தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பைக் கிளப்பிவருகின்றன. பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய்யின் த.வெ.க., மாவட்டத் தலைநகரங்களில் மாநாடு நடத்திவருகிறது. அரசியல் மேடை களில் ‘"அடுத்த முதலமைச்சர் இவர்தான்'’ என சர்வ சாதாரணமாகப் பலரும் தங்களது அபிமான தலைவரை பிரகடனப்படுத்து கின்றனர்.
ஆளும்கட்சியான தி.மு.க.வோ, "ஓரணியில் தமிழ் நாடு'’ என்ற பெயரில் வீடு வீடாகப் போய், ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, சில கேள்விகளை முன்வைத்து, பதிலையும் பெற்று மக்களின் ஆதரவைத் திரட்டி வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் தி.மு.க.வில் 2 கோடி பேர் இணைந்துள்ளதாக, தி.மு.க. சமூக வலைத்தளம் பதிவிட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும்கூட, ‘150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை என்னிடம் பகிர்ந்துள்ளனர்’ எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.க. காட்டிவரும் இந்த முன்னெடுப்பு, பிற அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்நிலையில், "ஓரணியில் தமிழ்நாடு' எந்த அளவுக்கு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது?’ என்ற கேள்வியுடன், மாநிலம் முழுவதும் களமிறங்கி னோம்.
"ஓரணியில் தமிழ்நாடு'' என்று நாம் கேட்க ஆரம்பித்ததுமே... சிவகாசியைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான லட்சுமணன், "புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததுல தமிழ்நாட்டுலயே முதலிடம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்குத்தான். கட்சியில சேர்ந்தது 54,310 புதிய உறுப்பினர்களாம், 30,975 குடும்பங்களாம். விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், அண்ணன் தங்கம் தென்னரசுவ கழகத் தலைவரே பாராட்டிருக் காரு''’என்று புள்ளிவிபரத்துடன் பேசினார்.
"உங்க வீட்டுக்கு தி.மு.க.வினர் யாரும் வந்தாங்களா?''’என சிவகாசி, பள்ளபட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த பரம்பரை தி.மு.க.காரரான தங்கப்பாண்டியிடம் கேட்டோம். “"கட்சிக்காரங்க வீட்டுக்கு மட்டுமில்ல, இந்த ஏரியாவுல ரொம்பப் பேரு வீட்டுக்கு போனாங்க. அவைத்தலைவரா இருக்கிறதுனால நானும் அவங்ககூட போனேன். ஒரு இடத்துல, "தி.மு.க. ஆட்சில உங்க வீட்டுக்கு என்னெல்லாம் கிடைச்சுக்கிட்டிருக்கு? மகளிர் உரிமைத் தொகை வருதா? மகளிர் இலவச பேருந்துல போயிருக்கீங்களா'ன்னு ரெண்டு மூணு கேள்வி கேட்டாங்க. அதுக்கு ஆமான்னு சொன் னாங்க. "தி.மு.க. ஆட்சி உங்களுக்கு பிடிச்சிருக்கா?'ன்னு கேட்டாங்க. அவங்க தி.மு.க. கிடையாதுங்கறதால கொஞ்சம் யோசிச்சிட்டு, "நல்லது யாரு பண்ணுனா என்ன? உங்க கட்சிக்கே ஓட்டு போட்ருவோம்'னு சொன் னாங்க'' என்றார்.
விருதுநகரில் தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம், "சில இடங்கள்ல கட்சி நிர்வாகிகள் சரியா வேலை பார்க்கல. அவங்க சேர்த்தது எல்லாம் ரிஜெக்ட் ஆயிருதுங்கிற பேச்சு இருக்கே?'' என்று கேட்க, “"எல்லாருமே சரியா வேலை பார்த்துருவாங்களா? கொஞ்சம் முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். ரேஷன் கடைல செல்போன் நம்பர வாங்கிட்டு, வாக்காளர் பட்டி யல்ல இருக்கிற பேரை குறிச்சுக்கிட்டு, ஆள் சேர்த்ததா தலைமைக்கு லிஸ்ட் அனுப்புறவங்க இல் லாம இல்ல''” என்றவர், "ஓரணியில் தமிழ்நாடுங் கிறது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறதுன்னு பலரும் நினைக்கிறாங்க. அது கிடையாது. நீங்க ஓரணியில் தமிழ்நாட்டுல இணைய விரும்புறீங்களான்னு கேட்கிறதுதான் முதல் கேள்வி. தமிழ்நாட்டின் மொழி, மானம் காக்க நீங்க எங்ககூட இருக்கீங் களா? தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்க இவ்வளவு திட்டம் தந்திருக்கோம்.
நம்ம மக்களுக்காக ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடுறதுக்கு இப்படி ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைச்சிருக்காரு. தி.மு.க. ஆட்சியே தொடரணும்னு நினைக்கிறீங்களான்னு எதார்த்தமா மக்கள்கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்டு பதில் வாங்குறதுதான் முக்கியம். ஆட்சிக்கு வந்து நாலு வருசம் கழிச்சு ஒரு ஆளும்கட்சி வீடு வீடா போயி, உங்களுக்கு இந்த திட்டங்கள்ல பலன் இருக்கா? நீங்க எங்க ஓரணியில இணைய விரும்புறீங்களான்னு கேட்கக்கூடிய திட்டம் இது. இதுதான் தி.மு.க.வோட பலம். சரியா சொல்லணும்னா.. மக்களுடன் சந்திப்பை நிகழ்த்துறதுதான் இந்தத் திட்டத்தோட நோக்கமே. ஏற்கெனவே 20 சதவீதம் கட்சிக்காரங்க இருக்கிறாங்கன்னா.. இன்னும் 20 சதவீதம் பேரை இந்த ஸ்கீம்ல சேர்க்கணும். இதுவரைக்கும் எந்தக் கட்சி இந்த வேலை பார்த்திருக்கு? இந்த முன்னெடுப்புல 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்திருக்காங்கன்னு கட்சிக்கு தெம்பு தர்ற மாதிரி அறிவிப்பு வந்திருக்கு” என்று உணர்ச்சிபொங்கப் பேசினார்.
அதேநேரத்தில் எந்தக் கட்சியையும் சார்ந் திராத கார்த்திக் “"இது ரொம்ப அநியாயமா இருக்கு. கவர்மெண்ட் பணத்தை எடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகைன்னு சகட்டுமேனிக்கு கொடுத்துட்டு இருக்காரு சி.எம்., இப்ப அதையே ஓட்டாக்குற முயற்சில ஓரணியில் தமிழ்நாடுன்னு சொல்லிக்கிட்டு வீடுவீடா போறாங்க'' என்று கொந்தளித்தார்.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களில் பெண்கள் மத்தியில் தி.மு.க.விற்கு இதுவரை இல்லாத அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. நாகை தொகுதியைச் சேர்ந்த கமலா-சண்முகம் தம்பதியினர் கூறுகையில், "நாங்க நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவங்க, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்குத்தான் ஓட்டு போட்டோம். .மாதம் ஆயிரம் ரூபா கிடைக்குது. அரிசி கிடைக்குது. பஸ்ல ஃப்ரீயா போறோம், இதவிட உழைக்கிற
எங்களுக்கு என்ன வேணும்? சுனாமி காலத்துல கட்டுன வீடுங்க எல்லாமே இடிஞ்சி விழுது, அதை கட்டிக்கொடுத்தா நல்லா இருக்கும்'' என்கிறார்கள்.
சீர்காழி தொகுதியைச் சேர்ந்த ஆர்தர் கூறுகையில், "எங்க குடும்பத்துல மூன்று ரேசன் கார்டு, மூணு பேருக்குமே மாதம் மூவாயிரம் ரூபாய் சீர்வரிசைப் பணம் மாதிரி கிடைக்குது. அதனால குடும்பம் நிம்மதியா போகுது. நிலமிருக்கும் விவசாயிகளுக்கு கிடைப்பதுபோல விவசாயத் தொழிலாளர்களுக்கு சலுகைகள், மானியங்கள் கிடைக்கிறதுக்கும் முதல்வர் வழிபண்ணணும்'' என்றார்.
பெயர் போடவேண்டாமெனக் கேட்டுக்கொண்ட தி.மு.க.வினரோ, "முதல்வரின் சாதனைகளுக்கு இந்தியாவில் இணையில்லை. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும் இருக்கும் கட்சிக்கார பெருந்தலைகளின் அட்ராசிட்டிதான் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்குது. மடிப்பு கலையாத சட்டையோடு காரில் வந்திறங்கி, மக்களை அவர்கள் இருக்குமிடத்துக்கு வரவழைத்து உறுப்பினர்களாகச் சேர்ப்பதையெல்லாம் கண்காணித்து சரிசெய்ய வேண்டும். இது, கட்சி மீதான வெறுப்பாக மாறக்கூடும்'' என எச்சரிக்கை செய்தனர்.
விழுப்புரம் நகரில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் தலைமையில் தி.மு.க.வினர் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார்கள். சிலர் ஆர்வத்துடனும், இன்னும் சிலர், இதே ஆட்சி தொடர்ந்தால்தான் உரிமைத்தொகை, பஸ்ஸில் இலவச பயணம் போன்ற சலுகைகள் கிடைக்குமோவென்ற மனக்குழப் பத்தோடும் உறுப்பினராகச் சேர்வதாகக் கூறுகிறார்கள்.
குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட ஆசாரிபள்ளம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட நிர்வாகிகள் பற்றி, அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. மூத்த உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “"பெருவிளையில் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு மட்டும்தான் போகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே தி.மு.க. அனுதாபிகள். அந்த பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நடக்கும்போது முதல்வர் ஸ்டாலின் செல்போனில் பேசும்போது, இஸ்லாமியர் வீட்டுக்குள் ஓடி, உறுப்பினர் சேர்ப்பதை காட்டிக்கொள்கிறார்கள்''’என்றார்.
ஓரணியில் தமிழ்நாடு சேர்க்கையை ஆய்வு செய்ய நாகர் கோவில், வடசேரி பகுதிக்கு வந்த கனிமொழி எம்.பி.யை வார்டு கவுன்சிலர் வளர்மதி அழைத்துச் சென்றார். அந்த வீட்டிலிருந்தவர்கள், கவுன்சிலரின் உறவினர்கள்தான் என்பது தெரியவந்த தும், "பொதுமக்கள் வீட்டுக்கு அழைத் துச் செல்லாமல், உறவினர் வீட்டுக்கா அழைத்துச் செல்வது?'' என்று கவுன்சிலரை லெப்ட், ரைட் வாங்கிய பின் மற்ற வீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பத்மநாபபுரம் அரண்மனை பகுதியிலோ, வாக்காளர் பட்டியலில் இருக்கும் தெரிந்தவர்களின் பெயர்களுக்கு போன் போட்டு, ‘"நீங்க யாருக்கு ஓட்டு போடணுமோ போடுங்க, ஆனால் உங்க பெயரை ‘ஓரணியில் தமிழ்நாடு’ பட்டியலில் சேர்க்கிறோம். தி.மு.க. தலைமையிலிருந்து போன் வந்தால், நாங்கள் வந்திட்டுப் போனதாக சொல்லிடுங்க''” என்கிறார்கள்.
நெல்லை மத்தி மற்றும் கிழக்கு மாவட்டங் கள், தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங் கள், தூத்துக்குடியின் தெற்கு மாவட்டம் ஆகியவற் றின் மா.செ.க்கள் தங்களின் உறுப்பினர் சேர்க்கை யின் படிவங்களை தலைமைக்கு அனுப்பியிருக் கிறார்கள். அதில், நெல்லை கிழக்கு மாவட்டத்தின் அம்பை மற்றும் பிற சட்டமன்றத் தொகுதிகளில் 75,000, நெல்லை மத்தி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, பாளையில் 80 ஆயிரம், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளில் தலா 65ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்ததாகவும், அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடமிருந்து உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் கட்சித் தலை மைக்கு அனுப்பப்பட்டன. அவற்றை டிஜிட்டல் முறையில் ஆய்வுசெய்த கட்சித்தலைமை, அந்த படிவங்களில் எத்தனை உறுப்பினர்கள் டம்மியாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற உண்மை நிலவரத்தை மண்டலத்தில் அடங்கியுள்ள தொகுதி வாரியாகவே அந்தந்த மாவட்டச் செயலாளர் களுக்கு விரிவான பட்டியலை அனுப்பி வைத்திருக் கிறது. இந்த ஆய்வுப் பட்டியல் மா.செ.க்களிடையே உள்ளுக்குள் பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூனவேலம் பட்டி தி.மு.க. கிளைச்செயலாளர் சரவணன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் உள்பட 5 பேர் குழு, உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாக்காளரையும் தேடி, வீடு வீடாக சளைக்காமல் செல்லும் இந்த குழுவினர், தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்ட தொகுதி, மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட விவரங்கள் அடங்கிய கையேடுகளையும் வழங்கி, உரையாடி, உறுப்பினர் சேர்க்கையை முறைப்படி செய்கின்றனர். குடும்பத்தலைவர் வெளியூர் சென்றிருந்தால், அவரை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தைக்கூறி ஒப்புதல் பெற்றே சேர்க்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அதுகுறித்து குறைப்படுவதை ஆங்காங்கே காணமுடிகிறது. அதேபோல், அரசு ஊழியர்களில் சிலர், "பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகச் சொல்லி ஏமாத்திட்டாரு,' என்ற குற்றச்சாட்டுவைக்க ஆடிப்போனார்கள் தி.மு.க. நிர்வாகிகள். முதல்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவிகள், விஜய்க்கு ஆதரவளிப்பதாக சொல்ல, பெற்றோரோ, தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்தனர். உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த கட்சித் தரப்பிலிருந்து வாக்குச்சாவடி பொறுப்புக் குழுவிற்கு முதற்கட்டமாக 5000 ரூபாயும், அடுத்து 4000 ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 9வது வார்டில், வார்டு செய லாளர் லோகமுத்து, கவுன்சிலர் தெய்வலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் உறுப்பினர் சேர்க்கை யில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் குழாய் வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர். மாநகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்திற்கு நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை, ரோடு ஷோ, நடைபயணம், மாநாடு போன்றவற்றை பார்த்தே பழகிப்போன மக்களுக்கு, இப்படி ஒரு கட்சி, அதுவும் ஆளுங்கட்சியே வீடு வீடாகத் தேடிவந்து திட்டங்களை விளக்கி, குறை களைக் கேட்டு, உறுப்பினர் சேர்க்கையை செய்வது புதுமையாக இருப்பதோடு, பெரும்பாலான மக்களை ஈர்க்கச்செய்கிறது. இதன்மூலம், தங்களுக்கு ஆதரவான வாக்குகளைத் தக்கவைப்பதோடு, மாற்றுக் கட்சி ஆதரவாளர்களையும், குறிப்பாக, அ.தி.மு.க. ஆதரவாளர்களில் பலர் தி.மு.க. பக்கம் திருப்பியிருப் பதைப் பார்க்க முடிகிறது.
(வரும் இதழில் மாவட்டங்கள் தொடரும்...)
-ராமகிருஷ்ணன், எஸ்.பி.சேகர், பி.சிவம், மணிகண்டன், செல்வகுமார், இளையராஜா