பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பானிபூரி, பேல்பூரி, சோன்பப்படி விற்கும் இந்திக்காரர்கள்தான் தமிழகத்தில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ தமிழர்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். கட்டிட வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளாக தமிழகத்திற்குள் படையெடுத்த வடநாட்டவர்கள், இப்போது டீக்கடை, சாதா ஓட்டல், ஸ்டார் ஓட்டல், மால் தியேட்டர்கள் என எல்லா இடங்களிலும் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லாமல் திண்டாடும் தமிழக இளைஞர்களின் பாடுதான் பெரும்பாடாக இருக்கிறது.
வடநாட்டு இளை ஞர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தும் ஓட்டல் முதலாளிகளான நம்ம ஊர்க்காரர்களைக் கேட்டால், "அவன்தான் க்ரில் சிக்கன் போடுறான், பார்பிகியூ சிக்கன் போடுற துல எக்ஸ்பர்ட்டா இருக்கான்' என சாக்குப் போக்கு சொல்கிறார்கள். பிழைக்க வந்த வடநாட்டு இளைஞன் நம்ம தமிழைக் கத்துக்குறானோ இல்லையோ, ஏக் கிளாஸ் பானி, தீன் புரோட்டா, படா சால்னான்னு நம்ம ஆளுங்க இந்தியில பொளந்து கட்ட ஆரம்பிச் சுட்டாங்க.
தமிழகத்தில் ரயில்வேதுறை பணிகள், மெட்ரோ ரயில், விமான நிலையம் இங்கெல்லாம் வடநாட்டவர்களை வலிந்து திணிக்கும் மோடி சர்க்காரின் நீட் தேர்வு கைங்கர்யத்தால், மருத்துவத்துறையில் வடநாட்டவர்களின் கொடி அதிகளவில் பறக்க ஆரம்பித்துவிட்டது. இப்படியெல்லாம் தமிழகத்தைக் குறிவைத்து மத்திய அரசு செயல்படுவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 17% குறைந்து விட்டது. அதே நேரத்தில், வட இந்தியர்களின் ஆதிக்கம் பல மட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திலிருந்து திருநெல் வேலிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் வந்து நின்ற போது, அங்கு பணியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப், உ.பி.யைச் சேர்ந்த விகாஸ் குப்தா ஆகியோர், அரசு பஸ் டிரைவர் நாராயணனிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர்.
""அரசாங்கம்தான் மொத்தமா பணம் கட்டுதே, அப்புறம் எதுக்கு நீ தனியா கேட்குற'' என டிரைவர் நாராயணன் கண்டக்டர் பசும்பொன் முடியரசு ஆகியோர் கேட்டபோது, ""அதெல்லாம் தெரியாது, பணம் கொடுத்துதான் ஆகணும்'' என அடாவடியாகப் பேசியதுடன் பளாரென டிரைவரின் கன்னத்தில் அறைவிட்டதும் டென்ஷனான டிரைவர், பஸ்ஸை டோல்கேட்டின் குறுக்குவாட்டில் நிப்பாட்டிவிட்டார். இதனால் மூன்றுமணி நேரம் அந்த சாலையே ஸ்தம்பித்தது.
ஏற்கனவே கவர்மெண்ட் பஸ் உருட்டிக்கிட்டு போகும்; இதுல இது வேறயா' என பஸ்ஸுக்குள் இருந்த மக்களும் மற்ற வாகனங்களில் வந்த மக்களும் கடுப்பாகி, டோல்கேட்டை அடித்து நொறுக்கி கலவரக்காடாக்கிவிட்டனர். தகவல் கேள்விப்பட்டு, ஸ்பாட்டுக்கு வந்த செங்கல்பட்டு போலீசார், லேசாக தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசு பஸ்ஸின் டிரைவர், கண்டக்டரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, குல்தீப், விகாஸ் குப்தா மற்றும் ஊழியர்களான முத்து, ரவி உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர்.
வடநாட்டவர்களின் படையெடுப்பை தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கடுமையாக கண்டித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டில் பணிபுரியும் வடநாட்டவர்களின் அடாவடியை அடிக்கடி சுட்டிக் காட்டியதுடன், கடந்த சனிக்கிழமை சூறையாடப்பட்ட, இதே செங்கல்பட்டு-பரனூர் டோல்கேட்டையும் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டையும் த.வா.க.வினர் சில மாதங்களுக்கு முன்பு அடித்து நொறுக்கினர்.
இந்த டோல்கேட்டில் மட்டும் அடிக்கடி கலவரம் ஆவது குறித்து லோக்கல் பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது, ""இப்ப "பாஸ்டேக்' வந்த பிறகு மற்ற டோல்கேட்டுகளிலெல்லாம் பிரச்சினை யில்லாம வண்டிகள் போய்க்கிட்டிருக்கும். ஆனா இங்க மட்டும், கம்ப்யூட்டர் பிரச்சினைன்னு மணிக்கணக்கில் வண்டியை நிப்பாட்டுவானுங்க. அதேபோல் ஆட்டோமெட்டிக் ஸ்டாப் & கோ ஸ்டிக்கும் வேலை செய்யாது. திடீர்னு ஒருந்தன் வண்டிக்கு குறுக்க வந்து குதிச்சு காசு கேட்பான். டோல்கேட்டில் வேலை செய்யும் முக்கால்வாசி பேர், ராத்திரி எட்டு மணிக்கு மேல முக்கால் போதையில இருப்பானுங்க. தகறாறு நடப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்'' என்கிறார்.
மாதத்தில் பதினைந்து நாட்கள் காரில் பயணிக்கும் சுப்பிரமணி என்பவர் நம்மிடம் பேசும் போது, ""ஒரு நாளைக்கு சராசரியா அப்&டவுன் 3 லட்சம் வாகனங்கள் இந்த டோல்கேட்டை கடந்து போகுது. கட்சிக் கொடி, சாதி சங்க கொடி கட்டிய கார்களை மறிக்கும் போது, "ஏய்...' என சவுண்ட் விட்டா போதும்... கப்சிப்பாகிவிடுவார்கள். ஏப்பை சாப்பையா இருந்தா அவ்வளவுதான் தொலைஞ் சுது. அதேமாதிரி சென்னை புறநகர்களில் மட்டும் 8 லட்சம் வடநாட்டவர்கள் வசிக்கிறார்கள். நாளுக்கு நாள் இவர்களின் குடியேற்றமும் அதிகமாகிக்கிட்டே போகுது. தமிழ்நாட்டை வடநாட்டுக்கு குத்தகை விட்டுட்டாங்களா?'' என்கிறார் கோபத்துடன்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழன், இப்போது நொந்து வெந்துகொண்டிருக்கிறான்.
-ஈ.பா.பரமேஷ்வரன், அரவிந்த்