நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கிற நிலையில், ஆளும்கட்சியான தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து தாவி வருவது குமரி மாவட்ட உ.பி.க்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வென்றாகவேண்டுமென்று தி.மு.க. தலைமை முடிவெடுத்து களப்பணிகளில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் கட்சிமாறுவதற்கான காரணங்கள் என்ன என்று விசாரணையில் இறங்கினோம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. மாநில மீனவரணி து.செ. ஆக இருந்த நசரேத் பசிலியான், “"40 ஆண்டுகளாக எந்தக் கட்சி யையும் பற்றி சிந்திக்காமல் தி.மு.க.விலே இருந்தவன். கடந்த மா.செ. தேர்தலில் எனது தலைமையில் ஒரு அணி அமைத்து களத்தில் நின்றேன். இது தற்போது மா.செ.வாக இருக்கும் மகேஷுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால், கட்சித் தேர்தல் முடிந்ததும் எனக்கு மாநில மீனவரணி செயலாளர் பதவி தருவதாக தலைமை கூறியதால் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினேன். எனக்குத் தருவதாக கூறிய பதவியை திடீரென்று ரஜினி மன்றத்திலிருந்து வந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கொடுத்து என்னை ஏமாற்றினார்கள்.
மகேஷ் மா.செ. ஆனதும், என்னை கட்சியிலிருந்து ஒதுக்கும்விதமாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை. என்னிடம் பேசும் கட்சிக்காரர் களை கண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேபோல் மந்திரி மனோதங்க ராஜும் என்னை நடத்தினார். கட்சி நிகழ்ச்சி களிலும் என்னை கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கியே வைத்திருந்தனர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் எனக்கு மரியாதை தந்து நடத்துகிற அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன்'' என்றார் விரக்தியுடன்.
"அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு இருந்த ஒரே யூனியன் சேர்மன். இவர் ஆஸ்டின் ஆதரவாளர் என்பதால் மா.செ. மகேஷின் ஆதரவாளர்களான அகஸ்தீஸ்வரம் வடக்கு. ஒ.செ. மதியழகன், தெற்கு. ஒ.செ. பாபு ஆகியோர் எந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைப்ப தில்லை. நோட்டீசிலும் பெயர் போடுவதில்லை. அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட அழைக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கும் உத்தரவு. யூனியன் சேர் மன் என்பதால் கட்சிப் பொறுப்பு கேட்டு மாவட்ட மற்றும் மாநிலத் தலைமை கதவை எவ்வளவோ தட்டிப் பார்த்தார், திறக்கவில்லை. இவரை ஓரம் கட்டியே வைத்திருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்தார். யூனியன் தலைவர் சண்முகவடிவு, சுரேஷ்ராஜன் ஆதரவாளர் என்பதால் ஒதுக்கியே வைத்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்தும் எந்த காரியமும் செய்யமுடியாத அதிருப்தியில் இருந்த இருவரையும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் எடப்பாடியிடம் சேர்த்துவிட்டார்'' என்கின்றனர், அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
மாவட்ட மாணவரணி து.அமைப்பாளராக இருந்த சுரேஷ்ராஜன் ஆதரவாளரான சந்திரசேகர், தி.மு.க.விலே நல்ல பீல்டு ஒர்க்கர். நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலில் பல வார்டுகளில் பா.ஜ.க. தோல்விக்கு இவரின் பீல்டுஒர்க் காரணமாக இருந்தது. மாநகராட்சி தேர்தல் முடிந்ததும் சுரேஷ் ராஜனின் மா.செ. பதவி பறிக்கப்பட்ட நிலையில், மாவட்ட தலைமையால் சந்திரசேகரும் ஓரங்கட் டப்பட்டார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பில் லாமல் போஸ்டரில் பெயரும் காணாமல் போனது. இவருக்கு பா.ஜ.க அடைக்கலம் கொடுத்ததோடு, குமரி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவுச் செயலாளர் பதவியும் கொடுத்துள்ளது.
இதேபோல தி.மு.க. பிரமுகரும் ஆஸ்டின் ஆதரவாளருமான ராஜன் சில மாதங்களாக தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட, தளவாய்சுந்தரம் அ.தி.மு.க.வுக்கு அழைத்துச்சென்று அங்கு மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளார்.
இந்த லிஸ்டில் தோவளை முன்னாள் யூனியன் சேர்மன் லதா ராமச்சந்திரன், தோவாளை வடக்கு ஒன்றியம் ரமணி, கடுக்கரை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மகராசன், தோவாளை தெற்கு ஒன்றியம் ராமச்சந்திரன், சுசீந்திரம் பேருராட்சி விக்னேஷ் என நீள்கிறது. இன்னும் பலரும் கட்சிதாவும் மனநிலையில் உள்ளனர். உதாரணத்துக்கு பேரூர் செயலாளர் உட்பட 3 தி.மு.க. கவுன்சிலர்கள் கட்சி தாவும் மனநிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர், அந்தப் பகுதி உ.பி.க்கள்.
மாவட்டம் முழுவதும் தி.மு.க. நிர்வாகி கள் கட்சி மாறுவதும் அதிருப்தியில் இருப்பதும் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
"ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சியிலிருந்து எந்த முக்கிய நிர்வாகிகள் வந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய, அவர் களுக்கு வேண்டப்பட்ட ஒருசிலரைத்தான் மனோ தங்கராஜும் மகேஷும் சந்திக்க விடுகிறார்கள். இது மற்ற நிர் வாகிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா வுக்கு வந்த கலைஞர்கூட கன்னியாகுமரியில் தங்கியிருக்கும்போது நிர்வாகி களை நேரம் ஒதுக்கி சந்தித்தார். நிர்வாகிகள் சால்வையோ, மனுவோ கொடுக்கும்போது எடுக்கப்படும் போட்டோவை அவர்கள் அங்கீகாரமாகக் கருதுகிறார்கள் ஆனால் இப்போது அதையெல்லாம் தடுப்பதால் பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கட்சிக்குள் மந்திரி மனோதங்கராஜ்கிட்ட பேசினா மா.செ. மகேஷுக்கு புடிக்கல. மகேஷ்கிட்ட பேசினா மந்திரிக்கு புடிக்கல. மாஜி மந்திரி சுரேஷ்ராஜன்கிட்ட பேசினா மந்திரிக்கும் மகேஷுக்கும் புடிக்கல. இப்படிப்பட்ட ஈகோ யுத்தத்தில் கட்சிக்காரன் கஷ்டப்படுவதோடு ஒதுங்கியும் இருக்கிறான்''’என்கிறார்கள்.
"இதற்குத் தலைமை ஒரு முடிவு கட்டினால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத் தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்' என்கிறார்கள் உ.பி.க்கள்.