உலகில் மிகவும் கொடுமையான துன்பியல் குறியீடுகள் என்றால் பசியும் வறுமையும்தான். இந்த இரண்டுக்குமான எடுத்துக்காட்டாக உலகின் முன் நிற்கும் நாடு என்றால் அது எத்தியோப்பியா. அந்த வறண்ட துயர பூமியில் காலெடுத்து வைத்த நம் மதுரைத் தமிழர் ஒருவர், அந்த பூமியின் தட்பவெப்பத்தையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருவதோடு, உலர்ந்த வாழ்க்கை வாழும் அம்மக்களுக்கு நிழற்குடையாகவும் குளிர் மழையாகவும் இருந்து வருகிறார்.
அந்த மதுரைத் தமிழரின் பெயர் கண்ணன் அம்பலம். ஒரு தனி மனிதரால்கூட ஒரு நாட்டின் தலையெழுத்தைத் திருத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் கண்ணன்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர்போன அலங்காநல்லூரிலிருந்து, பாலமேடு வழியாக 7 கி.மீ பயணம் செய்தால், பொந்துகம்பட்டி கிராமம் எதிரில் வந்து புன்னகைக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் கிராமம்தான், ’எத்தியோப்பிய நண்பனான’ பேராசிரியர் கண்ணனின் ஊர். ஜல்லிக்கட்டுக் காளைகளின் புகழைப் பேசிக்கொண்டிருந்த அந்த கிராமம், இப்போது கண்ணனின் புகழையும் பெருமையுடன் சொல்லத் தொடங்கியிருக்கிறது. பேராசிரியர் கண்ணன் யார்? அவர் எத்தியோப்பிய மக்களின் ’உள்ளம் கவர்கள்வராக ஆனது எப்படி?
ஐ.ஏ.எஸ். கனவிலிருந்து அவர் ஒரு கட்டத்தில், எத்தியோப்பியாவில் உள்ள ஒலேகா பல்கலைக்கழகத்தில் கிடைத்த விரிவுரையாளர் பணியை ஏற்றுக்கொண்டார். தயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் அங்கே சென்ற பேராசிரியர் கண்ணன், அங்கே எத்தியோப்பியா மக்களோடு வசிக்க ஆரம்பித்தார். அம்மக்களை நேசித்து, அவர்களோடு ஒன்று கலந்து, அவர்களின் அடிப்படை பிரச்னைகளைப் புரிந்து கொண்டார். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதையாவது செய்யவேண்டும் என்று துடித்தார். அதுதான் அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்கு உயர்ந்த செல்வாக்கைப் பெற்றுத் தந்திருக்கிறது.
அந்நாட்டின் நெகம்டே நகரில் உள்ள ஒலேகா பல்கலைக் கழகத்தில் 2009 ஆம் ஆண்டு விரிவுரையாளராக பணியில் இணைந்தார். அதன்பின் என்ன நடந்தது? என்பதை பேராசியர் கண்ணனே சொல்கிறார்....
“""நான் பணியில் சேர்ந்த அன்று, அக்கலூரியின் தலைவர் என்னை அழைத்து, "இந்தப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து ரெண்டு வருடம்தான் ஆகிறது. இது ஒரு குழந்தையைப் போல. இதை வளர்த்தெடுக்கும் கடமை உங்களுக்கும் உண்டு' என்றார். இதைக்கேட்டு நெகிழ்ந்துவிட்டேன். முதலில் எத்தியோப்பிய மக்களை கவனித்தேன். பெரும்பாலான மக்கள் காலணிகள் அணிவதில்லை. கரடுமுரடான பாதைகளைக் கூட வெற்றுக் கால்களோடு சர்வ சாதாரணமாகக் கடப்பார்கள். மலைப் பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல, சாலை வசதிகள் கிடையாது. ஆறு, ஓடைகளைக் கடக்கப் பாலங்கள் கிடையாது. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவை அனைத்தையும் பார்த்து விட்டு என்னால் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை. மனதில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.
ஒருநாள், அங்குள்ள சிவக்கா கிராமத்தில் ஒரு முதுமையான பாட்டி, பாதையின் குறுக்கே போகும் ஆற்றைக் கடக்கமுடியாமல் ஆற்றின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுபோல் சின்னச் சின்ன ஆறுகள் அம்மக்களின் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்ததையும், பலர் இதனால் மரணிப்பதை யும் கண்டு வருந்தினேன். அந்தப் பகுதியில் பொறியாளர்கள் யாரும் இல்லை. ஆனாலும் இணைப்புப் பாலம் அமைக்க முடிவெடுத்தேன். என் மாணவர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்களுடன் பேசி முதலில் மரங்களை வெட்டி ஒரு பாலம் அமைக்கும் முயற்சியில் இறங்கி னேன். அந்தப் பாலம் அமைத்த பிறகுதான் வேறு பிரச்சினைகள் வரத்தொடங்கின. நெகம்டே நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேழ் வரகு, வேர்க்கடலை, மாம்பழம் அதிகமாக விளைகின்றன. மக்களின் போக்குவரத்திற்கு அதிகமாகப் பயன்படுவது அங்கே கழுதைகள் தான். அவை மரப் பாலத்தைக் கடக்கும்போது அதன் கால்கள் மரக் கட்டைகளின் இடுக்குகளில் சிக்கிக்கொண்டு விபத்தை ஏற்படுத்தின. அதனால் அப்பகுதி கிராமத் தலைவரிடம் பேசி உதவி கேட் டேன். மாணவர்கள் கிராம மக்களென எல்லோருமாகச் சேர்ந்து சிமெண்ட் பாலத்தை அமைக்க முயன்றோம். கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பி, பைப், சிமெண்ட் போன்றவற்றை நான் வாங்கிச் செல்ல, மரம், கற்கள் போன்றவற்றை மக்களைக் கொண்டுவரச் சொன்னேன். பாலம் உருவானது. இதுபோல் கூட்டு முயற்சியாலும் உழைப்பாலும் சமுதாயப் பாலங்கள் பல அங்கே உருவாயின''’ என் கிறார் உற்சாகக் குரலில் கண்ணன். இப்படிப் பாலங்கள் அமைக்கத் தனது சம்பளப் பணத்தையும் செலவிட்டிருக்கிறார் அவர்.
இதுவரை 60 பாலங்களை யும் 33 குடிநீர் கட்டமைப்புக் குழாய்களையும் அனைவரின் ஒத்துழைப்புடன் அமைத்திருக்கிறார் கண்ணன். இதன் மூலம் அம்மக்களின் ஹீரோவாகவும் அவர் உருமாறிவிட்டார்..
“பேராசிரியர் கண்ணன், நம் தமிழகத்தின் கௌரவம். எத்தி யோப்பிய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவரும் அவர், அங்கு கொரோனா விழிப்புணர்வுப் பணியையும் செம்மையாகச் செய்துவருகிறார். உண்மையில் பேராசிரியர் கண்ணன், தமிழர் களின் பெருமிதம்தான்.
-நாடன்