தி.மு.க. அரசின் நிர்வாகத்தை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. நிர்வாகத்தின் மீது சாட்டையடி கொடுப்பதன் மூலம் தி.மு.க. அரசை மிரள வைக்க முடியும் என்பதே டெல்லியின் திட்டம் என்கிறார் கள் மத்திய அரசு பணியிலுள்ள தமிழக அதிகாரிகள்.
2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக இப்போதே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது தி.மு.க. தலைமை. தி.மு.க.வை தொடர்ந்து அ.தி.மு.க.வும் இந்த பணிகளில் குதிப்பது குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழுவைக் கூட்டியிருக்கிறது.
தமிழகத்தின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் இப்போதே தேர்தல் பணிகளில் அதீத அக்கறை காட்டத் துவங்கியிருப்பதால் அதனை அலட்சியப்படுத்தாமல் தமிழகத்தில் நிலைநிறுத்தத் துடிக்கும் தனது அரசியலை கட்டமைக்கத் தொடங்கியிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. குறிப்பாக, தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் மீது முதல் கட்ட அட்டாக்கை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இதுகுறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "தி.மு.க. அரசின் நிதி நிலைமை மீது அட்டாக் தொடுப்பதுதான் டெல்லியின் முதல் இலக்கு. அதற்கேற்ப தமிழக அரசு டெல்லியிடம் கேட்கும் தனது உரிமைத் தொகைகளை (நிதி) உரிய காலத்துக்குள் வழங்காமல் கால தாமதம் செய்வதை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் அரசு கஜானா நிரம்பவில்லை. இந்த சூழலில், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிதி அமைப்புகளிடமிருக்கும் சேமிப்புகளை அரசு கஜானாவுக்கு திருப்பிக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
இதன் தாக்கம், அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள், போர்டுகள் என அனைத்திலும் எதிரொலிக்கும். குறிப்பாக, நிதிப் பற்றாக்குறையில் இவை தள்ளாடப்போகின்றன.
இதனை உணர்ந்துள்ள தி.மு.க. அரசு, அதனை சமாளிப்பதற்காகத்தான் இப்போதே பல்வேறு வரி உயர்வையும், கட்டண உயர்வுகளையும் சத்தமில்லாமல் அதிகப்படுத்திவருகிறது. இந்த சூழலைத்தான் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்பார்க்கிறது. அதன் எதிர்பார்ப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
இரண்டாவது இலக்காக, தமிழக அரசிலுள்ள 34 பெரிய துறைகளிலும் தமிழக மக்களின் வரிப்பணம் எப்படி கையாளப்படுகிறது? மத்திய அரசு ஒதுக்கிய நிதிகள் எப்படி செலவிடப்பட்டுள் ளன? என்கிற புலனாய்வைத் தொடங்கியிருக்கிறது. இதற்கான அசைன்மெண்ட்டை சென்னையிலுள்ள ஆடிட் ஜெனரல் தலைமையகத்திடம் கொடுத் துள்ளனர். இதனையடுத்து, தமிழக அரசின் 34 துறைகளிலும் ரகசியமாக புள்ளிவிபரங்களை எடுத்து வருகிறது ஆடிட் ஜெனரல் அலுவலகம்.
ஒவ்வொரு துறையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற திட்டங்கள், செலவிடப்பட்ட தொகைகள், நிலுவையிலுள்ள தொகைகள், டெண்டர் விவகாரங்கள் என பல்வேறு கூறுகளில் நிறைய தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அதனடிப்படையில் நிதித்துறையிடம் தகவல் கேட்டு, கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக் கிறார்கள் ஆடிட் ஜெனரல் அதிகாரிகள். தங்களிடமுள்ள தகவல்களும், நிதித்துறை தருகிற தகவல்களும் ஒப்பீட்டளவில் சரியாக இருக்கிறதா? அல்லது மூடி மறைக்கப்படுகிறதா? என ஆராய்ந்து மத்திய அரசுக்கு ஆடிட் ஜெனரல் அலுவலகம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
அத்துடன் அந்த அறிக்கையை தமிழக மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பொது வெளியில் வெளியிடவும் திட்டம் இருக்கிறது. இவையெல்லாமே, தி.மு.க. அரசின் நிர்வாகத்தை கேள்வி கேட்பதுபோல இருக்கும். அதாவது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி விவகாரம் வெடித்து தி.மு.க. இமேஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுபோல, தி.மு.க. அரசு மீது அதன் தாக்கம் இருக்கும். அதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதனைத் தெரிந்துகொண்டதனால்தானோ என்னவோ, 13-ந்தேதி நடந்த கேபினெட் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது வெளிநாடு பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, "மத்திய அரசு நம்மை கண் காணித்து வருகிறது. எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள்''’என்று அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் முக்கிய சில அதிகாரிகள், மத்திய அரசில் எங்களுக்கு நிறைய சோர்ஸ்கள் இருக்கிறது; அதன்மூலம் அவர்களின் மூவ்மெண்ட்களை அறிந்துகொள்ளலாம் என முதல்வரை நம்பவைத்துள்ளனர். அதுவே இப்போது எதிர்மறையாகப் போய்க்கொண்டி ருக்கிறது என்கிற தகவல்களும் டெல்லியிலிருந்தே கிடைக்கின்றன.
இதுகுறித்து ஆழமாக விசாரித்தபோது, "தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் மத்திய அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பல தகவல்களை சேகரிக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகள். டெல்லியிலுள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பிரதமர் அலு வலகத்தின் அனுமதியோடு அந்த அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகள் தகவல் தருகின்றனர். அந்த தகவல்கள் உண் மையானவை.
உண்மையான தகவல்களை தருவதன் மூலம் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரி கள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த நம்பிக்கையை கடந்த 6 மாதமாக கொடுத்துள்ளனர். ஆனால், தற்போது, டெல்லியின் விளையாட்டு ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது, சமீபகாலமாக, தவறான தகவல்கள் தமிழக அதிகாரிகளிடம் புகுத்தப்பட்டு வருகிறது. அதை உண்மையென நம்பி முதல்வரிடம் தெரிவிக்கின்ற னர். இதன் விளைவுகள் இப்போது தெரியப்போவ தில்லை. தேர்தல் நெருங்க நெருங்க தெரியவரும்.
குறிப்பாக, தி.மு.க. அரசுக்கு எதிராக திட்டமிடப்படும் அசைன்மெண்ட்டுகள் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு சொல்லப் படுவதில்லை. மாறாக, பொய்யான தகவல்களே கொடுக்கப்படுகின்றன. டெல்லி எஜமானர்களின் யோசனைகளின்படியே தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.கள் இதனை செய்து வருகின்றனர். நம்ப வைத்து குழி பறிக்கும் வேலையை டெல்லி பார்த்து வருகிறது. இந்த விபரங்கள், ஸ்டாலினுக்கு நெருக்கமான அந்த அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தான் அக்டோபர் மாதம் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக அமரப் போகிறார். இதைத்தாண்டி இன்னும் இரண்டு விசயங்களை நடத்தியிருக்கிறது டெல்லி. அதாவது, தி.மு.க. அரசின் டாப் லெவலில் உள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இன் அண்ட் அவுட் விவகாரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துள்ளனர். இவர்களில் பலர் தற்போது மத்திய அரசுக்கு விசுவாசிகளாக மாறியிருக்கிறார்கள். இவர்கள், ஸ்டாலின் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? யாரெல்லாம் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்? எதற்காக தலையிடுகிறார்கள்? போன்ற சீக்ரெட் விசயங்களை எல்லாம் டெல்லிக்கு பாஸ் செய்தபடி இருக்கின்றனர்.
ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகளை எப்படி தங்களின் உளவாளியாக மத்திய அரசு மாற்றி வைத்திருக்கிற தோ, அதேபோல தமிழக அரசின் உளவாளியாக டெல்லியில் இருக்கும் அதிகாரிகளை, களை யெடுக்கும் இரண்டாவது அசைன்மெண்டை துவக்கியிருக்கிறது. இதனை நிரூபிப்பது போல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது, மத்திய உள்துறையில் அடிசனல் செக்ரட்டரியாக இருந்தவர் ஹித்தேஸ்குமார் மக்வானா. இவர் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. உள்துறையில் நடக்கும் விசயங்கள் இவர் மூலமாக தமிழக அரசுக்கு லீக் ஆகிறது என ஒருநாள் மாலை 6:42-மணிக்கு உள்துறைக்கு மத்திய உளவுத்துறை தகவல் தருகிறது. உள்துறைக்கு கிடைக்கும் தகவல்கள் மிக சரியான நேரத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசாணை. அதன்படி 6:42-க்கு உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவல் பதிவு செய்யப்படுகிறது.
உடனே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், 6:52-க்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் விவாதிக்கிறார் அமித்ஷா. தமிழக அரசின் உளவாளியாக இருக்கும் மக்வானாவை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு தகவல்களை லீக் பண்ணினார் என ஆக்ஷன் எடுத்தால் மற்ற அதிகாரிகளிடம் ஒருவித நடுக்கம் உருவாகிவிடும் என்பதால், பெண் அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக மக்வானா மீது ஏற்கனவே பெண்டிங்கில் இருந்த புகார்களின் அடிப்படையில் மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டு, டெல்லியிலிருந்து அவர் வெளியே தூக்கியடிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு கேபினெட் செக்ரட்டரி யிடமும் ஆலோசிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு வெளியே டேராடூனில் உள்ள புள்ளி யியல் துறையில் செக்ரட்டரியாக தூக்கியடிக்கப்படு கிறார் மக்வானா. இதெல்லாம் 25 நிமிடங்களில் நடந்து முடிகிறது. உள்துறை வரலாற்றில் அண் மைக் காலத்தில் மிக வேகமாக நடந்த சம்பவம் இது. அதேபோல, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளராக இருக்கும் மங்கத்ராம் சர்மா, தி.மு.க.வின் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர். இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரிடம் தனிச் செயலாளராக இருந்தவர் மங்கத்ராம் சர்மா. இவரின் குடும்ப உறவினர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார். சமீபத்தில் தமிழகத் துக்கு வந்த அவரை, ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார் மங்கத்ராம் சர்மா. டெல்லி யிலிருந்து வந்த அந்த முக்கியஸ்தருக்கு நீலகிரியில் விருந்து உபசரிப்பை செய்திருக்கிறார் ஆ.ராசா.
இந்த சீக்ரெட்டை கோட்டையில் கோலோச்சும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் டெல்லிக்கு போட்டுக்கொடுக்க, அதனை உறுத்திப்படுத்துமாறு உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களும் அதனை உறுதிப்படுத்திய நிலையில், உடனே மங்கத்ராம் சர்மாவின் உயர்நீதிமன்ற உறவினரை வேறு இடத்துக்கு மாற்றியது மத்திய அரசு. இதில் ரொம்பவே அப்செட்டானார் மங்கத்ராம் ஐ.ஏ.எஸ்.
இப்படி தமிழக அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுப்பதும், ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் தவறான தகவல்களை புகுத்துவதும், ஸ்டாலினைச் சுற்றியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வளைத்து வைத்திருப்பதுமான சீக்ரெட் மூவ்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது டெல்லி''’என்று விவரிக்கின்றனர்.