காமாட்சி வீட்டில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மகளிரணியினர், காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வேலூர் கோட்டையையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலையும் காணச் சென்றார்கள். கோட்டைக்குள் இருந்த சிறிய பூங்காவில் உட்கார்ந்தார்கள்.
நாச்சியார்: காமாட்சி! சொல்றம்னு கோவுச்சுக்காதே. உன் பொண்ணு ரொம்ப ஒல்லியா இருக்கிறாள். பயந்த சுபாவமாகவும் தெரியுறாள். சத்தான சாப்பாடு குடு; ஸ்கூல்ல ஏதாச்சும் விளையாட்ல சேரச் சொல்லு.
காமாட்சி: நீங்க வேற... என் மகள் ரொம்ப போல்டான புள்ளை. பட்டுப் பாவாடை சட்டை நகை நட்டோட மேடையில அவளைப் பார்த்து ஏமாந்திட்டீங்க. என்ன ஆகணும்னு கேட்டிருந்தா போலீஸ் ஆபீஸர் ஆகப் போறேன்னு சொல்லியிருப்பாள். அதுதான் அவளோட ஆசை.
பவானி: சிட்டிக்குள்ள, டவுனுக்குள்ள ட்யூட்டினா சமாளிச்சிருவாங்க. காடு மலைனா கஷ்டம்தானுங்களே.
காமாட்சி: என்ன கஷ்டம்... நேத்து நடந்த சம்பவங்களை சொல்றன். காது குடுத்து கேளுங்க. திருவண்ணாமலை மாவட்ட வனச் சரகரா அர்ச்சனா கல்யாணி இருக்காங்க. ஜவ்வாது மலை இவங்க கண்ட்ரோல்தான். ஜவ்வாது மலைல கள்ளச் சாராயம் கணக்கு வழக்கில்லாம காய்ச்சுறாங்க. அங்கே காய்ச்சுற பாக்கெட் சாராயம் தான் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி மாவட்டங்கள்ல விற்பனை யாகுதுனு புகார் வந்தது.
நாச்சியார்: காய்ச்சுற எடத் துக்கே படை பட்டாளத்தோட போயி பானைகளை அடிச்சு ஒடைச்சிட்டாகளோ?
காமாட்சி: உண்மையிலே அதுதான் நடந்தது. போளூர் வனச்சரகர் செந்தில்குமாரையும் கூட்டிட்டு ரவுண்ட்ஸ் கிளம்பிட்டாங்க. ஜவ்வாது மலை அடிவாரத்தில அத்திமூர், மேலூர், பதிமலை, வண்ணாத்தி ஓடை பகுதியில நெறைய எடங்கள்ல பாறைக்கல் அடுப்பு வச்சு சாராயங் காய்ச்சினாங் களாம். எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கி... புதைச்சு வச்சிருந்த ஊறல்களையெல்லாம் ஒடைச்சு நாசப்படுத்திட்டு வந்திருக்காங்க இந்த அர்ச்சனா. ஆம்புளைகள் கூட அவ்வளவு துணிச்சலா அங்கே யெல்லாம் போறதுக்கு யோசிப்பாங்க. அர்ச்சனா கல்யாணி கலக்கியிருக்கு. போளூர், திருவண்ணா மலை, வேலூர் எல்லாம் அர்ச்சனா புராணம்தான்.
நாச்சியார்: சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரியை பார்க்கிறதுக்காக தேசியத் தர மதிப்பீட்டுக் குழு வந்ததாமே?
பவானி: மூணு வருஷத்துக்கு ஒருமுறை வழக்கமாக வர்ற குழு தானுங்க. ஆனா அந்தக் குழுவைக் காரணம் காட்டி, வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், அலுவலக அறை களுக்கு பெயிண்ட் பண்ணதோட மராமத்து வேலை களையும் தட புடலா செய்தா ருங்க கல்லூரி முதல்வர் சகுந்தலா.
காவேரி: முதல்வர் சகுந்தலாவை பாராட்டுறீங்களா இல்லை ஏரோட்டுறீங்களா?
பவானி: கல்லூரில பெயிண்டிங், மராமத்து வேலையெல்லாம் பொதுப்பணித்துறை தானுங்க செய்யணும். ஆனால் இந்த அம்மணி காலேஜ் பேராசிரியர்களிடம் தலா 3000 வசூலித்தாங்க. அதோட சேலத்தில இருக்கிற நகைக்கடைகளிட மும், அமைப்புகளிடமும் சகட்டு மேனிக்கு நன்கொடை வசூல் வேட்டை செய்ததுங்க.
நாச்சியார்: பின்னே... கைக்காசை செலவழிக்க முடியுமா?
பவானி: நன்கொடையில வெள்ளையடிச் சிட்டு யாருக்கும் தெரியாம கல்லூரிப் பொதுநிதி யில இருந்து 19 லட்சத்தை எடுத்திருக்காருங்க. அங்கேதானுங்க நாணயக்கேடு நாட்டியமாடுது.
பரணி: எதையும் ப்ளான் போடாம பண்ணக்கூடாது.
நாச்சியார்: பிளான் போட்டு காலி பண்றதில, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா திறமைசாலினு நிரூபிச்சிருக்காக.
காவேரி: அறந்தாங்கியில பள்ளி ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு நடந்ததே அதில ஏதாச்சும் பிளானா?
நாச்சியார்: அதுக்கும் 4 நாள் முன்னாடியே அரசாணை 101ஐ பயன்படுத்தி அரசு மகளிர் பள்ளி ஆசிரியைகள் 6 பேரை அங்கேயிருந்து அதிரடியா டிரான்ஸ்பர் பண்ணிப்பிட்டாக இந்த வனஜா. எதுக்குனு கேக்குறியளா? அறந்தாங்கி ஸ்கூல்ல தங்களுக்கு போஸ்டிங் வேணுமினு 6 டீச்சருக அமைச்சர் விஜயபாஸ்கரை நாடியிருக்காக... அதுக்காகத்தான் முன்கூட்டியே களத்தை காலிபண்ணி வச்சிருக்காக இந்த வனஜா.
காவேரி: பெண் அதிகாரிகள் இப்ப ரொம்ப துணிச்சல்காரர்களா ஆயிட்டாங்க. திருச்சி மாநகராட்சி டி.ஆர்.ஓ. ரமணி பேசின ஆடியோ வாய்ஸ் பேஸ்புக் வாட்ஸ்அப்னு கலங்கடிச்சது தெரியுமா?
பவானி: என்னங்க பிரச்சினை?
காவேரி: திருச்சியில மாடு வெட்டுற கூடத்திற்கான காண்ட்ராக்ட்டை ரினிவல் பண்றதுக்காக, காண்ட்ராக்டர் அஜீஸ்ங்கிறவர் டி.ஆர்.ஓ. ரமணிகிட்ட "ஏம்மா இந்த ரினிவலுக்காக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்குவாரா?' என்று கேட்கிறார். அதுக்கு இந்த ரமணி ""இந்த கமிஷனர் ஒண்ணும் லஞ்சம் வாங்காதவர் இல்லை. 25 ஆயிரத்தை கவர்ல போட்டு என்கிட்ட குடு. நான் கொண்டு போய் அவர்ட்ட குடுக்கிறேன்'' அப்பிடீங்குது.
நாச்சியார்: இதுபத்தி கமிஷனர் ரவிச்சந்திரனுக்குத் தெரியுமா?
காவேரி: இதுக்கு நான் எப்பிடிப் பொறுப்பாவேன்? இருந்தாலும் அந்தப் பெண் அதிகாரியிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்னு கமிஷனர் சொல்றாரு.
பரணி: எந்திரிங்கப்பா... காமாட்சியை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு, லக்கேஜ்களை எடுத்துக்கிட்டு கிளம்பலாம்.
-பகத், ஜெ.டி.ஆர்., மணிகண்டன், இளையராஜா