இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்த ஒரு மலையாளியைப் பிடித்திருக்கிறார்கள் அம்மாநிலப் போலீசார். விசாரணையில் அவர் கேரளாவின் பத்தனம்திட்டாவின் பந்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. சந்தேகமடைந்த உ.பி. போலீசார், அவர் தீவிரவாத குரூப்பைச் சேர்ந்தவரா எனக் கடுமையாக விசாரித்திருக்கிறார்கள்.
போன ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கேரளாவிலுள்ள கொல்லம் நகரின் அருகே இருக்கும் பாதம் காட்டுப் பகுதியில் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் சுமார் 200 பேர் இணைந்து அங்கு பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு குரூப் பயிற்சி கொடுத்ததாக அந்த மலையாளி விசாரணையில் சொல்லியிருக்கிறார். இதனால் மிரண்டு போய் அலெர்ட் ஆன உ.பி. போலீசார், அவர் கொடுத்த தகவலை உடனடியாக தமிழக க்யூ பிரிவு போலீஸ் தலைமைக்கு தெரியப் படுத்தி எச்சரிக்கை செய்துள்ளனர்.
தமிழக க்யூ பிரிவினர் கேரள அரசுக்குத் தெரியாமலேயே அந்தப் பகுதிக்கு ரகசியமாகச் சென்று விசாரித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து தமிழகம் திரும்பிய க்யூ பிரிவு அந்தத் தகவலை கேரள மாநிலத்தின் ஏ.டி.எஸ். (ANTI TERRORIST SQUAD)எனப்படும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
கொல்லம் மாவட்டத்தின் பாதம் பகுதி அடர்ந்த மலைக் காடுகளைக் கொண்டது. அங்கே கேரள அரசின் வனத்துறையைச் சேர்ந்த பாரஸ்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் 10 ஹெக்டர் நிலத்தில் அண்டிப்பருப்பு எனப்படும் காஸ்யூ நட் ப்ளாண்டேஷனை அமைத்திருக்கிறது. அந்தப் பகுதிக்கு விரைந்த கேரள போலீஸார் பயிற்சி நடந்ததற்கான அடையாளங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இரண்டு மாதமாக புதர்களை நீக்கி யும் செடிகளை அகற்றியும் சலித்திருக்கிறார்கள். அதே சமயம் ஏ.டி.எஸ். படையும் தன் பங்கிற்கு அந்த இடத்தை அலசியிருக்கிறது.
தீவிரத் தேடலில் 16.6.21 அன்று ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்கள் கிடந்தது தெரியவர, உடனே தகவலை ஏ.டி.எஸ்.ன் தலைமை அதிகாரிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த நாள் அதே இடத்தின் மற்றொரு பகுதியில் இரண்டு ஜெலட்டின்கள் மற்றும் இரண்டு டெட்டனேட்டர்கள், வயர், அதை இயக்குவதற்கான பேட்டரி முதலியவை கிடைக்க, போலீசார் பரபரப்பாகிவிட்டனர். இந்தத் தகவலையடுத்து கேரளாவின் ஏ.டி.எஸ். படை, உளவுப்படை, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய உளவுத் துறை என 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே விரைந்திருக்கிறார்கள்.
கேரளாவின் ஏ.டி.எஸ். படைக்குத் தலைமை தாங்குபவர் டி.ஐ.ஜி.யான அனுப் குருவிளா. இந்த அதிகாரி என்.ஐ.ஏ.வில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அனைத்துப் போலீஸ் படையும் பயிற்சிக்கான வேறு பல ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று ப்ளாண்டேஷன் காட்டுப்பகுதியை அலசியிருக்கிறார்கள். சிக்கிய ஜெலட்டின்கள், டெட்ட னேட்டர்கள் மற்றும் வயர் பேட்டரி போன்றவைகளை தனது குரூப்புடன் சோதனை யிட்டிருக்கிறார் டி.ஐ.ஜி. அனுப் குருவிளா.
அதையடுத்து இன்னொரு பிரிவினர் பாதம் பகுதியிலுள்ள கிராமப்புறங்களில் சந்தேகப் படும்படியாக வேறு யாராவது இந்தப் பகுதிக்கு வந்தார்களா, ஏதேனும் வெடிச் சத்தம் கேட்டதா என்று கிராம மக்களை விசாரணையில் குடைந்திருக்கிறார்கள். யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று பார்க்க முடியாது. ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக்கிலும், மாஸ்க் போட்டுக் கொண்டும் பலர் இங்கு வந்து போவதால், அவர்கள் பற்றிய அடையாளம் எங்களுக்கு எப்படித் தெரியும். எங்களை விசாரணை என்ற பெயரில் நீங்கள் துன்புறுத்துவது, பிளவுபடுத்துவது சரியல்ல. இங்கே காட்டில் விவசாயம் செய்து வரும் சிலர் தங்களது பகுதியை சேதப்படுத்த வரும் காட்டு யானை மற்றும் பன்றிகளை விரட்டுவதற்காக வெடி போடுவார்கள். அது இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுதான் எங்களுக்குத் தெரியும். மற்றபடி நீங்கள் கேட்கிற செயல்பாடுகள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருக் கிறார்கள்.
போலீசாரோ, கிடைத்த எக்ஸ்புளோசிவ் பொருட்கள், தீவிரவாத பயிற்சிக்காக பயன் படுத்தப்பட்டவை என திடமாக நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டையும் கண்காணித்து ரகசிய விசாரணையை மேற்கொள்கின்றனர். எக்ஸ்புளோசிவை ஆய்வு செய்த டி.ஐ.ஜி அனுப் குருவிளா, "எலெக்ட்ரிக் ஜெலட்டினைத்தான் இதுபோன்ற பேட்டரி வயர்களைப் பயன்படுத்தி வெடிக்க முடியும். ஆனால் எலெக்ட்ரிக் அல்லாத நான்-எலெக்ட்ரிக்கல் ஜெலட்டினை இந்த பேட்டரி கொண்டு வெடிக்க வைக்க முடியாது. இங்கு கிடைத்த ஜெலட்டின்கள் எலெக்ட்ரிக்கல் அல்லாத வகைகளைச் சேர்ந்தது. அப்படியிருக்க பேட்டரியும் வயரும் சேர்த்து போட்டிருக்கிறார்கள். பொருட்களை அலசும்போது ஏதோ தீவிரவாத பயிற்சி மற்றும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் உள்ளது. விசாரணையை திசை திருப்பும் நோக்கத்தில் போடப்பட்டுள்ளதா என்றும் ஆராய்கிறோம்.
மேலும் இந்த ஜெலட்டின்களில் SUN 90 என்ற அடையாளம் மட்டுமே இருக்கிறது. இது தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள உரிமம் பெற்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. பேட்ச் நம்பர் போடப்படவில்லை. அது இருந்திருந்தால் நிறைய விவரங்கள் கிடைத்திருக்கும். தொடர்ந்து விசாரிக்கிறோம்'' என்றார்.
கடவுளின் தேசத்தின் காடுகளில் சலசலப்பு கேட்கிறது..