50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தார் கலைஞர். அவரது மறைவினால், 50 ஆண்டு காலம் பொதுவாழ்வு அனுபவமுள்ள மு.க.ஸ்டாலின், இப்போது அந்த தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்... தி.மு.கவின் சட்டவிதிகளின்படி முறைப்படியாக தேர்வு செய்யப்பட்டு!
அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 9.35-க்கு துவங்கியது தி.மு.க.வின் பொதுக்குழு. கலைஞர், வாஜ்பாய் முதல் ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் உள்ளிட்ட பிரபலங்கள் தொடங்கி அரியலூர் அனிதா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்கள் வரை இரங்கல் தீர்மானம் வாசித்த பின், 10.20-க்கு கட்சியின் தணிக்கைக் குழுவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்சியின் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவதாக, பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 10.30-க்கு அறிவித்தது தான் தாமதம் அண்ணா சாலையே அதிரும் அளவுக்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் உடன்பிறப்புகள். கட்சியின் சீனியர்கள், ஜூனியர்கள் வாழ்த்தி முடித்ததும் ஏற்புரை ஆற்றிய ஸ்டாலின், “உங்கள் முன் நிற்கும் மு.க.ஸ்டாலினாகிய நான் இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்'' என புதுவித பாணியில் பேசிய ஸ்டாலின், ""மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியையும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. ஆட்சியையும் தூக்கி எறிவோம்'' என போர்ப்பிரகடனம் செய்து தனது பாதை எது என்பதை முதல் உரை மூலம் முத்திரை பதித்தார்.
அவரது அணுகுமுறைகளி

அவரது அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் தெரிந்தன. கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஒரு சிலரில் தேனி மூக்கையாவும் ஒருவர். அவர் அழகிரி பக்கம் சாயலாம் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருந்த நிலையில், "ஸ்டாலினுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்' என பொதுக்குழுவில் பேசினார் மூக்கையா. அழகிரி பக்கம் தாவக்கூடும் என நினைத்த பலர் பொதுக்குழுவிலும் அறிவாலய மைதானத்திலும் நிரம்பியிருந்தனர்.
ஆக.30-ஆம் தேதி மாலை, சென்னை ஒய்.எம்.சி.ஏ.திடலில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க.வின் நிதின்கட்கரி உட்பட அனைத்து தேசிய கட்சித் தலைவர்கள், பீகார், புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பலரையும் அழைத்து வந்திருந்தார் ஸ்டாலின். கட்சியின் தலைவரான பின், 20 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தின் மேடையில் நடுநாயகமாக உட்கார்ந்ததுடன் தேவகவுடா போன்ற சீனியர்கள், பேசுவதற்காக மைக் முன் சென்ற போது, ஸ்டாலினும் துணையாகச் சென்றார். இது எல்லாமே புதிதாய் பிறந்த ஸ்டாலினின் தனித்துவமாகவே தெரிந்தது.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே தேசிய அரசியலில் கலைஞரின் ஆளுமை குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை, ஜனநாயக ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் காப்பதில் கலைஞர் இந்தியாவுக்கே முன்னோடித் தலைவராக விளங்கியதைப் பலரும் எடுத்துக்காட்டினர்.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வெல்லும் என மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ பிரையன் பேசிய போது பலத்த வரவேற்பு. கலைஞரின் பெருமைகளைக் குறிப்பிட்டுப் பேசியதுடன் மோடி அரசின் போலியான பொருளாதார வளர்ச்சியை ஆவேசத்துடன் சுட்டிக் காட்டினார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.
இந்திய அளவில் தன் மீதான கவனத்தைத் திருப்பியிருந்தாலும் கட்சியில் அழகிரி அடுத்தடுத்து என்ன பண்ணுவார், எந்த வகையிலெல்லாம் குடைச்சல் கொடுப்பார், அதை எப்படி சமாளித்து வெற்றி பெறுவது என்பது குறித்தும் யோசிக்கத் தொடங்கினார் ஸ்டாலின்.
கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற ஆக.28-ஆம் தேதி, மதுரையில் தனது வீட்டுக்குள் டி.வி.யை பார்க்க விரும்பாத அழகிரி, வீட்டிற்கு வெளியே போட்டிருந்த சாமியானா பந்தலுக்குள் வந்து அமர்ந்தார். சாமியானாவுக்குள் போடப்பட்டிருந்த நாற்காலிகளுக்கும் உட்கார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்தது. ""ஏம்பா நம்ம ஆளுங்களுக்கு போன் போட்டு ஆட்டோ பிடிச்சு வரச் சொல்லுப்பா'' என மன்னனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார் அழகிரி. மன்னன் போன் போட்டு அழைத்தும் பலனில்லை.
இருந்த சிலரிடம் பேரணிக்கு ஏற்பாடெல்லாம் எப்படிப்பா இருக்கு என சில வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள்(ஆக.30) எதிர்பாராதவிதமாக டீ சர்ட், ஜீன்ஸ் இளைஞர்களால் சாமியானா பந்தலும் அழகிரி வீடிருக்கும் தெருவும் களை கட்டியது. வந்தவர்கள் ஆங்காங்கே மரநிழலில் நின்று ஹாயாக பேசிக் கொண்டிருந்தனர். ஆதரவாளர்களிடம் பேசி முடித்ததும் மீடியா மைக் முன்பு பேச ஆரம்பித்தார் அழகிரி. ""அவரை(ஸ்டாலின்) தலைவராக பொதுக்குழு ஏத்துக்கிட்டா போதுமா, மொத்த கட்சிக்காரர்களும் ஏத்துக்க வேணாமா'' என ஹாட்டாக ஆரம்பித்தவர், ""என்னை கட்சியில் சேர்த்துக்கிட்டா, ஸ்டாலினை தலைவரா ஏத்துகிட்டுத்தானே ஆகணும்'' என சுதி இறங்கி ஏறத்தாழ சரண்டர் நிலைமைக்கு வந்தார் அழகிரி.
கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ, தான் எதிர்பார்த்தவர்கள் வரவில்லை என்ற விரக்தியோ, தனது ஆட்களிடம் பேசிய போது, ""பேரணிக்கு கட்சிக்காரன்தான் வரணும்னு இல்ல. நமக்குத் தேவை கூட்டம் அவ்வளவுதான்'' என சுதியை ஏற்றினார். அழகிரி ரொம்பவும் எதிர்பார்த்த கலைஞர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும் இப்போது தே.மு.தி.க.வில் இருப்பவருமான முல்லைவேந்தன் ஸ்டாலின் பக்கம் நகர்ந்ததில் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார் அழகிரி. இதேபோல் கட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள்கள் பலரும் அழகிரியை கைவிட்டுவிட்டனர்.
சரண்டர் நிலையோ குடைச்சல் நிலையோ அழகிரியின் நிலை எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு தேவையற்ற சர்ச்சைகளும் சலசலப்புகளும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். காரணம் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல் களத்தில் புதிய முகத்துடன் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் புதிய பொறுப்பில் வேகம் காட்டும் ஸ்டாலினின் முக்கிய அஜெண்டாவாக இருக்கிறது.
-கீரன், ஈ.பா.பரமேஷ்வரன், ஜீவாபாரதி
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அண்ணல்
------------------------------
வரவேற்கும் தொண்டர்கள்!
ஸ்டாலின் தலைவரான பின் தொண்டர்களின் மனநிலையை அறிய, அறிவாலய மைதானத்தில் வலம் வந்தோம்.
சுந்தர், மதுரை: பெரியார், அண்ணா, கலைஞருக்கு அடுத்து கட்சியின் நான்காம் அத்தியாயத்தை எழுத வந்திருக்கிறார் தளபதி ஸ்டாலின். திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் லட்சியங்களை யும் நாளைய தலைமுறைக்கும் கொண்டு செல்வார் தளபதி என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
மணி (எ) ராமநாதன், காரியாபட்டி, விருதுநகர்: தளபதியின் பொது வாழ்க்கைப் பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்போது பதவியில் இருக்கும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த வர்கள், ஆரம்பகால அடிமட்டத் தொண்டனை கண்டுகொள்ளாத நிலையை தளபதி அவர்கள் மாற்ற வேண்டும். சீனியர்களை மதிப்பதில்லை எனச் சொல்லும் அழகிரி, மதுரையில் காவேரி மணியத்தை எப்படி மதித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
80 வயது சக்கரபாணி, ஒட்டன்சத்திரம்: ஈஸியா எம்.பி., எம்.எல்.ஏ., கவுன்சிலர் ஆகிடலாம் தம்பி. ஆனா எங்க கட்சியில கிளைக்கழகச் செயலாளரில் ஆரம்பித்து அனைவரின் ஆதரவு இருந்தால்தான் கட்சியின் தலைவராக முடியும். இப்போது தலைவராகியிருக்கும் தளபதி அப்படி வந்தவர்தான். தமிழன் வாழ்வு சிறக்க தளபதி உழைப்பார்.
சுகன்யா, ஷகிலா பேகம், சரஸ்வதி பால்ராஜ், திருப்பூர்: தளபதியின் உண்மை உழைப்புக்கு கிடைத்த உயர்வுதான் இந்த தலைவர் பதவி. அழகிரியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
முனியப்பன், பாலக்கோடு: இன்னும் 100 ஆண்டு இந்த இயக்கம் வலிமையாக இருக்க தளபதி அவர்களின் லட்சியப் பாதை இருக்கும்.