ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வியடைந் ததையடுத்து, கட்சியிலிருந்து "கெட்-அவுட் எடப்பாடி' என ஓ.பி.எஸ். தரப்பில் வலுக்கும் எதிர்ப்புக் குரல்களும், தோல்விக்குக் காரணமே மாஜிக்கள்தான் என் கிற தகவல்களும் எடப்பாடியை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.
ஆனாலும் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டங்களை நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்.ஸின் எதிர்ப்பினை எதிர் கொள்வது குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக, 9-ந் தேதி மா.செ.க்களின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இந்த கூட்டத்தில், மாஜிக்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கும் என்கிறார்கள் மா.செ.க்கள். எடப்பாடிக்கு எதிராகப் பேசும் சசிகலா, "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலுவான இயக்கமாக நின்று தேர்தலை சந்தித்திருந்தால் தி.மு.க.வை படுதோல்வியடைய வைத்திருக்க முடியும். ஒரு நபரின் (எடப்பாடி) பிடிவாதம் கட்சியை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது''’என்கிறார் மிகக்காட்டமாக.
எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடியை கடுமையாக விமர்சிக்கும் ஓ.பி.எஸ்., "அ.தி.மு.க.வின் வரலாற்றில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கட்சி தோற்றுப்போயிருக்கிற தென்றால் அது இந்த இடைத்தேர்தலில்தான். துரோகியும் (எடப்பாடி) துரோகியின் தலைமையிலுள்ள ஒரு சர்வாதி காரக் கூட்டமும்தான் இந்தத் தோல்விக்கு காரணம். சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைதி காத்தோம். எடப்பாடி பழனிச்சாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் இந்த தோல்வி. இனியும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது''’என தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அவரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவருமான மருது அழகுராஜ், "இரட்டைஇலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட விரும்பவில்லை என தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார் ஓ.பி.எஸ். அதேபோல, குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டியிலிருந்து டி.டி.வி.தினகரனும் விலகிக்கொண்டார். அதனால், அ.தி.மு.க.வின் வாக்குகள் சிதறாமல் இருந்த சூழலில், அ.தி.மு.க. ஜெயித்திருக்க வேண்டும்.
சுயேட்சை சின்னத்தில் நின்றாலும் கழகத்தை ஜெயிக்க வைப்பேன் என மார்தட்டிய எடுபுடி பழனிச்சாமி, இரட்டை இலை கிடைத்தும் அ.தி.மு.க. வாக்குகள் சிதறாமல் இருந்தும் கட்சியை படுதோல்வியடைய வைத்திருக்கிறாரெனில் கட்சித் தொண்டர்களும் மக்களும் பழனிச்சாமியை ஏற்கவில்லை என தீர்ப்பளித்திருப்பதாகத்தான் அர்த்தம். ஓ.பி.எஸ்.ஸும் தினகரனும் தங்களின் வேட்பாளர்களை வாபஸ் பெறவில்லை யெனில் டெபாசிட் கூட கிடைத்திருக்காது. ஆரூத்ரா கோல்டு கம்பெனிபோல அம்போன்னு போயிருக்கும்.
எடுபுடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததிலிருந்து இப்போது வரை பல தேர்தல்கள் நடந்திருக்கிறது. ஆனால், ஒரு தேர்தலில் கூட கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் வெற்றிபெற வைக்க எடப்பாடியால் முடியவில்லை. ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் இழந்திருக் கிறோம். தேனியில் ஓ.பி.எஸ்.ஸால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் இளங்கோவனை ஈரோட்டில் ஜெயிக்க வைத்த புண்ணியவான் எடப்பாடி பழனிச்சாமி.
எம்.ஜி.ஆர். உதிரம் சிந்தி உருவாக்குன கட்சியை குழி தோண்டிப் புதைக்க வெறிகொண்டு திரிகிறார் பழனிச்சாமி. அவரை தொண்டர்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் செல்வாக்கோ, நட்சத்திர அந்தஸ்தோ, பிறரை வசீகரிக்கும் அறிவு ஆற்றலோ, குறைந்தபட்சம் அனைவரையும் அரவணைக்கும் தாயுமான தலைமைப் பண்போ கடுகளவும் இல்லாத எடப்பாடி என்கிற தனிமனிதனின் அதிகார வெறியும்தான் கட்சியை அபகரிக்கும் முயற்சியும் கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை.
ஒன்றுபட்டால்தான் வென்று காட்டமுடியும் என ஆயிரம் முறை ஓ.பி.எஸ். வலியுறுத்திய போதும் இயக்கத்தின் நலனைவிட தன்னலமே முக்கியம் என எடப்பாடி காட்டிய மூர்க்கத்தனத்தால்தான் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள இந்த படு தோல்வி, கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தைக்கொண்டு பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர, பொதுமக்களை வாங்க முடியாது என்பதை புரிந்துகொண்டு எடப்பாடி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தோல்வி நிரந்தரமாகிவிடும்.
யாருக்கு வெற்றி-தோல்வி என்பதைப் புறந்தள்ளிவிட்டு எதிர்கால வெற்றிக்கு ஒரே வாய்ப்பு ஒற்றுமை மட்டுமே என உணரவேண்டும். இல்லையெனில், கழகத்தை விட்டு கெட்- அவுட் எடப்பாடி என்கிற முழக்கம் ஒரு இயக்கமாக மாறும்'' என்கிறார் நம்மிடம் அதிரடியாக.
எடப்பாடிக்கு எதிராக இப்படி வலுத்து வரும் குரல் கள் அவரது ஆதரவாளர் களையும் யோசிக்க வைத்தி ருக்கிறது. நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவு மா.செ.க்கள் சிலர், ‘’"அ.தி.மு.க.வுக்கு அவசர தேவை ஒற்றுமைதான். அ.தி. மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர் களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதுதான் ஆரோக் கியமானது. தேர்தலில் ஆளுமை மிக்க தலைவராக தன்னை நிரூபிக்க எடப்பாடி தவறிவருவதால் இந்த ஒற்றுமை அவசியமாகிறது.
ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் மூவரையும் கட்சிக்குள் அனுமதித்தால் தனது தலைமைக்கு ஆபத்து வந்து விடும்; ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்தே தன்னை அழித்துவிடுவார்கள்; ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சேர்த்து வைத்திருக்கும் பல ஆயிரம் கோடிகளை சசிகலா தனது கஜானா வில் சேர்க்க மிரட்டுவார் என்கிற பல்வேறு பயம்தான் அந்த மூவரை யும் மீண்டும் கட்சிக்குள் ஒற்றுமைப் படுத்தத் தடுக்கிறது. சசிகலா, தினகரனை யோசிக்கும்போது எடப் பாடியின் பயம் நியாயமானதுதான்.
அதனால்தான் பொதுச்செய லாளர் என்ற முந்தைய கட்டமைப்பை கட்சிக்குள் மீண்டும் உருவாக்கி, கட்சித் தேர்தல் மூலம் முறையாக பொதுச்செயலாளராகி கட்சியின் முழு அதிகாரத்தில் உட்கார்ந்த பிறகே மூவரை பற்றி முடிவெடுக்கலாம் என திட்டமிடுகிறார் எடப்பாடி. அதற்காக எந்த விலை கொடுக்கவும் அவர் தயாராக இருக்கிறார். ஆனால், அவரது வேகத்துக்கு இனியும் பா.ஜ.க.வின் உதவி சட்டரீதியாகவும் தேர்தல் ஆணைய ரீதியாகவும் கிடைக்குமா? என்பது யோசிக்க வேண்டிய விசயம்”என்று தற்போ தைய சூழல்களை விவரிக்கிறார்கள் மா.செ.க்கள்.
எதிர்ப்புக்குரல்கள் இப்படி வலுத்துவரும் இந்த சூழலில்தான் அதனை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க வருகிற 9-ந்தேதி மா.செ.க்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் எடப்பாடி.
அவரது அணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, "ஈரோடு இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி எடப் பாடிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பின்னடைவுதான். இதனை அவரே உணர்ந்திருக்கிறார். தேர்தல் முடிவு களுக்குப் பிறகு, வேட்பாளர் தென்னரசுவிடமும் மாவட்ட நிர் வாகிகளிடமும் தனிப்பட்ட முறையில் அவர் நீண்ட நேரம் விசாரித்துள்ளார்.
அப்போது, தி.மு.க. அமைச்சர் களும் அக்கட்சியின் நிர்வாகிகளும் தேர்தலில் காட்டிய ஒருங்கிணைப்பும் அர்ப்பணிப்பும் நம் கட்சியின் மாஜிக் களிடம் இருக்கவில்லை. அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நம் ஆட்கள் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் தேர்தல் பணி செய்வார்களோ அதில் 1 சதவீதம் கூட இந்தத் தேர் தலில் காட்ட வில்லை. தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் 40 சதவீதம் மட்டுமே களத்துக்கு வந்துள்ளது. மீதம் 60 சதவீதத்தை மாஜிக்கள் மறைத்துக்கொண்டார்கள்.
மேலும், தேர்தல் பணி தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு மாஜியும் குறிப்பிட்டளவில் செலவு செய்ய வேண்டும் என நீங்கள் வலியுறுத்தியபோது அதனை ஏற்றுக்கொண்டவர்கள், தேர்தல் களத்தில் அதைச் செய்யவில்லை. இதுமட்டுமல்லாமல்; அ.தி.மு.க. வெற்றியடைந்தால் உங்களுக்கான வெற்றி என்றே பேசப்படும் என்கிற மாஜிக்களின் சுயநல அரசியலும் இதில் இருக்கிறது. அந்த சுயநல அரசியலால் தி.மு.க. அமைச்சர்களோடு ரகசிய நட்பையும் பல மாஜிக்கள் வைத்துக்கொண்டனர் என மாஜிக்களைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடப்பாடியிடம் நிர்வாகிகள் அடுக்கியிருக்கிறார்கள். இது எடப்பாடிக்கு ரொம்பவே மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இந்த நிலையில்தான் மா.செ.க்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் எடப்பாடி''’என்கிறார் நம்மிடம் மனம் திறந்த அந்த மூத்த தலைவர்.
மா.செ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணியில் துரோகமிழைத்தவர்களுக்கு எதிராக அம்மா பாணியில் அதிரடிப் பாய்ச்சலை எடப்பாடி காட்டுவாரா? பதுங்குவாரா? அல்லது தி.மு.க.வின் வெற்றியை பற்றி சம்பிரதாயத்துக்காக எதிர்த்துவிட்டு கூட்டத்தை முடித்துவிடுவாரா? என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களின் பரபரப்பு என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.