இருப்பவரும் ஒரு தமிழர். அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் இங்கு வந்து செல்வாரா எனக் கேட்டோம். ஆமாம் அமைச்சர் வந்து செல்வார் என அவரும் சாட்சியமளித்தார்.
அந்த ஃபைவ் ஸ்டார் ஓட்டல், விதி முறைகளை மீறி ஒரு நீர்நிலையின் கரைகளை ஆக்கிரமித்தப்படி எழுப்பப்படுகிறது. அதை உள்ளூர் மக்கள் எதிர்க்கிறார்கள். நீர் நிலையின் கரைகளில் ஓட்டல் எழுப்பப்படுவதால் அஸ்திவாரம் நிலைக்காமல் பூமிக்குள் இறங்கியது. அதை செயற்கை முறையில் உறுதிப்படுத்தி கட்டுவதற்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதுதான் இறுதிக் கட்டத்தை அடைந்து வருகிறது.
""எங்க மக்களின் எதிர்ப்பால் ஓட்டலுக்கு மணல் மற்றும் சவுடு மண் சப்ளை செய்வதை எதிர்த்து குரல் எழுப்பியதால் ஆந்திர அதிகாரிகள் அதன் கட்டுமான வேலைகளை கொஞ்ச நாள் நிறுத்தி வைத்தார்கள். நீர் நிலையை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கட்டுபவர் சென்னையைச் சேர்ந்த அமைச்சர் என்பதால் இந்த அநியாயம் நடக்கிறது''’என போகிற போக்கில் நம் மிடம் குமுறலை கொட்டினார்கள் கிராமத்து வாசிகள்.
எந்த அமைச்சர் எனக் கேட்டபோது, ஆந்திராவைச் சேர்ந்த அவர்களால் பெயரை உறுதியாக சொல்லமுடியவில்லை. சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஓட்டல் கட்டுகிறார் என்பது மட்டும் தடா முழுவதும் பேச்சாக இருந்தது. நாம் ஓட்டல் அமைந்துள்ள கிராமத்து சாலை வழியே பயணித்தோம். அந்த சாலை தடாவுக்கும் காளஹஸ்திக்கும் செல்லும் சாலையோடு நம்மை சேர்த்தது. அந்த சந்திப்பில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் நூறு ஏக்கரில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெரும் பளிங்கு கற்களை கொண்டு எழுப்பப்பட்ட கல்கி ஆசிரமம் இருந்தது. அதையும் படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
ஜெயக்குமார் அரசியல் பிரவேசம் கம்யூனிஸ்ட் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்தான் தொடங்கியது. ஜெயக்குமார் என்கிற பெயர் ஜெயலலிதாவுக்கு பிடித்துவிடவே அவர் 1991ல் எம்.எல்.ஏ.வானார். இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கடல் பரப்பையும் ஆளுமை செய்து கொண்டு மீன் வளத்துறை அமைச்சராகவும், எடப் பாடியின் குரலாகவும் ஒலித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரராக ஆகிவிட்டார் என்கிறார்கள் வடசென்னை அதிமுக காரர்கள்.
இதுபற்றி அமைச்ச்ர ஜெயக் குமாரிடம் கேட்டோம். ""என்னைப் பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் தவறான செய்திகள். எனக்கு ஜெகன் உள்பட யாரும் பினாமிகள் இல்லை. அமர் பிரகாஷ் பில்டர் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தடா பகுதியில் ஐந்து நட்சத்திர ஒட்டல் கட்டுகிறேன் என யாராவது கூறினால் அந்த ஓட்டலை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்'' என்றார் தனது வழக்கமான நகைச்சுவை கலந்து, மறுப்பைத் தெரிவித்தார்.
ஜெகனைத் தொடர்புகொண்ட போது... தன்னை அமைச்சருடன் இணைத்து பரப்பப்படும் செய்திகளை மறுத்தார். அமர்பிரகாஷ் நிறுவனத்தினரும், தங்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இல்லை என்றனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அடித்தளத்திலிருந்து மொட்டை மாடி வரை மறைந்துள்ளன பல உண்மைகள்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்