வானிலை மாற்றத்தால் தமிழக விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கும் சூழலில், கடந்த இரண்டு ஆண்டு களாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் தமிழர்களின் வாழ்வாதாரத்தையே அடித்து நொறுக்கிவிட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

சென்னையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு லிட்டருக்கு 80 ரூபாய் என்கிற அளவை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. அரசுப் பேருந்துகளின் கட்டணங்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டன. பஸ் கட்ட ணத்தை தொடர்ந்து ஷேர் ஆட்டோக்களின் கட்டணமும் உயர்ந்து விட்டது. இன்று இருநூறு ரூபாய் இல்லையென்றால், வேலைக்குச் சென்று திரும்ப முடியாது என்கிற நிலை வந்துவிட்டது.

இவையெல்லாம் 2016-ஆம் ஆண்டு செப் டம்பர் 8-ம் தேதி மத்தியில் ஆளும் நரேந்திரமோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை யோடு சேர்ந்துதான் தொடங்கியது. வங்கிக் கணக்குகள் அதில் செக் போட்டு பணம் எடுக்கும் பழக்கம் அதிகம் இல்லாத மக்களை பண மதிப் பிழப்பு நடவடிக்கை பெரிதும் பாதித்துவிட்டது. கிராமம், நகரம் என்றில்லாமல் 50 சதவிகித கட்டுமானத் துறை பணிகள் அப்படியே நின்று போயின. அந்தத் துறையில் வேலை பார்த்தவர்களை அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்க வைத்தது பண மதிப்பிழப்பீடு நடவடிக்கை.

தமிழ்நாடு முழுவதும், பணமதிப்பிழப்பீடு நடவடிக்கைக்கு முன்பு நடந்த கட்டுமானத் துறை பணிகளில் பாதிகூட 2018-ம் ஆண்டு நடைபெறவில்லை என்கிறார்கள் கட்டுமானத்துறை வல்லுநர்கள்.

Advertisment

modi

""பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது திட்டமிட்ட திருட்டு. சட்டப்படியான முட்டாள் தனம்'' என வர்ணித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். ""இந்திய பொருளாதாரம் 2018-ஆம் ஆண்டு அதற்கு முந்தைய மூன்றாண்டு களைவிட மிகவும் சரிந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை யும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. நடவடிக்கையும்தான்'' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நட வடிக்கை யாருடைய கறுப்புப் பணத்தையும் ஒழிக்க வில்லை. அப்பொழுது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பண முதலைகள் வங்கி அதிகாரிகள் மூலம் 2000 நோட்டு களாக மாற்றிவிட்டனர். கள்ள பணத்தை ஒழிப் போம் என கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டுகள் தமிழகத்திலே கள்ளப் பணமாக அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு மேல் பேரிடியாக வந்தது ஜி.எஸ்.டி. இந்த ஜி.எஸ்.டி. வந்த பிறகு இனிமேல் வியாபாரிகள் திருட்டுக் கணக்கு எழுத முடியாது என்றார்கள். சமீபத்தில் வருமான வரித்துறை தங்க நகை கடைகள், துணிக்கடைகளில் சோதனை நடத்தியது. அதில் கோடிக்கணக்கான ரூபாய் பில் இல்லாமல் வணிகம் செய்ததை கண்டுபிடித்திருக்கிறது. ஜி.எஸ்.டி. என்கிற ஒரே தேசம் ஒரே வரி என்கிற தேசிய அளவில் விலை நிர்ணய கொள்கையில் மிக அவசியமாக இடம் பெற வேண்டிய பெட்ரோல் இடம் பெறவில்லை. அதேபோல் இந்தியாவில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சாராய தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் சாராயத்தின் மீது ஜி.எஸ்.டி. பாய வில்லை. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கிய சிறுதொழில் உற்பத்தி பிரிவின் மீது பாய்ந்து விட்டன.

தமிழ்நாடு முழுவதும் 25 சதவீதத்திற்கு மேல் சிறு தொழிற்சாலைகள் கடந்த ஆண்டு மூடப்பட்டு விட்டன என தமிழக சட்டப் பேரவையிலேயே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து பட்டினியின் கோரப்பிடிக்கு ஐந்து லட்சம் குடும்பங்கள் ஆளாகியுள்ளன. 2017-ஆம் ஆண்டு 2.67 லட்சமாக இருந்த சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்கள் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த கணக்கீட்டின்படி 2.18 லட்சமாக காணாமல் போயிருக்கின்றன.

இதற்கான ஒரு காரணம், தமிழகத்தில் இயங்கும் சிறுதொழில் நிறுவனங்கள் பெரும் பாலும் தனியார் பைனான்சியர்களை நம்பி இருப்பதுதான். பணமதிப்பிழப்பீடு நடவடிக்கைக் குப் பிறகு தனியார் பைனான்ஸ் தொழில் முடங்கிப் போனது. அதை நம்பியிருந்த சிறுதொழில் அதிபர்கள் ஏமாற்றமடைந்தனர். அத்துடன் ஜி.எஸ்.டி. வரி சிறுதொழில் அதிபர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அதனுடைய சிக்கலான வரிவிதிப்பு கொள்கைகளால் திணறடித்துவிட லட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசே சட்டமன்றத்தில் அறிவிக்கும் நிலை உருவானது என்கிறார்கள் சிறுதொழில் அதிபர்கள்.

நரேந்திரமோடி அரசால் அதிக பாதிப்புக்குள் ளான தமிழக தொழில் நகரம் திருப்பூர். பருத்தி அதிகம் விளையும் குஜராத்தில் இருந்து பருத்தியை வாங்கி அதை பின்னலாடைகளாக மாற்றும் திருப்பூர் மீது மோடிக்கு எப்பொழுதும் ஒரு கண். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதே திருப்பூரைப் போல குஜராத்தில் பின்னலாடை நகரத்தை உருவாக்க நினைத்தார். அவரது அரசு எடுத்த ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கையும் திருப்பூரை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது. பணமதிப்பிழப்பீடு நடவடிக்கையாலும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பாலும் திருப்பூர் நகரின் உற்பத்தி ஐம்பது சதவிகிதம் குறைந்துவிட்டது என்கிறார்கள் திருப்பூர் உற்பத்தியாளர்கள். இதனால் பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூர் நகரம் சின்னா பின்னமானது.

தமிழகத்தில் மிகப் பெரிய தொழில் நகரமான சென்னையில் ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறைகள் பாதிக்கப்பட்டன. சென்னை புறநகர் பகுதியில் இயங்கிய சிறுதொழில்கள் நலிந்து போயின. கோவை மாநகரின் பிரதான தொழிலான சிறிய தொழிற்கூடங்கள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தின் வடமாவட்டங்களில் லட்சக்கணக் கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்த தொழிற்கூடங்கள் உருக்குலைந்து போய்விட்டன.

இந்த நசிவு வரிசையில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் சிவகாசியும் இணைந்தது. 821 தொழிற்சாலைகளின் மூலம் சுமார் 2,000 கோடி வரை வருமானம் பெற்ற சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் மீது வாட் வரியாக 14.5 சதவிகிதம் விதிக்கப்பட்டு வந்தது. அதிலும் 1.5 கோடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 12.5 சதவிகிதம் விதிக்கப்படும் மத்திய அரசின் வரியிலிருந்து விலக்கு பெற்றிருந்தன. இந்த நிலை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு பிறகு தலைகீழானது. 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டாசுகள் விலை 150 ரூபாயானது. சீனப் பட்டாசுகளோடு இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டி போட முடி யாத சூழல் உருவானது. அதனால் சிவகாசி தொழிற்சாலைகள் மிகப்பெரிய வேலைநிறுத்தத்தையே அறிவிக்கும் அளவிற்கு நிலைமை உருவானது என குட்டி ஜப்பான் என அழைக்கப்பட்ட சிவகாசி நகர பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் சந்தித்த கொடு மையை விளக்குகிறார்கள் அந்த நகரத்தின் தொழிலதிபர்கள்.

2017-ம் ஆண்டு தமிழகம் கடும் வறட்சியை சந்தித்தது. அதனால் தமிழகத்தின் உற்பத்தியில் அதிக இடம் பிடிக்கும் விவசாயமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் வங்கிகளிடம் கடன் கேட்டும் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் பாணியில் விவசாயிகள் போராட்டம் தமிழகத்திலும் வெடித்தது. தமிழக விவசாயிகள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள்.

ஒட்டுமொத்த தமிழக அரசின் நிதி வருவாயும் பணமதிப் பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயில் 9270 கோடி ரூபாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது. அதனால் ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சத்துணவுத் திட்டம், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகம் போன்ற சமூக நலத் திட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. தமிழகத்தின் கடன் சுமை அதிகமானது. மத்திய அரசிடம் ஒருவித அடிமை மனப் பான்மையை காட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால் உரிமையுடன் எதையும் கேட்டுப் பெற முடியவில்லை. பிச்சை பாத்திரம் ஏந்துமளவிற்கு தமிழகம் கடனாளி மாநிலமாக மாறிப் போனது என்கிற அவலத்தை சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள்.

மொத்தத்தில் தமிழகத்தின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உற்பத்தி அளவு 2016ஆம் ஆண்டு இருந்த 9 என்கிற புள்ளியிலிருந்து 2017-ஆம் ஆண்டு 8 ஆக குறைந்தது. அதே நேரத்தில் குஜராத் மாநிலம் சிறுதொழில்கள் அடங்கிய உற்பத்தித் துறையில் 2016ஆம் ஆண்டில் இருந்த 8 சதவிகிதத்திலிருந்து ஒன்றரை சதவிகிதம் உயர்ந்து 9.5 சதவிகிதமாகியுள்ளது. உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு சரிந்து விழ குஜராத் அந்த இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதனால் தமிழனின் வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

-தாமோதரன் பிரகாஷ்