தென்னக மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைக் கூட தமிழகம் மிஞ்சிவிட்டது. அடுத்த வாரம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை தமிழகத்தில் வரும்'' என்கிறார்கள் கொரோனாவின் பாதிப்பை ஆராயும் மருத்துவர்கள். அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தபோது 25,000 தினசரி கொரோனா பாதிப்பு என இருந்த தமிழகம், தற்பொழுது 50,000 தினசரி பாதிப்பு வரும் என்கிற நிலைக்கு என்ன காரணம் என மருத்துவர்கள் வட்டாரத்தைக் கேட்ட பொழுது, அவர்கள் அதற்கான காரணங் களை அடுக்கினார்கள்.

tn

"தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவந்த கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்துவதில் மிக முக்கிய மானது தொற்று நோயைக் கண்டுபிடிப்பது. முன்பெல்லாம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்றால், அவருக்கு நெருக்கமாகப் பழகும் பத்து பேரிடம் கொரோனா டெஸ்ட் எடுப்பார்கள். அப்படிப் பார்த்தால் தினசரி 35,000 பேருக்கு மேல் கொரோனா வருகிறது என்றால் குறைந்தது மூன்றரை லட்சம் பேருக்கு அடுத்த நாள் கொரோனா டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் ஒன்றரை லட்சம் பேருக்குத்தான் தமிழக அரசு கொரோனா டெஸ்ட் எடுக்கிறது.

அப்படியென்றால் ஒரு ஆள் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் அவரைச் சுற்றியுள்ள ஐந்து பேருக்குத் தான் கொரோனா சோதனை எடுக்கப்படுகிறது. சர்வதேச விதிகள் இதில் மீறப் படுகிறது. ஒரு கொரோனா நோயாளி அதிக பட்சம் 450 பேருக்கு கொரோனாவைப் பரப்புவார் என்கிற மருத்துவக் கண்டு பிடிப்பை தமிழக அரசின் சுகாதார அதிகாரிகள் மறந்து விட்டார்கள். இது ஆபத்தானது. இன்று வரை தொற்றின் வீரியத்திற் கேற்ப சோதனைகளின் எண்ணிக்கையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்யாமல் அலட்சியம் காட்டுவது எதனால் என்று புரியவில்லை'' என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Advertisment

tn

"முறையான சோதனை இல்லா விட்டால் கொரோனா பரவலைத் தவிர்க்க முடியாது. கொரோனாவின் முதல்அலையின் போது தமிழகத்தில் அந்த நோயைக் கண்டுபிடிக்க காய்ச்சல் முகாம்கள் சென்னை நகர வீதிகளில் நடத்தப்பட்டது.

முதல் அலை உச்ச கட்டத்தை அடைந்தபோது வீடு வீடாக சென்னை போன்ற பெருநகரங்களில் சோதனைகள் தொடர்ந்து நடந்தது. இப்பொழுது அப்படி எதுவும் நடக்கவில்லை. முந்தைய தொற்றைவிட மிக வேகமாக கொரோனா சென்னை நகரில் பரவிவருகிறது. சோதனைகள் நடத்தி ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் நோயாளிகள் ஆக்சிஜன் தேவை என்கிற இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியும்.

Advertisment

இரண்டாவது தொற்று நேரடியாக நுரையீரலைத் தாக்குகிறது என்கிற அபாயம் இருப்பது ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கும் என்பதால் நோயை முதல் கட்டத்திலேயே கண்டுபிடித்தால் இன்று ஆக்சிஜன் இல்லை, படுக்கைகள் இல்லை, ஆரம்பத்திலேயே மரணம் என்பதை தவிர்க்க முடியும். அதை ஏன் அரசு செய்ய மறுக்கிறது'' என கேள்வியெழுப்புகிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

tn

"கடந்த கொரோனா அலை நகரங்களில் மட்டும் பரவியது. இந்த கொரோனா அலை பெரிய நகரங்களைத் தாண்டி சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெரிதாகப் பரவுகிறது. கடந்த அலையைச் சமாளிக்க நகரப்பகுதிகளில் மட்டும் பரிசோதனைக் கூடங்கள் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் சோதனைகள் நடத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது கிராமங்களையும் தாக்கும் கொரோனாவால் எப்படி சோதனைகள் செய்வது என புதிய அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

உதாரணத்துக்கு, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா சோதனை செய்ய ஒரே ஒரு பரிசோதனைக்கூடம்தான் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் அதே நிலைதான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதே நிலைதான். இந்தப் பரிசோதனைக்கூடங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்க வசதியானவர்கள் வருகிறார்கள். அரசும் இந்த லேபை நம்பித்தான் இருக்கிறது. தினமும் குவியும் மாதிரிகளின் முடிவில், கொரோனா இருக்கிறதா என தெரிந்து கொள்ளவே ஒருவாரமாகிவிடுகிறது. அத்துடன் சிறு நகரம் மற்றும் கிராமப்புறங் களில் கொரோனாவைக் கையாளும் ஊழியர்களும் டாக்டர்களும் இல்லை.

ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளும் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. மருத்துவமனைகளும் போதிய அள விற்கு இல்லை. கேரளாவில் கன்னூர் என்கிற கிராம பஞ்சாயத்து சபை, ஒரே வாரத்தில் 15 லட்ச ரூபாய் செலவு செய்து 12 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், அது தவிர மூன்று ஆக்சிஜன் படுக்கைகள், அதற்குமேல் 50 சாதாரண படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனைகளைக் கட்டி சாதனை படைக்கிறது.

உள்ளாட்சி அமைப் புகளை கொரோனாவிற்கு எதிரான போரில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேரள உதாரணம், தமிழ கத்தில் பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சித்துறை செயலாளரான ஹர்மிந்தர் சிங் ஐ.ஏ.எஸ். எந்த கொரோனா எதிர்ப்பு நிகழ்விலும் பங்கெடுக் கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பில் கொள்ளை யடித்துக் கொடுத்த அமைச்சர் வேலுமணியின் வலதுகரமான ஹர்மிந்தர் சிங், எதை யும் செய்யவில்லை. தமிழக அரசும் உள்ளாட்சித் துறையைப் பயன்படுத்த வில்லை'' என கொதிக்கிறார்கள் சமூக அக்கறைகொண்ட மருத்துவர்கள்.

tn

"தமிழக அரசைப் பொறுத்த வரை, மருத்துவமனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்த் துக் கொள்கிறார். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்குவதை முதல்வரின் செயலாளரான டாக்டர் உமாநாத் பார்த்துக் கொள்கிறார். இவர்கள் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் தான். இன்றள விலும் உபகரணங் களை சப்ளை செய்யும்போது அதில் விஜயபாஸ்கர் காலத்தில் நடந்தது போலவே கமிஷன் அரங்கேறுகிறது'' என குற்றம்சாட்டு கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

"டெல்லியில் 68,043 என்கிற தினசரி கொரோனா பாதிப்பு தற் பொழுது 1649 என குறைந்துவிட்டது. டெல்லிதான் இந்தியாவிலேயே இரண்டாவது கொரோனாவிற்காக லாக்டவுன் அறிவித்த முதல் மாநிலம். நாங்கள் மூன்றாவது அலையை சமாளிக்க தயாராகிவிடோம்'' என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு பல நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டும் கொரோனா பாதிப்பு குறையாததற்கு, அதிகாரிகளு டன் உளவுத்துறை மீதும் குற்றம்சாட் டுகிறார்கள். தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு மிக மோசமாக இருந்தது என்பது அது அமல்படுத்தப்பட்ட முதல் நாளே தமிழக போலீசின் உளவுத் துறைக்குத் தெரியும். உளவுத்துறை தலைவ ரான டேவிட்சன் தேவ ஆசீர் வாதமும் காவல்துறை தலைவரான டி.ஜி.பி. திரிபாதியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கொரு முறை தங்களுக்குள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றி பேசிக் கொள்ள வேண்டும் என்பது விதி.

தமிழகத்தில் புதிய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மக்கள் மதிக்கவில்லை என்று அது அமல் படுத்தப்பட்ட முதல் அரைமணி நேரத் திலேயே உளவுத்துறைக்குத் தெரிய வரும். அதை நன்றாக அமல்படுத் தினால்தான் தமிழகத்தில் கொரோனா வை கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் அறிவித்த அறிவிப்பு வீணாகப்போகிறது என்பதை உளவுத் துறை தலைவர் டேவிட்சன் மேலிடத் தில் சொல்ல வில்லை என்கிறது காவல் துறை வட்டாரங்கள்.

மாவட்ட எஸ்.பி.க்கள், கலெக் டர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த உளவுத்துறையும் அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகளால் நிறைந்திருக்கிறது. கடந்த பத்து வருட அ.தி.மு.க. ஆட்சியில், மாநில உளவுத்துறை யில் ஒரு கான்ஸ்ட பிளைக் கூட மாற்றவில்லை. இப்படிப் பட்ட காவல்துறையை வைத்துக் கொண்டு எப்படி ஊரடங்கை வெற்றி கரமாக்க முடியும்'' என கேள்வி எழுப்புகிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

"மத்திய அரசும் தமிழக அரசுக்கு ஒத்துழைக்கவில்லை. தடுப்பூசிகளைத் தேவையான அளவிற்கு வழங்கவில்லை. நிலைமை இப்படியே போனால் தொற்று தீவிர மாகப் பரவி அதுவாகவே கீழிறங் கும் வரை காத்திருக்க வேண்டியது தான். மக்களின் உடல் கொரோ னா தாக்குதலை எதிர்கொண்டு, எதிர்ப்பு அணுக்கள் உருவாவதன் காரணமாக நிலைமை சீரடைந்தால் தான் உண்டு என்ற கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும்'' என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

"ஆட்சிக்கு வந்ததைவிட நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நாள்தான் மகிழ்ச்சியான நாள்'' என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒருவார கால தளர்வுகளற்ற முழு ஊரடங்கில், அதிகாரிகள் -உளவுத் துறையினரின் அக்கறையற்ற செயல் பாடுகளைக் கண்டறிந்து -களைந்து -தீவிர நடவடிக்கைகளை மேற்கொள் வதன் மூலம்தான் முதல்வர் எதிர் பார்க்கும் மகிழ்ச்சியான நாள் வரும்.