விப்பேரரசு வைரமுத்து, தமிழாற்றுப்படையில் கட்டுரைப் பேரரசாக நிமிர்ந்து நிற்கிறார். எங்கும் நின்று நிலைபெறும் தமிழ் அவருடையது.

குரல் அவருடையது. இயலும் இசையும் அவருடை யது. அதனால்தான் பாட்டில் நின்றவர். ஏட்டிலும் நிற்கிறார். பெரும்பாலும் பாடலாசிரியர்களைப் பேசச்சொன்னால், மைக் மரணம் அடைந்துவிடும். பேச்சாளர்கள், பாட்டெழுத வந்தால் இசையறை, கல்லறை ஆகிவிடும். பாட்டும் மேடையும் ஒரு சிலருக்கே வாய்த்தது. அதில் ஒருவர் வைரமுத்து. எதிலும் ஒருசிலரில் ஒருவராய் இருத்தலே அவரது சிறப்பு.

"தமிழாற்றுப்படை'யெடுப்பை வைரமுத்து தொடங் கியபோது "வழக்கமானதுதான்' என்று நான் நினைத்ததை மறைக்கத் தேவையில்லை. வரிசைப்படுத்துதலும் பட்டிய லிடுதலும் பழக்கமானதுதான் என்று முதலிரண்டைக் கவனிக்கவுமில்லை. ஆனால் என்னைத் திடுக்கிட வைத்தவர் வைரமுத்து அல்ல, "திருமூலர்'தான்.

vairamuthu

Advertisment

""மேற்குலகம் பருப்பொருளின் பௌதிக ஆராய்ச்சியில் புகுந்து புறஉலகின் அகலங்காணப் புறப்பட்ட வேளையில், கிழக்குலகம் மனமென்னும் நுண்பொருள் ஆராய்ச்சியில் நுழைந்து அகவெளியின் ஆழங்காணப் புறப்பட்டது...'' என்ற வரிகள் அடுத்த வரிக்கு தாண்டவிடாமல் தடுத்து ஒவ்வொரு சொல்லையும் உரசிப்பார்க்க வைத்தது... மெல்லக் கடக்கிறேன்.

""கடவுள் என்பது வெறும் உள்ளூர்ச் சரக்கன்று. உலகச் சரக்கு. கடவுளைக் கடக்க வேண்டுமானால் முதலில் கடவுளைச் சந்திக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் "கடவுள் வந்த காலமும், வந்துபோன காலமும்' என்ற ஒன்று வரும்'' என்ற வரிகள் இன்னும் சிந்திக்க வைத்தன. ""இயற்கை மனிதனை மிரட்டியபோது அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார். ஒரு படைப்பாளன் கடவுளுக்கு உருவம் தந்த காலையில் கலையின் கருப்பையில் கடவுள் பிறந்தார். ஆளும் வர்க்கம், அடிமை வர்க்கத்தை அடக்கியாளக் கருதியபோது நிறுவனத்தின் கருப்பையி லிருந்து கடவுள் அவதரித்தார். கடவுளின் தேவையிலிருந்து மனிதகுலம் விடுபடும் யுகத் தில் கலையில் மட்டுமே கடவுள் மிஞ்சுவார். பிறகு "கற்பித்த உரு வம் கழிந்து ஒரே ஓர் உணர்வாக மட்டுமே கடவுள் கருதப்படுவார்'' என்ற வரிகள், உலகாற்றுப்படை யாக அதுவும் உள்ளுணர்வாற்றுப் படையாக மாறி நின்றதை திருமூலர் வழியாக வைரமுத்து கவனிக்க வைத்தார். அதிலிருந்து அல்ல, அதற்கு முன்னால் இருந்து மீண்டும் தோண்டி வாசிக்க ஆரம்பித்தேன்.

tta

Advertisment

தொல்காப்பியர் தொடங்கி அப்துல்ரகுமான் வரையிலான 24 ஆளுமைகள் சார்பான தமிழ் வணக்கம் வைத்தாக வேண்டும் வைரமுத்துவுக்கு.

ஏனென்றால், தமிழ் இன்று இப்படியொரு புலவனுக் காகத்தான் காத்திருந்தது. மொழி வெறும் கருவி அல்ல, உணர்வு. உணவு. இரண்டும் கலந்தது தான். உணர்வாக இருந்தாலும் உணவாக இருந்தா லும் ஊட்டப்படத்தான் வேண்டும். அப்படி ஊட்டுவதற்கு காலம் சில ஆசான்களை அதன் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து வருகிறது. அப்படிக் காலம் வழங்கிய கடமை யைத்தான் வைரமுத்து சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்.

இந்தக் காலத்தில் வாழும் தமிழனுக்கு "தமிழ்மொழி' தேவைப்பட வில்லை. அது அவனுக்கு தேவையான பல்பொருள் அங்காடியில் அவசியம் இருக்க வேண்டிய பொருளாக இல்லை. அது புறக் கணிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவனுக்குள் தமிழ்ப் பெருமை இருக்கிறது. "தமிழர்கள் பெருமைக் குரிய இனம்' என்று எங்கோ கேட்ட குரல் இருக்கிறது. "மற்ற மொழிகளைவிட, மற்ற இனங்களைவிட நாம் வித்தியாசமானவர்கள்' என்ற பெருமிதம் இருக்கிறது. எதனால் என்றால் சொல்லத் தெரியவில்லை. எதனால் என்று அவன் உணர, அவனுக்கு புரிந்தமொழி யில் உணர்த்த யாரும் இல்லை. பல்கலைக்கழ கங்கள் இன்னமும் "கோட்பாட்டு' ஆராய்ச்சிகளில் இருக்கின்றன. நவீனம், வேர்களற்ற ஒரு மொழியை மென்று கொண்டு இருக்கிறது. இந்த இரண்டுக் கும் மைத்தியமான பழந்தமிழை இன்றைய நவீன மனம் புரிந்து கொள்ளும் மொழியில் சொல்ல ஒருவருக்கு 90-க்குப் பிறகு பிறந்தவர்கள் காத்திருந்த வேளையில் வைர முத்துவின் தமிழாற்றுப் படையெடுப்பு நடக்கிறது. நிகழ்காலத்தோடு அல்ல, கடந்த காலத்தோடு ஒரு கவிஞன் நடத்தும் தமிழ்ப்போர் இது.

போர் என்றால் அது வெறும் சண்டை, யுத்தம் அல்ல. அது ஒரு காலக்கட்டம். முன்பின் பிரிப்பதே போர்கள்தான். இந்தப் போர் மூலமாகக் கடந்தகாலம் வைரமுத்துவின் வார்த்தைகள் மூலமாகக் கட்டி இழுத்துவரப்படுகிறது. இந்த அறிவுப்போரை நடத்தியவர்களே, ஈராயிரம் ஆண்டுத் தமிழை இன்று வரைக்கும் கடத்திவந்தவர்கள்.

ஈராயிரம் ஆண்டுத் தமிழை ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் கடத்தி வந்த பெருமை படைப்பாளிகளைவிட விமர்சகர்களுக்கே உண்டு என்பதை படைப்பாளிகள்கூட மறுக்க மாட்டார்கள். சி.வை. தாமோதரரும், உ.வே.சா.வும், வெள்ளைவாரணாரும், அவ்வை துரைசாமியும், ந.மு.வேங்கட சாமியும் சி.இலக்குவனாரும், மா.இராச மாணிக்கனாரும், இரா.இளங்குமர னாரும், புலியூர்க்கேசிகனும் இல்லாமல் போயிருந்தால் பழந்தமிழ், புலவர்களின் புழக்கடையாகவே மாறியிருக்கும். அரிய பல இலக்கியங்கள் படிக்கப்படாத, அதன் அருமை தெரியாத தமிழாகப் போயிருக்கும். இலக்கண ஆடைகளை விலக்கி இலக்கியத்தோடு வாழ அனுமதித்த எழுத்தச்சர்களே பதிப்பித்தவர்கள், உரையாசிரியர்கள். விமர்சர்கர்கள். பொருள் கைக்குக் கிடைத்ததும் கொண்டுவந்தவரை மறந்துவிடுதல்போல் இவர்களை மறந்துவிட்டது இந்தச் சமூகம். இந்த வரிசையில் வைக்கப்பட வேண்டியவரே வைரமுத்து.

உலகில் எந்த மொழிக்கும், எந்த இனத்துக்கும் இத்தகைய பெருமைக்குரிய மனிதர்கள் ஏடு தோன்றிய காலம் வரைக்கும் இருந்தது இல்லை.

வைரமுத்துவின் மொழியில் இருந்து சொல்கிறேன்...

ஆரிய வரவினால் தமிழுக்கு நேரவிருந்த பெரும் பின்னடைவிலிருந்து தமிழைக் கட்டிக் காத்த தொல்காப்பியர்.

கடைசி மனிதனின் திசுக்களில் ஆதிமனிதனின் மரபணுக்கள் அதிரும்வரை இருக்கும் கபிலர்.

அறிவறத்திலும் துறவறவத்திலும் முறைபோகிய ஒரு மூதாட்டிக்கு தமிழ்ச்சமூகம் வழங்கிய பட்டமே அவ்வை.

தமிழர்களால் தள்ளி வைக்கப்பட்ட தங்கம், வேள்விப்புகை கண்மூடியதால் காணப்படாத ஞானத்திருவோலையாம் திருவள்ளுவர்.

ttta

திராவிடப் பெருஞ்சமூகத்தின் பெருமைகூர் தொல்லெச்சம் படைத்த இளங்கோவடிகள்.

துய்ய துறவுக்கான மெய்யளவுகோலான அப்பர்.

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத பெண் மொழியை முதன்முதலாகப் பேசிய ஆண்டாள்.

களம்பாடிய, வீரவளம் பாடிய, பகைவர் புலம் பாடிய, குருதிக்குளம் பாடிய, சொல்லில் சிலம்பாடிய செயங்கொண்டார்.

மொழிப்பெருக்கம் செய்த கம்பர்.

கருமூலம் கண்டு சொன்ன திருமூலர்.

சமயம் ஏற்றிப் பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்துக்கு ஏற்றிய கால்டுவெல்.

அக்கினிக் குவியலுக்குப் பிறகும் சாம்பலாகாத வள்ளலார்.

நாடுதோறும் ஏடு தேடி ஓடி அலைந்து சந்தன மாய்த் தேய்ந்த அந்தணக்கிழவன் உ.வே.சா.

தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த ஒரு நூற்றாண்டு வெடிப்பாம் மறைமலையடிகள்.

இருண்டு கிடந்த மொழிக்கு சோதி ஏற்றிய பாரதி.

அடிமண்ணை மேல்மண்ணாகவும் மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக் கலப்பை பெரியார்.

எட்டயபுரத்துக் கவியெ டுத்து ஈரோட்டுக் கருத்தெடுத் துக் காலம் திரட்டிக் கொடுத்த திருப்பொருள் பாரதிதாசன்.

தொண்டைக்குழி அழுத்தப்பட்ட மனிதர்களின் மர்மக்குரல் புதுமைப்பித்தன்.

உட்பகை, வெளிப்பகை இரண் டையும் கண்ணீராலும் சொற்க ளாலும் வென்றெடுத்த அசலில் இருந்து பிறந்த அசல் அண்ணா.

தமிழர் இருந்த பள்ளத் துக்குத் தமிழைத் தாழ்த் தாமல், தமிழ் இருந்த உயரத் துக்குத் தமிழை உயர்த்திய கலைஞர்.

வேறெப்போதும் காணாத அதிசயம் கண்ணதாசன்.

பாட்டுப்பயணத்தில் காலப்புழுதியால் அழிக்க முடியாத பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்.

இலக்கியத்தில் துப்பப்பட்டவனின் வாழ்க்கையில் துரத்தப்பட்டவனின் அசல் வலியைச் சொன்ன ஜெயகாந்தன்.

தமிழ் இலக்கியத்துக்கு புதிய சுவாசங்களைப் பரிசளித்த அப்துல்ரகுமான்.

ttat

என்ற இருபத்து நான்கு ஆளுமைகளை ரத்தமும் சத்தமுமாகக் கொண்டுவந்து கொடுத்துள்ளார் வைர முத்து. இவை வெறும் இலக்கியச் சுவை அல்ல. இலக்கண விளக்கம் அல்ல. கோட்பாட்டு வாசிப்புகள் அல்ல. ஒப்பீடுகள் அல்ல. அவர்களின் ஆதியும் அந்தமும். அப்படி எழுதப் புகுதல் நம் ஆவியை வாங்கிவிடும் என்பதை கவிஞரும் உணர்ந்தே காலைவிட்டு இருப்பார். ஒருவரின் ஆதி அந்தம் எழுதுதல் என்பது "எழுதுதல்' மட்டுமல்ல. அவர்களாகவே நாம் வாழ்தல். இப்படித்தான் இருபத்துநான்கு பேராக வைரமுத்து வாழ்ந்து பார்க்கிறார். வாழ்ந்து பார்க்க நினைப்பவர்க்கு ஒரு சிக்கல் வரும். தன்னைப் போலவே அவர்களையும் நிறுவ வேண்டும். "இளங்கோவடிகள் -அண்ணா -கண்ணதாசன்' ஆகிய மூவரையும் மிகநேர்த்தியாக நிறுவுகிறார் வைரமுத்து. கண்ணகி "முலை' திருகி எறிந்ததையும், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதையும்... கண்ண தாசன் கட்சி கட்சியாக மாறியது என்ற சூழ்நிலைகளை எல்லாம் வைரமுத்து "அவர்களாகவே' மாறிச் சொல்வதை அவர்களே கூட அப்படி நியாயப்படுத்திவிட முடியாது.

தன்னைப் பற்றிப் புதுமைப்பித்தன்கூட இப்படி எழுதியிருக்க முடியாது. ""1948 ஜூன் 30 நள்ளிரவில் திருவனந்தபுரத்தில் இறந்து போனார். ஜூலை 1 எரியுண்டார். எலும்பையும் அந்த எலும்பை மூடி வைத்திருந்த சதையில்லாத தோலையும் வறுமை, காசநோய் என்ற இரண்டும் முன்பே தின்று முடித்திருந்ததால் எரிகாட்டில் ஏமாற்றமடைந்திருக்கக் கூடும் தின்பதற்கு மாமிசமில்லாத தீ. எந்த வறுமை அவரைச் சாகடித்ததோ அதுதான் அவர் செய்த கலை. கலைக் கருவுக்கு உயிர்த்திரவம் சுமந்தோடிய தொப்பூழ்க்கொடியே அந்த வறுமைதான்..... நாற்பத்திரண்டு ஆண்டுகால வாழ்வின் வழியெங்கும் கசப்புகளையும் ஏமாற்றங்களையும் வறுமையையும் வியாதிகளையும் விழுங்கியவர் தன் எழுத்தில் பொய் நம்பிக்கையைப் புனைந்து வைக்க முடியவில்லை. ஆனால் விஷச்செடிகளைத் தின்றாலும் வெள்ளாட்டுப்பாலில் விஷமில்லை என்பது மாதிரி அவர் வாழ்வில் தின்ற விஷம் எழுத்தில் இறங்கவில்லை. அது புரதமாகிவிட்டது'' என்ற மொத்த வரிகளுக்குள் புதுமைப்பித்தனின் மொத்த வாழ்க்கையும் இலக்கியமும் அடங்கிவிட்டது. படைப்பை மட்டுமல்ல படைப்பாளியையும் படித்த படைப்பாளியால் மட்டும் தான் இப்படி எழுத முடியும்.

வைரமுத்து கவிஞர். அதனால்தான் கபிலர், அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், கம்பர், திருமூலர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், அப்துல்ரகுமான் ஆகியோராய் வாழ்ந்து பார்க்க முடிந்தது.

வைரமுத்து கதாசிரியர். அதனால்தான் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை உணர்ந்தெழுத முடிந்தது.

வைரமுத்து மொழிஆய்வாளர். அதனால் தொல்காப்பியர், உ.வே.சா., மறைமலையடிகள் ஆகியோரை புரிந்தெழுத முடிந்தது.

வைரமுத்து திரையுலகத்தினர். அதனால் அண்ணா, கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் புரிந்தெழுத முடிந்தது.

இந்தத் தமிழாற்றுப்படைக்குள் பெரியார் எப்படி வந்தார்? வைரமுத்து, திராவிட இயக்கத்துக்காரர். அதன் தமிழ் இன, மொழி அரசியலின் விளைச்சல். அதனால்தான் பெரியாரையும் தமிழாற்றுப்படைக்குள் கொண்டுவந்துவிட்டார். அதில்தான் இருக்கிறது பெரியாரின் பெருமையும் வைரமுத்துவின் பெருமையும்.

இருபத்துநான்கு பேரை அடையாளம் காட்டும் புத்தகம் மட்டுமா இது? இருபத்தைந்தாவதாக வைரமுத்துவையும் அடையாளம் காட்டும் புத்தகம் இது. பெரியாரின் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: "இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலைபெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்; இன்னொருவர் பெரியார்'. உள்ளே இருக்கும் தமிழன் குரல் இது.

திருவள்ளுவர் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: "என் வாழ்வின் நிறைவிற்குப் பிறகு என் தாய்மண் ணின் இரண்டாம் கருக்குழியில் நான் கிடத்தப்படும்போது, என் நெஞ்சில் திருக்குறளை வைத்து என் இரு கைகளையும் அதை அணைத்துக் கொள்ளுமாறு இணைத்துவிடுங்கள்'. உள்ளே இருக்கும் தமிழின் குரல் இது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: '2030-இல் அவனது நூற்றாண்டு வருகிறது. அந்த விழாவை நாடு தழுவியெடுப்பேன் நானிருந்தால். இல்லையேல் தமிழ்ச்சமூகத்தை முன்னிலைப்படுத்தி என் பிள்ளைகள் எடுப்பார்கள்'. உள்ளே இருக்கும் தமிழின் குரல்.

கண்ணதாசன் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: "என்னைப் பொறுத்தவரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு'. உள்ளே இருக்கும் நன்றியின் குரல். மொத்தத் தமிழாற்றுப்படையே ஒரு தமிழனின் நன்றியின் குரல்தான்.

இவ்வளவும் சிறப்பாய்ச் செய்த கட்டுரைப் பேரரசு வைரமுத்து மீது இப்புத்தகத்தை முன்வைத்து மாபெரும் விமர்சனம் ஒன்று இருக்கிறது. "இருபத்து நான்கு பேரோடு எப்படி முடிக்கலாம்' என்பதுதான் அது.