கொரோனா நெருக்கடியும் இந்திய- சீன எல்லை பதட்டம் இவற்றுக்கிடையே, ஆட்சி சார்ந்த விசயங்களை பிரதமர் மோடியும், அரசியல் சார்ந்த விசயங்களை அமித்ஷாவும் கவனித்து வருகிறார்கள்.

பீகார் மாநிலத்திற்கு நவம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆகஸ்டிலிருந்து தேர்தல் பணிகளைத் தொடங்குவது குறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. இந்த சூழலில், இரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் அமித்சாவும், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் நீண்ட நேரம் தேர்தல் அரசியல் குறித்து விவாதித்துள்ளனர். பிரதமர் இல்லத்தில் நள்ளிரவை கடந்தும் நீடித்த சந்திப்பில், மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையை வைத்து முழுமை யாக விவாதித்திருக்கிறார்கள்.

tn

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ""தற்போதைய சூழலில், பீகாரில் தேர்தல் நடத்த பாஜக விரும்ப வில்லை. ஆனால் பாஜகவின் பார்ட்னரான நிதிஷ்குமார் தேர்தல் நடத்த வேண்டும் என விரும்புகிறார். இது பற்றி விவாதிக்கப் பட்டதை அடுத்து, அடுத்தாண்டு தேர்தல் நடத்த வேண்டிய தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைப் பற்றியும் ஆலோசித்துள்ளனர். இந்த மாநிலங்களில் மார்ச் மாதத்திற்கு பிறகு, தேர்தல் சர்வேக்களை எடுக்க சொல்லியிருந்தார் அமித்சா. அதன்படி, கொரோனா கால மக்களின் உணர்வை அறிந்து 2 சர்வேக்களை எடுத்து கொடுத்துள்ளது மத்திய உளவுத்துறை (ஐ.பி.).

Advertisment

குறிப்பாக, தமிழக தேர்தல் சர்வே பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை கொடுக்கும். கன்னியாகுமரி, நாகை, கிருஷ்ணகிரி இந்த மாவட்டங் களில் இருந்துதான் அந்த 3 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூட்டணியிலுள்ள பாமகவுக்கு தர்மபுரி, சேலம், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 5 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு. அதிமுகவை பொறுத்தவரை, சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் கிடைத்து அவர்கள் முழு மனதோடு வேலை செய்தால் 30 முதல் 40 இடங்கள் கிடைக்கும். அதுவும் கூட்டணி பலத்தில்தான் ஜெயிக்க முடியும். சென்னையில் ராயபுரம் தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் திமுகவுக்கே வாய்ப்பு. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலில் இப்போதுள்ள அதிமுக கூட்டணி தொடரும் பட்சத்தில் அதிகப்பட்சம் 48 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உண்டு. திமுக தனித்துப் போட்டியிட்டாலே 174 இடங்களும் கூட்டணியில் போட்டியிட்டால் 186 இடங்களும் கிடைக் கும்’என சொல்லப்பட்டுள்ளது’ என்கின்றனர்.

tt

உளவுத்துறை மட்டுமல்லாமல் தனியார் ஏஜென்சி மூலமாகவும் சர்வே எடுக்கப் பணித்திருந்தார் அமித்சா. அவர்கள் கொடுத்த சர்வே முடிவுகளும் உளவுத்துறையின் ரிசல்ட்டில் 90 சதவீதம் ஒத்துப் போயிருக்கிறது. இந்த சர்வேக் கள் எடுக்கப்பட்ட காலக்கட்டத்திலேயே, தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ்சிடம் விவாதித்துள்ளது பாஜக தலைமை. அப்போது பாஜக முன்வைத்த கோரிக்கைகளை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதித்துவிட்டு சில புள்ளி விபர கணக்குக்களை பாஜக தலைமைக்கு கொடுத்துள்ளார் ஓபிஎஸ்.

Advertisment

அதன்படி, அதிமுக 154 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இரட்டை இலையில் போட்டியிடும் வகையில் தோழமை கட்சிகளுக்கு 3 இடங்களும், மீதியுள்ள 77 இடங்களில் 37 இடங்கள் பாமகவுக்கும் ஒதுக்க விருக்கிறோம். இவைகள் போக 40 இடங்களை பாஜகவிடம் தந்து விடுகிறோம். தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தீர்மானித்துக் கொள்ளட்டும் என்கிற கணக்கினை ஓபிஎஸ் கொடுத்துள்ளார். இதனையும் மோடியுடனான ஆலோசனையில் விவாதிக்கப் பட்டுள்ளது.

பாஜக தலைமைக்கு கிடைத்துள்ள சர்வே முடிவுகளை அறிந்து அதிர்ச்சியில் இருக்கும் பாமக தலைமை, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட்டாலும் ஒற்றை இலக்கில் சொற்ப இடங்களைத்தான் கைப்பற்ற முடியும் எனில் அந்த கூட்டணி எதற்கு? தனித்துப் போட்டியிட்டால் குறைந்தபட்சம் 15 இடங்களை கைப்பற்ற முடியும் என கருதுகிறார் டாக்டர் ராமதாஸ். அதனால் அதிமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திட்டமிடுகிறது. இந்த சூழலில், தேர்தல் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரும் பட்சத்தில், பாமக- ரஜினி- பாஜக- டாக்டர் கிருஷ்ணசாமி என்கிற கூட்டணியை உருவாக்க வேண்டும்; அரசியலுக்கு ரஜினி வராத பட்சத்தில் தனித்து போட்டி யிட வேண்டும் என்கிற ஒரு திட்டத்தை பாமக போட்டு வைத்திருப்பதாக பாமக தலைமைக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.

திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பல்ஸ் பார்க்கும் ஐ-பேக்கின் பிரசாந்த் கிஷோர், சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளை திமுக கைப்பற்றுவதாக ஒரு ரிப்போர்ட்டை திமுக தலைமைக்கு கொடுத்திருக்கிறாராம். இதனையறிந்து, சேலம் மாவட் டத்தின் பல்ஸ் என்னவென்பதை அறிய தனது தேர்தல் ஆலோசகரான சுனிலை களமிறக்கி யிருக்கிறார் எடப்பாடி. இதற்கிடையே, தேர்தல் நடந்தால் மிருக பலத்துடன் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்பதை ரசிக்காத அமீத்ஷா, வேறுசில திட்டங்களையும் ஆராய்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

-இரா.இளையசெல்வன்