கிருஷ்ணகிரி மா.செ. மதியழகன் தலைமை யில் 95 சதவீதம் பணியை முடித்துள்ளனர். போச்சம்பள்ளி, ஓசூர், தளி போன்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பது, இளைய தலை முறையினரின் நம்பிக்கையைப் பெறவைத்துள்ளது. தர்மபுரியில் புதிய மாற்றமாக, பா.ம.க.வைச் சேர்ந்தவர்களும் தி.மு.க.வினரோடு இணைந்து களப்பணியாற்றுவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

Advertisment

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சி.கொத்தங்குடி கிராமத்தில் உமாமகேஸ்வரி என்பவரிடம் பேசினோம். ""இதுவரை நாங்க எந்தக் கட்சியிலும் இல்லை. எனது கணவர் ஜூஸ் கடையில் வேலை செய்கிறார். எனக்கு சக்கரை நோய்க்கு மாதாமாதம் மாத்திரை வாங்க சிரமமிருந்தது. மகளிர் உரிமைத்தொகை மூலம் மாதம் ரூ.1000 வருவதால் மருந்து மாத்திரை வாங்குவதற்கு உதவியாக உள்ளது. அதேபோல்  மற்ற திட்டங்களும் பயனுள்ளதாக இருப்பதால் குடும்பமே தி.மு.க. உறுப்பினர்களாகச் சேர்ந்துள் ளோம்'' என்றார்.

அதேபோல் குமராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, ""நானும் கணவரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காலையிலேயே வேலைக்கு வந்துவிடுவோம். பிள்ளைகள் காலை, மதியம் உணவை பள்ளியிலே சாப்பிடுகிறார்கள், எனக்கு மகளிர் உரிமைத்தொகை வருகிறது. எனது மகன் மாற்றுத்திறனாளி என்பதால் ரூ.1,500 மாதாமாதம் வருகிறது. அதனால் நானும் என் கணவரும் தி.மு.க. உறுப்பினர்களாகிவிட்டோம்'' என்றார்.

மொடக்குறிச்சி  ஒன்றியம் பூந்துறையில் வசிக்கும் விஜயலட்சுமி. ""மகளிர் உரிமைத் தொகை வாங்கறீங்களா? இலவசப் பேருந்து உங்களுக்கு பயனுள்ளதா இருக்குதா? முதல்வர் ஸ்டாலின் ஆட்சி உங்களுக்கு பிடிச்சிருக்கா?ன்னு அஞ்சாறு கேள்வி கேட்டாங்க. நான் இதெல்லாம் பயன் படுத்துறதால ஸ்டாலின் ஆட்சி புடிச்சிருக்குன்னு சொன்னேன். அப்புறம் கட்சியில உறுப்பினரா சேர உங்களுக்கு விருப்பமா?ன்னு கேட்டாங்க... விருப்பம்னு சொன்னேன். சேர்த்துக்கிட்டாங்க, யாரும் கட்டாயப்படுத்தல'' என்றார்.

Advertisment

ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைச்செய லாளர் ஆ.செந்தில்குமார் நம்மிடம், ""பெரியசேமூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நடத்தியபோது, சிலர் கூறுகின்ற குறைகளை பதிவுசெய்து அதை அப்படியே மாவட்ட அமைச்சரிடம் கொடுத் தோம். அவர் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனே கவனிக்கச் சொல்ல, அவர்களும் அதை சரி செய்வதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது'' என்றார்.

திருத்துறையூரில் வசிக்கும் அலமேலு, ""கடந்த 2 ஆண்டுக்கு முன் ரூ.500 மின்கட்டணம் கட்டினேன். தற்போது ரூ.2000 அளவிற்கு மின் கட்டணம் ஏறிவிட்டது. மதுக்கடைகளை மூட வில்லை. கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே நான் உறுப்பினராகவில்லை'' என் றார். இதேபோல், பண்ருட்டி அருகே மணப்பத் தூரைச் சேர்ந்த ரவியோ, ""எங்கள் ஊரில் பெரும் பாலானவர்கள் தி.மு.கவினராக இருந்தபோதும், கட்சிக்காரர்களுக்கு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை தரப்படாததால் விரக்தியில் இருக்கிறார்கள். எனவே பலர், உறுப்பினராகச் சேர ஆர்வம்காட்டவில்லை'' என்று குறிப்பிட்டார்.

oneparty1

Advertisment

குறிஞ்சிப்பாடி அருகே நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியாண்டவர், ""தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய  நிர்வாகிகள் யாரும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் குறைகளைக் கேட்பதில்லை. இது அமைச்சர் எம்.ஆர்.கே. தொகுதி.  இப்பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள 93 குடும்பத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் மாவட்ட ஆட்சியராக ககன்தீப்சிங் பேடி இருந்தபோது பட்டா வழங்கினார். இன்றுவரை அந்த மக்களுக்கு இடத்தை ஒப்படைக்கவில்லை'' என்று வருத்தப்       பட்டார்.

சி.கொத்தங்குடி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள அபிராமி, ""ஒரு பாகத்திற்கு 4 பேர் என ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கிறோம். அரசின் திட்டங்களால் நல்ல வரவேற்பு உள்ளது. மாற்றுக் கட்சியில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் 43 சதவீதத்தைக் கடந்துவிட்டோம்'' என்றார்.

சிதம்பரம் அருகே சித்தாலப்பாடியி லிருந்து வசப்புத்தூர் வழியாக செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து முட்புதராக மாறியுள்ளது.  இதனைச் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சூழலில் அப்பகுதிக்கு உறுப்பினர் சேர்க்கையை ஆய்வுசெய்ய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் வருகிறாரென்றதும், முட்புதர்களை அகற்றியுள்ளனர்.  அதேபோல் வசப்புத்தூர், கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருக்காக காலிக்குடங்களோடு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளைச் சரிசெய்யாமல் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவது தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்வியெழுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

அதேபோல் தி.மு.க.வில் மாவட்ட, ஒன்றிய, நகர அரசுப் பொறுப்புகளில் உள்ளவர்களில் பலரும் பண்ணையார் மனோபாவத்துடன் செயல்படுவதைத் தடுக்க முதல்வர் அறிவுறுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

மற்றபடி, தி.மு.க. அனுதாபிகளாக இருப்பவர்களையும்... தி.மு.க.வில் உறுப்பினர் களாக்குவது, தி.மு.க. அரசின் திட்டங்களின் பயனாளிகளை தி.மு.க.வில் உறுப்பினராக்குவது, மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர் களை தி.மு.க.வில் இணைப்பது போன்றவற்றை இந்த "ஓரணியில் தமிழ்நாடு' ஓரளவு சாதித்துள்ளது என்றே சொல்லலாம்!

- ஜீவாதங்கவேல், அருண்பாண்டியன், காளிதாஸ்